இந்தியாவின் தென்கோடியில் உள்ள திரு நெல்வேலி மாவட்டத்தில், குறுநில மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட எட்டயபுரத்தில் 1882, டிசம்பர் 11-ஆம் தேதி பிறந்தவர் சுப்பிரமணியன். தந்தை பெயர் சின்னசாமி ஐயர்; தாய் பெயர் இலட்சுமி அம்மாள். எட்டயபுரம் மன்னரிடம் பணிபுரிந்து வந்தவர் சின்னசாமி ஐயர். அவருக்கு நவீன தொழிலைத் தொடங்க வேண்டும் என்பதில் ஆர்வம் இருந்தது. தன் மகன் சுப்பிரமணியை மேல் நாட்டுக் கல்விமுறையில் படிக்கவைத்துப் பெரும் தகுதி - பதவிக்கு உரியவனாக்க வேண்டும் என்பது ஆசை. இந்தியாவிலுள்ள மிகப் பெரும்பான்மையான பெற்றோர்களின் அதே ஆசையும், கனவும் அவரையும் ஆட்கொண்டிருந்தன.

bharathi_450சுப்பிரமணியனின் தாயார் இலட்சுமி அம்மாள், தன் மகனை ஐந்தாம் வயதில் விட்டுவிட்டு மறைந்தார். இளம் பருவத்தில் தாயை இழந்த சுப்பிரமணியனை வேதனையும், தனிமையும் வாட்டியிருக்க வேண்டும். படித்துப் பட்டம், பதவி பெற வைக்கும் நோக்குடன் மகனை நெல்லைப் பள்ளியில் சேர்த்தார் சின்னசாமி ஐயர். ஆங்கிலக் கல்வியில் நாட்டம் கொள்ளாது படிப்பை விட்டுத் திரும்பினார் சுப்பிரமணியன். பிராமணர்கள் மத்தியில் அந்தக் காலத்தில் இருந்த வழக்கப்படி சுப்பிரமணியனுக்கும், செல்லம்மாளுக்கும் 1897-இல் திருமணம் நடந்தேறியது. அப்பொழுது செல்லம்மாவுக்கு வயது ஏழே ஏழுதான். தன்னுடன் கூடி விளையாட ஒரு தோழி கிடைத்ததாகச் சுப்பிர மணியன் நினைத்தாராம்.

சுப்பிரமணியனின் தந்தை சின்னசாமி ஐயர் எட்டயபுரத்திற்கருகில் ஒரு பஞ்சாலையை நிறுவினார். தொழிற்சாலை லாபகரமாக ஓடவில்லை. நொடித்துப் போனது பஞ்சாலை. நொந்து போனார் சின்னசாமி ஐயர். 1898-இல் சின்னசாமி ஐயர் காலமானார். தாயையும், தந்தையையும் இழந்து தனியனாக, இளம் மனைவியுடன் திகைத்து நின்றார் சுப்பிர மணியன்.

இளம்பருவத்திலேயே கவிதை புனையும் ஆற்றல் சுப்பிரமணியனிடம் இருந்தது. எட்டயபுரம் மன்னரைச் சுற்றிலும் பல கவிஞர்கள் இருந்து வந்தனர். அவர்களின் உறவால் இலக்கியத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் சுப்பிரமணியனுக்கு எழுந் திருக்க வேண்டும். தமிழ் இலக்கணப் புலமையை மட்டும் வைத்துக் கொண்டு சொற்சிலம்பம் ஆடி வந்த கவிஞர்களிடம் சுப்பிரமணியனுக்கு மரியாதை ஏற்படவில்லை. இளம் சுப்பிரமணியனை மூத்தோர் மதிக்கவும் இல்லை. இருந்தாலும் சுப்பிரமணியனின் இலக்கியத் திறனை முற்றாக நிராகரிக்கவும் முடிய வில்லை. பாடல் புனையும் சுப்பிரமணியனின் திறனைப் பாராட்டி ‘பாரதி’ என்று பட்டம் வழங்கினர். இந்தப் பெயர்தான் சுப்பிரமணிய பாரதி என நிலைத்து நின்றுவிட்டது.

1898-இல் சின்னசாமி ஐயர் காலமான பிறகு திகைத்து நின்ற பாரதியை, அவரது அத்தை காசியில் வந்து தன்னுடன் தங்கி மேல்படிப்பை மேற்கொள்ள அழைத்தார். பாரதியும் 1898-இல் காசிக்குப் போனார். அங்கு சிவமடத்தில் தங்கி இருந்தார். கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்தி வந்த கல்லூரியில் புகுமுகத் தேர்வில் முதல் வகுப்பில் தேறினார்.

இந்தியாவிலுள்ள கோடானுகோடி இந்துக்களின் புனிதமான இடமாகக் கருதப்படும் இடம் காசி. அங்கு வேத வியாக்யானங்கள், விவாதங்கள் நடக்கும். விழாக்களுக்குக் குறைவு இல்லை. கோடி மக்கள் கூடுவதையும் காணலாம். பிறந்த குலமோ வைதீக பிராமண குலம். தாய் தந்தையரை இழந்து, சொத்து சுகம் இன்றி, பிறர் ஆதரவில் காசியில் வாழ்ந்த இளைஞனை ஆன்மிகம் ஆட்கொண்டு இருக்க வேண்டும். தங்கியிருந்த இடமும் சிவமடம். இந்தச் சூழலில் வளர்ந்த இளைஞன், குல ஆச்சாரம், தங்கி யிருந்த இடத்தின் ஆன்மிகக்காற்று, காசியில் பரவி வேர்விட்டு நிற்கும் மதச்சடங்குகள் ஆகியவற்றால் ஈர்க்கப்படாமல், நாடு, மக்கள்பற்றியே அவர்

மனம் அந்த வயதிலும் நாடியிருந்திருக்கிறது என்பதை அவர் பின்னர் சாதிமுறையைச் சாடி எழுதிய கட்டுரைகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. காசியிலும் பாரதியின் படிப்பு பட்டத்தைப் பெறு வதை நோக்கி முன்னேறவில்லை. ஆனால், ஆங்கிலம், வடமொழியில் நல்ல புலமை பெற்றுத் திகழ்ந்தார். 1903-இல் காசிக்கு எட்டயபுரம் மன்னர் வந்தார். அவர் அழைப்பை ஏற்று, பாரதி அவருடன் 1903-இல் எட்டயபுரத்துக்குத் திரும்பினார். பாரதியின் சுதந்திர வேட்கையும், கவிஞர் என்ற தலைவணங்காக் குணமும் மன்னருடன் தொடர்ந்து இருக்க முடியாத நிலையை உண்டு பண்ணின.

1904-இல் மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரி யராகப் பாரதி சேர்ந்தார். அதுவும் குறுகிய காலம் தான். 1904 நவம்பரில் சென்னைக்குச் சென்று சுதேச மித்திரன் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். 1882 முதல் 1904 வரை பாரதியின் நடவடிக்கைகளில் அரசியல், சுதந்திரப்போராட்டம் என எதுவும் தென்படவில்லை. சுதேசமித்திரன் பத்திரிகையில் சேர்ந்த பிறகுதான், உலக விவகாரங்களைப் பற்றிய செய்திகள் பாரதியை ஈர்க்கத் தொடங்கின. சுதேச மித்திரன் பத்திரிகையைத் தேசபக்தியோடு தொடங்கி நடத்தி வந்த சுப்பிரமணிய ஐயர் நன்கு கற்றறிந்தவர்; தேசியவாதி. அவரது உறவும் பாரதியை அரசியல் உலகிற்கு அறிமுகம் செய்தது.

சென்னைக்கு வந்த பின்னர் வக்கீல் துரைசாமி, வி.சக்கரை செட்டியார், டாக்டர் ஜெயராம், பத்திரிகை யாளர் ரகுநாதராவ், பரலி சு.நெல்லையப்பர், மண்டையம் திருமலாச்சாரி குடும்பத்தார், இராம சேசய்யர், தமிழறிஞர் திரு.வி.க., பொதுவுடைமை இயக்கச் சிற்பி சிந்தனைச்செல்வர் சிங்காரவேலர் ஆகியோருடன் ஏற்பட்ட தொடர்பு, பாரதியை ஒரு புதிய உலகின் புதிய மனிதனாக மாற்றிவிட்டது.

1904 முதல் 1921 செப்டம்பர் 11 வரை வாழ்ந்த பாரதியின் வாழ்நாட்கள்தான் வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்தவையாகும். 1904 முதல் 1908 வரை சென்னையில் பத்திரிகை ஆசிரியராக, மேடைப் பேச்சாளராக, மாநாட்டுப் பிரதிநிதியாக, சங்க அமைப்பாளராக, தீவிர இயக்கத்தாரோடு தொடர்பு கொண்டவராக வளர்ந்தார்.

1905-இல் பாரதியார் அரசியல் மேடையில் ஏறினார். வங்கத்தை இரு மாநிலங்களாகப் பிரிக்க வெள்ளை அரசு முடிவு செய்ததை எதிர்த்து நாடெங் கிலும் கிளர்ச்சி எழுந்தது. வங்க மாநிலத்தின் பல பகுதிகளில் தீவிர தேசியவாதிகள் ஆயுதமேந்திப் போராடி வந்தனர். வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டங்கள் பல மாநிலங்களில் நடந்தன என்றாலும், வங்காளத்தில் ஆயுதமேந்திய கிளர்ச்சிகள் அதிகமாகத் தோன்றின. தீவிர தேசிய இயக்கத்தை ஒடுக்கும் நோக்கத்தோடுதான், அதை இரண்டு பிரிவு களாக நிர்வாக சௌகரியத்திற்காக வெள்ளையர்கள் கூறு போட முயன்றனர். சென்னைக் கடற்கரையில் நடந்த கூட்டத்தில் ‘வங்கமே வாழிய’ என்ற பாடலைப் பாரதி பாடினார். இதுதான் அவரது முதல் முழக்கம். முதல் உலகப்போருக்கு முன்னர் இந்தியாவில் சுதந்திர இயக்கம் பெரிய வீச்சைப் பெற்றிருக்க வில்லை. 1885-இல் நிறுவப்பட்ட காங்கிரஸ் கட்சி, நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவாமல் இருந்தது. படித்தவர்கள், விரல் விட்டு எண்ணக்கூடிய பணக் காரர்கள், சில தீவிரவாதிகள் மட்டுமே வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்து அங்குமிங்குமாக இயங்கி வந்தனர்.

1905-ஆம் ஆண்டுவாக்கில் காங்கிரஸ் கட்சி முறைப்படி அங்கத்தினர்களைச் சேர்த்து, மாவட்ட, மாநில, தேசிய தலைமைக் குழுக்கள், நிரந்தரத் தலைமை என்ற ஏற்பாடுகளைச் செய்யாதிருந்த காலம் அது. வகுக்கப்பட்ட கொள்கை, வரையறுக்கப் பட்ட லட்சியம், கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை, வழிகாட்டும் தலைமை என்று, இன்று இருப்பது போல அன்று அமையவில்லை. சுதந்திர தாகம் உள்ள வர்கள், அதனால் வரக்கூடிய அரசின் அடக்குமுறை களைக் கண்டு அஞ்சாதவர்கள், சுயநலம் சற்றும் இல்லாத தியாக குணம் படைத்தோர் மட்டுமே சுதந்திரப் போராட்ட இயக்கத்தில், தாங்களாக சுயமாகப் பங்கெடுத்து வந்தனர். எனவே, இவர் களது எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது.

சென்னைக் கடற்கரைக்கூட்டத்தில் பாடிய பிறகு, 1905-இல் காசியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கெடுக்கப் பாரதி போய் வந்தார். அந்த மாநாட்டில் லோகமான்ய பால கங்காதர திலகர், நிவேதிதா தேவி ஆகியோரைப் பார்க்கும் வாய்ப்பைப் பாரதியார் பெற்றார்.

1906-இல் சென்னையில் பால பாரத சபை என்ற சங்கத்தை அமைப்பதில், பாரதியார் பங்காற்றினார். அதே சங்கம் கடற்கரையில் கூடிக் கல்கத்தாவில் நடக்கவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கும் அவரைப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்தது. கல்கத்தா மாநாட்டி லிருந்து திரும்பிய பின்னர் 1906-இல் திலகர் பிறந்த நாளைச் சென்னையில் கொண்டாடப் பாரதியார் பங்காற்றினார். 1906-இல்தான் பாரதிக்கும், மாபெரும் தேசபக்தர் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கும் நேரடித் தொடர்பு ஏற்பட்டது. 1906, 1907-ஆம் ஆண்டு களில் சென்னையில் பல பொதுக் கூட்டங்களை நடத்தி, பாரதியார் அமைப்பாளராகவும், பேச்சாள ராகவும் வளர்ந்தார்.

1907-ஆம் ஆண்டு விஜயவாடாவிற்குச் சென்று விபின் சந்திர பாலரைச் சந்தித்துச் சென்னையில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்க அழைத்து வந்தார். சென்னையில் ஐந்து கூட்டங்களில் விபின் சந்திரபாலர் பேசினார். 1906-7இல் இந்தியாவிற்கு முழுச் சுதந்திரம் வேண்டும் என முழங்கி வந்தவர் விபின் சந்திரபாலர் தான்.

இதே காலத்தில் பஞ்சாப் மாநிலத்தில் பத்திரிகைத் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதை எதிர்த்து ஒரு கூட்டத்தில் பாரதியார் பேசினார்.

1907-ஆம் ஆண்டு சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்கப் பிரதிநிதியாகத் தேர்ந் தெடுக்கப்பட்டார் பாரதியார். சூரத் மாநாட்டில் தீவிரவாதிகளுக்கும், மிதவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மேடையை நோக்கி நாற்காலிகள் வீசப்பட்டன. மாநாடு கலவரத்தில் முடிந்தது. பாரதியோ, சூடேற்றப்பட்ட தீவிரவாதியாக, திலகரின் ஆதரவாளராகச் சென்னைக்குத் திரும்பினார். திலகரையும், திலகர் கட்சியையும் ஆதரித்துப் பல கட்டுரைகளை எழுதினார். சூரத் மாநாட்டிற்குப் பாரதி, வ.உ.சி.யுடன் சென்றார் என்பது குறிப்பிடத் தக்கது. பாரதியாருடன் அன்றைக்கு அனல் கக்கும் பேச்சாளர்களாகத் திகழ்ந்தவர்கள் ஆர்யாவும், வெங்கட்ரமணாவும் ஆவர். இவர்களது தீவிரப் பிரசாரத்தை முறியடிக்கவும், இவர்களைத் தண்டிக்கவும் கைதுசெய்ய அனுமதி கோரிக் காவல்துறை மனுச் செய்தது. இதே காலத்தில் மூர் சந்தையிலிருந்து சென்னைக் கடற்கரைக்கு 1500 பேர் கொண்ட ஒரு கண்டன ஊர்வலமும் நடைபெற்றது. குறுகிய கால அழைப்பில், வெள்ளை அரசை எதிர்த்துக் கண்டன ஊர்வலத்தில் 1500 பேர் கலந்து கொண்டது, ஒரு பெரும் போர்ப்பேரணி ஆகும். அதன் அளவால் அன்றி, அதன் தன்மையால், குணத்தால் அந்தப் பேரணி பிற பேரணிகளுடன் ஒப்பிடப்பட முடியாத தாகி விடுகிறது.

1908-இல் இலட்சுமணய்யா என்ற சுதந்திரப் போராட்ட வீரர் அந்நிய ஆட்சியாளர்களின் காவல் துறையைக் கண்டித்துப் பேசியதற்காகக் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்டார். அவர் விடுதலையாகி வெளியில் வந்தவுடன் அவரை வரவேற்று, பாராட்டுக்கூட்டம் நடத்தி, பரிசும் வழங்கினார் பாரதியார்.

1911-இல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷ் என்ற வெள்ளையரை மணியாச்சி ரயில் சந்திப்பில் சுட்டுக் கொன்றான் வாஞ்சிநாதன் என்னும் இளைஞன். வெள்ளை அதிகாரிகளைத் தாக்கிக் கொலை செய்வதைப் போராட்டத்தின் ஒரு முக்கிய வழியாக ஒரு சாரார் கருதி வந்தனர். ஆனால் தனிநபர் கொலைவழி முறையைப் பாரதியார் ஏற்கவில்லை. வ.வே.சு.ஐயர் போன்றோர் ஆதரித்தனர்.

அதே கொலை வழக்கில், ஆட்சிக்கு எதிராகக் கலகம் செய்யத் தூண்டியதாக வ.உ.சி. குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையின்போது நெல்லைச் சிறையில் அடைக்கப் பட்டிருந்த வ.உ.சி.யைப் பாரதியாரும், ஆர்யாவும் நேரில் சென்று பார்த்துப் பேசிவிட்டுத் திரும்பினர். சென்னை திரும்பியவுடன் வ.உ.சி. கைது செய்யப் பட்டதைக் கண்டித்துப் பல கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றில் பாரதி பங்கு கொண்டு ஆட்சியாளர்களின் அநீதியைக் கண்டித்துப் பேசினார்.

‘இந்தியா’ பத்திரிகையில் பாரதியார் எழுதிய பல கட்டுரைகளுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கவும், பத்திரிகையை ஒடுக்கவும் காவல்துறை பாய்ந்தது. பாரதியும் திருமலாச்சாரியாவும் 21.8.1908 மாலையில் பாண்டிச்சேரி செல்லும் ரயிலில் காவல் துறையின் கண்ணில் படாமல் ஏறிப் பாண்டிச்சேரி சென்றடைந்தனர். இந்தியா பத்திரிகையின் பதிப் பாளராகவும் ஆசிரியராகவும் பதிவு செய்யப்பட்டிருந்த முரப்பாக்கம் சீனிவாசன் கைது செய்யப்பட்டார்.

1908 ஆகஸ்டு 21 முதல் 1918 நவம்பர் 24 வரை பாண்டிச்சேரியில் அரசியல் தஞ்சம் புகுந்தவராக, ஆனால் சுதந்திர மனிதராகப் பாரதி வாழ்ந்து வந்தார். வெள்ளையர் ஆட்சி, ரகசியக்காவல் படை மூலம் பாரதியாரின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்தது.

பாண்டியில் தங்கியிருந்த காலத்தில் பாதியாருக்கு அரவிந்தரைச் சந்திக்கும், விவாதிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பாரதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய எழுத்தாளர் வ.ரா.வும் பாரதியுடன் பழகி வந்தார். இந்தக் காலத்தில்தான் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாரதியாருடன் நெருங்கிப் பழகி வந்ததோடு, பாரதி கவிதா மண்டலத்திலும் சேர்ந்தார். சுத்தானந்த பாரதியும் பாரதியாருடன் தொடர்பு கொண்டிருந்தார். பாரதியாருக்குப் பல நண்பர்கள் பண உதவி செய்துவந்தனர். பாண்டியிலிருந்து ‘இந்தியா’ பத்திரிகையைத் தொடர்ந்து வெளியிட்டார் பாரதி.

1908 ஆகஸ்டு மாதம் பாண்டிச்சேரிக்கு ரயிலேறிய பாரதியின் அரசியல் வாழ்க்கையிலும் பயணம் வேகப் பட்டது. முதலாவது உலகப்போர் முடிந்தபோது தான் இந்தியாவுக்குத் திரும்பிவிடப் பாரதி முடிவு செய்தார். அதுவரை பத்தாண்டுக் காலத்தைப் பாண்டிச்சேரியிலேயே கழித்தார்.

பாரதியார் பாண்டிச்சேரியில் முடங்கிக் கிடக்க வில்லை. மாறாக, அவரது பார்வை விசாலமடைந்தது. எழுத்து கூர்மை பெற்றது. அவரது எழுத்துகளும், கவிதைகளும் இந்தியாவிற்குள் சுதந்திர வேள்வியை வளர்த்துக் கொண்டிருந்தன.

பாண்டிச்சேரியில் இருந்தவாறு ‘இந்தியா’ பத்திரிகையை நடத்தி வருவதில் பாரதியாருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. 1910-ஆம் ஆண்டுவாக்கில் காந்தியாரைப்பற்றிப் பாரதி கேள்விப்பட்டார். தென் ஆப்பிரிக்காவில் இந்திய மக்களின் ஜனநாயக உரிமைக்காகக் காந்தியார் பாடுபட்டு வந்தார். முற்றிலும் புதிதான சத்தியாக்கிரகம் என்னும் சாத்வீகப் போராட்ட முறையை, தென்னாப்பிரிக்க வெள்ளை நிறவெறி ஆட்சியாளர்களின் கொடுமையான அடக்குமுறை களுக்கு எதிராகக் கடைப்பிடித்தார். காந்தியாரின் புதிய போராட்ட முறை உலகின் கவனத்தை ஈர்த்தது. பலரும் வியந்தனர். ஆனால் புரிந்து போற்றியவர்கள் சிலரே ஆவர்.

அரசியல் தஞ்சமடைந்திருப்போர் தீவிரப் போராட்ட முறைகளையும், விரைவில் முடிவுகளை எதிர்பார்ப்பதும் இயல்பு. குண்டுவெடிப்பு - கொலை வழக்கில் தண்டனை பெற்று, விடுதலையடைந்த பின்னர் அரவிந்தர் பாண்டிச்சேரி வந்திருந்தார். பாண்டியில் தங்கியிருந்த வ.வே.சு.ஐயர், பாரிஸ்டரும், சுதந்திரப் போரினில் வீரசாகசங்கள் செய்தவருமான தீவிரவாதி சாவர்க்கரின் நண்பர். பாரதியும் தீவிர எண்ணங் கொண்டவர்தான். ஆனால் 1910-இல் காந்தியாரைத் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்யும் வகையில் பாரதி தனது இந்தியா பத்திரிகையில் காந்தியாரைப் பசுவாகப் படம் போட்டு, “இந்தி யாவுக்கு வழிகாட்ட வரும் தலைவர்” என்று எழுதினார். காந்தியடிகள் அப்பொழுது ஆப்பிரிக்காவில் போராடிக் கொண்டிருந்தார். 1914-இல் கோகலேயின் அழைப்பின் பேரில் காந்தியார் லண்டன் போனார். ஆனால், அந்தச் சமயத்தில் முதல் உலகப் போர் மூண்டு விட்டது. காந்தியார் இந்தியாவுக்குத் திரும்பினார். 1915-இல் கோகலே காலமாகி விட்டார். காந்தி மனம் வருந்தினார்.

1918-இல் உலகப்போர் முடிந்த பின்னர் காந்தியடிகளின் அரசியல் நடவடிக் கைகள் இந்தியாவில் வேகம் பெற்றன. பஞ்சாபில் கொண்டு வரப்பட்ட ரௌலட் சட்டத்தை எதிர்த்தும், கிலாபத் இயக்கத்தை ஆதரித்தும் நாடு முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்தார் காந்தி. 1919-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் சென்னையில் கதீட்ரல் சாலையி லுள்ள இரண்டாம் இலக்கமிட்ட ராஜாஜியின் வீட்டில் காந்தியார் நான்கு நாட்கள் தங்கியிருந்த போதுதான், ஒரு நாள் பிற்பகலில் அவரை, பாரதியார் நேரில் சந்தித்தார். அதற்கு முன் அவரை நேரில் பார்த்தது இல்லை. சேலம் விஜயராகவாச்சாரி, சத்தியமூர்த்தி, ராஜாஜி ஆகியோர் அங்கிருந்தனர். வ.ரா. தான் வீட்டைக் காக்கும் பணியில் இருந்தார். அவரே பாரதியார் காந்தியடிகளைச் சந்தித்ததை எழுதியுள்ளார். ஆனால் சந்திப்பதற்குப் பல ஆண்டு களுக்கு முன்னரே, காந்தியாரின் அறவழி அரசியலைப் புரிந்து, ஏற்றுப்பாராட்டி, விளக்கம் தந்து எழுதிய கவிஞன் என்ற வகையில் அவர் ஒரு தீர்க்கதரிசி ஆவார்.

காந்தியார் அந்நியத்துணிகளை ஒதுக்கித்தள்ள - வாங்கியிருந்தால் தீக்கொளுத்த - அந்நியப் பொருள் நிராகரிப்பு இயக்கத்தை 1919-இல்தான் தொடங்கினார். ஆனால், விபின் சந்திரபாலரை அழைத்துவந்து சென்னையில் தொடர் கூட்டங்களை நடத்தியபின், சென்னைக் கடற்கரையில் 1906-லேயே அந்நியத் துணிகளைத் தீமூட்டி மக்கள் வேள்வி நடத்தினார் பாரதியார். அந்நியப் பொருட்களை வெறுத்து ஒதுக்கித் தள்ளுவது என்ற இயக்கத்தைத் தொடக்கி வைத்ததிலும் பாரதிக்கும், தமிழ்நாட்டிற்கும் தனிச் சிறப்பு உண்டு.

1915-ஆம் ஆண்டில் சாந்திநிகேதனில் காந்தியார் சில வாரங்கள் தங்கியிருந்தார். காந்தியாரின் எளிமை யான, தூய்மையான வாழ்க்கை முறை, சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாத பெருமை கண்டு ரவீந்திரநாத் தாகூர், அவரை மகாத்மா என அழைத்தார் என்பது வரலாறு. ஆனால் ரவீந்திரநாததாகூர் 1915-இல் மகாத்மா என அழைப்பதற்கு முன்பே 1910-ஆம் ஆண்டிலேயே ‘வாழ்க நீ எம்மான் - மகாத்மா நீ வாழ்க’ என்ற பாடலைப் பாரதியார் எழுதி விட்டார். பாரதியாருக்குக் காந்தியாரைப் போற்றக்கூடிய கருத்தை ஊன்றியவர் சுதேசமித்திரன் அதிபர் சுப்பிர மணிய ஐயர் ஆவார். அவரது சொற்பொழிவு ஒன்றில் தான் காந்தியடிகளை மகாத்மா எனப் புகழ்ந்து பேசியிருக்கிறார். அது சுதேசமித்திரன் ஏட்டில் பிரசுரமாகியுள்ளது. எனவே, மகாத்மா என்ற பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்ததும் தமிழகம்தான். சூட்டியதில் பாரதிக்கும் பங்கு உண்டு. அதே போல காந்தியார் மேல்சட்டையைக் கழற்றி எறிந்து விட்டு, மேல்துண்டை மட்டும் போட்டுக் கொண்டு உலகத்தை மகரிஷியாக வலம் வந்ததற்கும் தமிழ்நாடுதான் உந்துகளமாக இருந்திருக்கிறது.

பாரதியார் 1908 முதல் 1918 வரை பாண்டிச் சேரியில் இருந்த காலத்தில் வெள்ளை அரசாங்கம் ஒற்றர்களை அனுப்பித் தொல்லை கொடுத்து வந்தது. பாரதியாருக்குப் பல நண்பர்கள் தக்க உதவிகளைச் செய்து வந்தார்கள். சுரேந்திரநாத் ஆர்யா ஆறாண்டு சிறைத் தண்டனைக்குப்பிறகு பாண்டிச்சேரி வந்து பாரதியாரைச் சந்தித்தார். மண்டையம் திருமலாச் சாரியும் பாரதியாருடன் பாண்டியில் தங்கியிருந்தார்.

1908-ஆம் ஆண்டு பாரதியார் மீது வெள்ளை யர்கள் வழக்குத் தொடர இருந்தபோதுதான், பாண்டிச் சேரிக்குத் தலைமறைவாகச் சென்றார் பாரதி. அந்த முடிவுக்கு வருவதற்கு அப்பொழுது சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த ஒருவரும், சென்னை காவல்துறை உதவிக் கமிஷனராக இருந்த துரை சாமி அய்யருமே காரணம் என்று தெரிகிறது. அவர்கள் இருவருக்கும் தமிழ்ப்பற்றும், தேசபக்தியும் இருந்தன. எனவே தமிழை வளர்க்க, தேசத்திற்காகப் பாடுபட, பாரதியாரைக் காப்பது தங்களது கடமை எனக் கருதியே அவர்கள் அவ்வாறு செய்தனர்.

சுதந்திரத்திற்கான போராட்ட இயக்கத்தில் இந்தியாவைச் சேர்ந்த பல பிரிவினர் பங்காற்றி யுள்ளனர் என்பது வரலாறு. குறுநில மன்னர்களா யிருந்தோரில் பலரும், மன்னர்களாக வாழ்ந்த சிலரும் வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினர். அந்நிய ஆட்சியை, ஆதிக்கத்தை எதிர்த்து இவர்கள் ஆயுதமேந்தி, வீரத்தோடு போராடியதை மக்கள் பாராட்டினர். ஆனால் இவர்களது போராட்டம் தங்களது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள நடத்திய போராட்டமே என்பதை மறந்துவிடக் கூடாது.

இந்தியாவின் பெரும் தொழில் அதிபர்களும், பணக்காரர்களும் சுதந்திரப்போராட்டத்தில் பங் கேற்றது உண்டு. ஆனால், இவர்களது தியாகத்தை நாம் மதித்தாலும், இவர்கள் தங்களது தொழிலுக்குப் போட்டியாக வந்த வெள்ளையரின் வியாபாரத்தையும் ஆதிக்கத்தையும் எதிர்த்தது, தங்களது தொழிலைக் காத்துக் கொள்ளத்தான் என்ற அளவில் நின்றது.

சில அதிதீவிர இயக்கத்தினர் இந்திய மக்களுக்கு விழிப்பை ஏற்படுத்தி, அவர்களைக்கொண்டே சுதந்திரப் போராட்டத்தை நடத்த வேண்டும் என் பதில் நம்பிக்கை கொள்ளாமல், ஆயுதத்தின் மீது முழு நம்பிக்கை வைத்துப் போராடினர். இவர்களது வீர சாகசங்கள் மக்களைக் கவர்ந்தன. ஆனால் மக்களைத் திரட்டப் பயன்படவில்லை.

சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற பல தேசியவாதிகளுக்கு அந்நிய ஆட்சியை அகற்றி, நம் நாட்டை நாமே ஆளும் உரிமை வந்தால் போதும் என்பதே லட்சியமாக இருந்தது. இவர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சுதந்திரப்போராட்ட வீரராகப் பாரதியார் திகழ்ந்தார்.

கவிதைத் திறன் படைத்த பாரதியார் புலமையை வளர்த்துக்கொண்டு, கவி ரவீந்திரநாத தாகூரைப் போல, கருத்துக்கூறுவது, பாராட்டுவது, விமர்சிப்பது என்ற அளவோடு அரசியல் களத்திற்கு வெளியில் நிற்கும் பார்வையாளராக இருந்திருக்கலாம். ஆனால், பாரதியார் கட்சியை அமைப்பதில் ஈடுபட்டது, கட்சி மாநாட்டில் பங்கு எடுத்தது, காவல் துறையின் அடக்குமுறையைக் கண்டித்தது, தப்பியோடிப் பாண்டியில் இருந்துகொண்டு சுதந்திரத்தீயை மூட்டும் கட்டுரைகள், பாடல்களை எழுதிக் கொண் டிருந்தது ஆகியவை பாரதியார் சுதந்திரப்போரில் பார்வையாளர் அல்லர் - பங்கேற்ற போராளி என்பதை நிறுவுகின்றன.

சுதந்திரப் போராட்டத்திலும் அரைகுறைச் சுதந்திரம், அல்லது தெளிவற்ற அரசியல் லட்சியத்தை உணர்ச்சிவயப்பட்டு மேற்கொண்ட சாதாரண அரசியல்வாதி அல்லர் பாரதியார்.

அந்நியர் ஆட்சி அகற்றப்பட்டுத் தாய்நாடு விடுதலை பெற்ற சுதந்திர நாடாகத் திகழ வேண்டும் என்ற ஆசையுடன் பாரதியாரின் சுதந்திர வேட்கை முடியவில்லை.

நாட்டு மக்களிடையே மிகுதியும் காணப்பட்ட வறுமை அவரைக் கலங்க வைத்தது. வெறும் சோற்றுக் காக மனிதன் வருந்துவதை வெறுத்த பாரதியார் ‘வாழும் மனிதருக்கெல்லாம் வயிற்றுக்குச் சோறிட வேண்டும்’ என விரும்பினார். அது தானாக நடந் தேறிவிடும் என நம்பவில்லை. அதற்குரிய வழிகளைப் பற்றியும் பாடினார். உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்ய வேண்டும்; உலகத்தொழில் அனைத்தும் உவந்து செய்ய வேண்டும்; உற்பத்தியைப் பெருக்கிட வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்ய வேண்டும்; இவ்வாறு அரும்பும் வியர்வை உதிர்த்துப் புவிமேல் ஆயிரம் தொழில்கள் செழிக்கச் செய்திட வேண்டும் என்ற நடைமுறை சாத்தியமான திட்டங்களையும் 1920-க்கு முன்னரே சிந்தித்து, பாடல் பாடியவர் அவர். இவற்றிற்கு முத்தாய்ப்பு வைப்பதைப்போல, பயிற்றிப் பல தொழில் செய்திடுவீர், பிறர் பங்கைத் திருடுதல் வேண்டாம் என்றும் பாடினார். இதற்குத் தான் முதிர்ச்சி நிறைந்த சிந்தனை என்று பெயர். இந்தச் சிந்தனைகள் பாரதியின் 30-ஆம் வயதுகளில் முகிழ்த்தவை என்பது சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டியதாகும்.

செல்வத்தைப் பெருக்கி, பசியை ஓட்டி விட்டால், மனிதர்களிடையே உள்ள சாதிமத வேறுபாடுகளும், மூடநம்பிக்கைகளும் தானாகவே மறைந்தொழிந்து விடும் என ஒரு சாரார் கருதுவது உண்டு. ஆனால் இவை ஒழிக்கப்பட வேண்டியவை எனப் பாரதி கருதினார். 1920-க்கு முன்னர் எழுதிய பல்வேறு கட்டுரைகளிலும், பாடல்களிலும் சாதி, மத வேறு பாட்டை ஒழிக்க அவர் கனல் கக்க, ஆனால் தெளிவாக எழுதியிருப்பதைக் காணலாம்.

இஸ்லாமியர்கள் பெண்களை நடத்துகிற முறையில் சீர்திருத்தம் தேவை என நட்பு முறையில் எழுதினார். ‘சத்ரபதி சிவாஜி சபதம்’ என்ற பாட்டிற்கு எழுதிய முன்னுரையில், ‘இஸ்லாமியர்களைத் தாக்கிச் சில கடுமையான பதங்கள் இந்தப் பாடலில் இடம் பெற்றுள்ளன. அது ஒளரங்கசீப்பை எதிர்த்துப் போராடிய சிவாஜி கோபத்தில் கூறிய வார்த்தை களாகக் கொள்ளப்பட வேண்டும். இருப்பினும், இஸ்லாமிய சகோதரர்கள் மனம் புண்பட்டால் மன்னிக்க வேண்டுகிறேன்’ என எழுதினார். பால கங்காதார திலகர் வினாயகருக்கும், சிவாஜிக்கும் விழா எடுத்ததைப் பாராட்டி எழுதிய பாரதியார், இத்துடன் இஸ்லாமிய விழாவினையும் நாம் கொண்டாடினால்தானே சரியாக இருக்கும் என்றும் எழுதினார்.

இதே போன்று கிறிஸ்தவ மதத்திற்கு இந்துக்கள் மதம் மாறுகிற செய்தி பற்றி எழுதுகிறபோது கிறிஸ்தவ மிஷனரிகள் மீது சாடாமல், இந்து மதத்தைச் சேர்ந்த வணிகர்கள், கோயில் மடாதிபதிகள் தர்ம காரியங் களைச் செய்வது இல்லை, தீண்டத் தகாதவன், தாழ்ந்தவன் என்று நம்முடன் பிறந்த சகோதரர் களையே கொடுமைப்படுத்தினால் மதம் மாறாமல் என்ன செய்வார்கள் என்ற கேள்வியையும் எழுப்பினார்.

சுரேந்திரநாத் ஆர்யா தெலுங்கர். தீவிர தேச பக்தர். இவரும் பாரதியாரும்தான் சென்னையில் அனல் கக்கப் பேசி வந்தார்கள். ஆர்யாவுக்கு ஆறு ஆண்டு தண்டனை கிடைத்து, விடுதலை அடைந்த பின்னர் பாண்டிச்சேரிக்கு வந்து பாரதியாரைச் சந்தித்தபோது, தான் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து விட்டதாகக் கூறினார். அமெரிக்காவுக்குப் போகப் போவதாகக் கூறினார். பாரதியார் வேதனையோடு, இந்து மதத்தினரின் குறைகள்தான், இந்த தேசபக்தனின் மதமாற்றத்திற்கும் காரணம் என்றார். இன்றைக்கு மதமாற்றம் ஒரு பெரிய அரசியல் பிரச்சினையாகப் பேசப்படும் வேளையில், 75 ஆண்டுகளுக்கு முன்னரே காய்தல் உவத்தல் இன்றிப் பாரதி இந்தப் பிரச்சினையைப் பார்த்துள்ளதைப் பார்த்தால் அவரது சிந்தனைக் கூர்மை தெளிவுறத் தெரியும்.

அந்நியர் ஆட்சியை எதிர்க்கும் பலர், உள் நாட்டில் பொருளாதாரச் சமத்துவம் தேவை என் பதை ஏற்க மாட்டார்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வு கூடாது என ஏற்கும் பலர், பிறப்பால் வரும் சாதிமத ஏற்றத்தாழ்வு ஒழிய வேண்டும் என்பதை ஒப்ப மாட்டார்கள்.

அந்நிய ஆட்சி அகன்று, பொருளாதாரச் சமத்துவமும் ஏற்பட்டு, சாதிமத வேறுபாடும் ஒழிவது நல்லதே என மூன்றையும் ஏற்கும் பலர், பெண்ணடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதைக் கொள்கை அளவில்கூட ஒப்பமாட்டார்கள். தன் வீட்டில், தன் மகள், பிற சாதி இளைஞனைக் காதலித்தால் கொல்லவும் கூச மாட்டார்கள். தாழ்த்தப்பட்டோரை ‘மனதால்’ சகோதரர்களாக ஏற்க மாட்டார்கள்.

தன் பூணூலை அறுத்து வீசி எறிந்த பாரதி, வ.ரா. வையும் பூணூலை எடுத்துவிடச் சொன்னார். பின்னர் கனகலிங்கம் என்ற தாழ்த்தப்பட்ட சகோ தரனுக்குப் பூணூல் போட்டுவிட்டார். பிராமணன் யார் என்பதற்குப் பாரதியார் வஜ்ர சூசி என்ற சாத்திரத்தை ஆதாரம் காட்டி, பிறப்பால் பிராமணன் இல்லை என்றார். ‘நந்தனைப்போல ஒரு பார்ப்பான் இந்த நானிலத்தில் கண்டதில்லை’ என்றார். எனவே, கலப்பு மணம் நடப்பதை வரவேற்றார்.

இவை 1920-க்கு முன்னர் என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இதை யொட்டியே பெண்ணடிமைத் தன ஒழிப்பைப் பற்றியும் இடைவிடாமல் தொடர்ந்து எழுதினார். பல கட்டுரைகள், பல பாடல்கள் பெண் விடுதலைக்காக எழுதப்பட்டன. சுருங்கச் சொன்னால், பெண்ணைப் பராசக்தியின் வடிவில் தரிசித்தவர் பாரதி.

எனவே, ‘பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும்; கல்வி பயில, பதவிகள் வகிக்க உரிமை வேண்டும்; விரும்பிய மணாளனை மணந்துகொள்ள முழு உரிமை வேண்டும்; மனம் கசந்தால் விவாக ரத்துச் செய்ய உரிமை வேண்டும்; கணவன் இறந்து போனால், விதவைக்கோலம் பூணாது மறுமணம் செய்து கொள்ள உரிமை வேண்டும்’ எனத் தெளிவாக எழுதினார்.

விதவைகள் மறுமணம் குறித்துக் காந்தியடிகள் தயக்கம் காட்டினார். பழைய சம்பிரதாயங்களையே பாராட்டினார். அதே போல விவேகானந்தரும் இந்த விஷயத்தில் திட்டவட்ட பதிலைத் தராது மழுப்பினார். காந்தியாரை மகாத்மாவாகப் போற்றிய பாரதி, ‘மிஸ்டர் காந்தி சொல்வது தவறு’ என்று எழுதினார். அதே போல் விவேகானந்தரை ஞான சூரியன் என வருணித்த பாரதி, மடங்களிலுள்ளவர் களுக்கு அஞ்சி, அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியவுடன் விவேகானந்தர் வளைவதாகச் சாடினார். பெண் விடுதலையில் சமரசமற்ற கொள்கை கொண்டவர் பாரதி. எனவேதான் பாரதியுடன் நெருங்கிப் பழகிய பாரதிதாசன், ‘பெண்ணடிமை தீராமல் மண்ணடிமை தீருமோ’ எனக் கேட்டார்.

இத்தகைய சுதந்திரத்திற்கான முழுப்பார்வை யுடன் பாரதி அரசியலில் ஈடுபட்டதும், அதை அடிப் படையாகக் கொண்டே அவரது கவிதைகள் பிறந்தன என்பதும் கவனிக்கத்தக்கவை.

தேசிய அளவில் மிகத்தெளிந்த முழுப்பார்வை கொண்டிருந்த பாரதி, பாண்டியில் வாழ்ந்த காலத்தில் உலகில் நிகழ்ந்த செய்திகளைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார். முதல் உலகப்போர் 1914-இல் தொடங்கியது. அதே ஆண்டில் பெல்ஜியத்தைக் கெய்சரின் ஜெர்மனி கைப்பற்றியது. பாய்ந்து வந்த புலியை முறத்தினால் தடுக்க முயன்ற மறத்திற்கு பெல்ஜியத்தை ஒப்பிட்டார் பாரதி.

பிஜித்தீவில் வேலை செய்யச் சென்றவர்கள். குறிப்பாகப் பெண்கள் பட்ட அவதிச்செய்தி கேள்விப் பட்டு வெகுண்டு சாடிக் கவிதை பாடினார் பாரதி. உலக நிகழ்ச்சிகள் அவர் கண்ணில் படாமல் அது பற்றிய கருத்தைப் பெறாமல் நகர்ந்தது இல்லை.

பிரெஞ்சு ஆட்சியின் பகுதியாக விளங்கிய பாண்டிச்சேரியில் இருந்த காரணத்தால்தான் 1917-இல் வெற்றி பெற்ற ரஷ்யப் புரட்சியைப் பற்றித் தெரிந்துகொள்ளப் பாரதிக்கு வாய்ப்பு கிட்டியது. இந்தியாவில் அந்தச் செய்தி இருட்டடிப்பு செய்யப் பட்டது; திரித்தே கூறப்பட்டது. ரஷ்யப்புரட்சியை 1917-இல் மகிழ்ச்சியோடு வரவேற்றார் பாரதி என்பதை நாடறியும். ஆனால், அதைவிட 1905-லும், 1912-லும் சுதேசமித்திரனிலும் ‘இந்தியா’விலும் எழுதிய இரு செய்திக் கட்டுரைகளில் ரஷ்யாவில் வளர்ந்து வந்த புரட்சிகர நடவடிக்கைகளைக் குறிப்பிட்டுள்ளார். செய்திக் குறிப்பில், ‘இந்தத் தர்மப் போர் வெற்றிபெறும். இது சத்தியம்!’ என அவர் பிரகடனம் செய்திருப்பது கவனிக்க வேண்டியது.

1906 முதலே அவர் நடத்தி வந்த ‘இந்தியா’ பத்திரிகையை அவர் சிவப்புக்காகிதத்தில் அச்சிட்டு வெளியிட்டு வந்தார். எனவே புரட்சிகரச் சிந்தனையும், செயலும் அவரோடு இயற்கையாகப் பிறந்தவை; ரத்தத்தில் ஊறியவை. ஆகவேதான் ரஷ்யப் புரட்சியைப் புரிந்து வரவேற்க அவரால் முடிந்தது. லெனினை பெயர் சொல்லாது வருணிக்கும் இடத்தில் “கற்றறிந்த ஞானி, கடவுளையே நேராவான்” என்று வாழ்த்திப் பாடியுள்ளார். ரஷ்யாவுக்கு எதிராகக் கூறப்பட்ட அவதூறுகளை மறுத்து எழுதினார். இவை அனைத்தும் இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுக் கட்சி அமைப்பாக இயங்காது இருந்த காலத்தில் நடந்தவை. 1925-இல் தான் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி அமைக்கப் பட்டது. ஆனால் 1920-க்கு முன்னரே 1917-லேயே பாரதியார் புரட்சியைப் பற்றியும் எழுதினார். 1920-இல் ‘பாரத சமுதாயம் வாழ்கவே’ என்ற பாடலில் பொதுவுடைமைச் சமுதாயத்தைப் பற்றிப் பாடினார். இவை போகிற போக்கில் உதிர்த்த கருத்துகள் அல்ல. புரட்சி, பொதுவுடைமையைப் பற்றியும் பாரதி சுயமான கருத்தைக் கொண்டிருந்தார். லெனினைப் பாராட்டி, ரஷ்யப்புரட்சியை வரவேற்ற பாரதியார் - ரஷ்ய முறைகள் இந்தியாவுக்குப் பொருந்தா என்று எழுதினார். வன்முறையால் மட்டும் சமுதாய மேடு பள்ளங்களைச் சமமாக்க முயலும் நடவடிக்கை நீண்டகாலம் வெற்றி பெறாது, தோற்றுப்போகும் என்றும் எழுதினார். ஆகவே, பொதுவுடைமை வெற்றி பெறாது, வேண்டாம் என்று கூறவில்லை. மாறாக, அதை இந்தியா உருவாக்கும்; ஒப்பில்லாத சமுதாயத்தை உலகுக்குத் தரும் என்றும் தீர்க்க தரிசனமாகக் கூறியுள்ளார். இதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

1918-ஆம் ஆண்டு பாரதியார் இந்தியாவுக்குத் திரும்பிவிட முயன்றபோது வில்லியனூருக்கருகில் கைது செய்யப்பட்டுக் கடலூர் சிறையில் அடைக்கப் பட்டார். அன்னிபெசண்ட், சுதேச மித்திரன் அதிபர், சி.பி.ராமசாமி அய்யர், அன்றைய சென்னை காவல் துறைத் துணைக்கமிஷனர் ஆகியோர் முறையீட்டின் பேரில் பாரதியார் நிபந்தனையுடன் விடுவிக்கப் பட்டதாகத் தெரிகிறது. பாரதி சரணடைந்ததாகச் சிலர் குறைகூறக்கூடும்.

வெளியில் வந்த பாரதி ஆசிரமத்தை நாடி ஓட வில்லை. வெள்ளையருக்குத் துதிபாடிப் பிழைக்கவும் செல்லவில்லை. மாறாக, தொடர்ந்து சுதந்திரத் தாகத்தை வளர்க்கும் பாடல்களை எழுதி வந்தார். தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்தார். 1919 மார்ச்சில்தான் காந்தியாரைச் சந்தித்து உரையாடினார் என்பதும் வரலாற்றுக் குறிப்பு. எனவே எந்த நிபந்தனையும் பாரதியின் நாவை அடக்கவில்லை. நடமாட்டத்தை நிறுத்தவில்லை. எழுத்தை முடக்கவில்லை.

இந்தியாவில் இளமையில் தீவிரப் புரட்சிக் காரர்களாக இருந்த பலர் நடுப்பருவம் தாண்டிய பின்னர் ஆன்மிகத்தில் மூழ்கியிருப்பது தெரிகிறது. பாஞ்சால சிங்கம் லஜபதிராய், இறுதிக் காலத்தில் ஏறத்தாழ சாமியாராகிவிட்டார். சாவர்க்கார் பல வீரதீரச் செயல்கள் புரிந்தவர். நீண்டகாலம் அந்தமான் சிறையில் இருந்தவர். இறுதியில் மதம், ஆன்மிகம் - அதுவே நிம்மதி தரும் என்று போய் விட்டார். நீலகண்ட பிரம்மச்சாரி, திருமலாச்சாரி போன்றோரும், பிற்காலத்தில் துறவறமே பூண்டனர். அரவிந்தரும் ஆசிரமத்தில் தங்கினார். ஆனால், பாரதி யார் இறுதி மூச்சு விடும்வரை இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடிக்கொண்டே இருந்தார். காசிவாசமே அவரைக் காவியுடை தரிக்க வைக்காத போது, வெள்ளையரின் நிபந்தனையா இவரை மடக்கும்? சதையைத் துண்டு துண்டாக்கினும் என் எண்ணம் சாயுமா எனப் பாடியதைத் தன் வாழ்க்கையில் நிரூபித்தவர் பாரதி.

எனவே, கைதுக்குப் பயந்து ஓடினார் என்பது, புரட்சிகர இயக்க வரலாறு புரியாதவர்களின் பிதற்றல் ஆகும். லெனின் வெளிநாடுகளில் மறைந்து இருந்துதான் புரட்சிக்கு வழிகாட்டினார். இந்தப் பட்டியல் மிகப்பெரியது. அதேபோல் தலைமறைவு வாழ்க்கை. இவை எதிரியை முறியடிக்கக் கடைப் பிடிக்கும் உத்திகள். அதைப் புரிந்திருந்தார் பாரதியார். எனவே, அவர் சிறந்த சுதந்திரப்போராட்ட வீரர் என்பதில் சந்தேகம் இல்லை.

பாரதியார் எத்தனை வருடங்கள் சிறையில் இருந்தார், எவ்வளவு அடிபட்டார் என்பதை வைத்து அவரது அரசியல் பங்கை மதிப்பிட முயல்வது தவறு.

பாரதி முதலில் மகாகவிஞன், அவரது எழுது கோல் வாயை விடச் சக்திமிக்கது. காலத்தை வென்றது. புதிய சுதந்திரப் போர்ப் படையைப் படைத்திட்ட கவித்தளபதி அவர். ஒரு பெரும் கவிஞர் பரம்பரை யையும் படைத்திட்ட படைப்பாளி பாரதி. நாட்டையே சிந்திக்க வைத்த சிந்தனையாளன். அவரது பாட்டுக் களைக் கேட்டுத் தெளிவு பெற்றோர், விழிப்புப் பெற்றோர், வீரம் பெற்றோர், ஆவேசம் கொண்டு சுதந்திர வேள்வியில் குதித்தோர் பட்டியலைக் கணக்கிட முடியாது. எனவே சுதந்திர வேள்விக்கு நெருப்பூட்டியவரே பாரதியார்தான் என்பதே தகும்.

சுப்பிரமணிய பாரதியார் 1921 செப்டம்பர் 11-ஆம் நாள் சென்னையிலுள்ள திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில் தெருவில் குடியிருந்து வந்த வீட்டில் காலமானார். இதற்குச் சில வாரங்களுக்கு முன்னர் பார்த்தசாரதிசாமி கோயில் யானைக்கு வழக்கம் போல் வாழைப்பழம் வழங்கியபோது மதம் பிடித்திருந்த யானை அவரைத் துதிக்கையால் பிடித்திழுத்து தன் காலடியில் போட்டுவிட்டது. கம்பிவளையத்தின் நடுவில் கட்டப்பட்டிருந்த யானையின் காலடியில் கிடந்த பாரதியாரைக் குவளைக்கண்ணன் துணிச்ச லுடன் குதித்து உள்ளே சென்று தூக்கிவந்து காப் பாற்றியதாக வ.ரா. எழுதுகிறார். பாரதியாரின் இறுதி மரியாதை ஊர்வலத்திலும் சிலரே கலந்து கொண்டனராம். பாரதியின் பாடல்கள் பாடிய பின்னர் அவரது உடலுக்கு எரியூட்டப்பட்டதாம். எரிதழலும் எழுந்து நின்று கொழுந்து விட்டு அவரது பாடலைப் பாடியிருக்கும்.

பாரதியை அறிந்துகொள்ள நம் நாட்டு மக்களுக்குப் பல்லாண்டுகள் பிடித்தன. பாரதியார் காலத்தை வென்று நிற்கும் கவிஞன். பல பிரச்சினைகள் கூர்மையடைகிறபோதெல்லாம், பாரதியின் பாடல்கள் உயிர்த்துடிப்புடன் பாடப்படுவது தொடருகிறது.

அவர் தலைசிறந்த மனிதர். மிகச்சிறந்த முழுமை யான தேசபக்தர். பாரதிதாசன் கூறியது போல், செந்தமிழ்த்தேனீ - சிந்துக்குத் தந்தை- கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு-மீண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன் - படரும் சாதிப் படைக்கு மருந்து, தமிழைச் செழிக்கச் செய்தான், தமிழால் தகுதி பெற்றான்.

வாராது போல வந்த மாமணி பாரதி மூட்டிய வேள்வித்தீ கனல் குன்றாது எரிந்துகொண்டே இருக்கும்.

Pin It