மௌனம் தீய்க்கும்
நெடும் பகல்களும் இரவுகளும் என்னை வதைத்து இன்புறுகின்றன,
நீண்ட விரும்பித் தழுவிக்கிடந்த குளிர்காலம்
தீரத்தீர தேய்ந்து வற்றிவிட்டது,
வெறிகொண்ட காதலனின் முத்தமென
கோடை ஆரவாரங்களோடு எழுந்தருளியாயிற்று,
இனியும் தன் கையோடு நிறைக்காத பிஷ்வாக அலைவுறுகிறேன்,
அரசியல் சித்தாந்தங்கள். கிருமிகளைக் கணக்கெடுத்து
முத்தங்களை விரயமாக்கும் மருத்துவனாக்கிவிட்டன. என்னை,
நெடிய இரவும். அழகுற படுத்திருக்கும் நாய்களும்.
ஒளி சிந்தும் சிறுவனின் பிருஷ்டம் போன்று
குளிர்ந்து பொலியும் நிலவும். சிறு வனமும்
ஜல கிரீடையும். ஆதிக் காதலின் ஞான சம்பாஷனையும்,,,
என்னை இழந்து எங்கோ நடக்கிறேன்,
சொல்லும் பொருளும். நீயும் உலகும். அவனும் எனக்கு அந்நியராயினர்,
என் விழி ஈன்ற கண்ணீர் சிசுக்கள் உப்புக்கடலின் உதடு சுவைக்கும்.
முலைப்பாலுண்ணும்,
இறந்த நான் இனி எழுவதா கூடும்?
என்னைப் பற்றி எழும் கேள்வி இவைகள்,
செம்மண் மீது விழுந்த மழைத்துளி புதைந்ததென்று
புனைவதன் அரசியல் எனக்கு இன்னும் பிடிபடவில்லை,


பெருந்திருத் தாண்டகம்

அழிதல் அறியா செந்தமிழ் உண்டு.
அமுதம் கொண்டு அறம் அது எழுதி
பழுதொன்றில்லா வாழ்வது எய்தி
பாட்டெனும் இசையொக நாப்பண் எழுப்பி
கற்பின் கனக காதற்கனி எம்மனைஇதழருந்தி
விற்பெருஞ் சிறப்பின் திசையளந்து
வீணரின் ஈனரின் பகை மறந்து
நட்பெனும் சொல்லின் முகம் தெரிந்து
சில மானுடப் போலிகள் தமைஉதிர்த்து
அன்பின் செம்புல நெஞ்சில் உயிர் கலந்து
மலர்கலி உலகம் வணங்க. தலைநிமிர்ந்து
கெந்தர்வ கானர்கள் இசைபாட நல்ல
செவ்வியர் கிண்கிணி காதணி தாலாட்ட
அற்புத தேவன் அருட்பெருஞ்சோதி அவலோகிதன்
பொற்பத பங்கய நடம்களிகூர்ந்து
சாக்கிய சிம்ஹன் கலியவதாரன்
எனவாங்கு.
வையம் யாவும் எமையேத்த
மெய்யுடையார்ந்த காதலி தன்னொடு யாம் வீற்றிருந்து
உலகங்கள் ஆண்டிடவே பிறந்தோம்
ஈங்கண்.
ஆற்றருஞ் சிறப்பின் அருந்தமிழ் யவ்வனம் தனைநிகர்
நெருப்பின் தூய்மையோடிவண் நிலைத்திருப்போம்
நீடுலகே இதை நீ அறிக!