பாபர் மசூதியை வைத்து மதவாத அரசியலை செய்து கொண்டிருந்தவர்கள், அந்த விவகாரம் முடிந்து விட்ட பிறகு மீண்டும் அதே பாணியில் மதவாத அரசியலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் சங்பரிவாரக் கும்பலுக்கு மதத்தை முன்னிறுத்தி கலவரங்களை உண்டாக்குவதைத் தவிர மக்களுக்கான ஆக்கபூர்வமான அரசியல் எதையும் செய்யத் தெரியாது. இதுதான் இங்கே வரலாறாகவும் இருக்கிறது.

குதுப்மினாரை விஷ்ணு ஸ்தம்பம் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் சொல்கிறது. இதற்கு ஆதரவாக இந்தியத் தொல்லியல் துறையைச் செயல்பட வைக்கிறார்கள். மேலும் 27 ஜெயின்-இந்துமதக் கோவில்கள் இடிக்கப்பட்டுக் குதுப்மினார் கட்டப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

தாஜ்மகாலின் அறைகளுக்குள் இந்துக் கடவுள்களின் சிலைகள் இருப்பதாகவும், அவற்றைத் தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பாஜகவின் ஊடகப் பிரிவைச் சேர்ந்தவர் அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

வாரணாசி ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கிடைக்கப் பெற்றதாகச் சொல்லி மசூதியின் ஒரு பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது.

இந்துக்களுக்காகப் போராடுகிறோம் என்று சங்பரிவாரக் கும்பல் சொல்வது இஸ்லாமியர்களைப் பகைவர்களாகக் காட்டி இந்து-முஸ்லிம் கலவரங்களை ஏற்படுத்துவதற்குத்தான்.

வழிபாட்டு இடங்களுக்கான சட்டம் இயற்றப்பட்ட போதிலும், அச்சட்டம் காற்றில் பறக்க விடப்பட்டிருக்கிறது.

நாட்டில் எந்நேரமும் மதக்கலவரப் பதற்றத்தை ஏற்படுத்தி, மக்கள் பிரச்சினைகள் எதையுமே பேசவிடாமல், மக்களின் வாழ்க்கை நிலையை மிக மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளன பார்ப்பனக் கும்பல்கள்.

பார்ப்பனியத்திற்குப் பலியாகும் பாமர மக்களுக்கப் பகுத்தறிவுப் பாதையைக் காட்ட வேண்டும்!