தற்கால வரலாறு காலனியத்தின் வருகையோடு தொடங்குகிறது. காலனியம் இந்திய வாழ்க்கையைப் பெரிதும் கலைத்து முற்றிலும் புதியதான சமூக வாழ்வை உருவாக்கியது. ஐரோப்பிய சிந்தனை மரபு இந்திய மனங்களில் நுழைந்து பற்பல சமூக இயக்கங்களின் கருத்தியல்களுக்கு வழியேற்படுத்தியது. அந்தக் கருத்தியல்களின் ‘இயக்கவியல்’ வழியே நமது சமூகத்தின் முற்போக்கு சமூக, அரசியல், பண்பாட்டுக் கொள்கையியல்களும் உருவாயின. நமது சமகாலக் கொள்கையியல்களின் வரலாறு இதிலிருந்தே தொடங்குகிறது.

இந்தியச் சமூகம் சாதிய - மதச்சமூகமாகவே வாழ்ந்தநிலைக்கு முடிவு கட்ட ஐரோப்பிய பாணி யிலான மறுமலர்ச்சி ஏதும் தோன்றிவிடவில்லை. அதற்கான இந்திய சமூக - பொருளாதார நிலை ஏதும் நிலவவில்லை. அறிவியல்களின் வழியே விழிப்புணர்வுபெற்றுத் தொழில்புரட்சியின்மூலம் ஒரு நவீன சமூகத்தைக் கட்டியமைப்பதற்கான அடிப்படைகளை நாம் பெற்றிருக்கவில்லை. ஆனால், காலனியச்சுரண்டலுக்கு எதிரான கிளர்ச்சிகள் விடுதலை லட்சியத்தை பிரகடனப்படுத்தியபோது மறுமலர்ச்சி ஐரோப்பிய சிந்தனைமரபின் இலட்சியங் களைத் தன்வயமாக்கிக் கொண்டது. அது இந்திய இயல்புகளோடுநடைபெற்றது.

இந்த நிகழ்வுப்போக்கு 19ஆம் நூற்றாண்டு இறுதி ஆண்டுகளில் தீவிரப்பட்டு இயக்க வடிவம் கண்டன. இந்திய விடுதலை குறித்த தேசிய இலட்சி யங்களில் மனித சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் போன்றவை புதிய மார்க்கமாக எழுச்சி பெற்றது; அதே சமயத்தில், பழமையைப் புதிய முறைகளில் புதுப்பித்து பிற்போக்கைப் பலப் படுத்தும் எதிர்நிலைப் போக்கும் பலமடைந்தது. இவை இருவகைப்பட்ட காலனிய எதிர்ப்பு அரசியலை வளர்த்தன. முதலாவது போக்கு இந்திய விடுதலை இயக்கத்தில் பொதுவுடைமை இடதுசாரி போக்கு உருவாக வழிவகுத்தது முதலாளித்துவ தேசிய வாதிகளும் இந்தப் போக்கை ஏற்கும் அளவுக்குப் பலமடைந்தது. இரண்டாவது போக்கு வகுப்பு வாதம், தேசியம் போன்ற வலதுசாரி அரசியல் உருவாக வழியேற்படுத்தியது.

காலனியத்தைப் பெரிதும் எதிர்க்காமல் அதனோடு உடன்பாடு கொண்டு இந்திய விழிப் புணர்வு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் திராவிட இயக்கமும், தீண்டாமைக்கு ஆட்பட்ட அடித்தள மக்கள் இயக்கமும் முனைப்புகாட்டின. இவை சமூக விடுதலையை வலியுறுத்தின. தேச விடுதலை குறித்த அரசியலில் சமூக விடுதலைக்கு எதிரான கூறுகள் ஓங்கிச் செயல்படுவதை விமர்சித்தன. இந்தியச் சமூகம் விழிப்புணர்வு பெறவும், விடுதலை பெறவும் காலனியம் கருவிகளை வழங்கியதாக ஒரு கருத்தியலையும் வளர்த்தன. முதலாளித்துவ வழியில் பகுத்தறிவையும், சாதி/ மத மறுப்பையும் இவை முன்வைத்தன.

இருபதாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில் தற்கால வரலாறு இவற்றினிடையேஆன அரசியல், சமூக இயக்கங்களாகவே முதிர்ச்சி பெற்றன. தமிழ்ச் சமூகத்தில் பிரம்ம சமாஜம், விவேகானந்தர் இயக்கம், திலகர் அரசியல் போன்றவை வழியாக விடுதலையின்இலட்சியங்களைப் பொதுவுடைமைக் கொள்கையோடு இணைப்பதில் மகாகவிபாரதி பெரும்வெற்றி கண்டார். அது பாரதி யுகத்தைத் தமிழில் துவக்கிவைத்தது. பாரதியின் படைப்புகள் தமிழகத்தில் வலதுசாரி அரசியல் வேர்விடாமல் தடுப்பதற்கான முதல் தடையைப் போட்டது. அதனோடு மற்றொரு தந்தை பெரியாரின் தடையாகத் திராவிட இயக்கமும், அயோத்திதாஸர் போன்றவர் களின் சாதி மறுப்பு இயக்கமும் வலுப்பெற்றன. சிங்காரவேலர் போன்றவர்களின் பொதுவுடைமை இயக்கச் செயல்பாடு மூன்றாவது தடையாக அமைந்தது. இந்திய விடுதலைக்கு முன் இந்த மூன்று இயக்கங்களின் செயல்பாடு மிகுந்த நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்த நமது சமகால பிரச்சினையாகும்.

இந்தக் காலத்தின் வரலாற்றை விளக்குவதில் சிரமங்கள் பல உள்ளன. முரண்பட்ட ஆளுமை களினூடேதான் முற்போக்கு கருத்தியல் இந்தியாவில் வளர்ச்சியடைந்தது. பழமையிலிருந்து புதுமைக்கு வந்து சேர்வதற்கானபாதையில், பலமுரண்கள், எதிர்நிலைப்போக்குகள் போன்றவை உருவாகாமல் இல்லை. ஆனால் இவைகளுக்கு மத்தியில் இருந்து தான் விடுதலைக்கான கருத்தியல் இந்திய ஆக்கம் பெற்றது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தற்கால வரலாற்றாசிரியர் ஒருவனுக்கு இது குறித்த தெளிவும், தேடலும் அவசியம். இந்திய முற்போக்குக் கருத்தியலின் வரலாற்றை உருவாக்குவதில் முரண்களையும், எதிர்நிலைப் போக்குகளையும் மட்டும் முன்னிலைப்படுத்தும் ஆய்வுநெறி கடைசியில் முற்போக்கின் வேர்களை வெட்டிச்சாய்த்துப் பிற்போக்கு பலமடைவதற்கு உதவுவதில் போய் முடியும். அத்தகைய முரண்களையும் எதிர்நிலைப் போக்குகளையும் அதற்குரிய வரலாற்றுத்தளத்தில் வைத்து முற்போக்குக் கருத்தியலின் வளர்ச்சியை ஆராய வேண்டும். பாரதி, பெரியார் போன்ற மாமனிதர்கள் குறித்த ஆய்வில் இத்தகைய ஆய்வு நெறி இன்றைய பிற்போக்காளர் அவர்களைத் தமதாக்கிக் கொண்டு சிறுமைப்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்கு சாவுமணி அடிக்கும்.

இன்றைய பிற்போக்கு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளின் மத\சாதிய வடிவத்தைப் பெற்றிருக்க வில்லை. அது இன்று புதிய பிளவுவாத கருத்தியல்கள் வழியே தம்மை மட்டும் ‘விடுதலை’க்கான தத்துவமாக முன்னிலைப்படுத்திச் செயல்படத்துவங்கியுள்ளன. கட்டுடைத்தல் வழியாக முற்போக்கு கருத்தியல்களின் ஆளுமைகளை விமர்சிப்பது என்ற பெயரால் மறுப்பது என்ற நிலைக்குத் தள்ளி அவர்களைப் ‘பிற்போக்கின் வேர்களாகக் காட்டும் அபாயகரமான ‘ஆய்வுஅரசியல்’ ஒன்று இன்று நடைபெறுகிறது. சில பின் நவீனத்துவம் போன்ற நுண்அரசியல் கலகக்குரல்களும், சில சாதி மறுப்புக் கிளர்ச்சிகளும் இன்றைய முற்போக்கு கருத்தியலின் ஆணிவேரைப் பிடுங்கி எறிவதில் முனைப்பு காட்டுகின்றன.

இந்தப் பின்னணியில் முற்போக்குக் கருத்தியலின் சமகால வரலாறு குறித்த ஆய்வுநெறி சமகாலத் தேவைகளுக்கு ஏற்ப பலமடைய வேண்டியுள்ளது. தற்கால வரலாறு குறித்த ஆய்வாளர்களின் பட்டியலில் இத்தகைய ஆய்வைப் பலப்படுத்துவோரில் முதல் வரிசையில் நிற்பவர் - இமைப்போதும் சோராது, ஓயாது உழைத்துவருபவர் அறிஞர் பெ.சு. மணி ஆவார்.

அவரது ஆய்வுகள் அடிப்படையில் இருபதாம் நூற்றாண்டின் ‘பாரதிகாலம்’ பற்றியவை. மகாகவி பாரதியை அவர் காலத்தின் வரலாற்றுப் பின் புலத்தில் ஆராய்ந்து முற்போக்குக் கருத்தியலின் வரலாற்றில் பாரதியின் இடத்தை நிலைநாட்டியதில்

பெ.சு. மணியின் ஆய்வுகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. பாரதி ஆய்வின் அங்கமாகவே அக்கால தேசிய அரசியல் பண்பாட்டு இலக்கங்கள் குறித்த ஆய்வை பெ.சு.மணி அவர்கள் நகர்த்திச் செல்கிறார். அவரது ஆய்வுக்களஞ்சியம் இதுவரை 66நூல்களைக் கொண்டிருப்பதாக அறிகிறோம். அதில் மற்றுமொரு வரவாக ‘பெ.சு.மணி ஆய்வுக் கட்டுரைகள்’ என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது.

நூலில் உள்ள 24 கட்டுரைகளும் பலபொருள் பற்றியன; ஆயினும் பாரதி ஆய்வை மையமாகக் கொண்டவையாகவே விளங்குகின்றன. லம்பாடிகள் பற்றிய கட்டுரையைத் தவிர்த்து பிறஅனைத்து கட்டுரைகளும் ஒரு இணைப்பைப் பேணுகின்றன.

நூலின் முதல் நான்கு கட்டுரைகள் தமிழ் இதழியல் வரலாறு பற்றியது. 1930கள் வரையிலுமான இதழ்கள் குறித்த ஆய்வை இக்கட்டுரைகள் நடத்து கின்றன. அந்தக் காலகட்டத்தின் இயக்கங்கள் வழியே நடத்தப்பட்ட கொள்கைப் போராட்டங்கள் மிகச்சிறப்பான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல் தமிழ் இதழியல் குறித்த பெ.சு. மணியின் விமர்சனம் அக்காலத்திய சமூக - பண்பாட்டு வளர்ச்சியின் நிலைமையைத் தெளிவுபடுத்துகிறது.

“பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்ட இந்தியப் பிரதேசங்களில் சமூக, அரசியல்தாக்கங்கள் சமச்சீருடையவை அல்ல. எனவே இதற்கேற்ப இதழியல் தோற்றம், வளர்ச்சி பற்றிய காலகட்டங்களின் நோக்குகள் போக்குகள் வேறுபட்டன. சமூகவிழிப்பும், அரசியல் விழிப்பும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்றைய சென்னை மாநிலத்தில் ஊர்ந்து, ஊர்ந்து வந்த சூழலைத் தமிழ்மொழி இதழ்களின் கருத்தியல் கோட்பாடும் போதிய வளர்ச்சி பெறவில்லை” (பக்கம் -7)

வங்காளம், மராட்டியம் போன்ற மாநிலங்களின் இதழியல் வளர்ச்சி அளவுக்கு அக்காலத்திய தமிழின் இதழியல் வளரவில்லை என்று தனது ஆய்வுத் தடத்தைத் தொடங்கும் பெ.சு.மணி அவர்கள் தமிழ் இதழியல் வரலாறு பெரிதும் முற்போக்குத் திசை வழியிலேயே அமைந்ததை நிறுவுகிறார். தத்துவ போதினி தொடங்கி ஸ்வதர்மா, சுதேசமித்திரன், தினமணி, நவசக்தி, ஜனசக்தி எனத் தமிழ்இதழியல் வரலாற்றில் ஒரு முற்போக்குக் கொள்கையியலின் பயணத்தைப் பதிவு செய்கிறார். தேசியம், தொழிலாளர் இயக்கம், சாதி மறுப்பு போன்றவற்றைத் தமிழ் இதழ்கள் கொள்கையியல் ரீதியாக வளர்த்த வரலாறு பதிவு செய்யப்படுகிறது. வெறும் அரசியல் நிகழ்வுகள் அல்லது கொள்கைகளின் பதிவாக அவை அமையாமல் கருத்தியல் தளத்தில் அவை வளர்க்கப்பட்டதன் சிறப்பையும் பெ.சு.மணி அவர்கள் எடுத்துரைக்கிறார். ‘நான்பிராமின்ஸ்’ (பிராமணரல்லாதர்) இயக்கம் தொடங்கப்பட்டபோது அது குறித்துப் பண்டிதர் க.அயோத்திதாஸர் செய்த விமர்சனம் மிக ஆழமானது.

“பிராமணர் என்போரால் வகுத்துள்ள சாதி ஆசாரங்களையும் சமய ஆசாரங்களையும் வைத்துக் கொண்டு நான்பிராமின்ஸ் எனக்கூறுவது வீணே யாகும். (பக்கம் 125) சாதி ஆசாரங்களை வைத்துக் கொண்டு சமூகநீதியைப் பெறமுடியாது என்பதை இந்த விமர்சனம் வலியுறுத்துகிறது.

இந்திய தேசியகாங்கிரஸின் தோற்றுவாய் குறித்து ஹ்யூம் பற்றிய கட்டுரை ஆராய்கிறது. அது இந்தியாவில் படித்த வகுப்பாருக்கான இயக்கமாக 1885-இல் தோன்றியது.

அதற்கு முந்தைய 1871-ஆம் ஆண்டில் இந்திய பாமர மக்களுக்கான அமைப்பைத் தொடங்க வேண்டும் என்னும் கோரிக்கை எழுந்ததையும் பதிவு செய்து மார்க்ஸ் தலைமை தாங்கிய முதலாவது அகிலத்தின் பொதுக்குழுவின் கூட்டக் குறிப்புகளை விளக்கி இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முதல் வேர்களை அடையாளம் காட்டுகிறார் பெ.சு.மணி. முதலாவது அகிலத்தின் கிளை ஒன்றைத்துவக்க வேண்டும் என்று கல்கத்தாவில் இருந்து ஒருவர் எழுதிய கடிதத்தை 1871, ஆகஸ்டு 15 -ஆம் தேதி நடைபெற்ற அகிலத்தின் பொதுக்குழு விவாதித்து அதற்கு ஆதரவான தீர்மானத்தை இயற்றியது. மாறுபாடுகள் கொண்ட இனங்களையும், பிரிவுகளையும் ஒத்ததன்மையிலான ஒரே மக்களாக ஒன்றுபடுத்துவதும் தொழிலாளர் மார்க்கத்தின் விடுதலையைப் பெறுவதும் அகிலத்தின் நோக்கமாக பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால், அதற்கான இந்தியச் சூழல் அன்று இல்லாமல் போனதால் “தொழிலாளர் இயக்கத்தின் வழியே தேசிய விடுதலை இயக்கம் தோன்றுவதற்குக்காலம் கை கொடுக்கவில்லை” (பக்கம் 238)

மகாகவி பாரதி செயல்படுவதற்கான களம் அமைந்த காலவரலாற்று அடிப்படைகளை நூலின் கட்டுரைகள் வாயிலாக எளிய தமிழ்நடையில் அவர்கள் பாரதிகுறித்த நேரடியான கட்டுரைகள் பலவற்றையும் இந்நூலில் சிறப்புற இணைத்துள்ளார்.

இக்கட்டுரைகள் வழியே பெ.சு.மணி அவர்கள் தமிழகத்தின் பொதுவுடைமை இயக்கத்தின் ஆக்கத் துக்கான கருத்தியல் வரலாற்றை நிறுவுகிறார். அது நமது சொந்த இயல்புகள், மரபுகள் ஆகிய வற்றோடு சேர்ந்து வளர்ந்ததன் வரலாறு விளக்கப்படுகிறது. மறுக்க முடியாத அடிப்படையான ஆதாரங்களோடு உண்மையைத் தேடும் கடும் முயற்சியில் பெ.சு.மணி அவர்களின் ஒவ்வொரு நூலும் பெரும் வெற்றி பெற்றவையே ஆகும். இந்த நூல் அந்த வரிசையில் மிகச் சிறந்த வரவு! பொதுவுடைமைக்கும், முற்போக்குக்கும் ஆதரவான நமது சமகாலக் கருத்தியல் போருக்குப் பெருந்துணை புரியும் வலுவான ஆயுதம். போற்றுதலுக்குரிய - பாதுகாத்து வளர்த்துக் கொள்ளப்படவேண்டிய மரபை அறிஞர்.பெ.சு.மணி அவர்கள் நமக்கு வழங்கி யுள்ளார்கள். பொதுவுடைமையையும், முற்போக் கையும் நேசித்து வளர்க்கும் மார்க்சியரல்லாத, அந்த வட்டத்தைத் தாண்டி இயங்கி வரும் அவரது பங்களிப்பு பெரு மதிப்புக்குரிய அரிய செல்வமாகும்.

பெ.சு.மணி ஆய்வுக்கட்டுரைகள்

ஆசிரியர் : பெ.சு.மணி.

பூங்கொடி பதிப்பகம், சென்னை - 4.

விலை: ரூ.185/-

Pin It