நாவலர் இரா.நெடுஞ்செழியன், நூலின் அணிந்துரையின் ஒரு பகுதி

murasoli maran bookதி.மு. கழகம் கோருகிற மாநில சுயாட்சியைவிட மிக அதிகமான உரிமைகளையும், அதிகாரங்களையும் கொண்ட மாநில சுயாட்சி முறையை ஏற்றுக்கொண்டுள்ள அமெரிக்காவும், இரஷ்யாவும் எவ்வளவு வளம் உடையனவாக, வளர்ச்சி கொண்டனவாக, வலிவு படைத்தனவாக விளங்குகின்றன என்று இந்நூலில் ஆங்காங்கு சுட்டிக்காட்டப்பட்டிருப்பது பல கருத்துக் குருடர்களுக்குக் கண்ணொளி பயக்கும் என்று உறுதியாகக் கூறலாம்.

தி.மு.கழகத்தின் கருத்தைச் சுருங்கக் கூறவேண்டுமாயின் இந்திய மண்ணைக் காப்பாற்ற - அதாவது இந்தியாவின் எல்லை, சுதந்திரம், உரிமை, வளம், வாழ்வு ஆகியவற்றைக் காப்பாற்ற என்ன என்ன அதிகாரங்கள், உரிமைகள் தேவைப்படுமோ அவை மத்திய கூட்டாட்சி அரசினிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்; மாநில மக்களைக் காப்பாற்றவும், வாழவைக்கவும், வளர வைக்கவும் என்ன என்ன அதிகாரங்கள், உரிமைகள் தேவைப்படுமோ அவை மாநில சுயாட்சி அரசினிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இன்னும் சுருங்கக் கூறினால் ‘இந்தியாவைக் காப்பாற்றுவது மத்திய அரசின் கடன், மக்களை வாழவைப்பது அந்தந்த மாநில அரசுகளின் கடன்.’ இதற்கு ஏற்றபடி அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டியது இன்றியமையாததாகிறது. அதற்கான வழிவகை கூறும் சிறந்த நூல்தான் இந்நூல்.

நண்பர் மாறன் இனிய எளிய தமிழில் ஆற்றொழுக்கு நடையில் இந்நூலை இயற்றி இருக்கிறார் என்பது மட்டுமல்லாமல் உணர்ச்சியை ஆங்காங்கு கொப்பளிக்கவிட்டிருக்கிறார். இந்த நூலைப் படிப்பவர்கள் எல்லாம் தெளிவு பெற்று, உரிமைப் போருக்குத் தம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வார்கள் என்பது திண்ணம்.

மாநில சுயாட்சி அறப்போருக்குப் புறப்படும் அறப்போர் வீரர்கள் அனைவரும் சளைக்காத அளவுக்குக் கையில் ஏற்கத் தக்க கருத்துக் கேடயங்களையும், ஆதார ஈட்டிகளையும் மிக வலிவாக வடித்துத் தந்துள்ள நண்பர் முரசொலி மாறன் அவர்களை நான் மனதார - வாயார வரவேற்றுப் பாராட்டி வாழ்த்துகிறேன்.

 காலைப் படிப்பவர்கள் எல்லாம் தெளிவு பெற்று, உணர்வு பெ எழுச்சி பெற்று, உரிமை மாநில சுயாட்சி அறப்போரில் ஈடுபடுத்திக்கொள்ளும் ஒவ்வொரு வீரனுடைய கையிலும் இந்த நூல் ஏந்தும் கேடயமாகவும், எறியும் ஈட்டியாகவும் திகழ்வதாக.

மாநில சுயாட்சி

ஆசிரியர் : முரசொலி மாறன்.

1974 இல் தி.மு.க முதல் வெளியிடு.

2022 நான்காம் பதிப்பு, சூரியன் பதிப்பகம்

தொலைபேசி: 044 - 42209191