கருஞ்சட்டைத் தமிழர்
பிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 2017

சிரமறுத்தல் மன்னருக்குப் பொழுதுபோக்கு, மக்களுக்கோ உயிரின் வாதை என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார்.

இன்றைய அரசு மக்களின் நிலையும் மக்களின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது.

ஏழை நடுத்தர மக்களைக் கருத்தில் வைத்து உருவாக்கப்பட்ட ‘ரேசன்’ கடைகளில் சர்க்கரை, பருப்பு, மண்ணெண்ணெய் போன்றவைகளைப் படிப்படியாக நிறுத்தி, இறுதியில் கடைகளையே மூடிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோல இப்பொழுது பள்ளிக் குழந்தைகளின் சந்துணவுத் திட்டமும் ஆகிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த அ.தி.மு.க. அரசு.

1989ஆம் ஆண்டு சத்துணவில் முட்டை வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்து, 15.07.2007 முதல் வாரத்திற்கு மூன்று முட்டைகள் வழங்க கலைஞரின் தி.மு.க. அரசு ஆணை பிறப்பித்தது.

அதற்கும் இப்பொழுது ஆபத்து நேர்ந்துள்ளது.

முட்டை விலை உயர்ந்துள்ளது என்ற காரணத்தைச் சொல்லி, முட்டைகளைக் கொள்முதல் செய்யாமல், குழந்தைகளுக்குச் சத்துணவில் வழங்காமல் நிறுத்தியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் தி-.மு.க. செயல் தலைவர் தளபதி ஸ்டாலின். 

ஏறத்தாழ 69 லட்சம் குழந்தைகளின் உடல் நலம் குறித்தும் அவர்களின் கல்வி குறித்தும் கொஞ்சமும் கவலை இல்லாத இந்த அரசு &

சத்துணவு மையங்களின் பணியாளர்கள் நியமனம், அவர்களின் சம்பள நிர்ணயம், அதற்கான டென்டரின் முறைகேடுகள், குழந்தைகளுக்குக் கலவை உணவு கொடுப்பது போன்றவற்றில் நிகழ்ந்த பல்வேறு முறைகேடுகளுக்காக நீதிமன்றத்தின் கண்டனங்களுக்கு ஆளாகிய அரசு இந்த அ.தி.மு.க அரசு.

எதைத் தொட்டாலும் லஞ்சம். எங்கு பார்ததாலும் ஊழல் நடந்துகொண்டிருக்கும் ஆட்சி.

செய்ய வேண்டிய மக்கள் நலத் திட்டங்களை விட்டுவிட்டு, தேவையில்லாத நிகழ்ச்சிகள் போன்றவைகளுக்காகக் கோடி கோடியாக அரசு பணத்தை வீணடிக்கும் ஆட்சியாளர்கள்.

இவர்களின் ஆடம்பரத்திற்கும் கொள்ளைகளுக்கும் குழந்தைகளின் உடல்நலம் பேணும் சத்துணவு முட்டைகள்தானா கிடைத்தன? 

எத்தியோப்பியாவில் வாழும் குழந்தைகளைப் போலத் தமிழகக் குழந்தைகளை ஆக்காமல் இருக்கவேண்டும் இந்த அரசு.