காகங்களின் இரவு

இரவொன்றை ஒளித்து வைத்துத் திரிந்த
காகங்களின் பெரும் கூட்டத்திலிருந்து
ஒவ்வொன்றாய் அகல
பரவி நிறைகிறது இரவின் இருள்
இருளற்ற ஒரு பிரதேசத்தில்
எப்பொழுது தூங்கி எப்பொழுது விழித்திருக்கும்
அந்த காகங்கள்.

காகங்களின் காமம்

காகங்களேதும் கரைந்திடாத அதிகாலை
பெரும் விபத்தைப் போல் விடிந்தது
கழுதையை புணர்ந்துறங்கிய மாநகர மனிதன்
உடைவாளை சரிசெய்து கொண்டு
மின்சார ரயிலில் மற்றுமொரு தேசம் நோக்கி
பிரிதொரு நாளைத் துவக்கினான்.
பற்ற வைத்திருந்த சிகரெட்
வேசியின் உடல் போலிருந்தது
எரிமலை முற்றிலும் கரைந்தபோது
நிகழ்வில் இல்லாமலிருந்தாள் அவ்வேசி
கடவுளின் இன்றைய ஆப்பிள்
கடவுளின் விரல்நுனிபோல் சுவைத்தது
காகங்களுக்கு
ரகசியம் உதிர்த்த ரயில் காகங்களாய் உருமாறி
பறக்கின்றன யின்னும் துவங்காத யிரவுக்குள்
காமம் உலர்ந்த மனிதனுக்குள்
ஒவ்வொரு துளியாய் உதிர்ந்து உருவாகியிருந்தது
ஒரு பெருங்கடல்
காகங்களிருக்கும் வெளி கறுப்பாயிருந்தது
காகங்களற்ற வெளி காகங்களின்
நிறத்திலிருந்தது.

காகங்களின் வெளி

வளிமண்டலத்தில் உலவுகின்றன உன்
இறந்த சொற்கள் உன்
இறந்த காதல்கள் உன்
வளர்ப்புக் காகங்கள்
அவைகளறியா உன்னையு மென்னையும்
எவற்றையும்

சுருங்கி பின் விரிகின்றன
கம்பளிப்பூச்சியும் அதன்
விழியிலிருக்கும் காகங்களின் வானமும்

பால்வெளியில் முளைத்த காகங்கள் மின்னியது
ஒருதுளி ஒலியின் சொல்போல்
தீராத காதல் போல்
சிறகுகள் முளைத்த அவை ஒளியின்
திசைவேகத்தில் இடம் பெயர்ந்தன

பேரண்டம் உருகி ரோமங்களற்ற
காகங்கள் பலநூறு உருவாகின
அப்பொழுதும் அவை கருமையாயிருந்தன

வெளியை நிறைத்தல் இருப்பு
நிறமதன் இயல்பு