வராமல் போனவன்

அவன் எப்படியும் வந்து விடுவானென்று நம்பினேன்
குண்டு வீச்சு விமானங்களுக்கும்
எறிகணைகளுக்கும்
விசாரணைச் சாவடிகளின்
கண்களுக்கும் தப்பி.
அவனது ஒளிபொருந்திய புன்னகையை
எதிர்கொள்ள
இருண்ட தெருக்களைக் கடந்துவந்தேன்
அகன்ற தோளில் சாய்ந்து
உணர்வு பொங்கும் பாடலொன்றை
உரத்துப் பாடவும் ஒத்திகைத்தேன்.
நிராசையுற்ற நண்பர்களிடம்
மீண்டும் மீண்டும் சொன்னேன்
‘அவன் வந்துவிடுவான்,
அவன் வந்துவிடுவான்’
பயணங்களில் அழகிய மலைகளாக
பக்கங்களினிடையில்
எழுதப்படாத வரிகளாக
மழை மிஞ்சிய மலர்களாக
போகுமிடங்களெல்லாம் தொடர்ந்தது
அவனது வாசனை.
முப்பதாண்டு கடந்தும் அவன் வரவில்லை
கடைசியில்
மே 18, 2009இல்
அவன் கொல்லப்பட்டதாக
ஊடகங்கள் அறிவித்தன.

(மஹ்மூத் தார்வீஷின் ‘முதல் சந்திப்பு’ கவிதையை அடியொற்றி இங்கே ‘அவன்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது விடுதலை.)


புன்னகையை விடுவித்தவன்

முப்பத்தியோராவது மாடியை நோக்கி
உயர்ந்து கொண்டிருக்கிறோம்
கண்கள் ஒளிபூசிய எண்களில்
பிடிவாதமாக ஒட்டியிருக்க.
கைப்பைக் கண்ணாடி பார்த்து
கூந்தலை இரகசியமாகக் கோதும்
இளம்பெண்ணை அவளிலும் இரகசியமாகப்
பார்த்துக்கொண்டிருக்கிறான்
நிறையப் பை வைத்த காற்சட்டை இளைஞன்.
வயிற்றுக் கடுப்பு உபாதை
முகங்களில் தொனிக்க
பூட்டிய பெட்டிக்குள்
வேற்றுலக மனிதர்களாய்
மிகுதிப் பேர்
மேலேறிக்கொண்டிருக்கிறோம்
மின்தூக்கியுள்.
23ஆவது மாடியில் உள்நுழையும் நீ
‘வெளியில் அழகான வெயிலெறிக்கிறது’ என்கிறாய்
ஆகர்ஷிக்கும்
பொதுப் புன்னகையொன்றைச் சிந்தி.
இரும்புப் பெட்டியை இளக்கியவனை
தலையசைத்து ஆமோதித்து
வெளியேறி நடக்கும் எல்லோர் உதடுகளிலும்
இப்போது மலர்ந்திருக்கிறது
பெய்யாத மழையில்
அவிழ்ந்த பூவொன்று.

- தமிழ்நதி