நாடக அரங்கின் ஒரு பாதி இருட்டும்
மறுபாதி மெல்லிய வெளிச்சமும்
மக்கிப்போன திரைச்சீலையை சுருட்டி
தலைக்கு வைத்து - ரயில்வே பிளாட்பாரத்தில்
விஸ்வநாததாஸ் உறங்கிக் கொண்டிருக்கிறான் ......
பயணிகளே .......... அவனை தொந்தரவு செய்யாதீர்கள் .....
நிலங்களெல்லாம் பரவிச் சென்ற
தேவதாசிகளின் பாதச்சுவடுகளில்
ஜமீன்களின் நகஇடுக்கு அழுக்காய் .....
மணிச்சத்தங்களுடன் கொண்ட
கூட்டு வண்டியில் - வந்த
சீலை - வேசை ஆக்கி திரும்பப்பட்டது .....
கோயிலிலிருந்து அரண்மனைக்கும் - பின்
அரங்கிற்கும் செலவிற்கும்
வந்த அது - பைத்தியக்காரர்களின்
மொழியாக மாறிவருகிறதை கவனித்தாயா? .....
மனித உடலசைவுகளின் தொன்மமும்
குறியீடும் - கணிப்பொறி சிதைவுகளுடன்
சங்கேத உரையாடலை தொடங்கி இருக்கிறது .....
நல்லது நண்பனே! .....
செல்லுலாய்ட்டின் ஒளி பிம்பத்தின்
கண் கூசும் வெளிச்சத்தில்
தனம்மாளின் வீணை இசையுடன் - மெலிதாக
பினோதினி தேசாய் அழுது கொண்டிருக்கிறாள் .....
சற்றே உற்று கவனியுங்கள்
அது ஒரு வட்டமான அரங்கம்
சுற்றிலும் தீப்பற்றிக் கொண்டிருக்கிறது.
காலியாகிப் போன மதுக்குப்பிகள்
மற்றும் குவளைகளுடன் - மெத்தையில்
உறங்கி கிடக்கிறான் மன்னன் .....
மேலே நிலவு எரிந்து கொண்டிருக்கிறது.
எழுத்தின் வாசனை அறியாத - இசையின்
தொன்மங்கள் தந்த குறியீடுகளுடன்
மாநகரங்களின் மின்சார ரயிலில்
பாடிக் கொண்டிருக்கும் - பாட்டும்
இசையும் யாருடையது? ..........