புதுக்கவிதையில் தனி இயக்கமாகக் குறிப்பிடப்படும் வானம்பாடிகளின் பங்களிப்புகள் எனப் புதுக்கவிதைக்குப் பரவலாகக் களம் ஏற்படுத்தியதையும் கவிதையை ஜனநாயகப்படுத்தியதையும் முக்கியமாகக் கருதலாம். எழுபதுகளின் தொடக்கத்தில் ஆரவாரத்தோடு தொடங்கிய இவ்வியக்கக் கவிஞர்கள், மிகச் சில ஆண்டுகளிலேயே வெகுஜனப் பத்திரிகைத் தளத்தில் கவனிக்கப்படுபவர்களாக மாறினர். வெகுஜனப் பத்திரிகைகள், புதுக்கவிதையைத் தம் வெளியீட்டுப் பொருளாகக் கருதிப் பக்கங்கள் ஒதுக்கிப் பிரசுரித்தமைக்கும் வானம்பாடிகள் காரணம் எனலாம்.

முன்னிலையை நோக்கிச் சொல்லுதல், அலங்கார வார்த்தைப் பயன்பாடு, நேரடியாகச் சொல்லுதல், எல்லாவற்றையும் சொல்லி முடித்தல் ஆகிய பண்புகளைக் கொண்ட கவிதைகள் வெகுஜனப் பத்திரிகைகளுக்கு ஏற்றவையாக இருந்தன. வாசகர்களைப் பங்கேற்பாளர்களாக இப்பத்திரிகைகள் உருவாக்கும் நோக்கத்திற்கு ஒன்றைப் பிரதி செய்யும் நகல்கள் தோன்றுவதற்கேற்ற வகையிலான எழுத்துகள் தேவை. வானம்பாடி வகைக் கவிதைகள் அத்தகைய நகலெடுப்புக்குப் பொருத்தமானவையாக அமைந்தன. வானம்பாடிகளின் கவிதை பாணி வெகுஜனப் பத்திரிகைக்குள் போய் முடிந்தது.

எழுபதுகளின் நடுப்பகுதியில் புதுக்கவிதைகளை வெளியிடத் தொடங்கிய வெகுஜன இதழ்கள் எண்பதுகளின் நடுப்பகுதிவரை ஏராளமான கவிஞர்களை உற்பத்தி செய்தன. மு.மேத்தாவின் "கண்ணீர்ப் பூக்கள்” பல பதிப்புகளைப் பெற்றது. அத்தொகுப்பின் பாணியிலேயே நிறையத் தொகுப்புகள் வெளியாயின. மு.மேத்தாவின் இடத்தை நிரப்புவதற்கு அவரது போலிகள் பலர் தயாராக இருந்தனர். ஒரே வகையான பாடுபொருள்கள், சொல்முறை அனைத்தும் கொண்ட இவ்வகைப் பாணி எண்பதுகளின் மையத்தில் ஒரு தேக்கத்தை உண்டாக்கியது. வெகுஜனப் பத்திரிகைகள் ஒரே வகையானவற்றையே விதவிதமாகக் கொடுப்பதின் மூலம் தமது வணிக நோக்கைக் காப்பாற்றிக்கொள்ளும் இயல்புடையவை. சிறுகதைகளுக்கு ஆத்திச்சூடிக் கதைகள், பொன்மொழிக் கதைகள், ஒரு பக்கக் கதைகள், அரைபக்கக் கதைகள் எனப் பலவாறாகத் தலைப்புக் கொடுத்து வெளியிடப்படுவதைக் காணலாம். சமீபத்தில் ஓர் இதழ், ஒரு வார்த்தைக் கதை, ஒரு வாக்கியக் கதை, ஒரு பத்திக் கதை, ஒரு பக்கக் கதை என வெவ்வேறு எழுத்தாளர்களின் கதைகளை வெளியிட்டிருந்தது. இந்தமுறை அவை வெளியிடும் அனைத்துவகை எழுத்துகளிலும் வெளிப்படும்.

வானம்பாடிக் கவிதைப் பாணியை மையமாகக் கொண்டு உருவான வெகுஜனப் பத்திரிகைக் கவிதை வெளியீட்டில் எண்பதுகளின் மத்தியில் ஒரு தேக்கம் உருவாயிற்று என்பதற்கு முக்கியமான சான்றுகளாக இரண்டைக் கருதலாம். முதலாவது, சி.இ. மறைமலை எழுதி 1986இல் வெளியான "புதுக்கவிதையின் தேக்கநிலை” என்னும் நூல். அச்சமயத்தில் குறிப்பிடத்தக்க கவிதைகளை எழுதிக்கொண்டிருந்த கவிஞர்கள் எவரையும் இந்நூல் பொருட்படுத்தவில்லை. அத்தோடு கலாப்ரியாவிற்கு "மனநோயாளி” என்று பட்டம் கொடுத்த இந்நூல், அவரைப் போன்ற கவிஞர்களை வசைபாடியது. வெகுஜனப் பத்திரிகைக் கவிஞர்களையே தமிழின் கவி ஆளுமைகளாகக் கருதிய சி.இ. மறைமலை, அத்தளத்தில் ஏற்பட்ட தேக்கத்தையே "புதுக்கவிதையின் தேக்கநிலை” என்று கருதினார். அதற்குக் காரணமாக அவர் சிலவற்றைக் குறிப்பிடுகிறார்.

1. "வெற்றி பெற்ற, விளம்பரம் பெற்ற, கவிஞர்களின் - புகழ்பெற்ற, மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற, கவிதைகளை அடியொற்றியே இன்றைய இளங்கவிஞர்கள் கவிதை எழுதி வருகின்றனர். (ப.64)

2. வார இதழ்களின் எண்ணிக்கை வலிமையாலும் அவற்றைப் படிப்போர் தொகை மிகுதியாலும் நகைச்சுவைத் துணுக்கு எழுத்தாளர்கள் மக்கள் மன்றத்தில் வெற்றிகரமான கவிஞர்களாக அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். (ப.65)

3. பாடுபொருளில் எத்தகைய புதுமையும் இன்றிப் பிறர் பாடிய தலைப்பிலே, பாடிய பொருளையே பாடிக்கொண்டிருக்கும் செக்குமாடுகளாகக் கவிஞர்கள் மாறிவிட்டனர் (ப.64)

4. அரசியல் செல்வாக்குப் பெற்றவர்கள் ஆசைபற்றி அறையலுற்ற புதுக்கவிதைகள் நூலாகி விடுவதுடன் அவர்களது பரிவும் துணையும் தேவைப்படுவோரால் விளம்பரப்படுத்தவும் படுகின்றன. (ப.65)

வெகுஜன இதழ்கள் கிட்டத்தட்டப் பத்தாண்டுகளாகப் புதுக்கவிதைத் துறையில் உருவாக்கிய மாதிரிகளையே மறைமலை கூறும் காரணங்களில் காணலாம். இத்தகைய தேக்கநிலையைப் போக்க அவர் கூறும் ஆலோசனைகள், "உண்மையான கவிஞர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கவிதை வெளியிட முனையும் பத்திரிகையாளர்கள், "எதிர்ப்புக் குரல் கொடுத்துப் பத்திரிகைகளின் போக்கை மாற்றப் பாடுபடும் சுவைஞர்கள்” ஆகியோர் தேவை என்பதாகும். மறைமலை வெகுஜனப் பத்திரிகைத் தளத்தை அடிப்படையாகக் கொண்டு, அதுவே கவிதையைச் செழுமைப்படுத்தும் தளம் என மயங்கி எழுதுகின்றார். இலக்கியமாகும் கவிதைக்கும் வணிகப் பொருளாகும் கவிதைக்குமான நுட்பமான வேறுபாட்டை உணராத மறைமலை, வெகுஜனப் பத்திரிகைக்குரிய கவிதையின் தேக்கத்தை ஒட்டுமொத்தப் புதுக்கவிதைக்குமான தேக்கநிலையாகக் காண்கிறார்.

மற்றொரு சான்றாக மு. மேத்தா எழுதியும் தொகுத்தும் வெளியிட்டுள்ள "புதுக்கவிதைப் போராட்டம்” என்னும் நூலைச் சொல்லலாம். ஆனந்தவிகடன், குமுதம் ஆகிய இதழ்களில் மேத்தா எழுதி விவாதத்திற்குள்ளான

புதுக்கவிதை பற்றிய விஷயங்களை இத்தொகுப்பு கொண்டுள்ளது. 17.7.86 நாளிட்ட குமுதம் இதழில் "காட்டில் ஒரு கவிதைஃ என நாடகம் ஒன்றை மு. மேத்தா எழுதினார். 20.7.86 நாளிட்ட ஆனந்தவிகடன் இதழில் "சற்றே இரும் பிள்ளாய்” என்னும் மு. மேத்தாவின் கவிதை வெளியானது. இவ்விரண்டின் மையக்கருத்தும் ஒன்றேதான். புதுக்கவிதையில் போலிகள் புகுந்துவிட்டன; ஆகவே கொஞ்ச நாட்களுக்குப் புதுக்கவிதை எழுதுவதை நிறுத்திவிட வேண்டும் என்பது மேத்தாவின் கருத்தாகும்.

புதுக்கவிதை இராமனுக்கு ரசிகர்களின் கூட்டம் பெருகிவிட்டது. தகுதி இருக்கிறதோ இல்லையோ ஒவ்வொரு ரசிகனும் தன்னையே இராமனாகக் கருதிக் கொள்ளத் தலைப்பட்டு விட்டான். (ப.30) என்று மேத்தா எழுதுகின்றார். அதாவது, ரசிகர்களே கவிஞர்களாகி விட்டனர் என்பது அவர் கருத்து. வெகுஜனத் தளத்தின் இயல்பு, சுவைஞர்களையே தமக்கான கச்சாப்பொருள் உற்பத்தியாளர்களாக மாற்றுவதாகும். அது நடந்திருக்கிறது என்பதை மேத்தாவின் கூற்று விளக்குகிறது. "ஒற்றை வரியை ஒடித்து இரண்டாய்ப் போட்டால் கவிதை, "படம் போட்டு வரும் பத்திரிகைத் துணுக்கு கவிதை”, "ஜோக்குகள் கவிதையாதல்” எனப் புதுக்கவிதையை வெகுஜனப் பத்திரிகைகள் எவ்வாறு சீரழித்தன என்பதற்கான குறிப்புகளை மேத்தா கூறுகிறார். அந்தத் தளத்தின் இயல்பு அது என்பதை அவர் புரிந்துகொள்ள வில்லை. ஆனால், இத்தகைய போக்குகளால், "முதலுக்கே மோசம் வரும்” என்பதைப் புரிந்து கொண்டுள்ளார். அதாவது, தன்னைப் போலக் கவிதை எழுதப் பலர் உருவாகிவிட்டால் தான் தேவைப்படாமல் போய்விடுவோம் என்பதை அவர் உணர்ந்துள்ளார். "பல்லக்குச் சுமந்துவந்த பரம ரசிகர்கள் தாமே பல்லக்கில் தாவி அமர்ந்தார்” (ப.41) எனக் கவலைப்படுகிறார்.

மு. மேத்தா கூறிய இந்தக் கருத்து வெகுஜனப் பத்திரிகைகளில் பரவலான விவாதத்திற்கு உள்ளாயிற்று. அவரது கருத்தை ஆதரித்தோ மறுத்தோ கட்டுரை எழுதும் போட்டியை ஆனந்தவிகடன் அறிவித்தது. கல்கண்டு, தாய், தினசரி, ராணி, கல்கி முதலிய இதழ்கள் இதனைப் பூதாகாரமாக்கிக் கருத்துகளைத் தெரிவித்தன. சில மாதங்கள் இந்த விவாதம் இப்பத்திரிகைகளில் களைகட்டியது. இவ்விவாதக் கருத்துகளைத் தொகுத்து நூலாக்கியபோது, அதன் முன்னுரையில் மு. மேத்தா எழுதினார்: "புதுக்கவிதையில் ஏற்பட்ட நெருக்கடி நிலையை உணர்த்துவதற்காகவும் ஓர் இலக்கிய விழிப்பை உண்டாக்குவதற்காகவும் (இவ்விவாதம்) நானே தொடங்கி வைத்ததாகும்” (ப.9)

சி.இ. மறைமலை, புதுக்கவிதையின் தேக்கநிலை என்று சொன்னால், "புதுக்கவிதையில் ஏற்பட்ட நெருக்கடிநிலை” என மேத்தா கூறுகிறார். கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் வைரமுத்து, மரபுக்கவிதைக்குப் புதுரத்தம் பீய்ச்சி அதை உயிர்ப்பிக்கப்போவதாக எழுதினார். (ரத்ததானம், ப.4) உண்மையில், எண்பதுகளின் தொடக்கத்திலிருந்து தமிழ்க்கவிதையில் பல புதுக்குரல்கள் ஒலிக்கத் தொடங்கின என்பதையும் மிக முக்கியமான சிறுபத்திரிகைகள் வெளியாயின என்பதையும் ராஜமார்த்தாண்டன் எழுதிச் சமீபத்தில் வந்த "புதுக்கவிதை வரலாறு” நூல் மூலம் அறியலாம். ஞானரதம், கொல்லிப்பாவை, ழ, யாத்ரா, மீட்சி, லயம் உள்ளிட்ட பல இதழ்கள் இக்காலகட்டத்தில் வெளியாயின.

பிரம்மராஜன், கலாப்ரியா, ஆத்மாநாம், ஆனந்த், தேவதச்சன், ரா. ஸ்ரீனிவாசன், ஆ. இளம்பரிதி, சுகுமாரன் எனப் பல தனித்த கவிக்குரல்கள் இதே காலத்தில் கவிதையைச் செழுமைப் படுத்திக்கொண்டிருந்தன. இவ்விதழ்களையோ கவிஞர்களையோ பொருட்படுத்தாமல் புதுக்கவிதைக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டிருப்பதாகக் கவலைப்பட்ட விவாதங்களின் முரணை விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரே வகையான கவிதைகளை உற்பத்தி செய்ததால் ஏற்பட்ட சலிப்புணர்விலிருந்து வாசகர்களை விடுவிக்கும் தமது இடம் காலியாகிவிடுமோ எனக் கவலைப்பட்ட கவிஞர்களின் எண்ணமும் இணைந்து வெகுஜனப் பத்திரிகைத் தளத்தில் உருவாக்கப்பட்ட விவாதமே "புதுக்கவிதைக்கு நெருக்கடி” என அடையாளப் படுத்தப்பட்டது. இந்த நெருக்கடியிலிருந்து வெகுஜனப் பத்திரிகைகள் விடுபடக் கிடைத்த பெயர்தான் ஹைக்கூ ஆகும்.

தமிழில் ஹைக்கூவை அறிமுகப்படுத்தி 1916 இல் பாரதியார் கட்டுரை எழுதினார். "சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்” என்பதற்குச் சான்றாக ஜப்பானியக் கவிதையைப் பாரதியார் காட்டுகிறார். அவர் எழுதி அறுபதாண்டுகளுக்குப் பிறகு திடீரென ஹைக்கூ வடிவம் பிரபலமாவதற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்? இடையே ஆங்கிலம் வழியாகத் தாம் அனுபவித்த சில ஹைக்கூ கவிதைகளை சி. மணி, க.நா. சுப்பிரமணியம் ஆகியோர் மொழிபெயர்த்துள்ளனர். அப்துல் ரகுமான் "சிந்தர்” என்னும் தலைப்பிட்டுச் சில கவிதைகளை எழுதியுள்ளார். இவை ஒருபுறமிருக்க எண்பதுகளின் இடைப்பகுதியில் ஹைக்கூ என்பது ஒரு விஷக்காய்ச்சல் போலத் திடுமெனப் பரவி வெகுஜனப் பத்திரிகைகளில் இடம்பிடித்துக்கொண்டது.

1984இல் அமுதபாரதியின் "புள்ளிப் பூக்கள்” என்னும் தொகுப்பு வெளியாயிற்று. அப்துல் ரகுமான் மூலமாக ஹைக்கூவைக் கற்று அறிவுமதி "புல்லின் நுனியில் பனித்துளி” என்னும் தலைப்பில் தொகுப்பைத் தயார் செய்து வைத்திருந்ததாகவும் அதைப் படித்துவிட்டு அவசரமாகத் தாமே எழுதி ஒரு தொகுப்பை அமுதபாரதி வெளியிட்டு விட்டதாகவும் சர்ச்சை உண்டு. இவ்வாறு சர்ச்சையுடன் தொடங்கிய ஹைக்கூ வெகுஜனப் பத்திரிகைகளுக்கு உவப்பான வடிவமாக மாறிற்று. 1985ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இலக்கு கருத்தரங்கில் வாசித்த கட்டுரையில் ஆர். சிவகுமார், "ஹைக்கூ பாணிக் கவிதைகள், அவற்றின் சில இலக்கணங்கள் புறக்கணிக் கப்பட்டு வடிவத்தை மட்டுமே பிரதானமாக எடுத்துக்கொண்டு நிறைய எழுதப்பட்டன.

ஜனரஞ்சகப் பத்திரிகைகள் இவ்வடிவத்தைக் கொச்சைப்படுத்தும் கவிதைகளை ஏராளமாக வெளியிடுகின்றன (ப.50) என்று எழுதியுள்ளார். துணுக்கு வெளியிடும் இடத்தில் கவிதையை வெளியிட்டுவிடலாம் என்னும் சௌகரியத்தாலும் எப்போதும் குறுவடிவங்களே வெகுஜன இதழ்களுக்கு உவப்பானவை என்பதாலும் விதவிதமாகப் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதாலும் அவ்விதழ்கள் ஹைக்கூவை தமக்கான வடிவமாகக் கொண்டன. மு. மேத்தா "இலக்குவன்- ஹைக்கூ” என்று குறிப்பிட்டார். ஆனால் வெகுசீக்கிரத்தில் ஹைக்கூ, வெகுஜனப் பத்திரிகைகளின் இராமனாகிவிட்டது.

ஹைக்கூ பிரபலம்பெறத்தொடங்கி இருபதாண்டுகளுக்கும் மேலாகின்றன. இவ்வாண்டுகளில் ஹைக்கூ பரவலாகிய விதத்திற்கும் வெகுஜனப் பண்பாட்டிற்கும் உள்ள தொடர்புகள் முக்கியமானவை. தனித்துவங்களை இழந்த திரள்நிலையை வெகுஜனம் என்று அடையாளப்படுத்துவர். மனிதர்கள் முகமற்ற தொகுதிகளாக நடத்தப்பெறும் நிலை வெகுஜனம் என்றும் விளக்கப்படுத்தலாம். வெகுஜனம் எனப்படும் இந்தத் திரள்நிலையின் இயக்கத்துக்கும் தொழிற்பாட்டுக்கும் அத்தியாவசியமானவை வெகுஜனத் தொடர்புச் சாதனங்கள் ஆகும். இவை சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டவை. சந்தைப் பொருளாதாரத்தின் சமூக நிலை வெளிப்பாடுதான் வெகுஜனப் பண்பாடு என்பதாகும்.

வெகுஜனம் எனப்படும் திரள்நிலையை ஒருங்கிணைக்க அமைப்போ இயக்கமோ தேவையில்லை. ஒன்றிணைப்பதற்கு வெகுஜனத் தொடர்புச் சாதனங்களே போதுமானவை. தனித்துவங்களை அழித்து ஒத்த மாதிரிகளாக வடிவமைப் பதற்கு இச்சாதனங்கள் பலவாறான முயற்சிகளில் ஈடுபடுகின்றன. வெகுஜனப் பத்திரிகைகளில் வெளியிடப் படும் கவிதைகள் பெரும்பாலும் ஒரே வகையிலானவை. காதல் உள்ளிட்ட மிகச் சில பாடுபொருள்களையே கைக்கொண்டிருப்பவை. ஹைக்கூ எனப் பெயர் மாற்றம் பெற்றாலும் பாடுபொருள்களில் பெரிய மாற்றம் எதுவும் உருவாகவில்லை என்பதைக் காணலாம். சொல்முறையில் வாசகருக்குச் சிரமம் எதுவும் தராத எளிதான முறையில் இவை அமைகின்றன. புதுக்கவிதை வெகுஜனத்தன்மை பெற்றபோது முரண் என்னும் எளிதான முறையைத் தன் பிரதானமான உத்தியாக எடுத்துக்கொண்டது. குழந்தையின் "பசியை நாங்கள் அறிந்ததில்லை, ஏனெனில் நாங்கள் பசியின் குழந்தைகள்” என்பது போன்ற முரண்கள் அவை.

வெகுஜனப் பண்பாடு, வழிபாட்டிற்குரியதாக ஒருபொருளையோ நபரையோ கட்டமைக்கும். வழிபாட்டிற்குரிய அதனைப் பற்றிக் கேள்வி கேட்பதோ குறை காண்பதோ கடுமையான எதிர்வினையை உருவாக்கும். ரசிகர் மன்றங்களை இதற்கு நல்ல சான்றுகளாகக் கொள்ளலாம். அதேபோலவே ஹைக்கூ என்னும் பெயருக்கு ஏராளமான ரசிகர்கள் இன்று உருவாகியிருக்கிறார்கள். ஹைக்கூவைப் பற்றி ஏதாவது விமர்சனம் சொன்னால் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை கிடையாது. ஹைக்கூ என்று பெயர் பொறித்த டாலர் சங்கிலிகளை அணிந்து திரியும் அளவுக்கு அதன்மீதான மோகம் இன்று நிலவுகிறது.

வெகுஜனத் தன்மைக்கும் பிரபலத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. வெகுஜனத் தளத்தில் கவனம் பெறுவதாக எது உருவாகிறதோ அதனை வெகுஜனப் பிரபலங்கள் சட்டெனக் கையில் எடுத்துக்கொள்வர். "ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்” என சுஜாதா நூல் எழுதி உள்ளார். அவர் கணையாழி இதழோடு தொடர்பில் இருந்தபோது ஹைக்கூச் சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. ஹைக்கூவோடு தன்னை இணைத்துக்கொள்ளும் விதமான செயல்களை அவர் திரும்பத்திரும்பச் செய்வதுண்டு. "ஹைக்கூவுக்கென ஓர் இதழ் தொடங்கப்பட்டால் அதன் ஆயுள் சந்தாதாரராக இருப்பேன்” என அவர் எழுதினார். அதற்குப்பின் ஹைக்கூவுக்கெனச் சில இதழ்கள் தொடங்கப்பட்டன. பிரபலங்கள் வெகுஜனத் தளத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு இப்படியான தூண்டுதல்களைச் செய்வதுண்டு.

நெல்லை சு. முத்து, தமிழன்பன், நிர்மலா சுரேஷ் முதலிய பிரபலங்களும் ஹைக்கூ தொடர்பான நூல்களை எழுதியுள்ளனர். ஹைக்கூவைக் கற்றுக் கொடுக்கும் முக்கியக் கடமை தங்களுக்கு இருப்பதாகக் கற்பித்துகொள்வதும் வாசகரை எதுவும் தெரியாத பிண்டங்களாகக் கருதுவதும் இங்கு இயல்பு. புதுக்கவிதை என்னும் வடிவம் உருவாகிப் பல்லாண்டுகள் ஆன பின்னரும் அதன் வரையறைகளை விளக்கும் நூல்களையோ வரலாற்றைக் கூறும் நூல்களையோ இவர்கள் யாரும் எழுத முனைந்ததில்லை. ஆனால் ஹைக்கூ தொகுப்புகள் இதுவரை எத்தனை வந்துள்ளன என்னும் விவரம் தரும் நூல்கள் பல வந்துவிட்டன.

ஹைக்கூவை வழிபடுபொருளாகக் கருதும் திரள், பிரபலங்களைத் தமக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொள்வதும் நடக்கும். அணிந்துரைகள் பெறுதல், தம் கவிதை மேற்கோளாக வர முயல்தல், பிரபலங்களை மேற்கோள் காட்டல், கூட்டங்களுக்கு அழைத்தல், ஆசிபெறுதல் என இந்த முயற்சிகள் பலதரப்பட்டவை. ஹைக்கூ வெளியீட்டு விழாக்கள், மாநாடுகள், கவியரங்குகள் உள்ளிட்ட கொண்டாட்டங்களும் இப்போது நடக்கின்றன. எழுபதுகளின் இறுதியில் புதுக்கவிதை நூல் விசிட்டிங் கார்டாக எப்படித் திகழ்ந்ததோ அதுபோல இப்போது ஹைக்கூத் தொகுப்பு திகழ்கிறது.

வெகுஜனப் பண்பாடு, சந்தைத் தன்மையை ஆதாரமாகக் கொண்டது. பத்திரிகைகள் தமது விற்பனைக்கான கச்சாப்பொருள்களுள் ஒன்றாக ஹைக்கூவைப் பயன்படுத்துகின்றன. அத்தோடு ஹைக்கூ வழிபடு பொருளாக இருப்பதால், அதைப் பற்றி எழுதப்படும் எந்த நூலுக்கும் விற்பனை மதிப்பு உடனே கிடைக்கிறது. பலர் சேர்ந்த தொகுப்புகள், கவிஞரே பணம் கொடுத்து நூல் வெளியிடல் ஆகியனவும் நிகழ்கின்றன. எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் புதுக்கவிதைத் தொகுப்புகள் பல இவ்வாறு வெளியாயின. அதே முறை இப்போது உள்ளது. ஹைக்கூக்களை வெளியிடுவதற்கென்றே சில பதிப்பகங்கள் உருவாகியுள்ளன.

வெகுஜனப் பண்பாட்டின் அடிப்படைகளுள் ஒன்றாக “கலைப்போலி” என்பதனைக் கா. சிவத்தம்பி குறிப்பிடுவார். கலைப்போலிகளைப் பற்றி அவர் கூறுவன.

கலைப்போலிகளின் முக்கியமான பண்பு அவை தமது முன்படிவங்களாக உண்மையான கலைப் படைப்புகளை பயன்படுத்திக்கொள்வதாகும். இக்கலைப் போலிகளின் வலு எங்கேயுள்ளன வென்றால், அவை சிலரின் உண்மையான சமூக அபிலாசைகளைப் பூர்த்தி செய்கின்றன என்பதிலேதான் (ப.14).

ஜப்பானிய ஹைக்கூக்களை தம் முன்படிவங்களாகக் கொண்டு தமிழில் ஹைக்கூக்கள் எழுதப்படுகின்றன. ஜப்பானிய ஹைக்கூவுக்குரிய தத்துவப் பின்புலம், தோற்றச் சூழல், யாப்பு வரைமுறைகள் என எதையும் பின்பற்றாத போதிலும் ஹைக்கூ என்னும் அடையாளத்தைக் கோருகின்றன. இக்கலைப்போலிகள், எழுத்தில் ஆர்வம் உடைய, சமூகத்தில் தம்மை அடையாளப் படுத்திக்கொள்ள விரும்பும் சிலரது அபிலாசைகளைப் பூர்த்தி செய்கின்றன என்பதும் உண்மை.

தமிழின் முக்கிய கவி ஆளுமைகளாக விளங்கும் கவிஞர்கள் பெரும்பாலும் ஹைக்கூ எழுதவில்லை என்பதுடன் அதன்மீது எதிர்கருத்துகளையே வைத்துள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. பாக்யா, உங்கள் ஜூனியர் முதலிய வெகுஜன இதழ்களும் வார இணைப்புகளும் ஹைக்கூவை ஏராளமாக உற்பத்தி செய்தன; செய்கின்றன. இலக்கிய இதழ்கள் எவையும் ஹைக்கூவைக் கவிதையாகக் கருதி வெளியிட முனையவில்லை. ஏனெனில் ஹைக்கூ என்பது தமிழ்க் கவிதையின் இலக்கியப் போக்கு அல்ல. அது வெகுஜனத் தளத்தில் நேர்ந்த நெருக்கடிக்காகப் பிரபலப்படுத்தப்பட்ட ஒரு பெயர். அப்பெயர் வெகுஜனப் பண்பாட்டின் பரவலாக்கத்திற்குப் பயன்பட்டுக் கொண்டுள்ளது.

துணை நூல்கள்:

1. ச. சந்திரசேகரன் (ப.ஆ.), பண்பாட்டு உருவாக்கத்தில் பத்திரிகைகளின் பங்கு, 1989, விழுப்புரம், சரவணபாலு பதிப்பகம்.

2. சி.இ. மறைமலை, புதுக்கவிதையின் தேக்கநிலை, 1986, சென்னை, திருமகள் நிலையம்.

3. மு. மேத்தா, புதுக்கவிதைப் போராட்டம், 1987, சென்னை, திருமகள் நிலையம்.

4. ராஜமார்த்தாண்டன், புதுக்கவிதை வரலாறு, 2003, சென்னை, யுனைடெட் ரைட்டர்ஸ்.

5. புதுக்கவிதையும் புதுப்பிரக்ஞையும், 1985, பெங்களூர், காவ்யா.