மருத்துவமனையில் உடல்நலமின்றி அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவரை வந்து பார்ப்பதும், மருத்துவமனையை மட்டும் பார்த்துவிட்டுத் திரும்புவதும் வேறு வேறு. ஆனால் இன்று தமிழ்நாட்டில் இரண்டும் ஒன்றுதான் என்ற நிலை உள்ளது.

உடல்நலமின்மை யாருக்கும் ஏற்படக் கூடியதே. அதில் ஒளிவு மறைவுக்கு தேவை எதுவும் இல்லை. தமிழக முதலமைச்சரின் உடல்நிலை குறித்து வெளிப்படைத்தன்மை இருந்திருக்குமானால், எந்த வதந்தியும் புறப்பட்டிருக்காது. ஓர் உண்மை மறைக்கப்படும்போது பல பொய்கள் உலா வரத் தொடங்குகின்றன. ஊற்றுக்கண்ணை அடைக்காமல், நீரை மட்டும் அப்புறப்படுத்திப் பயனில்லை.

இப்போது ஒரு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது நல்லதுதான். மாற்று ஏற்பாடு வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தளபதி ஸ்டாலின் சொன்னபோது, அது கூடாது என்று மறுத்தவர்கள் கூட, அதனையே ஆளுநர் செய்தவுடன் வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஆனால் இப்போதும் கூட ஒரு தெளிவு ஏற்பட்டு விடவில்லை என்பதே உண்மை.

அரசமைப்புச் சட்டம் 166(3)இன் படி, ஒரு மாநில அரசின் அலுவல்களை வாய்ப்புள்ள வகையில் அம்மாநில அமைச்சர்களிடம் ஒதுக்கீடு செய்ய ஆளுநருக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மாற்றம் நடைபெற்றுள்ளது. முதல்வரின் அறிவுரையுடன் அவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். எல்லாமே முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. முதல்வர் எப்படி அறிவுரை வழங்கினார், வாய் மொழியாகவா, எழுத்து மூலமாகவா என்று எந்தக் குறிப்பும் இல்லை.

முதல்வரின் உடல்நலம் பற்றிய அறிக்கைகள் மாறி மாறி வருகின்றன. ஒருநாள், அவர் நலமுடன் உள்ளார், இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார் என்கின்றனர். பிறகு சுவாசக் கோளாறு உள்ளது, மருத்துவமனையில் நெடுநாள் தங்க வேண்டும் என்கின்றனர். ஏன் இவ்வளவு குழப்பம்?

இதையெல்லாம் கேட்க நீங்கள் யார் என்று சிலர் சினம் கொள்கின்றனர். அவர் ஒரு தனி மனிதராக இருந்தால் அல்லது ஒரு கட்சியின் தலைவராக மட்டுமே இருந்தால், இத்தனை விளக்கங்களைக் கேட்க எவருக்கும் உரிமையில்லைதான். ஆனால் அவர் தமிழகத்தின் முதலமைச்சர். வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் அவரே முதலமைச்சர். எனவே அவரது உடல்நிலை பற்றி அறிந்துகொள்ளும் உரிமை குடிமக்கள் அனைவருக்கும் உள்ளது. உண்மையைச் சொல்ல வேண்டிய கடமை அரசுக்கும் உள்ளது.