விதையுறக்கம்

ஆகவே விளிம்புநிலையைப் பற்றிக்கொண்டுத்
தொங்குகிறேன்

இனி ஒரு பொழுதும் உனைத் தேடாதிருப்பேனாக
நீர்நிலையைத் தேடும் பறவையைப்போல்
இரவின் உச்சத்தில் கனவு
கல்லெறிந்ததால் உண்டான வட்டங்களாய் விரிகிறது
அதன் ஒளிபரப்பில் உன் புன்னகையால்
எனைத் தேற்றுகிறாய்; தேற்றுகிறாய்

சிறார்கள் தமது உறுப்புகளை
மறைவுகளில் கண்டறிவதுபோல்தான்
நான் உன்னைக் கண்டறிந்தேன்
உடல், விதைக்கவோ வளர்க்கவோ
யாருமேயிலாது
பாழ்நிலமாய் உலர்ந்து வெடிக்கிறது
எச்சத்தில் ஊறிய விதையைப்
பறவைகள் வெளிக்கிட்டுப் பறக்கின்றன
ஒரு மழையின் ஸ்பரிசத்தால் குளிராதவரை
வெடிப்பில் வீழ்ந்த விதை
உறக்கம் தழுவிக்கொண்டிருக்கும்

இனி ஒருபொழுதும் உனைத் தேடாதிருப்பேனாக


வனதேவதை

பால்மேனிக் கொங்கைகள் பற்றியேறித்
தழுவி அணைக்கும் கொடிகள் உண்டு
ரகசியமாய் வெடித்துப் பரவி
ஈரமண்ணில் கருக்கொள்ளும் விதைகளுண்டு
ஏகாந்தமாய் அதிகாலை
உடலையே விரித்துப்போட்டு
ஒளியோடு புணரப் புணரச் சுவாசத்திலே
குழறி எழும் பறவைகளும் காண்பேன்
கள்ள மார்புகள் கூடிக்கழிக்க”
இரவின் மாயை
முதுமையிலும் புணரும் இச்சையில்
புடவையை மாற்றுவேன் வண்ணாத்திப் பூக்களாய்
என் புதருக்குள் நுழைந்தவனை
மீளவிடேன்
ஆணுறுப்பு மலையருவி
சொரிந்து நிறையவும் வழி தருவேன்
வனதேவதைக்குப் புருஷனில்லை
புரட்டிப் புரட்டிப் போகிக்க வழிப்போக்கர் எவருமுண்டு
உச்சியில் தீவிரமாய் ஒளி தேடி
நான் தரிக்க இலைகளின் மொழியுமுண்டு

மணப்பெண்

கட்டுண்டிருக்கும் மலர்களுக்கிடையே கசியும்
வியர்வை எவருமறியாமல்
மார்பின் பள்ளங்களில் பெருகி
அசௌகரியத்தின் நதியாகிறது
திருமணப் பெருக்கத்தின் நெரிசலினூடே
பெருமூச்சு வாங்கிய இரத்த ஓட்டத்தில்
உலர்ந்த மாலைகளைப்போல கைகள்
உணர்வின்றித் தொங்குகின்றன
மார்புக்கச்சையை அறுத்தெறியும் ஆவலோடு
இரவின் கைகளும் திமிரேறியிருக்க
தொடைகளின் பாதாளத்தில்
தடாகத்தின் உயிராய் மொக்கொன்று எழும்பி
இடுக்கோடு கசியப்போகும் வெண்கிரணத்துக்காய்க்
காத்திருக்க
விருந்துணவின் சுவைநரம்புகள் முனைமழுங்க
பட்டின் சரசரப்பில்
நின்றிருந்த கால்களோடு காலவேரின் முறுக்கேற

காகிதக்கப்பல்

பெரியவர்கள் கிறங்கி உறங்கும்
மதியக்கிறக்கவேளையில்
நான் தனியே அனுப்பிய காகிதக்கப்பல்
வழிமறித்த தீவில்
கரையொதுங்கியிருக்கக் கூடும்
நீந்திக் களைப்புற்ற மீன்கள்
அக்கப்பலேறி மறுகரை சென்றிருக்கலாம்
கடற்பறல் அலைக்கழிக்க
சில கணங்களாவது அதன் தலை சுற்றியிருக்கலாம்
திசைமாறிப் போகாது காற்று
தன் கைகளைப் துடுப்பாய் வலித்திருக்கலாம்
வானத்தின் வண்ணம் தூவிய முகத்தைத்
தன் நீரால் கழுவும்
கல்லின் மறுகரைக்குச் சென்றிருக்கலாம்
சூரியன் கால் அலம்பும் நேரத்தில்
ஒய்யாரமாய்க் கரைதட்டியிருக்கலாம்.


மரணத்தின் கிளை

1மரணத்தின் கிளை
ஜன்னல் வழியே நுழைந்து
எங்கள் உரையாடலை இடைமறித்தது
புன்னகையின் பேரொளியை
ஒரே ஊதலில் அணைத்தது
சந்தடியற்ற வீதிகளில்
தனியே நடக்கச்செய்தது
சூரியன் உருளும் சாலையில்
பாதங்களைத் தீய்த்தது
சைக்கிளின் சக்கரக்கம்பிகளுக்கிடையே
தலை சிக்கச்செய்தது
பறவைகள் அலறித்திரும்பும் மாலையொன்றில்
துயரத்தின் கனி பரிமாறப்பட்டிருந்த
மரணத்தின் கிளை

நிழல்களின் நெருக்கடி

அந்தப் பெரிய மாளிகை எனதாயிருந்தது
சாமான்கள் அடைத்துக்கொண்டிராத அறைகளில்
நானும் என்னைவிடப் பெரிதான
பருத்த உடலுடைய அவளும்
ஒளியேற்றும்போது மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறாள்
எனது குரல் சுவர்களை மோதித் திரும்புவதுபோல்
ஒரு மயானத்தை உருவாக்குகிறாள் என்னைச் சுற்றி
அச்சத்தைக் காட்டிக்கொள்ளாது சமாளிக்கிறேன்
முலைகளின் கவர்ச்சி
எட்ட நிறுத்துகிறது அவளை
என்னையே உறுத்துப்பார்க்கும் அவளிடம் திரும்புகையில்
பாராமுகமாய்த் திரும்பிக்கொள்கிறாள்
நாடகப்பாணியிலான அவளது இயக்கம் எரிச்சலூட்டக் கூடியது
பகலில் பணியின் பொருட்டு வெளியேறிவிடுவதால்
அவளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதில்லை
ஒரு வேளை அவள் என்னைப் பின்தொடரவும் கூடும்

அறைகளின் வெறுமையை இடித்துக்கொண்டு நிறைக்கிறது
அவள் இருப்பு என்றாலும்
ஒருபொழுதும் அவள் எனது தொடைகளுக்கிடையே
பருத்த குறியைத் திணிப்பதில்லை


குழந்தைகளுக்கான புத்தகங்கள்

நூலகங்களின் அலங்காரப்பொருட்களாகத்
தங்க விரும்புவதில்லை

கதாபாத்திரங்களைக் கனவுகளின் வாயிலைத் திறந்து
வரவேற்பதைத்தாம் குழந்தைகளும் விரும்புகின்றன

புத்தகங்களிலிருந்து கதாபாத்திரங்கள்
களவுபோவது பற்றி அவர்களுக்கென்ன கவலை?
குளிர்ந்த பாதங்களுடைய கடவுளும்
மாயவித்தைகள் அறிந்த திருடனும்தாம் முக்கியமானவர்கள்
கதைகளின் மத்தியில் இவர்கள் உலவிக்கொண்டே
இருந்தார்கள் எனில்
கதை சுவையான கதை

எல்லையற்ற கடலையும் காட்டையும்
தேக்கிவைத்த புத்தகங்களோடு உறக்கத்தைத் தொடுகிறார்கள்

நூலகத்தில் இடுப்பு முறிய சாய்ந்து நிற்கும்புத்தகங்களுக்குள்ளே
நூலாம்படை கட்டிய வேலியைக்
குட்டிக்கதை மாந்தர்கள் மோதி இடித்துக்கொண்டேயிருக்கின்றனர்

சலிப்பூட்டும் பொழுதுகளை அழிக்க விரும்பும்
குழந்தையின் விரல்கள்
அவர்களை விடுவிக்கின்றன.

அவர்களின் குதூகலம் கண்டு குழந்தையும்
கதைமாந்தர்களோடு கலந்து விடுவதுண்டு

அட்டைக்கதவுகளை அறைந்து சாத்தி
வெளியேறும் புத்தகங்களும் உண்டு

கற்பனையை வளர்தெடுக்க வார்த்தைகள்
உபயோகப்படுவதில்லை

ஜன்னல்களைத் திறந்து யானைகளை
உள்ளே நுழையச் சொல்கிறார்கள்
ஓடும் மீன்களைக் கைகளில் பொத்தி
அவை மூச்சு விறைக்க
கடல் பற்றிய கதைகளை வற்புறுத்துகிறார்கள்

உறங்கிக்கொண்டிருக்கும் இரவு

மரக்கிளைகளின் மீது
உறங்கிக்கொண்டிருந்தது இரவு
அதிர்வுகளேதும் எழுப்பாமல்
அவற்றின் கீழே நடந்தேகினேன்
ஒரு முத்தத்தின் நினைவு
என் உடலெங்கும் கசிந்து கொண்டிருந்தது
ஏனெனில் அம்முத்தம்
உடலின் கதவுகளையெல்லாம்
திறந்துகொண்டிருக்கிறது
நடுங்கும் குளிர்ந்த உடலைக்
கொத்தும் முத்தத்தின் அலகு
நினைத்துப்பாருங்கள்
ஓர் இரவு என்பது எப்படிக் கனமாக இருந்திருக்கும்
மரக்கிளைகளுக்கு
முகமற்ற இரவிற்குக் கரங்களுண்டு
குளிர்ந்த கரங்களால் துயரமற்ற நினைவுகளை
வாரி அணைத்துக்கொள்கிறது
அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது முத்தத்தின் கனம்
அது உரசும் கொதிப்பால்
யுகங்களைப் போல நடக்க நடக்கக்
கிளைகளில் உறங்கிக்கொண்டிருந்த இரவு
என் தோள் மீது இறங்கியது
அதிகமாய்க் கனக்கிறது இரவு

சூல்

பாம்போடு பாம்பு பிணையும்
அவை புன்னகைக்கச் சந்தனம் மணக்கும்
வயிறு புடைக்க முட்டைகள் சுமக்கும்
உயரக் கிளை தொங்கும் நிலவு நழுவ
முட்டை மீது முட்டையடுக்கி அவயம் காக்கும்
மார்பில் பால்முட்டும் குட்டிகளுக்கு
உடல் விரித்து ஆனந்திக்கும்
உயிரிழுத்துப் போட்ட பின்னும்
கண் துஞ்சாமல் சூல் கொள்ளும்
பசியென்றால் ஈனும் குட்டியுண்ணும்
உறுப்பெல்லாம் கருப்பையாய் மாறிச் சுமக்கும்
ஆணொன்று விரட்டிப் புணர
உடலெல்லாம் கருக்கொள்ளும்
வயிறு கிழித்துக் குட்டிகள் முதுகேறத்
தாய் மரிக்கும்
உடலின் சிறகடியில் நினைவு குவித்து
முட்டைகள் அவயம் காக்கும்
கண்ணில் புத்துயிரின் வெறி
நெஞ்சில் பெருஞ்சுவாசம்
நிலைதாங்கி நின்றக்கால் கரு காலாட்டும்
பூக்களின் மீது வண்ணாத்தியாய்க்
காற்றில் மிதக்கும்
கரப்பானின் புற்றுக்குள்
குஞ்சுகள் பொரியுமட்டும்
சீறிக் காவல் காக்கும்
இரத்தச் சகதியில் கால் எழும்பி நிற்பதற்காய்
ஈரநாவால் நக்கி நக்கி உயிர்கூட்டும்
மெல்ல நினைவின் கண் திறந்து
கல்லுக்குள் பதுங்கும் முன்
கழுகொன்று கொத்திப்போகும்
புலம் பெயர்ந்த மண் பிறக்கும்
திசைகள் அறியும்
கனவுகளை அடக்கி
முட்டைகளாய் ஊதும்
நிலவொளியில் உடலைப் புரட்டி
உயிர்கொள்ளும்