ஈழத்தமிழர்களாகிய நாங்கள் அழிந்துவிட்டோமென்றே வைத்துக்கொள்ளுங்கள் அல்லது உங்கள் அரசுகள் வஞ்சகத்தினால் எங்களை அழித்துவிட்டன. ஆனால் நாங்கள் எப்படியோ துளிர்த்து வருவோம் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் நீங்கள்தான் அழிவது தெரியாமல் அழிந்து கொண்டிருக்கிறீர்கள் உண்மையில் தமிழகத்திற்கும் ஒரு புரட்சி வேண்டியிருக்கிறது. நான் ஆயுதப்புரட்சியைச் சொல்லவில்லை. அரசியல்வாதிகளுக்கான மக்கள் என்பதிலிருந்து மக்களுக்கான அரசியல்வாதிகள் உருவாக்க வேண்டிய தேவையும் கட்டாயமும் இருக்கிறது. நீங்கள் நடந்துகொண்டிருப்பது பொருக்கேறி கெட்டிப்பட்ட பாதை... கீழே புதைக்குழி இருக்கிறது என்பதை யாராவது உணர்த்தியாக வேண்டியதிருக்கிறது. இறுகிய பனிப்பாளங்களின் கீழ் உயிரை வெட்டும் குளிர்நீர் இருக்கிறதென்பது பொறிந்து விழும் காலம் வந்தால்தான் புலப்படும்.

இதோ கைக்கெட்டும் தொலைவில் இருக்கிறது கடவுளின் உலகம் என்ற மத வியாபாரிகளின் வாக்குறுதிகள் போன்றதல்ல, அந்த ஆதர்ச உலகம். பொறுமையும் தொலைநோக்கும் எதிர்கால சந்ததிக்காக இன்றைய நாட்களை இழக்கத்தகு தியாகமும் வேண்டும் மக்களிடத்தில். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகத்தில் பெரியாரைப் போன்றதொரு மானமும் தீரமும் கொண்ட தீர்மானங்களை எடுக்கத்தகு தலைவன் ஒருவன் உருவாக வேண்டும்; அவன் ஏற்கனவே பிறந்து விட்டான். அவனை மக்கள்தான் கண்டெடுக்க வேண்டும்.

தமிழகம் ஆதர்ச பூமியாக வேண்டும் என்ற விருப்பின் பின்னால் சுயநலம் இல்லாமலில்லை. விரும்பியோ விரும்பாமலோ இந்தியா என்ற பேராதியக்கத்தின் காலடியில், பூகோள ரீதியாக கண்ணீர்த்துளி வடிவில் எமது இருப்பு அமைந்து விட்டது துரதிர்ஷ்டமே. புயல் கடந்தாலும் மழை பொழிந்தாலும் பூகம்பம் வந்தாலும் அது ஈழத்தமிழர்களை பாதிக்கவே செய்யும். அதன், அக, புறநிலைகள் எங்களுக்கு சாதகமாக்குவதையன்றி வேறு வழி வழி இல்லை. நமக்கு மாடு காலால் உதைக்கிறதென்பதற்காக பால் கறக்காமல் விட்டுவிடுகிறோமா என்ன?

எங்கள் விடுதலை பற்றிய கனவு ஒரு புகையைப் போல் கலைந்து போவதைப் பார்த்தோம். பல இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களையும் போலவே எங்களது நாடும் நாடு கடத்தப்பட்டுவிட்டது. அது எங்களைப் போலவே அகதியாகிவிட்டது. நாடு கடந்த அரசாங்கம் என்பதைப் பற்றிப் பேசவாரம்பித்திருக்கிறோம். கட்டியெழுப்பிய அரசாங்கத்தைக் கடைசியில் ஒருநாள் கட்டித்தூக்கிக் கொண்டு இங்குதான் வந்தாக வேண்டும். இந்தியாவின் காலடியில் கண்ணீர்த் துளியாக அல்லாமல் சமுத்திர அலைகளாக திரும்பி வர வேண்டும். மரத்தை நடுகிறவன் பழங்களைச் சிந்திப்பதில்லை. வலசைப் பறவைகள் தூரத்தை அஞ்சுவதில்லை. நாங்களும் விதைகளை தூவி வைப்போம், விருட்சமாகட்டும்.

- தமிழ் நதி