perarivalan and arputham ammalபேரறிவாளன் அவர்களின் விடுதலைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர்களுள் ஒருவராக நீங்கள் இந்த விடுதலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இதை ஒரு மகிழ்ச்சியான நிகழ்ச்சியாகப் பார்க்கிறேன். தண்டனை என்பது தவறைச் சீர்திருத்துவதற்கான முயற்சிதான். நாம் அப்படித்தான் அதைப் பார்க்கிறோம். ஆனால் இவர்கள் ஒரு மனிதனைப் பழிவாங்குவது என்பதாகப் பார்க்கிறார்கள். சிறைத் துறை என்பது “correctional service”, ஒருவரைத் திருத்துவதற்கான துறைதான். அப்படி இருக்கிறபோது ஒருவர் குற்றம் செய்திருந்தாலும் அவர் பொது சமூகத்தில் கலந்து வாழ்வதற்குத் தகுதி பெற்று இருக்கிறாரா என்பதைத்தான் பார்க்க வேண்டும். சிறையாளியை மட்டும்தான் கணக்கில் கொள்ள வேண்டும் என்பதுதான் விடுதலை. ஆனால் இவ்வழக்கில் அதற்கு மாறாக “முன்னாள் பிரதமரைக் கொலை செய்துவிட்டார்கள்” என்று காரணம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். வழக்கமாக ஆயுள் தண்டனைக் காலம் முடிந்தவுடன் தண்டனையை மறுபரிசீலனை செய்வார்கள். 20 ஆண்டுகளுக்கு மேல் யாரையும் சிறையில் வைத்திருக்க மாட்டார்கள். எனவே 30 ஆண்டுகாலம் இவர்களைச் சிறையில் வைத்திருந்தது அரசியல் நோக்கத்திற்காகவே. மேலும் இந்த வழக்கில் நீதிமன்றத்தின் மரபும் மீறப் பட்டது. எந்த ஒரு வழக்கிலும் “perpetrators” குற்றத்தை நேரடியாகச் செய்தவர்களுக்குத்தான் உச்சபட்ச தண்டனை கொடுப்பார்கள். ஆனால் இந்த வழக்கில் அனைவருக்கும் உச்ச பட்ச தண்டனையான மரண தண்டனை கொடுத்தார்கள். பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பின் இந்த விடுதலை கிடைத்திருக்கிறது.

இதே காரணங்கள் இந்த வழக்கில் சிறையில் உள்ள மற்ற அறுவருக்கும் பொருந்தும் அல்லவா?

நிச்சயமாகப் பொருந்தும். அவர்கள் வழக்குத் தொடுக்கவில்லை. வழக்குத் தொடுத்தது பேரறிவாளன் மட்டும்தான். அந்த அடிப்படையில் பேரறிவாளனுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. மற்றவர்களுக்கும் விடுதலைக்கான வாய்ப்பு இருக்கிறது. இப்போது தமிழக அரசு, மற்றவர்களுக்கான விடுதலையும் சட்ட வல்லுநர்களைக் கொண்டு பரிசீலிக்கப்படும் என்று சொல்லி இருக்கிறது.

இந்த வழக்கில் மேலும் நாம் வரவேற்கக் கூடிய ஒன்றாக, மாநில அரசின் உரிமைகளை நிலைநாட்டி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது பற்றி உங்கள் கருத்து.

உச்சநீதிமன்றம் இவ்வழக்கில், ஒரு பகுதியில், அரசு முடிவு செய்து விட்டால் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமலேயே விடுதலை செய்ய முடியும் என்று சுட்டிக்காட்டியிருக்கிறது. “Rules of business” என்று சொல்லுவார்கள், அதாவது “Constitutional courtesy” என்பதற்காக ஆளுநரிடம் கையெழுத்து வாங்குவது என்று சொல்கிறார்கள். இவற்றை அழுத்தமான சொற்களாக நான் பார்க்கிறேன். ஆளுநர் எந்த அதிகாரமும் அற்றவர் என்பதை அழுத்தமாகச் சொல்வதற்காகவே இந்தச் சொற்களைப் பயன்படுத்தி இருப்பதாகப் பார்க்கிறேன். இன்னொன்று ஆளுநரும் குடியரசுத் தலைவரும் மிக உயர்ந்த பதவிகளில் இருந்தாலும், அமைச்சரவையின் அறிவுரை ஆலோசனையின்படிதான் நடக்க வேண்டும் என்பதையும் மீண்டும் அழுத்திச் சொல்கிறார்கள். இவற்றையெல்லாம் நாம் முக்கியமானதாகப் பார்க்க வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்த வரையில் “inexcusable” அதாவது மன்னிக்க முடியாத தன்மையில் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. எனவே இந்தத் தீர்ப்பில், ஒரு மாநில ஆளுநர் என்பவர் மாநில அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளுக்குக் கட்டுப்பட்டுச் செயல்பட வேண்டியவர் என்பது திரும்பத் திரும்பப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அரசியல் களத்தில், காங்கிரஸ் கட்சி பேரறிவாளன் விடுதலையை எதிர்த்துப் போராட்டம் நடத்துவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஓ சின்னப்ப ரெட்டி அவர்கள் ஒரு தீர்ப்பில், “நாங்கள் நீதிபதிகள் எல்லாம் மக்களை விட்டு வெகுதூரம் விலகி இருக்கிறோம். இந்த முடிவுகள் எல்லாம் மக்களோடு நெருங்கி இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் இருக்கிற சட்டமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று நீண்ட காலத்திற்கு முன்பு சொன்னார். நீதிபதிகளுக்குச் சில கட்டுப்பாடுகள் உண்டு. அவர்கள் மக்களோடு தொடர்பு இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால் அரசியல் கட்சிகள் மக்களோடு இருக்கவேண்டியவை. மக்கள் பிரதிநிதிகளாக அவர்கள் செயல்பட வேண்டுமானால் மக்களுடைய வாக்கு வேண்டும். இப்படி ஒட்டுமொத்தத் தமிழ் மக்களுடைய கருத்துக்கு எதிராக நடந்து கொள்வது, பேசுவது, போராட்டம் என்ற செய்வது எல்லாம் மிகக் கேவலமான ஒன்றாகும்.

ஒரு கட்டத்தில் நீதிமன்றம் விடுவித்தால் எங்களுக்கு மறுப்பில்லை என்று சொன்னார்கள். இன்று நீதிமன்றமே தீர்ப்பு சொன்னதற்குப் பிறகும் வாயில் துணியை கட்டிக் கொள்கிறோம் என்று சொன்னால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் கட்டிக் கொண்டு இருந்தாலே தமிழ் நாடு நன்றாக இருக்கும். ஒரு அயோக்கியன் வராமல் தடுப்பதற்கென்று இன்னொருவரை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் தேர்தல் அரசியலில் இருக்கிறோம். வாக்களிக்கும் போதும் அப்படித்தான் வாக்களிக்கிறோம். இதெல்லாம் உண்மைதான். ஆனால் நம்மைப் போன்ற இயக்கங்கள் எவ்வளவு நாள்களுக்கு, தமிழ் மக்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாதவர்களைத் தூக்கிச் சுமப்பது? இது பற்றி விரிவாக விவாதிக்க வேண்டிய தேவை இருப்பதாக நான் நினைக்கிறேன்.

- தோழர் கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

நேர்காணல் - மா.உதயகுமார்