அச்சு ஊடகத்தின் வருகையால் உருப்பெற்ற புதிய எழுத்து முறையின் ஒரு பகுதியாக தமிழில் மதன நூல்கள் பெருகத் தொடங்கின. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி தொடங்கி 20ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை இத்தகு நூல்கள் வெகுசன தளத்தில் பெரும் செல்வாக்கு செலுத்தியுள்ளன. வசன நடையிலும் செய்யுள் நடையிலும் சுருக்கமாகவும் விளக்கமாகவும் மதன நூல்கள் பரவலாக அச்சிடப்பட்டன. தமிழில் உருவான இந்த மதன நூல்கள் வெகுசன தளத்தில் நிகழ்த்திய ஊடாட்டம் குறித்து தனித்து ஆராயப்பட வேண்டிய அளவு இத்தகைய நூல்கள் வெளி வந்தன. யாருக்காக இத்தகைய நூல்கள் அச்சிடப்பட்டன என்பதும் இதை அச்சிட்டவர்கள் மற்றும் விநியோகித்தவர்கள் யார் என்பது போன்ற பல கேள்விகள் இதில் முதன்மையானது. இதேபோல் இத்தகைய நூல்கள் எதை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டன என்பதும் அந்த ஆதாரநூலின் முதற்பதிப்பு எவ்வாறு வந்தது என்பதும் முக்கியமாகிறது. தொடக்ககால மதனநூல் ஒன்றின் பதிப்பு வரலாற்றை அதன் சமூகப் பின்புலத்தில் விளங்கிக் கொள்வதன் மூலம் அடுத்த கட்டச் செயல்பாடுகளை - அதன் பல்பரிமாணங்களைப் - புரிந்துகொள்ள முடியும்.

தமிழில் அச்சடிக்கப்பட்ட மதனநூல்கள் பெரும்பாலும் வடமொழியில் கோக்கோகர் எழுதிய 'ரதிரகஸ்யம்' என்ற நூலினை அடியொற்றியே எழுதப்பட்டுள்ளது. வட மொழியில் மதனநூல்கள் செழுமையான இலக்கிய மரபாக வளர்ந்தது.1 தமிழிலும் அத்தகைய ஒரு மரபு இருந்திருக்க வேண்டும். ஆனால் அது பற்றிய பதிவுகள் மிகவும் குறைவு. 'இன்பசாகரம்' என்ற நூல் இருந்தமைக்கான குறிப்பு உரையாசிரியர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில்தான், கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் கொக்கோகர் வடமொழியில் இயற்றிய 'ரதிகஸ்யம்' என்ற நூலை கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் வரதுங்கராம பாண்டியன் தமிழில் செய்யுளாக இயற்றினார். 2 இந்நூல் முதன்முதலாக 1838 இல் பதிப்பாகியது. இப்பதிப்பு வரும்பொழுது நிலவிய பதிப்பு அறவியல் பார்வை எவ்வாறு இருந்தன என்பதும், அது சார்ந்து உருவான பல்வேறு கருத்தாடல்கள் குறித்தும் அறிவது அவசியமாகிறது. ஏனெனில் 20ஆம் நூற் றாண்டின் தொடக்கத்தில் அச்சகத்தாருக்குப் பெரும் பொருள் ஈட்டித்தரும் நூல்களில் மதனநூல்கள் மிக முக்கிய இடத்தில் இருந்தன. இதன் காரணமாக இந்நூல்களைப் பதிப்பிப்பதில் பதிப்பாளர்களிடையே கடும் போட்டி நிலவியுள்ளது. 'தங்களுடைய நூலே உண்மையானது' என்றும் போலி நூல்களைக் கண்டு ஏமாற வேண்டாம் என்றும் விளம்பரப்படுத்தினர். கெட்டி அட்டையுடனும் மலிவுப் பதிப்பாகவும் அச்சடிக்கப்பட்டதுடன் வண்ணப் படங்களையும் இடையிடையே சேர்த்து வாசகர்களைக் கவர்ந்தனர். இதில் கிடைக்கும் வணிக ஆதாயத்தைத் தக்கவைத்துக்கொள்ள 'இந்நூலை பிறர் பதிப்பிக்கக் கூடாது' என்று அறிவித்துள்ளனர். மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி எச்சரித்துள்ளனர். 1909ஆம் ஆண்டு வெளிவந்த கொக்கோக பதிப்பொன்றில் வந்த அறிக்கை இத்தகைய நூல்களை அச்சிடுவோரின் மனநிலையை அறிய உதவும்.

இதனால் யாவருக்கும் அறிவிப்பது நாங்கள் மிகவும் வருந்திப் பதிப்பித்த இந்நூலைக் கண்டு இதைத் தங்கள் பதிப்பாக செய்யவேண்டுமென துர் அபிப்பிராயப் படுவோரும் அச்சிட முயன்றோரும் அச்சிட்டோரும் ஆகிய இவர்களை விசாரணையாலாவது அச்சிடப்பட்ட எழுத்தினாலாவது கண்டுபிடித்து எங்களிடம் தெரிவிப்போருக்குத் தகுந்த இனாம் கொடுக்கப்படும்.

இப்புத்தகம் புதுச்சேரி இலாகாவிலும் சென்னை யிலாகாவிலும் ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கிறது. இதனை மீறி துர் அபிப்பிராயங் கொண்டு செய்தவன் வமிசந் தெரியாது பிறந்தவனும் மனைவியை பலரனுபவிக்க மனஞ் சகிப்பானும் தன் பெண்ணைப் புணர்ந்த சண்டாளனுமாவான்.

புதுவை - அப்பாவுப்பிள்ளை பி.ஏ.பி.எல்.,
நூறத்தின் சாயபு

உண்மையில் இக்கூற்று அந்நூலைப் பதிப்பதித்த பதிப்பாசிரியரின் கூற்று அல்ல. அந்நூலை வெளியிட்டவரின் கூற்று. இந்நூல் விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானமே இவரை இந்த அளவு வன்மத்துடன் பேசவைத்துள்ளது எனலாம்.

19 ஆம் நூற்றாண்டு மற்றும் 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்ககால பதிப்பாசிரியர்கள் பலரும் தாங்கள் பதிப்பித்த நூலுக்கு உரிமை கொண்டாடினர்3 என்றாலும் இந்த அளவுக்கு யாரும் செல்லவில்லை என்பது குறிப்பிடத் தக்கது
.
பெரும் வணிகப் பொருளாக மாற்றமடைந்த இந்நூலை முதன் முதலில் ஒரு இலக்கிய நூலுக்கான தகுதியோடு பதிப்பித்த கொற்றமங்கலம் இராமசுவாமிப் பிள்ளை அவர்கள், இந்நூலுக்கு ஒரு நூதனமான உரையெழுதியதோடு அல்லாமல் பாஷாந்தரங்களிலிருந்து (பிற மொழிகளில் இருந்து) கற்பச் சின்னங்கள் குறித்த மொழி பெயர்ப்பையும் இணைத்துள்ளார். இப்பதிப்பினைச் செம்மைப்படுத்திக் கொடுத்தவர் சென்னைக் கல்விச் சங்கத்தில் இரண்டாவது தலைமைத் தமிழ்ப்புலவராக இருந்த கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகராவார். மேலும் இதனை எளிய முறையில் சந்திபிரித்துக் கொடுத்தவர்கள் அச்சங்கத்தைச் சேர்ந்த வித்துவான்களாவார்கள்.

பல பிரதிகளை ஒப்பு நோக்கி பலரது உதவியைக் கொண்டு இந்நூல் தயாரிக்கப்பட்டிருந்தாலும் இதனை பதிப்பித்து வெளியிட இராமசாமிப் பிள்ளையவர்கள் தயங்கியுள்ளார். காமலீலைகளைக் கூறும் இந்நூலைப் பதிப்பித்தால் தன் புகழுக்குப் பழிவருமோ என்று எண்ணியுள்ளார். ஆனாலும் அழிந்து கொண்டிருக்கும் இந்நூலை வெளிப்படுத்த வேண்டுமென்ற எண்ணமும் அவருக்கு இருந்தது.

இந்த பயத்திலிருந்து நீங்கி கொக்கோக நூலைப் பதிப்பிக்க இராமசாமிப்பிள்ளை சில பெரிய மனிதர்களின் உதவியை நாடியுள்ளார். குறிப்பாக தன்னுடைய நிலையை விளக்கி மகாராஜஸ்ரீ இராம கிருஷ்ண சாஸ்திரியார், நீடாமங்கலம் மு. விசுவம்பா சாஸ்திரியார், ஸ்ரீ கிருஷ்ணமாச் சாரியார் ஆகிய மூவருக்கும் கடிதம் எழுதியுள்ளார். தொடக்ககால மதனநூல் ஒன்றின் பதிப்பாசிரியரின் நிலைப் பாட்டை அறிய அக்கடிதம் உதவுகிறது.
"இதனோடு கொக்கோக மூலமும் - அதன் உரையும் பாஷாந்தரங்களிலிருந்து மொழிபெயர்த்த சில கற்பச் சின்னங்களும், தங்கள் கண்ணோட்டத்திற்கு அனுப்பினேன். கூடுமான காலத்தில் தங்களுடைய மனதை இவைகளிடத்து உபயோகப்படுத்தித் தங்களுக்குத் தோற்றிய முக்கிய அபிப்பிராயத்தைப் பூர்ணமாக வெளியிட வேண்டியது மல்லாமல், இந்நூலைப் பிரசித்தஞ் செய்வது யுக்தமல்ல வென்று சிலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கின்ற படியாலிதைக் குறித்துப் பிரதியுத்தரந் தயை செய்ய வேண்டுகிறேன்.

ஒரு நூலைப் பதிப்பிக்க எடுத்துக்கொண்ட பதிப்பாசிரியரின் இத்தகைய அச்சம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தமிழ்ச் சமூகத்தில் நிலவிய காமம் பற்றிய பார்வை இதனோடு இணைத்து நோக்கத்தக்கது. பொதுக் களத்தில் விவாதிக்கப்படக்கூடாத விஷயமாகவே அது கருதப்பட்ட நிலையில் அவரது அச்சத்தின் காரணத்தை விளங்கிக் கொள்ளமுடியும். (பொதுக் களத்தில் விவாதிக்கப்படாததாலேயே இத்தகைய நூல்களின் வரவு பின்னர் அதிகரித்தது.) மேலும் ஒரு நூலைப் பதிப்பித்து வெளி யிடும் முன் பலரது கருத்தையும் கேட்க வேண்டுமென்ற அவரது பண்பு பதிப்பித்த அவரது சிரத்தையை வெளிப்படுத்துகிறது.

இராமசுவாமிப் பிள்ளையின் இக்கடிதத்திற்கு பதில் எழுதிய மகாராஜஸ்ரீ இராமகிருஷ்ண சாஸ்திரியாரவர்கள், இப்பதிப்பு வரவேண்டிய அவசியம் குறித்தும் காம சாஸ்திரத்தின் தேவை குறித்தும் எழுதிய பகுதி கவனிக்கத் தக்கது.

- இந்நூலை அச்சிற் பதிப்பித்து பிரசித்தஞ் செய்வதனால் புகழிற்குப் பழுது வருமென்று அனுமானிப்பது சயுக்திகமல்ல - அப்படியாயின் இதற்கு முதநூல் முதலியவற்றை செய்த நந்திகேசுவரர் முதலியவர்கட்குப் பெருமை குறைந்திருக்க வேண்டுமல்லவா அப்படிக்கில்லையே பெரியோர்கள் இந்நூலைப் பழிக்கிறார்களென்று சிலர் கருதினும் இவ்விதப் பழிப்பு எந்த நூலுக்கில்லை. சைவாகமம். தேவாரம் - திருவாசகம் முதலியவற்றை வைஷ்ணவர் பழிப்பதும் - பாஞ்சராத் திராகமம் - திவ்ய பிரபந்த முதலியவற்றைச் சைவர் பழிப்பதும் அர்த்த சாத்திரவாதிகள் காமசாத்திரத்தைப் பழிப்பதும் காம சாத்திரவாதிகள் அர்த்த சாத்திரத்தைப் பழிப்பதும் ஞானயோகிகள் கர்மயோகிகளைப் பழிப்பதும் மற்றும் இவர்கள் அவர்களைப் பழிப்பதும் ஆகிய திரஸ்காரங்களும் அங்கீகாரங்களும் எவ்வகை சாத்திரங்களுக்குமுண்டு...

இம்மதனநூலை பிரசித்தஞ் செய்யலாமா செய்யக் கூடாதா என்கிற கேள்விக்கு முக்கியமான உத்தரமென்னெனில் தர்மார்த்த காம மோட்சமென்கிற நான்கு புருஷார்த்தங்களைப் புருஷரனுஷ்டித்தனுபவிக்க வேண்டுமென்பது கடவுளினுள்ளத்திற்கும் வெகு சாத்திரங்களின் கருத்திற்கும் சம்மதமாயிருக்கிறதென்பதை ஒத்துக்கொண்டிருக்கிற யாவரும் அந்த புருஷார்த்தத்தை அனுபவித்ததற்கு அகத்தியமான விதிவிலக்குகளை யுணர்த்துஞ் சாத்திரம் வேண்டுமென்பதை ஒப்புக்கொள்ளாமற் போவார்களோ...

இக்கடிதங்கள் யாவும் 1838 இல் வந்த முதல்பதிப்பு மற்றும் பின்னர் வந்த இரண்டு பதிப்புகளிலும் காணப்படுகிறது. இக்கடிதங்கள் வழியாக நிகழ்ந்த உரையாடல்கள் காம சாத்திரம் என்பதை வெறும் சிற்றின்பத்திற்கும் போகத்திற்குமான கருவிநூலாக மட்டும் பார்க்கக்கூடாது என்றும் அது பிற சாத்திர நூல்களுக்கு இணையானது என்றும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் தன்மையை அறியமுடிகிறது. அதாவது இல்லற தர்மங்களில் ஒன்றான தன் இணையை திருப்தி செய்தல் என்பது சரியாக நடைபெற உதவும் நூலாக இதனை நோக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. அல்லது இத்தகைய தன்மையோடு இருந்தால்தான் இதனை பதிப்பிக்க இயலும் என பதிப்பாசிரியர் கருதியிருக்கலாம்.

இந்நூலைப் பதிப்பிக்க இவர் எழுதிய மற்றும் இவருக்கு எழுதப்பட்ட கடிதங்களோடு பல சாற்றுக் கவிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. புதுவை நயனப்ப முதலியார், புதுவை அச்சுத உபாத்தியாயர், மானாம்பதி சாமிப்பிள்ளை புத்திரராகிய ஐயாபிள்ளை, இராம நல்லூர் இராமச்சந்திரக் கவிராயர் புத்திரராகிய பெருமாள் கவிராயர், தானப்பிள்ளை முதல்வராகிய அப்பாவு பிள்ளை ஆகியோர் சாற்றுக்கவி அளித்துள்ளனர் என்பதோடு சென்னைக் கல்விச் சங்கத்துத் தலைமைத் தமிழ்ப் புலவர் தாண்டவராய முதலியார் எழுதிய முகவுரையும்4 குறிப்பிடத்தக்கது.

ஒரு நல்ல பதிப்பாக கொண்டுவர வேண்டுமென்கின்ற கடின உழைப்பு இந்நூலில் தெரிகின்றது. பதிப்பிக்கப்பட்ட ஒரே ஆண்டில் விற்று முடிந்து 1939இல் இரண்டாம் பதிப்பும் 1845 இல் மூன்றாம் பதிப்பும் வெளிவந்தது. இம்மூன்று பதிப்புகளும் பாலக்காடு வித்வோதய அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. (காண்க படம் 1)

இந்த நூலில் இடம் பெற்றுள்ள தாண்டவராய முதலியாரின் முகவுரை, இராமசாமிபிள்ளை அவர்கள் எழுதிய கடிதம் மற்றும் அவருக்கு எழுதப்பட்ட கடிதங்கள் ஆகியன நீக்கப்பட்டு கொக்கோக நுட்பம் மற்றும் படங்கள் ஆகியன சேர்க்கப்பட்டு 1909ஆம் ஆண்டு மீண்டும் பதிப்பிக்கப்படுகிறது. நூலை வெளியிட்டவர்கள் புதுவை அப்பாவுபிள்ளை பி.ஏ.பி.எல்., அவர்களும் நூறத்தின் சாயிபு அவர்களுமாவார்கள். இந்நூலிற்கான பதிப்புரிமையும் இவர்களிடமே இருந்துள்ளது. இக்காலத்தில் கொற்ற மங்களம் இராமசாமிபிள்ளை உயிரோடு இருந்தாரா என்பது தெரியவில்லை. சிலோன் புதினாலாங் காரீயந்திர சாலையில் அச்சடிக்கப்பட்ட இந்நூலில்தான் முதலில் கண்ட அந்த அறிவிப்பு வெளியானது.
1838இல் அரிதின் முயன்று அனைவருக்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தில் கொற்றமங்கலம் இராமசாமி பிள்ளையவர்களால் பதிப்பிக்கப்பட்ட கொக்கோகம் என்ற நூல் 1909இல் வணிகப் பொருளாக மாற்றம் பெருகிறது. மதன நூல் ஒன்றைப் பதிப்பிக்க தொடக்ககால பதிப்பாசிரியர் ஒருவருக்கு ஏற்பட்ட அச்சமும் அதையும் மீறி நல்ல பதிப்பாகக் கொண்டுவர அவர் காட்டிய சிரத்தையும் அதிலிருந்து ஒரு வெளியீட்டாளரின் கைக்கு மாறிய பொழுது அவ்வெளியீட்டாளரின் ஏகபோக உரிமையின் காரணமாக வெளிவந்த அறிவிப்புக்கான இடைவெளியும் பாரதூரமானவை.

முதற்பதிப்பில் வெளியான முன்னுரை மற்றும் சாற்றுக் கவிகளில் இந்நூலைத் தமிழ்ப்படுத்தியவர் வரதுங்க ராமபாண்டியன் என்று குறிப்பிட்டுள்ளனர் என்றாலும் நூல் தொடக்கத்தில் "சோழநாட்டுக் கதிபதியாகிய அதிவீரராம பாண்டியன் அருளிய கொக்கோகம்" என்று தவறாக அச்சிடப்பட்டுள்ளது.5 முதற்பதிப்பை ஆதாரமாகக் கொண்ட சில பிற்காலப் பதிப்புகளிலும் இத்தவறு தொடர்ந்துள்ளது. இத்தவறு 1909 ஆம் ஆண்டு வெளியான பதிப்பில் ""பாண்டிநாட்டுக்கதிபதியாகிய வரதுங்கராம பாண்டியன் அருளிய கொக்கோகம்" என சரிப்படுத்தப்பட்டுள்ளது.
பிற்காலங்களில் பலரும் பல பிழைகளுடன் கொக்கோக நூலை அச்சிட்டுள்ளனர். இந்நூலக்கு ஒரு நல்ல பதிப்பு வரவேண்டியது அவசியம் என பேரா. வையாபுரிப்பிள்ளை அவர்கள் கருதியுள்ளார். தன்னுடைய 'மதன நூல் வரலாறு' என்ற கட்டுரையில் 'அறிஞர்களுக்கு மட்டும் பயன்படக் கூடிய பதிப்பு வெளிவருவது அவசியம்' என்று குறிப்பிடுவதோடு அதற்கான முயற்சியிலும் அவர் ஈடுபட்டிருந்தார். புதுமைப்பித்தனால் தயார் செய்யப்பட்ட பிரதியொன்றை வையாபுரிப்பிள்ளை அவர்கள் திருத்தும் பணியிலும் பதிப்பிக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்ததாக வையாபுரிப் பிள்ளையின் பதிப்புப்பணியை ஆராய்ந்த முனைவர் பு. ஜார்ஜ் அவர்கள் குறிப்பிடுகின்றார்.6

கல்கத்தா தேசிய நூலகத்தில் உள்ள அக்கையெழுத்துப் பிரதியினைப் பதிப்பிப்பது அவசியமாகும். தமிழில் உருவான இன்பசாகரம் முதலிய நூல்கள் அழிந்த நிலையில் இம்மொழிபெயர்ப்பு நிலையாவது நல்ல பதிப்பாக கொண்டுவர வேண்டியது நமது கடமை.

அடிக்குறிப்புகள்:

1. "மதனநூல் வரலாறுஃ என்ற பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையின் கட்டுரை மட்டுமே தமிழில் மதனநூல் வரலாற்றைப் பேசும் கட்டுரையாக இருக்கிறது. இத்துறை தொடர்பான மேலதிக ஆய்வுகள் நிகழ்வது அவசியம்.
2. இந்நூலுக்கு வீரநாதன் என்பவர் எழுதிய செம்மையான பழைய உரை ஒன்று உண்டு என்று பேரா. வையாபுரிப் பிள்ளை குறிப்பிடுகின்றார். அந்த உரையும் இதுவரை பதிப்பானதாகத் தெரியவில்லை.
3. உ.வே. சாமிநாதையர் தம்முடைய பதிப்புகளில் தாம் பதிப்பித்த நூலை வேறு யாரேனும் பதிப்பித்தால் அவர்கள் "நரகம் புகுவர்' என எச்சரித்துள்ளார் என்பர்.
4. தாண்டவராய முதலியார், தாம் எழுதிய முகவுரையில் இப்பதிப்பின் போதாமை குறித்தும் பேசியுள்ளார். குறிப்பாக இன்பசாகரம் நூல் பற்றி அங்கங்கு உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டப்பட்டவற்றையும் தொகுத்து தந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அந்நூல் பற்றிய குறிப்பும் இதுவரை வெளிவரவில்லை.
5. இந்நூலை வரதுங்கராம பாண்டியன்தான் மொழி பெயர்த்தார் என்பதற்கு பல குறிப்புகள் காணப் படுகின்றன. இந்நூலுக்கு சாற்றுக்கவி வழங்கிய புதுவை நயனப்பமுதலியார்,

முதியோர்கள் வடமொழியல் மதன நூலதனையே
முனம் விரித்தும் வகுத்தும் மொழிந்தனர்கள்
பின்னர்வரு கொக்கோக னென்று மோர்
மூதறிஞனே தொகுத்தான்
மதியினுயர் வரதுங்க ராம பாண்டிய மன்னன்
மன்னு தமிழிற் கூறினான்.
என்று கூறியுள்ளார். இதேபோல பேரா. வையாபுப்பிள்ளை எடுத்துக்காட்டும் பழம்பாடலின் மூலமும் இதனை உறுதி செய்யமுடியும். இந்நூலுக்கு உரையெழுதிப் பதிப்பித்த கொற்றமங்கலம் இராமசுவாமிப் பிள்ளையே முன்னுரையில் "வரதுங்கராம பாண்டியன்' மொழி பெயர்த்தான் என குறிப்பிடுகின்றார்.

6. பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை கொக்கோக பதிப்பு குறித்து முனைவர் பு. ஜார்ஜ் கூறும் கருத்துக்கு அவரது கூற்றே ஆதாரமாகிறது. அந்த நூலின் நிலை குறித்து தற்பொழுது வேறு எதுவும் தெரியவில்லை.