சங்க இலக்கியங்கள் பழந்தமிழர்களின் வாழ்க்கை நிலை, பண்பாடு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைப் பறைசாற்றும் பெட்டகங்கள். சங்கப் புலவர்கள் புலம் தோய்ந்தவர்களாக இருந்தாலும், இயற்கையோடு அகவாழ்க்கையை மேற்கொண்டவர்கள். அதனால் தான் பா புனைய இயற்கையைப் பின்புலமாக  வைத்துக் கொண்டு, கருத்துக்களை அதன்வழி புலப் படுத்தினார்கள். இதற்குக் கபிலரையே முதன்மையாகச் சுட்டமுடியும். ‘குறிஞ்சிக்குக் கபிலர்’ எனச் சிறப்பிப்பர்; இதை உறுதிப்படுத்தும் வண்ணமாக ‘குறிஞ்சிப்பாட்டு’ விளங்குகிறது; இதில் கூறப்பட்டிருக்கும் மலர்க் கழனியில் பயன்பாட்டுப் பின்புலப் பயிரை அறுவடை செய்யும் முயற்சியாக இவ்வாய்வுக் கட்டுரையானது அமைகிறது.

குறிஞ்சிப்பாட்டு - கருத்துச் சுருக்கம்

தலைவன் மீது கொண்ட அன்பினால் (பிரிவால்) தலைவியின் குணநலன்கள் மாறுபட்டுக் காணப் படுவதைக் கண்ட செவிலி, வெறியாட்டு நிகழ்த்த ஆயத்தமாகின்ற நிலையில், தோழி அதற்கான காரணங்களை எடுத்துரைக்கின்றாள்; தினைப்புனம் காக்கச் சென்ற பொழுது நாய்களிடமிருந்து காப்பாற்றி உயிர்காக்கச் செய்த தலைவனின் மீது கொண்ட அன்பினால் (காதல் பிரிவால்) இவ்வாறு காணப் படுகிறாள்; ஒரு தலைவனுக்குத் தேவையான அனைத்துப் பண்புகளும் ஒருங்கே அமையப் பெற்றவன் என்பதால், அவனுக்கே மணம் செய்விக்கலாம் என்றாள் தோழி. இதைத்தான் ‘அறத்தொடு நிற்றல்’ என்பர். தினைப்புனம் காக்கச் சென்ற இடத்தில் அருவி நீராடி விட்டு அங்கிருக்கும் மலர்கள் மற்றும் தளிர்களைப் பறித்து வந்து தொடுத்து சூடிக்கொள்வதாகக் கூறும்பொழுது, மலையும் மலை சார்ந்த இடங்களில் இருக்கும் மலர்களையும், தழைகளையும் கபிலர் கூறியிருக்கும் பாங்கைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம். அவை யாவன:

கீழ்வரும் பகுதியை, (பூக்களின் பெயர்கள் / [சோம. சுந்தரனார்; புலவர் மாணிக்கனார்;  டாக்டர் கதிர்முருகு] உரையாசிரியர்கள் உரைக்கும் பொருள் / அகராதிகள் கூறும் பொருள்) என்ற வடிவத்தில் வாசிக்கவும்.

1) வள்இதழ் ஒண் செங்காந்தள் (பூ) / பெரிய இதழ்களையுடைய ஒள்ளிய சிவந்த கோடற்பூபூ / செந்நிறமுடைய படர்கொடி வகை.

2) ஆம்பல் (பூ) / ஆம்பற்பூ / அல்லி : நெல்லி மரம்: மூங்கில் / குமுதக்கொடி.

3) அனிச்சம் (பூ) / அனிச்சம் பூ / முகந்தாலே வாடும் மென்மையான மலர்.

4) தண்கயக்குவளை (பூ) / குளிர்ந்த குளத்தில் மலர்ந்த செங்கழுநீர்ப்பூ / செங்கழுநீர்ப்பூ: கருங்குவளை: இமை: ஒரு நீர்ப்புக்கொடி:கண்: கண்ணிற கோளை செங்கழுநீர் - செங்குவளை

5) குறிஞ்சிப்(பூ) / குறிஞ்சிப்பூ / மலையும் மலை சார்ந்த இடமும்: குறிஞ்சிப்பூ: குறிஞ்சிப்பண்: மருதோன்றி: ஈந்து மரம்: பேரிச்சமரம்: சிற்றீச்சமரம், குறிஞ்சி மரம்.

6) வெட்சிப் (பூ) / வெட்சிப்பூ / ஒரு செடி: பசுநிரை கவர்தல்  

7) செங்கோடு வேரி / செங்கோடு வேரிப்பூ (செங்குத்தான மலை) / வேரி - கள்: தேன்: வாசைன

8) தேமா / தேமாம்பூ / மாமர சகை

9) மணிச்சிகை / செம்மை நிறமுடைய செம்மணிப்பூ / குன்றிமணி (குன்றிக்கொடியின் சிவப்பு விதை) அதிமதுரம்.

10) உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் (பூ) / தனக்கு உரித்தாக நாளும் விரிந்த கொத்தினையுடைய பெருமூங்கில் பூ பெருமூங்கில் : மலைமூங்கில்

11) கூவிளம் / வில்வப்பூ / வில்வம்

12) எரிபுரை எறுபூம் (பூ) / நெருப்பை ஒத்த எறுழம்பூ / எறுழ் மரம் (செந்நிறப் பூவையுடைய குறிஞ்சி நிலத்து மரம்) எறுழம் பூ

13) சுள்ளி (பூ) / மராமரப்பூ (அரசமரம்): ஆச்சா மரம்: வெண்கடம்பு (மரா): மராமர மலர் / அனிச்சமரம் : ஞாழல்: மாமரம்: மல்லிகை: ஆச்சா மரம்: நாகமல்லி

14) கூவிரம் (பூ) கூவிரம் பூ வில்வ மரம்; மலை மரவகை.

15) வடவனம் / வடவனம் பூ

16) வாகை வாகைப்பூ / ஒரு மரம்; மரவகை (உண்மை, வெற்றி)

17) வான்பூங்குடசம் / வெள்ளிய பூவினையுடைய வெட்பாலைப்பூ / வான் - பெருமை, வலிமை; குடசம் - மலை மல்லிகை; வெட்பாலை (ஒரு மரம்): வலிமையான பெருமை மிகுந்த வெட்பாலை மரப்பூ

18) எருவை / பஞ்சாய்க்கோரை / கொறுக்கச்சி: நாணல்: பஞ்சாய்க் கோரை, கோரைக்கிழங்கு

19) செருவிளை / வெண்காக்கணம்பூ / வெண்காக்கணம் / பூ; தக்காளிகுறிஞ்சி யாழ்த்திறத்தூள் ஒன்று

20) மணிப்பூங் கருவிளை / நீலமணி போன்ற பூக்களையுடைய கருவிளம் / கன்னி; கருடக்கொவ்வை; கருடத்தொண்டை; காக்கணம்; கிகனி (உயவை); காக்கணஞ் செடி; காக்கணங்கொடி.

21) பயினி / பயினிப்பூ / மரவகை

22) வானி / வானிப்பூ / ஓமம் மரவகை

23) பல்லிணர்க்குரவம் / பல இதழ்களையுடைய குரவம் ஒருமரம்; குரா (குரவு மரம்) குறிஞ்சா (ஒரு கொடி), பேரிச்சை மரம்

24) பசும்பிடி / பச்சிலைப்பூ / பச்சிலை (பச்சையிலை, பச்சிலை மரம், மரவகை)

25. வகுளம் / மகிழம்பூ / முரவகை; மகிழமரம்

26. பல்லிணர் காயா / காயாம்பூ / குலீசாமரம் காசா (காயாச் செடி; நாணல் அஞ்சனி (காயா, நானற்புல்) அல்லி; காசை (காயா, நாணற்புல்: புற்பற்றை, பன்காலி (காயாமரம்): பூவை (காயாமரம்)

27. விரிமலர் / ஆவரை / ஆவிரம்பூ சேடிவகை; ஒரு செடி; ஒரு மரம்

28. வேரல் சிறுமூங்கில் / பூ / மூங்கிலரசி; மூங்கில்

29. சூரல் / சூரைப்பூ / ஒரு செடி; ஒரு பயிர்; தூதுவளை; நெற்றிப்புல்

30. குரிஇப்பூளை / சிறுபூளை / இலவ மரம்; செடி வகை; இலவம் பஞ்சு; வெற்றிப்பூ

31. குறுநறுங்கண்ணி / குன்றிப்பூ / குன்றிப்பூ

32. குருகிலை / முருக்கிலை / மரவகைகளுள் ஒன்று

33. மருதம் (பூ) / மருதம்பூ / மருதமரம்; வயல்

34. விரி பூ கோங்கம் (பூ) / விரிந்த பூக்களை யுடைய கோங்கம் பூ / ஒரு புட்பம்; ஒரு மரம்; நெல்லி மரம்

35. போங்கம் (பூ) / மஞ்சாடிப்பூ மஞ்சாடி மரம்

36. திலகம் (பூ) / திலகப்பூ, மஞ்சாடிப்பூ / மஞ்சாடிமரம், மஞ்சாடிப்பூ

37. தேன்கமழ் பாதிரி (பூ) / பாதிரிப்பூ / பாதிரி மரம்; மூங்கில் சிவப்பூ

38. செருந்தி (கோரை) / செருந்திப்பூ / கோரை வகை; மரவகை; மணத்தக்காள் வாட்கோரை

39. அதிரல் / புனலிப்பூ / காட்டு மல்லிகை; புனலிக்கொடி; மோசி மல்லிகை; புனலி - மோசிமல்லிகை (காட்டு மல்லிகை, ஊசி மல்லிகை)

40. பெருந்தண் சண்பகம் / பெரிய குளிர்ந்த சண்பகப்பூ / ஒரு பூ; மரவகை

41. கரந்தை (இலை) / நாறு கரந்தை / ஒருவகை மூலிகைச் செடி; ஒரு பூண்டு; நாறுகரந்தை (ஒரு வகைப்பூண்டு; திருநீற்றுப்பச்சை; கொட்டை கரந்தை (ஒரு வகை கரந்தை) பச்சை (பசுரமயான இலை)

42. குளவி (பூ) / காட்டு மல்லிகைப்பூ / காட்டு மல்லிகை; மரவகை; மலை மல்லிகை; (செடி); மலைப்பச்சை

43. கடிகமல் கலிமா (பூ) / மனங்கமழும் தழைத்த மாம்பூ / கலி - தழை; மா - மரம்

44. தில்லை / தில்லைப்பூ / ஒரு மரம்; தில்லைப்பூ; நெல்வகை

45. பாலை / பாலைப்பூ / ஒரு கொடி; ஒரு மரம்;  / பாலைப்பூ

46. கல்லிவர் முல்லை / கல்லிலே படர்ந்த முல்லைப்பூ / மல்லிகை வகை; வனமல்லிகை

47. குல்லை / கஞ்சங்குல்லைப்பூ / கஞ்சர் துளசி; வெட்சி; புனத்துளசி; கஞ்சாங்கோ¬ர் ஒரு பூச்செடி; துளசிச்செடி

48. பிடவம் / பிடவம் பூ / முரவகை, மரக்கிளை

49. சிறு மாரோடம் / செங்கருங்காலிப்பூ / செங்கருங்காலிப்பூ,மரவகை

50. வாழை / வாழைப்பூ / கதலி,(தேற்றா மரம்), மரவகை

51. வள்ளி / வள்ளிப்பூ / ஒரு கொடி

52. நீள் நறுநெய்தல் / நீண்ட நறிய நெய்தற்பூ / ஆம்பல், கருங்குவளை, மற்றொரு அகராதியில் ஆம்பல் என்று உள்ளது.

53. தாழை / தென்னம்பாளை / -

54. தளவம் / செம்முல்லைப்பூ / முல்லைக்கொடி, முல்லை, முல்லைக்கொடி: செம்முல்லை

55. முட்டாள் தாமரை / முள்ளையுடைய நாளம் பொருந்திய தாமரைப்பூ / கமலம், கொடி வகை, பதும வியூகம், தாமரைக் கொடி, மலர்

56. ஞாழல் (பூ) / ஞாழற்பூ / ஆண்மரம், மரவயிரம், மல்லிகை வகை, மரவகை, குங்கும மரம்;, கோங்கு மரம், குங்குமம், சங்கு, புட்பம், புலிநகக் கொன்றை

57. மௌவல் / மௌவல் பூ / முல்லை: காட்டு மல்லிகை: தாமரை: வள மல்லிகை

58. நறுந்தன் கொகுடி / நறிய குளிர்ந்த கொகுடிப்பூ / முல்லைக் கொடி வகை

59. சேடல் / பவழக்கால் / மல்லிகைப்பூ / பவழக்கால் மல்லிகை, உச்சிச் செலுந்தில் என்னும் மரம்.

60. செம்மல் / சாதிப்பூ / சாதிப்பூ, சாதிபத்திரி, முல்லைப்பூ வகை; வாடாமல்லிப்பூ

61. சிறுசெங்குரலி / கருந்தாமக் கொடிப்பூ / -

62. கோடல் / வெண்கோடற்பூ / வெண்காந்தள், காந்தள், செங்காந்தள்

63. கைதை / தாழம்பூ / தாழை, வயல், மரம்

64. கோங்கு முதிர் வாழை / தாது முதிர்ந்த நறிய சுரபுன்னைப்பூ / சுரபுன்னை, புன்னை மரம்

65. காஞ்சி / காஞ்சிப்பூ / ஆற்றுப்பூவரசு

66. மணிக்குலைக் கட்கமழ்நெய்தல் / நீலமணி போலும் கொத்துக்களையுடைய தேனாறும் கருங்கு வளைப்பூ / ஆம்பல், கருங்குவளை

67. பாங்கர் / பாங்கர்ப்பூ / இடம், தோழர், பக்கம், உகாமரம்

68. மராஅம் / மரவம் - பூவும் / கடம்பு - வெண்கடம்பு

69. பல்பூந்தணக்கம் / பல பூக்களையுடைய தணக்கம் பூ / தணக்கு - நுணாமரம், வால், கோங்கிலவு மரம், தணக்க மரம். தணக்கம் - தணக்கம் பூ. நுணா - தணக்கமரம்

70. ஈங்கை / இண்டம்பூ / இண்டங்கொடி. இண்டம் பூ

71. இலவம் / இலவம் பூ / இலவமரம்

72. தூங்கிணர்க் கொன்றை / தூங்குகின்ற பூங்கொத்துக் களையுடைய கொன்றைப்பூ / சரக் கொன்றை, செங்கொன்றை வகை, கடுக்கை மரம்

73. அடும்பு / அடும்பம் பூ / அடம்பு: ஒரு பு, அடப்பங்கொடி, ஒரு வகை மலர்

74. அமர் ஆத்தி / பொருந்திய அத்திப்பூ / ஒரு மரவகை

75. நெடுங்கொடி அவரை / நெடிய கொடியை யுடைய அவரைப்பூ / ஒரு கொடி, அவரைக்கொடி

76. பகன்றை / பகன்றைப்பூ / கிலுகிலுப்பை, சிவதை, சீந்தில், சீந்தில் கொடி, கிலுகிலுப்பைச் செடி

77. பலாசம் / பலாசம் பூ / இலை, பச்சை நிறம, பயிர், பலாமரம், முறுக்கு, பசுமை, ஈரப்பலாசு, புரசை மரம,; ஈரப்பலா - புனமுருக்கமரம், அசினிப்பலா, ஆவழாழ மரவகை, ஒரு மரம் , பலாசம்

78. பல்பூம்பிண்டி / பல பூக்களையுடைய அசோகம்பூ / அசோக மரம்

79. வஞ்சி / வஞ்சிப்பூ / வஞ்சிக்கொடி, சீந்திற்கொடி, ஆற்றிலுப்பை, ஆற்றுப்பாலை

80. பித்திகம் / பிச்சிப்பூ / பிச்சி - ஒரு கொடி, ஒரு பெண்; சண்பகம், பித்திகை - சிறு சண்பகம், சாதி மல்லிகை

81. சிந்துவாரம் / கருகொச்சப்பூ / நொச்சி மரம், வெண்ணொச்சி

82. தும்பை / தும்பைப்பூ / செடிவகை

83. துழாய் / திருத்துழாய்ப்பூ / துளசி

84. சுடர்பூ தோன்றி / விளக்குப்போலும் பூவினை யுடைய தோன்றிப்பூ / ஒரு மலை மல்லி,  காந்தள், செங்காந்தள், இரத்தம்

85. நந்தியா / நந்தியா வட்டப்பூ / நந்தியாவட்டைச் செடி

86. நறவம் / நறைக் கொடியும் / ஞாழல், குங்கும மரம், அனிச்சமரம், மயிற்கொன்றை, (ஒரு வகை மரம்), அரத்தை (ஒருவகை மருந்து) நாறைக் கொடி.

87.  நறு புன்னாகம் / நறிய புன்னாகப்பூ / கோழக்கீரை, புன்னை, மஞ்சணரி, ஒரு மருந்துப்பூடு, புன்னை மரம்

88. பாரம் / பருத்திப்பூ / பருத்திப்பூ

89. பீரம் / பீர்க்கம்பூ / பீர்க்கு (படர் கொடி, பீர்க்கங்காய், பூவரச மரம்; வாகை மரம்

90. பைங்குருக்கத்தி / பசிய குருகத்திப்பூ / ஒரு மரம், மாதவிக்கொடி, நாகரி, வாசந்தி, மாதவி (வசந்த கால மல்லிகை) செடி வகை

91. ஆரம் / சந்தனப்பூ / சந்தன மரம், கடம்ப மரம்

92. காழ்வை / அகிற்பூவும் / அகில், அகிற்பூ

93. கடியிரும்புன்னை / மணமுடைய பெரிய புன்னைப்பூ / புன்னை மரம்

94. நரந்தம் / நாரத்தம்பூ / நாரத்தை, நரந்தை, (ஒரு வகை மருந்துக் கொடி) மணப்புல் வகை

95. நாகம் / நாகப்பூ / நாவல் மரம், புன்னை, ஓர் மருந்து மரம், ஞாழல், புன்னை மரம், ஓர் துளசி

96. நள்ளிருநரி / இருள்வாசிப்பூ / இருவாட்சிப்பூ

97) மாயிருங்குருந்தும் / கரிய பெரிய குரந்தம் பூ / காட்டு நாரத்தை, காட்டு எலுமிச்சை, ஒரு வகைச் சிறுமரம், குருகத்தி, குருந்த மரம், மாதவிக்கொடி, குருந்தம்

98) வேங்கையும் / வேங்கைப்பூ / ஒரு மரம்

99)  அரக்குவிர்த்தன்ன பரேரம் புழகு / சாதிலிங்கத்தைப் பரப்பினாற் போன்ற பரிய அழகுடைய புழகுப்பூ / மலையெருக்கு

100) ஒண் செங்காந்தள் (மலைபடுகடாம் - கானவர் குடியின் இயல்பு)

“தீயின் அன்ன ஒண் செங்காந்தள்

தூவல் கலித்த புதுமுகை ஊன் செத்து

அறியாது எடுத்து புன்புறச் சேவல் ......”   (145 - 148)

(நெருப்பை ஒத்த செங்காந்தள் முகைகள் வீழ்ந்து கிடந்ததை தசைகள் என நினைத்து பருந்துகள் எடுத்தன. தசையில்லாமையால் தின்னாமல் கீழே வீழ்த்தியது. காந்தளின் இதழ்கள் பாறைகள் தோறும் கிடந்தது வெறியாட்டுக் களம் போல காட்சியளித்தது.)

2) சுடர்பூந்தோன்றி

சுடர்ப்பூந்தோன்றி என்பதற்கு குறிஞ்சிப்பாட்டு உரையாசிரியர்கள் ‘விளக்கு போலும் பூவினையுடைய தோன்றி’ என்றும், கலித்தொகை (102 - 3) காந்தள், ஐங்குறுநூறு (440 - 3) செங்காந்தள், பரிபாடல் (12 - 80) ஒருவகை மலர் எனப் பொருள் கூறுகின்றன. அகராதியும் அவ்வாறே கூறுவதிலிருந்து ‘தோன்றியும்’ செங்காந்தளே எனத் தெளிவாகிறது உரையாசிரியர்கள் ஏன்? தோன்றி என்றே குறிப்பிட்டார்கள். இதை உற்று நோக்கினால், செங்காந்தளுக்கு இரு பெயர்கள் இருக்கின்றன என்று கூறலாம்.

3) கோடல்

நெடுநல்வாடை (1 - 5), குறுந்தொகை (62 - 1), அகநானூறு (23 - 6) ஆகிய இலக்கியங்களில் ‘கோடல்’ என்பதற்கு ‘காந்தள்’ என்றும் ‘வெண்கோடல்’ (அகநானூறு) என்றும் பொருளுரைப்பதிலிருந்து வெண்காந்தளையே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை அறியமுடிகின்றது.

4) தன்கயக்குவளை

அகநானூறு (19 - 10); குறுந்தொகை (13 - 5) மதுரைக்காஞ்சி (566) ஆகிய நூல்கள் ‘குவளை’ என்பதற்கு ‘கரிய குவளைப்பூ’ என்றும், இது பெண் களின் கண்களுக்கு உவமையாகவும் கூறப்பட்டுள்ளது.

5) நீள்நறு நெய்தல்

அகநானூறு (10 - 5) - நெய்தற் பூவை ஒத்த மையுண்ட கண்கள்; வயல்களில் கரிய நீரில் பசிய இலைகளையுடைய தழைத்தத் திரண்ட தண்டினை யுடைய நெய்தற்பூக்களை (70 - 12). குறுந்தொகை (9 - 4). பசிய இலைகளுக்கு மேலே உயர்ந்து நின்ற திரண்ட தாளையுடைய நெய்தல், ஐங்குறுநூறு (2 - 4). பல் இதழ்கள் பொருந்திய நீலத்தோடு (கருங்குவளை) நெய்தலும்...... என்றவாறு கூறப்பட்டுள்ளன. (நெய்தல் என்பதற்கு நெய்தல் நிலத்திற்குரிய சிறப்பான நீர்ப்பூ என உரையாசிரியர் முனைவர் அ. தட்சிணா மூர்த்தி குறிப்பிடுகிறார்).

6) மணிக்குலைக்கட் கமழ்நெய்தல்

‘நீலமணிபோலும் கொத்துக்களையுடைய தேனாறும் கருங்குவளைப்பூ’ என்று உரையாசிரியர்கள் பொருள் கூறுகின்றனர். இவ்வடிகளானது ‘குறிஞ்சிப் பாட்டுத் தவிர’ வேறு சங்க இலக்கியங்களில் இடம் பெறவில்லை என ‘சங்க இலக்கியச் சொல்லடைவு’ எனும் நூலில் இடம்பெற்றுள்ளது.

மேற்கண்ட விளக்கங்களை உற்றுநோக்கும் பொழுது ஒரே பூவை இரண்டு இடங்களில் கபிலர் பயன் படுத்துகிறாரா? என்ற நெருடலை ஏற்படுத்துகிறது. மேலும், ஐங்குறுநூறு உரையாசிரியர் அ.தட்சிணா மூர்த்தி அவர்கள் நெய்தல் என்பது ‘நெய்தல் நிலத்திற் குரிய சிறப்பான நீர்ப்பூ’ என்று குறிப்பிடுவதிலிருந்து நெய்தல் வேறு, கருங்குவளை வேறா? என்ற ஐயப்பாட்டையும் நமக்குள் ஏற்படுத்துகிறது. அதோடு, அகராதிகள் தரும் பொருள்: ஆம்பல், கருங்குவளை, இதில் எதைப் பொருத்திப் பார்ப்பது என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மேலும், உரையாசிரியர் ‘நீள் நறு நெய்தல்’ என முதலில் இருப்பதற்கு ‘நீண்ட நறிய நெய்தல்’ என்றும், இரண்டாவது குறிப்பட்ட ‘மணிக் குலைக் கட்கமழ் நெய்தல்’ என்பதற்கு நீலமணிபோலும் கொத்துக்களையுடைய தேனாறும் கருங்குவளைப்பூ’ என்றும் வேறுபடுத்திக்கூறியது ஏன்? மணி என்றால் நீலமணியை மட்டுமே எப்படிக் குறிக்கும்? அழகான (அ) கருமையான கொத்துக்களையுடைய தேனாறும் நெய்தல் என ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது? இது போன்ற வினாக்களையும் நம்முள் எழுப்புவதாக அமைகிறது.

7) செங்கொடுவேரி

உரையாசிரியர்கள் செங்கொடு ‘வேரிப்பூ’ என்றே பொருளுரைக்கின்றனர். இச்சொல் குறிஞ்சிப்பாட்டுத் தவிர பிற சங்க இலக்கியங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். பத்துப்பாட்டை ஆராய்ச்சி செய்த இராசமாணிக்கனார் ‘செங்கொடு’ என்பதைச் செங்கோடு எனத் தனியாகவும், ‘வேரி’ எனத் தனியாகவும் பிரித்துக் கூறியுள்ளார். (பத்துப்பாட்டு ஆராய்ச்சி, ப:4.88). இவர் கருத்துரைப்படி, செங்கோடு என்பதற்கு தாவர இனப்பெயரே இல்லை, மலையுச்சி, ‘செங்குத்தான மலை’ என்று தான் பொருள். எனவே, இவர் கூறியதை அச்சாக்கம் செய்யும் பொழுது பிழை ஏற்பட்டிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.

தேமா

“நூறொடு குழீஇயன கூவை சேறுசிறந்து

உண்ணுநர்த் தடுந்தன தேமாப் புண்ணரிந்து...”

(மலைபடுகடாம் : 138)

(தம்பழத்ததின்கட் சாறுமிக்கு உண்பாரை வேறொன்றில் செல்லவொட்டாமல் தடுத்துக் கொண்டன தேமா மரங்கள்)

கடிகமல் கலிமா

“பருமங் களையாப் பாய்பரிக் கலிமா...”

(நெடுநல்வாடை - 179)

பாய்ந்து செல்லும் செலவினையுடைய செருக் கினையுடைய குதிரைகள்.

“பன்னூல் மாலைப் பனைபடு கலிமாப்

பூண்மணி கறங்க வேறி நாணட” (குறு. 173 .2)

பலவாகிய நூல்களையுடைய மாலைகளாலே ஒப்பனை செய்யப்பட்ட பனைமடலாலே இயற்றிய குதிரையை ஆண் கழுத்தில் பூட்டிய மணி...)

மேற்கூறியதில் கலிமா என்றாலே குதிரை என்பதைத் தெளிவாக்குகிறது. குறிஞ்சிப்பாட்டில் கலிமா எனப் பிரித்து உரையாசிரியர்கள் பொருளுரைக் கின்றனர். பிற இலக்கியங்களில் இடம்பெறும் நிலை: கானல் அம் பெருந்துறை கலிதிரை திளைக்கும்;; (ஐங்;. 199-1) இதில் கலிதிரை - ஆரவாரிக்கும் அலை என்று பொருள். மா என்பது மற்ற இலக்கியங்களில் பெரிய, குதிரை, மாமரம் என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது.

சுள்ளி (அக - 149.8)

“சுள்ளிஅம் பேரியாற்று வென்றுரை கலங்க”

சுள்ளி என்னும் பெயர்கொண்ட பேரியாறு சேரி அரசர்க்குரியது எனப் பொருள் கூறப்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாட்டில் மட்டுமே சுள்ளி என்பதற்கு எனப் பொருள் சுட்டப்பெற்றுள்ளது.

மணிப்பூங் கருவிளை

கருவிளை என்பது ஐங்குறுநூறு (464- 1); நற்றிணை (221-1; 262-1) அகநானூறு (255-11; 294-5) ஆகிய இலக்கியங்களில் ‘கருங்காக்கணம் பூ’ என்று  (உரையாசிரியர் முனைவர் அ.தட்சிணாமூர்த்தி) பொருள் கூறப்பட்டுள்ளது.

பயினி

பயினி என்பது குறிஞ்சிப்பாட்டில் மட்டுமே வருகிறது. அகநானூற்றில் (356:9) ‘பயினொடு சேர்த்திய’ என்பதற்கு அரக்கோடு சேர்த்துச் செய்த சாணைக்கல் போன்ற நாவினையுடைய... என்றவாறு கூறப்பட்டுள்ளது. அகராதிகள் ‘மரவகை’ என்று பொருள் கூறுகின்றன. ஆகவே, ‘பயினி’ என்பதற்கு பயின் (அரக்கு) மரத்தின் பூ ‘பயினி’ என்றாயிற்று எனக் கருதலாம்.

வானி

‘வானி’ என்ற சொல் குறிஞ்சிப்பாட்டு மற்றும் பதிற்றுப்பத்தில் மட்டுமே இடம்பெறுகிறது. பதிற்றுப் பத்தானது ‘வானிநீரினும்’ (86-12) என்பதற்கு ‘ஆற்றுநீர்’ என்று பொருள் கூறப்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாட்டின் உரையாசிரியர்கள் ‘வானிப்பூ’ என்றே பொருளுரைக் கின்றனர். அகராதிகள் ஓமம,; மரவகை என்று பொருள் கூறுவதால் ‘ஓமமரம்’ எனக் கருதலாம்.

போங்கம்

‘போங்கம்’ என்பதற்கு உரையாசிரியர்கள் மற்றும் அகராதிகள் மஞ்சாடிப்பூ , மஞ்சாடிமரம் என்று பொருள் உரைக்கின்றனர். குறிஞ்சிப்பாட்டு தவிர மற்றதில் இல்லை.

திலகம்

திலகம் என்பதற்கு சோம. சுந்தரனார் மஞ்சாடி மரத்தின் பூ என்று குறிப்பிட்டுள்ளார். மற்ற உரை யாசிரியர்கள் திலகப்பூ எனக் கூறுகின்றனர். இராசா மாணிக்கனார் என்னவென்றே குறிப்பிடவில்லை; சோம சுந்தரனார் மலைபடுகடாமில், திலக நறுங்காழ் ஆரம் (520) என்பதற்கு திலகப்பூ என்றே உரைக்கின்றார். சிலப்பதிகாரத்தில் ‘மரவமு நாகமுந் திலகமு மருதமும்’ (13.152) என்ற அடியில் வரும் திலகத்திற்கு அரும்பத உரையும் அடியார்க்கு நல்லார் உரையும் ‘மஞ்சாடி மரம்’ என்று பொருள் கூறப்பட்டுள்ளதன் மூலமும் திலகமும், மஞ்சாடி மரப் பூவும் ஒன்றே எனத் தெரிய வருகிறது.

மேற்கூறியதை வைத்துப் பார்க்கும் பொழுது கபிலர் ‘மஞ்சாடிப்பூவை’ இருமுறை பயன்படுத்தி யிருக்கிறார் என எண்ணத் தோன்றுகின்றது.

செருந்திப்பூ

‘செருந்தி’ என்பதற்கு ‘நெட்டிக்கோரை’ எனப் பட்டினப்பாலையில் (243) கூறப்பட்டுள்ளது.

ஞாழல்

ஞாழல் என்பதற்கு அகநானூறும் (708-10), ஐங்குறுநூறும் (103.2) ‘புலிநகக்கொன்றை’ எனப் பொருள் உரைக்கின்றது.

மௌவல்

குறுந்தொகை (19-4) மல்லிகை என்றும், நற்றிணை (122-4; அக. 21-1, 23-12) பரிபாடல் (12 -77) முல்லை என்றும், கல (14-3; 27-4) முல்லை மலர் என்றும் குறிப்பிடுவதன் மூலம் மௌவல் என்பது முல்லையே எனத் தெளிவாக அறியமுடிகின்றது.

செம்மல்

‘செம்மல்’ என்பது குறிஞ்சிப்பாட்டில் மட்டுமே ‘சாதிப்பூ’ என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. பிற இலக்கியங்களில் இல்லை.

சிறுசெங்குரல்

புறநானூற்றில் (283-1) செங்குரலி என்றவாறே பொருள் கூறப்பட்டுள்ளது.

குறிஞ்சிப்பாட்டில் மட்டுமே இடம்பெறும் தாவரங்கள்

மணிச்சிகை, கூவிரம், வடவனம், வான்பூங்குடசம், செருவிளை, குருகிலை, போங்கம், மணிக்குலைகட் கமழ்நெய்தல், அமர் ஆத்தி, பலாசம், சிந்துவாரம்,  காழ்வை, நள்ளிருள் நரி என்பகைவள் மற்ற சங்க இலக்கியங்களில் இடம்பெறாதவையாகும்.

பயன்பாட்டுப்புலம்

குறிஞ்சிப்பாட்டில் பயன்பாட்டுப் பின்புலம் என்பது தலைவி தினைப்புனம் காப்பதற்குச் செல்லும் பொழுது அங்கே இருக்கக் கூடிய மலர்கள், தழைகள் இவற்றைப் பறித்து வந்து தொடுத்துச் சூடிக்கொள் வதாகவும், தலைவன் காதிலும், கழுத்திலும் சூடியிருப் பதாகவும் கூறுவதிலிருந்து மலர்கள் சூடுதல் எனும் பயன்பாடு தெரியவருகிறது.

படைப்பாளனின் வழி பயன்பாட்டுப் பின்புலத்தை ஆய்ந்தால், இயற்கையின் மீது அவருக்கு இருக்கும் அளவுகடந்த பற்றையும், மலையழகு கண்டு இன்புற்ற நிலையையும் கண்டு அவர் எடுத்துக்கூறும் தன்மை யானது, கபிலர் மனம் ஓடிப்பறிப்பதை தலைவியின் வாயிலாகக் கூறியிருக்கிறா, தலைவி பறித்து வரவில்லை, கபிலரே பறித்திருக்கிறார்.

ஆகவே, இயற்கையை நேசிக்கும் மனம், அவற்றின் பெயர்களை அறிந்து வைத்திருக்கும் பாங்கே பின்புலமாக அமைகிறது.  

மருத்துவப் பயன்கள் (இந்திய மூலிகைகள் மருத்துவ குண அகராதி)

மூங்கில்

வேர் - தசை இறுக்கி, குளிர்ச்சி தரும், மூட்டுவலி மற்றும் பொதுவான பல வீனத்தைத் தசை சரிவு வலியைத் தடுக்கும்; மாதவிடாய் போது ஏற்படும் வலி போக்கும், வயிற்றிலுள்ள புழுக்கள் போக்கி, வயிற்றினை வலுப்படுத்தும். இலைச்சாறு பால் உணர்வு ஊக்குவியாக கருதப்படுகிறது. இளங்கன்றுகள் மயக்கம், பித்தம் போக்கி ஜீரணத்தைத் தூண்டும், கிருமிகளினால் தாக்கப்பட்டு சீழ்பிடித்த காயங்களுக்குப் பற்றாகப் பூசப்படுகிறது. இதன் சாறு சிலிக்காவினை அதிக அளவில் கொண்டுள்ளது. குருத்து எலும்புகளுக்கு வலுவு தரும், வலுவு இழந்த எலும்புகளைக் குணப் படுத்தும். (பக் - 58)

வில்வம்

இலைகள் ஆஸ்துமா, காய்ச்சல் மற்றும் சளி போக்கும். பட்டை இதயத்துடிப்பு, விட்டுவிட்டு வரும் காய்ச்சல், மனஉளைச்சல் ஆகியவற்றைத் தீர்க்கும். வேர் பசியின்மை மற்றும் மகப்பேறுக்குப் பின் ஏற்படும் நோய்களுக்கு சிறந்த மருந்தாகும். கனிகள் குளிர்ச்சி தரும் வைட்டமின்  “சி’ நிறைந்தது. காய், விதைகள் ஊட்டம் தருவது, மலமிளக்கி, தொடர்ந்த மலச்சிக்கல், தொடர்ந்த வயிற்றுப்போக்கு, அஜீரணம் ஆகிய வற்றினைத் தீர்க்கும். காய் தசை இறுக்கும் தன்மை கொண்டது.

வகுளம்

மலர்களின் பொடி மூக்கு பொடியாக உள்ளிழுக்கப் பட்டு தலைவலி போக்க உதவுகிறது. மலர்கள் கனிகளுடன் சேர்ந்து சதை இறுக்கிப் பொருளாக புண்களைக் குணப்படுத்துகிறது. கனிகள் தொடர் வயிற்றுப்போக்கினை தடுக்கும். விதைகள் வயிற்றுப் போக்கினை தூண்டக் கூடியது. குழந்தைகளின் மலச் சிக்கலை போக்கவல்லது. பட்டை, சத்து மருந்தாகவும் காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. பெண்களின் கருத்தரித்தலை ஊக்குவிக்கும். இதன் வடிநீர் பல் மற்றும் ஈறு தொடர்பான நோய்களில் கொப்பளிப்பாகப் பயன்படுகிறது.

மருதம்

பட்டை மருந்து கிருமிகளுக்கு எதிரானது. ஜீரண கோளாறுகளைப் போக்க வல்லது. காய்ச்சல் மற்றும் இருமல் நோய்களுக்கு மருந்தாகிறது. பட்டையின் பொடி மூக்கு அடைப்பினைப் போக்கும். மூக்குப் பொடியாக பயன்படுத்தப்படுகிறது. பட்டையினை மெல்லுவதால் பல்வலி நீங்கும். கனிகளிலிருந்து கிடைக்கும் மெழுகு நாட்பட்ட புண்களை குணப் படுத்த மேல் பூச்சாக பயன்படுகிறது. (பக்: 151)

ஆய்வு முடிவு

1) செங்கோடு வேரி, வான்பூங்குடசம் (இராச மாணிக்கனார் பொருள் குறிப்பிடவில்லை), எருவை (புல்வகை), பசும்பிடி (இலை), கரந்தை (இலை) இவைகள் புல்லும், தளைகளும் என்பதால் பூக்களின் வகையுள் அடங்காதவை, மேலும் ஒரே பூ வகை இரண்டு இடங்களிலும் குறிக்கப்பட்டு உள்ளன. இவைகளை மனதில் கொள்ளும் பொழுது குறிஞ்சிப்பாட்டில் 99 வகையான மலர்கள் கூறப் பட்டுள்ளன என்பதைவிட, 99 வகையான தாவரங்கள் என்றே குறிப்பிடுவது பொருத்த மானதாகும் எனக் கூறலாம்.

2) 99 வகையான மலர்களைப் பட்டியலிடும் அறிவியலாளர்கள் சொற்களைப் பிரித்துப் பொரள் கொள்ளும் வகையில் தவறாகப் பிரித்துப் பொருள் கூறியுள்ளனர். (உரிது நாறு என்பதை நறையுடன் ஒப்பிட்டுள்ளனர்)

3) இராசாமாணிக்கனார் ‘வாகை’, ‘வஞ்சி’ என்ற மலர்களைக் குறிப்பிடவில்லை. ‘பாங்கர்’ என்பதற்கு ‘ஓமைப்பூ’ என்று கூறுகிறார், மேலும் இவர் ‘செம் பூ’ என்னும் தனியான பூ ஒன்றைக் குறிப்பிட்டு உள்ளார்.

4) இதில் கூறப்பட்டிருக்கும் பெரும்பாலான மலர்கள் செம்மை நிறமுடையவை என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது, மருத்துவத் தன்மை கொண்ட தாவரங்களுள் பெரும்பாலானவற்றைத் திருத்தலங்களில் வைத்திருக்கிறார்கள். (தல விருட்சம்...)

5) ‘குறிஞ்சிப்பாட்டு’ இன்னும் ஆராயப்படவேண்டிய நூலே என்று கூறினாலும் கபிலர் இவ்வளவு தாவரங் களை அறிந்து வைத்திருப்பது பாராட்டுக்குரிய தாகும், தாவரவியல் வல்லுநர்களுடனும், சித்த மருத்துவர்களுடனும் புலம் வாய்ந்த இலக்கிய வாதிகள் இணைந்து செயல்பட்டால் ஆய்வு இன்னும் செம்மையுறும்.

நூற்கள்

1) சங்க இலக்கியங்கள்

2) பத்துப்பாட்டு ஆராய்ச்சி மா. இராசமாணிக்கனார்

3) A word index for sankam literature by Thomas lehmamn and Thomas maltex institute of asian studies

4) கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள், இரா.பஞ்சவர்ணம் (தொகுப்பாசிரியர்)

5) இந்திய மூலிகைகள் மருத்துவ குண அகராதி - பேரா.தன்யக்குமார்.

6) மதுரைத் தமிழ் அகராதி இ.எம்.கோபாலகிருஷ்ணன்

7) கௌரா தமிழ் அகராதி

8) சுராவின் தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதி

9)  லியோவின் தமிழ் அகராதி.