குடித்துக் கும்மாளமிடும் என்முன் நீ வரலாமா
பேட்டி காணவா விமர்சிக்கவா
என்னால் உனக்கு எத்தீங்கும் நேரிடலாம்
நீ படைத்து அரங்கேற்றிய காவியத்தைக்
கண்டிருக்கிறேன்
இதுவரைக்கும் உன்னை சந்திக்க முயன்றதில்லை
பின் ஏன் என்னை சந்திக்க வந்திருக்கிறாய்
பீறிட்டுக் கொந்தளிக்கும் உணர்ச்சிப் பெருக்கை
என்னை மீறி கிளர்ந்தெழும்
உன்மத்த கவிமொழியில் வடிக்கிறேன்
வேறு எவருக்குமல்ல எனக்காக மாத்திரம்
எனவே உனது நாட்டிய நாடகத்திற்கு ஒரு காவியம்
சிருஷ்டித்து அளித்திட எள்ளளவும் விருப்பமில்லை
வந்தவழியே திரும்பிவிடு
எனது கவிதா ஜீவிதம் தொலைத்து ஒழிந்து
கலையுணர்வின் உன்னதபோதம் முழுவதும் இழந்து
மரக்கலமேறி கிளம்புகிறேன்
கண்காணாப் பாலைவனத்திற்கு
போதைமருந்து விற்பவனாக
ஆயுதம் கடத்துபவனாக
என் சுயரூபத்தைப் பார்த்துவிட்டாயே
இப்போது உனக்கும் எனக்கும்
எவ்வித சம்பந்தமுமில்லை
நீயே காவியகர்த்தாவாகவும்
நாட்டியத் தாரகையாகவும் இருந்துவிட்டுப் போ
எனது இந்த இடத்தைவிட்டு உடனடியாகக் கிளம்பிவிடு
ஏன் சாதனை பிடிக்கிறாய்
என் ஆடைக்குள் மறைத்து வைத்திருக்கும்
கத்தியை உருவ வேண்டிவரும்
என்னைக் கவிஞனாகக் கண்டிருக்கிறாய்
கொலைகாரனாகவும் கண்டுகொள்
ஓடிவிடு
எனது கந்தல் தாள்களை உன்முகத்தில் விட்டெறிகிறேன்
எடுத்துக் கொண்டு ஓடிவிடு
ஓடாமல் நிற்கிறாயே
ஓங்கிவிட்டேன் கத்தியை
ஓ... ஆ...
என்இதயம் துளைத்துக் கொப்பளிக்கும் ரத்தப்பெருக்கே
உயிர்த்துடிப்புள்ள விலையுயர்ந்த
பரிசாகத்தர இயலாத எனது கடைசிக் கவிதை
நான் அமைத்துக் கொடுக்கும்
உனது காப்பிய நடனத்தின் உச்சகட்டகாட்சி
விடைபெறுகிறேன் என் பிரிய கலாநர்த்தகி