நகுப் மெஹ்பூஸ்
அராபிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் ரிவான் ஆல்விர்
தமிழில் இரா. நடராசன்


நாவலின் முதல் அத்தியாயம்

பல விஷயங்கள் சேர்ந்து, அந்த மிடாக் குறுக்குப் பாதை, கெய்ரோவின் வரலாற்றில் மின்னும் நட்சத்திர வானின் பொற்கால அடையாளமாக கண்ணில் படுகிறது. எந்த கெய்ரோவை குறிப்பிடுகிறேன்? ஃபாட்டிமிட் கால கெய்ரோவா? மாம்லுக்கிகள் ஆண்டதா அல்லது சுல்தான்களின் கெய்ரோவா. கடவுளுக்கும் தொல்லியலார்க்குமே வெளிச்சம்; என்றாலும் புராதன வரலாற்று சின்னங்களில் அதுவும் ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை. கருங்கல் தரையுடன் வரலாறு போற்றும் சானா டிக்யுயா சாலைநோக்கி விரியும் அது வேறு எதுவாக இருக்கமுடியும்? குறுக்குபாதையின் காப்பிக்கடையான ‘கிர்ஷா’ அங்கேதான் உள்ளது. ஏதோ பழங்காலத்தை வைத்தியமுறையின் மருந்து வாடை துளைக்கும் மணமும், கிட்டத்தட்ட அழிந்து உதிரும் கோட்டோவியங்கள் பதித்த சுவருமாய் கிர்ஷா இன்றைக்கும் நாளைக்குமானதாக...............

மிடாக் குறுக்குபாதை தனது சுற்றுப்புறம் அனைத்திலிருந்தும் முற்றிலும் உடைத்துக்கொண்டு தனித்து கிடக்கிறது என்றாலும் தனக்கென்ற ஒற்றை பாணி ஒன்றை கொண்டு தனித்துவ வாழ்வை பெற்றுள்ளது. வாழ்வின் அனைத்து அம்சங்களோடும் அதன் வேர் இழைந்து ஓடினாலும் தற்போது இறந்தகாலமாகிப் போன யாவற்றின் தொடர்ச்சி அங்கே வியாபித்தபடி உள்ளது.

சூரியன் மறைந்த அந்த பொழுதில் ஒரு பழுப்பு நிறமடைந்த வெளிச்சக்கீற்று மிடாக் குறுக்குப் பாதையை மையமிட்டு சூழ்கிறது. விரைவில் மூன்று பெருஞ்சுவர்களுக்குள் அடைபட்டதால் இருள் பிரமாண்ட வடிவம் எடுத்தது. சானாடிக்யுயா தெருவிலிருந்து அது ஒரு திடீர் பிரவேசம் செய்தது. குறுக்குப் பாதையின் ஒருபுறம் ஒரு கடை, ஒரு டீக்கடை மற்றும் ஒரு ரொட்டிக்கடை அத்தோடு மற்றொரு கடையும் ஒரு அலுவலகமும் இருந்தன. பாதை அந்த மூன்று மாடிகள் கொண்ட அடுத்தடுத்த இரண்டு பெரிய வீடுகள் இருந்த இடத்தில் அதன் வழிவழிப் பெருமைகளைப் போலவே திடுமென்று முடிந்துபோய்விடுகிறது.

பகல்பொழுதின் வாழ்வோசைகள்.... இரைச்சல்கள் முடிந்து இப்போது மாலையின் மொழி கேட்கத் தொடங்கியது.... இங்கும் அங்குமாய் சில வார்த்தைகள் கிசுகிசுக்கள்........ "அனைவருக்கும் மாலை வணக்கம்." "உள்ளே வாருங்கள்...... மாலை ஒன்றிணைவிற்கான நேரம் வந்துவிட்டது," "அங்கிள் காமீல்.... கண் விழியுங்கள்..... உங்கள் கடையை மூடும் நேரம் ஆகி விட்டது," "சங்கெர்.... ஹøக்காவின் தண்ணீரை மாற்று!" "அந்த பாத்திரத்தை வெளியே எடுத்துபோடு ஜாடா!...." "இந்த ஹஷிஸ் புகையிலையில் போதை இல்லை....... இது என் நெஞ்சில் வலியை தருகிறது பார்......" "நாம் கடந்த ஐந்து வருடங்களாக இருட்டின் பயங்கர கொலைகளையும்.......... வான் தாக்குதல்களையும் சந்திக்கிறோமென்றால், அது நமது துர்புத்தியால்தான்"

அங்கிள் கமீலின் கடை - குறுக்குப்பாதையின் நுழைவாயிலில் உள்ள ஒரு இனிப்பு பண்டகசாலை மற்றும் இடப்புறமுள்ள ஒரு சிகை அலங்கார நிலையம் என அவை இரண்டும் மட்டும், சூரிய அஸ்தமனத்திற்கு பிறகும் கூட சிலமணிநேரம் திறந்திருப்பவை... அதிலும் அங்கிள் கமீல் தனது கடை வாசலில் ஒரு நாற்காலி இறுக்காக உட்கார்ந்து உறங்குவதை ஒரு வழக்கமாக....... ஏன் ஒரு தார்மீக உரிமையாகவே கொண்டிருந்தார்..... கையில் ஈ ஓட்டும் ஒர விசிறியுடன். ஏதாவது இனிப்பு வாங்க வந்தவர்கள் உசுப்பிவிடும் வரையிலோ அல்லது முடிவெட்டுபவரான அப்பாஸ் கிண்டலுடன் எழுப்பும் வரையிலோ அங்கிள் கமீல் அங்கேயே அப்படியே கிடப்பார். அவர் கொழுத்த பெரிய ஒரு ஆளாக இருந்தார்.... மரங்களின் பெருந்தண்டுபோன்ற கால்களுக்குமேல் அவரது பின்புறம் ஒரு மசூதி கோபுரத்தின் உருண்டை கூம்பு போல பெருத்திருந்தது. அதன் நடுப்பகுதி நாற்காலியிலும் ஏனைய பகுதி நாற்காலியிலிருந்து பிதுங்கிக்கொண்டு வெளியே துருத்தியபடியும் தொங்கிக் கொண்டிருந்தன.

அண்டா அளவிற்கு ஒரு தொந்தியும் வெளியே துருத்தித் தொங்கும் மார்பகங்களும் அவருக்கு இருந்தன. கழுத்தே இல்லாத மனிதராகவே பலரும் அவரை நினைத்தனர். கனத்த தோள்களுக்கு நடுவில் வட்டமான முகம் தாடைகள் தொங்க அமைந்திருந்தது. மூச்சுக்காற்று முகத்தை உப்பிடவும் சுருங்கவும் வைத்துக்கொண்டிருந்தது..... சதை பிடித்த கன்னங்களை ஒரு கோடுதான் பிரிக்கிறது.... மனிதருக்கு மூக்கோ கண்களோ இருப்பதாகவே தெரியவில்லை. இவை அனைத்திற்கும் மேலே அமைந்த தலை மிகவும் சிறியதாக முழுதும் சொட்டையாகி தோலின் சாம்பல் நிறத்தோடே அமைந்துள்ளது... ஏதோ அப்போதுதான் வேகமாக ஓட்டப் பந்தயத்தில் ஓடியவரைப்போல எப்போதுமே பெருமூச்சுகள் வாங்கி திணறிக்கொண்டே இருப்பார் அங்கிள் கமீல்...... ஒரு இனிப்பு பண்டத்தை முழுமையாக விற்பனைக்கென எடைபோட்டு முடிப்பதற்குள் வாங்கும் ஆசையை அடைவார்.... இதயத்தின் கட்டத்தை சுற்றிலும் சதை மேடுகள் மோசமாக அழுத்துவதால்..... அவர் திடீரென்று இறந்து விடுவார் என்றே எல்லோரும் அவரிடம் சொன்னார்கள்...... அவர் அவர்களது கூற்றை ஏற்றார்.

வாழ்க்கை ஒரு தொடரும் உறக்கமாக இருக்கும்போது மரணம் அவருக்கு எப்படி வலிக்கும்? சிகை அலங்கார நிலையம் சிறியதுதான் என்றாலும் அந்த மிடாக் சந்தில் அதற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கவே செய்தது. அது ஒரு பெரிய கண்ணாடியையும் ஒரு உயர கைவைத்த நாற்காலியையும் மற்றபடி முடிவெட்ட தேவையான உபகரணங்களையும் கொண்டிருந்தது. முடிவெட்டுபவர் ஒரு நடுவயது ஆள். சராசரி உயரம் சற்றே கருத்த ஆனால் ஓரளவு தடித்த தேகம். லேசாக வெளிவந்த விழிகள். தேகத்தின் பழுப்பு நிறத்திற்கு நேரெதிராக ஒரு மஞ்சள் நிறமுடி. எப்போதும் சூட்டு அணிந்திருப்பார். அதற்கும் மேலே ஏப்ரான் கோட் இல்லாமல் எங்கும் போகமாட்டார்..... பார்பர்களுக்கே உண்டான பாணி... முடிதிருத்துபவர்களுக்கே உண்டான நாகரீகம் அது.

இந்த இரண்டு பேரும் தங்கள் கடையிலேயே தங்குகிறார்கள். கிட்டத்தின் பெரிய குழுமம் ஒன்றின் அலுவலகம், வேலை சிப்பந்திகள் அனைவரும் வீட்டிற்குசென்றுவிட இழுத்து மூடப்படுகிறது. அதிலும் முதலாளி- அந்த குழுமத்தின் உரிமையாளர் - சலீம் அல்வான் - கடைசியாக வெளியேறுகிறார். குறுக்குப் பாதையின் நுழைவாயிலில் காத்திருக்கும் வாகனத்தில் ஏற தனது தளர்ந்து தொங்கும் மேலுடையும் கை வைக்காத கோட்டுமாக விருட்டென கடந்து செல்கிறார். எவ்வித உற்சாகமும் இன்றி இயந்திரத்தனமாக வண்டியில் ஏறுகிறார். அவரது துருத்திய பெரும் மீசை அவருக்கு முன்னால் ஏறுகிறது. வண்டிக்காரன் கால்களால் மணியை உதைத்து அடித்து குதிரையை கிளப்புகிறான். வண்டி சௌரியா வழியாக ஹில்மியா பகுதி நோக்கி விரைகிறது.

குறுக்குப் பாதையின் கோடியிலிருந்த இரண்டு வீடுகளும் குளிருக்கு அஞ்சி தங்களது கதவுகளை முற்றிலும் மூடிக்கொண்டு விட்டன..... இருந்தும் இடுக்குகளின் வழியே உள்ளிருந்து இரவு விளக்குகளின் ஒளிக்கீற்றுகள் வெளியே வழிகின்றன. மிடாக் சந்து இப்போது முழுதும் அமைதி அடைந்துவிடும்.... அங்கே கிர்ஷா காப்பிக்கடைத் தவிர ..... மின்விளக்குகளிலிருந்து ஒளியூட்டப்பட்டு அதன் மின் கம்பிகளை இரவுப்பூச்சிகள் மொய்க்கத் தொடங்குகின்றன.

தனது வாடிக்கையாளர்களால் காப்பிக்கடை நிரம்பத் தொடங்குகிறது. அது கிட்டத்தட்ட சிதிலமடைந்துவிட்ட ஒரு சதுர வடிவ அறை.... அதன் விரிசல் விழுந்த சுவர்களுக்கு மத்தியிலும் கோட்டோவியங்கள் மிளிர்கின்றன. பழமையை நம் கண்முன் நிறுத்துபவை. அதன் சுவர்களும் அங்கங்கே போடப்பட்டுள்ள அகண்ட சோபா இருக்கைகளும்தான். காப்பிக்கடை நுழைவாயிலில் ஒரு கடைசிப்பந்தி இரண்டாம் தர வானொலிப் பெட்டியை பாடவைக்க முயற்சிக்கிறான். உள்ளே புகைத்தபடியும் தேனீர் குடித்தபடியும் சில மனிதர்கள் சோபாக்களில் உட்கார்ந்துள்ளனர்.

நுழைவாயிலிலிருந்து சற்றே அருகில் போடப்பட்ட அந்த பழங்கால சோபா இருக்கையில் ஐம்பது வயது மதிக்கத்தக்க..... கைவைத்த வெளிக்கோட்டும் மேற்கத்தியநாட்டு உடையான கழுத்துடையும் அணிந்து அமர்ந்துள்ளார் ஒரு மனிதர். அவரது முகத்தில் விலை உயர்ந்த தங்க பிரேம் போடப்பட்ட மூக்குக்கண்ணாடி அலங்கரித்துள்ளது. மர காலணிகளை அகட்டி காலுக்கு அருகிலேயே வைத்திருக்கிறார். ஒரு சிலைபோல அசையாமலும், ஒரு பிணத்தைப்போல ஓசையின்றியும் உட்கார்ந்துள்ளார். விழிகள் இடப்புறமோ, வலப்புறமோ எப்புறமும் காணவில்லை..... தன் சொந்த உலகில் காணாமல் போனவரைப்போல.

தன்னிலை இழந்து தள்ளாடும் ஒரு வயதான கிழவன் இப்போது க்ரிஷா கடைக்கு வருகிறான். கடந்து சென்ற வருடங்கள் அவனது ஒரு எலும்பைக் கூட பலத்துடன் விட்டு வைக்கவில்லை எனுமளவு முதிர்ச்சியால் சுருங்கிப்போய் விட்ட கிழவன். சிறுவன் ஒருவன் இடக்கையால் இழுத்து வந்து அவனை விடுகிறான். சிறுவனின் வலக்கையில் இரண்டு நரம்புகள் கொண்ட பிடிலும் ஒரு பழைய புத்தகமும்.....கிழவன் அங்குள்ள யாவருக்கும் வந்தனம் தெரிவித்து..... அறைநடுவில் இருந்த பழைய சோபாவில் சிறுவனின் உதவியோட தத்தளித்து ஏறி அமர்கிறான். அந்த சோபாவின் ஒரு அங்கம்போல பொருந்திப்போன கிழவன் புத்தகத்தையும் பிடிலையும் சிறுவனிடமிருந்து பெற்றுக்கொண்டு..... ‘சலாம் ஆலே...........க்கும்’ அங்கிருந்த யாவரையும்நோட்டம் விட்டான்..... தனது வருகை யாவரது கவனத்தையும் பெற்றுள்ளதா என அறியும் ஆவல்.... ஓரளவே உதவும் பார்வை..... கடையின் மிகவும் வயது குறைந்த வேலைக்காரன்..... சங்கெரை சற்று நேரம் அவன் தன்னை பொருட்படுத்தாததையும் சேர்த்து பார்த்துக் கொண்டே இருக்கிறான் ..... தனது பிடிலை கையிலெடுத்து வாசிக்க எத்தனிக்கிறான் .....

வெளியே விண் தாக்குதல்களுக்கான முதல் சுவடுகள் கேட்கின்றன...... கிழவன் புத்தகத்தை திறந்து பாட்டைத் தொடங்கும் முன் சங்கெரிடம் தனது அமைதியை உடைக்கிறான்: ‘காப்பி.....சங்கெர்’