2002 ஏப்ரல் மாதம் 22ம் தேதியன்றைக்குத்தான் போராட்டத்தைத் தொடங்கறதுன்னு முடிவு செஞ்சோம். அன்றைக்கு ஒரு விசேசமான நாளாம். பூமிதினம். எங்களை மாதிரி பாவப்பட்ட சனங்களுக்கு எங்க சொந்த மண்ணுக்காகவும், காற்றுக்காகவும், தண்ணீருக்காகவும் வேண்டி போராடறதுக்கு இதைவிட சரியான நாள் வேற எதிருக்குது?

 அந்தன்னைக்கே கம்பெனிக்காரங்க எங்காளுக்கு இடையிலே பிரச்சனையை உண்டாக்கி அதை திசை திருப்ப பார்த்தாங்க. உங்களுக்கு தண்ணி தர்றோம். கம்பெனிலே வேலை தர்றோம்னு எல்லாம் அவங்க சொன்னாங்க. அவங்க (விரிச்ச) வலையிலே விழுகிறதுக்குன்னும் கொஞ்சம் பேர் இங்கே இருந்தாங்க. அப்புறம் வேணுவண்ணாதான் எங்க கூட்டத்தாருக்கு எல்லா விசயத்தையும் சொல்லி புரிய வெச்சாரு. ஆனாலும் கொஞ்சம் பேர் கம்பெனி வேலைக்கு போனாங்க. எல்லா இடத்திலேயும் இந்த மாதிரி சிலபேரு இருப்பாங்க இல்லையா அப்படீன்னு நாங்க நெனச்சு விட்டுட்டோம்.

போராட்டத்தன்னைக்கு காலைலெ சி.கெ. ஜானு எல்லாரோடயும் வாகனத்திலே ஊர்வலமா வந்து சேர்ந்தாங்க. அன்னைக்கு ஜானுதான் போராட்டத்தை தொடங்கி வெச்சாங்க. பந்தலெல்லாம் போட்டு போராட்டம் தொடங்கியாச்சு. முடிஞ்சளவுக்கு எல்லோரும் போராட்டத்திலே கலந்துக்கறதுன்னு தீர்மானம் செஞ்சிருந்தோம். எத்தனை நாள் நடக்கும்னு எல்லாம் யாரும் யோசனைகூட செஞ்சு பார்க்கலை. ஆலோசனைக் கூட்டம் நடக்கும்போதே அதிலெ விஜயகுமாரண்ணன் சொன்னாங்க, ‘நீங்க நெனக்கற மாதிரி, தடபுடனெல்லாம் கம்பெனிய பூட்டிற மாட்டாங்க அவங்க” அப்படீன்னு. தலைவருங்கள்ளே யாரோ கிறித்தவங்களோட ஒரு கதையை சொன்னாங்க.

தாவீதுவோ என்னவோ பேருள்ள சின்னப்பையன், ஒருத்தன் கோலியாத் துங்கற ராட்சசனை தோற்கடிச்ச கதை. அதைப் போலத்தான் கம்பெனிக்கு எதிரா நின்று நாங்க போறாடறதும். கதையிலே அந்த சின்னப் பையன் ஜெயிச்சுட்டான்னுதான் சொல்றாங்க. அது மாதிரியே எத்தனை காலமானாலும் நாங்களும் ஜெயிப்போங்கற ஒரு நம்பிக்கை எங்களுக்கு தோணுச்சு.

ஜானு அன்னைக்கு நிறைய விசயங்களெல்லாம் சொன்னாங்க. அவங்க ஊர்லெ நடந்த போராட்டத்தைப் பத்தியெல்லாம் அவங்க சொன்னத கேட்டப்போ அதுவே எங்களுக்கும் ரொம்ப தெம்பா இருந்துச்சு. அப்படியொண்ணும் தோத்துப் போயிற மாட்டோம்ற உறுதி மனசுல தோணுச்சு. கோத்திரமகாசபையோட முழு ஆதரவும் எங்களுக்க உண்டுன்னு ஜானு சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஆனா பின்னாலே யோசிக்கும்போது ஜானு மேல ஒரு பெரிய வருத்தம் தோணுச்சு. இங்கே போராட்டம் தொடங்கி கொஞ்ச நாள்லேயே முத்தங்கா சம்பவத்தைக் காரணம் காட்டி, போலீஸ் ஜானுவைப் பிடிச்சுட்டுப் போயி ஜெயில்லே அடைச்சிடுச்சு. எங்க ஆட்கள்ளெ ஒருத்தரை பழி வாங்கீட்டாங்கன்னு எங்களுக்கெல்லாம் தோணுச்சு. பாலக்காடு போயி லாந்தர் வெளக்கு எல்லாம் கொளுத்தி ஊர்வலம் நடத்தினோம். திருவனந்தபுரம் போயி ஜானுவையும் பார்த்துட்டு வந்தோம்.

நாங்களெல்லாம் உங்களுக்கு துணையாயிருப்போம்னு தைரியம் சொல்லிட்டு வந்தோம். ஆனா ஜெயில்லேயிருந்து வெளியே வந்த பிறகும் கொஞ்ச நாளைக்கு ஜானு எங்க பக்கம் திரும்பிக்கூட பார்க்கலை. இதுக்கிடையிலே ஒரு முறை பாலக்காட்டிலெ வச்சு மகளிர் சங்கக் கூட்டத்திலெ அஜிதா டீச்சரெல்லாம் வந்திருந்தபோது ஜானுவும் கூடெ இருந்தாங்க. அதுக்கப்புறம் ஒரு நாள் போராட்டப் பந்தலுக்கும் வந்தாங்க. ஆனாலும், முன்னத்தெ மாதிரி அத்தனை நெருக்கம் எங்களோட அவங்களுக்கு இல்லை. ஒரு வேளை அது எங்களோட நெனைப்புதானோ என்னவோ தெரியலை. ஆனாலும், எங்கெல்லோருக்கும் அதிலெ பெரிய வருத்தமுண்டு. எங்கள் மக்கள் எல்லோரும் கூடி ஒண்ணா நின்னு போராடுனாத்தான் அது பலமுள்ளதா இருக்கும்னு எனக்குத் தோணுது.

அதுபோலவே அய்யங்காளிப்படையின் ஆட்களும் ரெண்டு மாச காலம் என்ன நடந்தாலும் எல்லாத்துக்கும் எங்க கூடவே இருந்தாங்க. ஆதிவாசி களுடைய ஒரு பிரம்மாண்டமான பொதுக்கூட்டமும் அவங்க நடத்தினாங்க. அது முடிஞ்சதும் விட்டுட்டுப்போனவங்கதான். மறுபடியும் பத்து மாசம் கழிஞ்சப்புறம்தான் வந்தாங்க. அதுக்குள்ளே பேராட்டத்திற்கு இடையிலே நாங்கள் ஒருபாடு கஷ்டங்களை அனுபவிச்சோம். பிரேமா டீச்சர் மட்டும் இப்பவும் இடையிடையே வந்து போராட்டத்திலே கலந்துக்கறாங்க. பந்தல்லெ எங்ககூட உட்கார்ந்து நிறைய பேசுவாங்க. எப்ப வந்தாலும் எங்ககூடெ உட்கார்ந்து ஒருவாய்ச்சோறு சாப்பிட்டுத்தான் டீச்சர் போவாங்க.

போராட்டம் நடந்துகிட்டிருக்கும் போது ஒருபாடு ஆட்கள் வந்துட்டும், போயிட்டும் இருந்தாங்க. எல்லோரும் எங்களுக்கு துணையா இருக்கறதா சொல்லிட்டுப் போவாங்க. நிறைய புஸ்தகம் எழுதறவங்க எல்லாம் வந்தாங்க. மேதாபட்கரும் அவங்களை மாதிரியுள்ள பெரிய ஆட்களும் வந்திருந்தாங்க. சாரா ஜோசப் டீச்சர், சுகதகுமாரி டீச்சர், வாசுதேவன் (நாயர்) சார், அழிக்கோடு சார் இப்படி நிறைய பேர் வந்திருந்தாங்க. கிருஷ்ணய்யர் அப்படீங்கற ஜட்ஜ் சாரும் வந்திருந்தாங்க. மறுபடியும் மறுபடியும் ரொம்ப தூரதூர ராஜ்யங்களிலிருந்து யார் யாரோ வந்தாங்க. அவங்களெல்லாம் எங்களோட பிரச்சனைகளைப் பத்தி அவங்களோட பாஷைலெ கேட்டாங்க. அவங்ககூட வந்தவங்க அதையெல்லாம் அவங்களுக்கு புரியற மாதிரி சொல்லுவாங்க. அவங்களோட பேரெல்லாம் எனக்கு வாயிலே வர மாட்டேங்குது. வேற வேற பாஷைலெ அவங்க கூட்டத்திலே பேசறது எங்களுக்கு எதுவும் புரியறதில்லை. எப்பவும் ஏதாவது பிரசங்கம் இருந்துட்டே இருக்கும்.

எல்லாருமே பேசுறது ஒரே பிரச்சனையைத்தான். கேட்டு கேட்டு நானும் கூட்டம் பேசக் கத்துக்கிட்டேன். இல்லோன்னாலும் மனசிலெ ஒருபாடு பிரச்சனைகள் அலைக்கழியும்போது பாஷை அதுவா வரும்னுதான் எனக்குத் தோணுது. இப்பவெல்லாம் ஒரொரு எடத்துக்கும் கூட்டம் பேசறதுக்கும், விளக்கு ஏத்தி தொடங்கி வெக்கறதுக்கும் பலபேரு வந்து கூட்டிக் கொண்டு போறாங்க. எங்கே போனாலும் எனக்கு சொல்றதுக்கு ஒரே விசயம்தான் இருக்கு, “நம்மளோட காத்தும், தண்ணீரும், மண்ணும் நமக்கு மட்டும்தான். அதெக் கேட்டு யாரு வந்தாலும் அவங்களுக்கு எதிரா நாங்க எப்பவும் போராடுவோம்” இப்படிப் பேசி பேசி தமிழே வரமாட்டேங்குது. இடையிடைலெ மலையாளத்திலே பேசிடலாம் ...னு எல்லாம் ஆகிப்போச்சு.

போராட்டம் தொடங்கி கொஞ்ச நாள்லே பாக்கிறவங்களுக்கெல்லாம் அதுவொரு பரிகாசமாயிருந்துச்சு. வேலயும் கூலியும் தொலைச்சுட்டு போராட்டம் பண்றதுக்கு உட்கார்ந்துட்டாங்க வெவரம் கெட்டவங்க. இவ்வளவு பெரிய கம்பெனிக்கு முன்னாலெ இவங்களாலெ என்ன செஞ்சுற முடியும். உடுதுணிக்கு மறுதுணியில்லே, ஒரு துண்டு சோப்புக்கு வழியில்லே போராட்டம் பண்றதுக்கு உட்கார்ந்துட்டாங்க. நாலு நாளைக்கு உட்காருவாங்க அப்புறம் வயிறு காஞ்சா எந்திருச்சு போயிடுவாங்க அப்படீன்னுதான் பரிகாசம் பண்ணுவாங்க. வேலெ செய்ய சோம்பேறிப் பட்டுத்தான் நாங்க பந்தல்லெ உட்கார்ந்திருக்கோம் அப்படீன்னு கம்பெனிலெ குப்பி கழுவப் போற பொம்பளைங்க சொல்றாங்க.

அப்படியும் இப்படியுமா போராட்டம் அம்பதாம் நாளெத் தொட்டிடுச்சு. அன்னைக்கு எர்ணாகுளத்திலேர்ந்து டாக்டர். நந்தகுமார் சார் வந்து போராட்டத்திலெ கலந்துகிட்டு பேசினாங்க. இவங்களையெல்லாம் அடிச்சு நொறுக்கணும் அப்படீன்னு. இங்கே வந்திருந்த போலீஸ்காரங்ககிட்டே எங்க கூட்டத்து ஆள் ஒருத்தனே சொல்லிகிட்டு இருந்ததை நான் காதாரக் கேட்டேன். போராட்டத்தப்ப அதே மாதிரிதான் போலீஸ் செஞ்சாங்க. நாங்க தீவிரவாதிகளைக் கூட்டிட்டு வந்துதான் கூட்டம் நடத்தறமாம். நந்தகுமார் சாரோட டிரைவர் பையனைப் போட்டு, போலீஸ்காரன் பச்சப்பச்சயா கெட்டவார்த்தைலெ திட்டினான்.

அப்புறம் அய்ம்பத்தஞ்சாம் நாள் முடிஞ்சதும், நாங்க ஒரு வேலை செஞ்சோம். சிறீதர் அண்ணன் சொன்னபடி ஒரு விவசாய நிலத்திலே கம்பெனிக்காரன் கொட்டியிருந்த கழிவையெல்லாம் (அது உரமாம்) கொண்டுபோயி கம்பெனி வாசல்லெயே போட்டுட்டு வந்துட்டோம். அது எவ்வளவு நாற்றமடிக்கும்கறதை அவங்களும் தெரிஞ்கட்டும் அப்படீன்னு தான் நாங்க நெனைச்சோம். அன்னைக்கும் நல்லா அடிதடி நடந்துச்சு. அம்பிகாவோட தாலிச்சங்கிலி உடைஞ்சிருச்சு. துணியெல்லாம் கிழிஞ்சு போச்சு. நிறைய பேரை போலீஸ் டேசனுக்கு கொண்டு போனாங்க.

ஒருதரம் பஞ்சாயத்து கட்டடத்தை நோக்கி நாங்க ஊர்வலம் போனோம். எந்த நாள்னு நெனவுக்கு வர்லே. அன்னைக்கு எங்களுக்கு இருந்த கோபத்திலெ பஞ் சாயத்து கட்டிடத்திலெ மாட்டுச்சாணி எடுத்தெறிஞ்சோம். உண்மையாலும் அன்னைக்கு எல்லோரும் நல்ல கோபத்திலே இருந்தோம். எங்களுக்கு தோணுனது எல்லாம் இதுதான். எல்லா அரசியல்வாதிகளும் எங்களுக்கு எதிரானவங்க தான். படிப்பும், வெவரமும் இல்லாத எங்களுக்கெல்லாம் ஏன் ஆதரவு குடுக்கணும்னு அவங்க நெனச்சிருப்பாங்க. பெரிய கம்பெனி முதலாளி மாதிரியா இந்த பாவப்பட்ட மலைசனங்கள். அவங்களுக்கு எங்களோட ஓட்டு வேணும். எங்களுக்கும் தெரியும் ஒரு ஓட்டோட விலை என்னன்ணு ஒவ்வொரு கட்சிக்காரங்களும் வந்து அவங்கவங்க கட்சிக்கு ஒட்டுப் போடுங்கண்ணு கேட்பாங்க. நாங்களும் அவங்க சொன்னதை நம்பி ஓட்டு போடுவோம். பஞ்சாயத்திலெ ஆள், எம்எல்ஏ காங்கிரஸ், எம்பி மார்க்சிஸ்ட் எல்லாரும் இருக்காங்க. இவங்கெல்லாம் எங்களுக்குத் துணையாக இருப்பாங்கன்னு நாங்க நெனைச்சோம். அப்படியிருக்கும்போது நாங்க எதுக்கு கம்பெனியைக் கண்டு பயப்படணும். பொறந்தாலும் செத்தாலும் தண்ணி வேணும். அப்பேர்ப்பட்ட தண்ணியைத்தான் எங்க கையிலேர்ந்து தட்டிப்பறிச்சிட் டாங்க. அந்தப் போராட்டத்திலே - அதுக்காக - யாரு கம்பெனிக்கு ஆதரவா இருந்தாலும் நாங்கள எதிர்ப்போம்.

ஒவ்வொரு வீட்டுலேயும் ஏழும், எட்டுமா ஓட்டுகள் இருக்குது. அதையும் கொடுத்திட்டு சும்மா கெடக்கறதக்கு நாங்க ஒண்ணும் தலையாட்டி பொம்மைங்க இல்லையே. அச்சுதண்ணன் ஓட்டுப்போடச் சொன்னாரு. அதையும் செஞ்சோம். மூனுமுப்பது தொண்ணூறு நாளில் தண்ணின்னு அவரு சொன்னாரு. பிரசிடெண்டு சொன்னாரு ஒரு வருசம்னு. கிருஷ்ணதாசண்ணன் சொன்னாரு போராட்டம் ஜெயிச்சாலும் தோற்றாலும் நானும் உங்ககூட இருப்பேன்னு. இதெல்லாம் போதுமா? சொல்வாக்கை மட்டும் நம்பி நாங்க எத்தனை நாளிருக்கிறது?

எம்மெல்லே அண்ணன் வீட்டிற்கு நாங்க வெளக்குமாறைக் கையிலே பிடிச்சுட்டுத்தான் ஊர்வலம் போனோம். எல்லோருமே கூட இருந்தாங்க. அன்னைக்கு என்னாலே போக முடியலை. அம்பிகாதான் இதையெல்லாம் சொன்னாள். கலியாணமோ, எளவோ மாதிரியா இந்த விசயம்? நீங்க முதல்லேயே என்னை நேர்லெ வந்து கூப்பிடலைன்னு அவரு சொன்னாராம். பெரிய பெரிய ஆளுங்கெல்லாம் இப்படி சொன்னா நாங்க என்னதான் செய்யறது. வேதனைப்படறதைத் தவிர வேறென்ன வழின்னு எங்களுக்கு புரியலை.

இப்படி போராட்டமும், பொதுக்கூட்டமும், ஆர்ப்பாட்டமும், ஊர்வலமும், பரிகாசமும் எல்லாமாய் ஒரு வருசம் போயாச்சு. அதுக்கிடையிலே யாரெல்லாமோ வந்திட்டுப் போனாங்க. ஒரு கூட்டத்தார் தண்ணியெல்லாம் சுத்தமாயிருக்காண்ணு பார்க்கறதுவங்கன்னு சொல்லக் கேள்வி. தண்ணியெல்லாம் கொண்டு போயி டெஸ்ட்டு பண்ணினப்போ அது குடிக்கறதுக்கே ஆகாதுன்னு கண்டு பிடிச்சாங்களாம். அது போலவே திருவனந்தபுரத்திலே கம்பெனி கழிவையும் (உரம்) டெஸ்டு பண்ணக் கொண்டு போனாங்க. அதிலேயும் உரமோன்னும் இல்லைண்ணு கேள்விப் பட்டோம். ஆக மொத்தம் இந்தக் கம்பெனியாலே இந்த நாட்டு மக்களுக்கு நாசமில்லாதெ ஒரு குணமும் இல்லைங்கறது வரவர உறுதியாயிருச்சு.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நமது இடதுசாரி சிந்தனையாளர்களும் களப்போராளிகளும் (குறிப்பாக ம.க.இ.க. தோழர்கள்) கண்டுணர்ந்து எச்சரிக்கை செய்யப்பட்ட “மறுகாலணியக் கொடுங்கனவு” இன்று பலவிதமாகி விட்டிருந்தது. நமது மண்ணும், காற்றும் நீரும் நஞ்சாகிக் கொண்டிருக்கின்றன. நமது அடுத்த தலைமுறையினருக்கு சிறுசிறுக்கச் சுவைப்பதற்கு மரணத்தை மட்டுமே நாம் கையளித்துவிட்டுச் செல்லவிருக்கிறோம்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் பிளாச்சிமடா என்கிற முப்போகம் விளையும் கிராமத்தில் 2000 மார்ச்சில் கோக் ஆலை நிறுவப்பட்டது. இரண்டே ஆண்டில் சுற்றியுள்ள கிராமங்களின் விளைநிலங்கள் சுடுகாடாகி விட்டன. கடந்த நான்கரை ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. கோக் எதிர்ப்பு போராட்டம். அபபோராட்டத்தின் முக்கியமான களப் போராளிகளுள் ஒருவரான மயிலம்மா என்கிற பழங்குடியின் பெண் மணியின் தன்வரலாற்று நூலிலிருந்து ஒரு பகுதி இங்கே தரப்படுகிறது.

மயிலம்மா ஒரு ஜீவிதம் சுகுமாரனின் மொழிபெயர்ப்பில் பொள்ளாச்சி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் விரைவில் நூலாக்கப்படவிருக்கிறது.