ma subramaianசைதை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன், நேர்காணல்

உதயகுமார்: 2016 முதல் 2021 வரை 5 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக தாங்கள் ஆற்றிய பணியில் குறிப்பிடத்தக்கனவாகக் கருதுபவை.

மா.சுப்ரமணியன்: 2017 ஜூலை 1ஆம் தேதி பசுமை சைதைத் திட்டம் என்கிற திட்டத்தை தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். தொகுதியில் உள்ளவர்களின் பிறந்தநாளன்று அவர்கள் வீட்டு வாசலில் மரக்கன்று நடும் திட்டம். அது வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு இதுவரை சைதைப் பகுதியில் மட்டும் 40,000 மரக்கன்றுகள் நடப்பட்டிருக்கின்றன.

பிரபல திரைப்பட நடிகர்கள், இயக்குனர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டிருக்கிறார்கள். அதேபோல் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் 50 ஆயிரம் தென்னை மற்றும் மாமரங்கள் நடப்பட்டிருக்கின்றன.

இதுவரை மொத்தம் 90 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து செய்து வருகிறோம். இது ஒரு மிக முக்கியமான மகிழ்ச்சியான செயல்பாடாக இருக்கிறது.

"கலைஞர் கணினி கல்வி மையம்" தொடங்கப்பட்டு சைதைத் தொகுதியில் இருக்கும் ஏழை மாணவர்களுக்குக் கணினிக் கல்வி, Tally போன்றவை கற்றுக் கொடுக்கப்பட்டு, பயிற்சி முடிந்ததும் வேலைவாய்ப்பும் கொடுக்கப்பட்டது.

இதுவரை 253 மாணவர்கள் பயன் பெற்றிருக்கிறார்கள். இந்து என்.ராம் அவர்களைக் கொண்டு அந்த 253 மாணவர்களுக்கும் பணி அளிப்பும் பட்டமளிப்பும் கடந்த வாரம் விழாவாக நடத்தப்பட்டது. ஏழை மாணவர்களுக்குக் கணினிப் பயிற்சியின் மூலம் பெரிய நிறுவனங்களில் பணி கிடைத்தது பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது.

அதேபோல் மூன்று பெரிய மருத்துவ வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திப் பலருக்கும் வேலை வாய்ப்புகள் பெற்றுக் கொடுத்திருக்கிறோம். மாநகராட்சி செய்யத் தவறிய, மழைக்காலத்தின் போது சிறப்பு மருத்துவ முகாம்கள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஐந்து ஆண்டுகளில் 150 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன.

ஒரு நூற்றாண்டுக் காலப் பழைமைவாய்ந்த சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு எக்ஸ்ரே உள்ளிட்ட உபகரணங்கள், ஜெனரேட்டர் வசதிகள் போன்றவை 75 லட்சம் ரூபாய் செலவில் செய்து தரப்பட்டிருக்கின்றன.

சைதை தொகுதியில் மட்டும் 148 மழைநீர் சேகரிப்பு மையங்களை நாங்கள் தொடங்கினோம். அதன்பிறகுதான் மாநகராட்சி தொடங்குவதாக அறிவித்தது. அறிவித்தது அறிவித்தபடி இருக்கிறது.

2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தொகுதி முழுவதும் நடந்தே சென்று மக்களிடம் வாக்குகள் கேட்டேன்.
அதேபோல இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்தே சென்று மக்களிடம் குறைகளைக் கேட்டேன்.

ஒரு நாளைக்கு 5 மணி நேரம் என தொடர்ந்து 14 நாள்கள், 70 மணி நேரம் நடந்து சென்று மக்கள் குறைகளைக் கேட்டு அவர்களிடம் மனுக்களைப் பெற்றேன்.

பெறப்பட்ட மனுக்களை துறை வாரியாகப் பிரித்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள், செயலாளர்களிடம் கொடுத்து அதன் மீதான நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினேன். யார் எப்போது தொலைபேசி, இந்த இடத்தில் இந்தப் பிரச்சனை என்று சொன்னாலும், உடனடியாக அவ்விடத்திற்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கிறேன்.

உதயகுமார்: அதிமுகவின் ஆட்சி அதிலும் குறிப்பாக ஜெயலலிதாவின் ஆட்சி பொற்கால ஆட்சி என்று சொல்லப்படுவது பற்றி உங்களுடைய கருத்து:

மா.சுப்ரமணியன்: ஜெயலலிதா ஆட்சி எடப்பாடியுடைய ஆட்சி எல்லாம் ஒன்றுதான். இந்த இரண்டு ஆட்சிகளும் இருப்பதிலேயே மிக மோசமான பிற்போக்குத்தனமானப் போக்கை உடைய ஆட்சிகள்தான். அது மட்டுமல்ல எந்த விதமான சீரிய திட்டங்களும் சிறப்புத் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. அரசு அதிகாரிகள் எழுதிக்கொடுத்துப் படிப்பது மட்டுமே நிதிநிலை அறிக்கை ஆகும்.

அடையாறு ஆற்றை அகலப்படுத்தி வெள்ளத்தடுப்புச் சுவர் கட்டக் கோரிப் போராட்டம் நடத்தி பல முயற்சிகளுக்குப் பின்னர் கட்டத் தொடங்கினார்கள் அடையாறு ஆற்றில் கழிவு கலந்த மண்ணைக் கொண்டே கட்டத் தொடங்கினார்கள்.

இரசாயனம் கலந்த தண்ணீர் எடுத்து கட்டத் துவங்கினார்கள். இந்த மணலாலும் தண்ணீராலும் கட்டத் தொடங்கிய தடுப்புச்சுவர் தொட்டஉடனேயே அரித்துக் கொண்டு வந்துவிடுகிறது. இதை நேரடியாக ஆய்வு செய்து நடைபெற்று வரும் முறைகேடுகளைப் பற்றியும் ஊழலைப் பற்றியும், சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறைச் செயலாளரிடம் மனுக்கொடுத்திருக்கிறோம்.

உதயகுமார்: திமுகவின் தொண்டராக சட்டமன்ற உறுப்பினராக மேயராக நெடிய அனுபவம் பெற்றிருக்கிறீர்கள். திமுக அதிமுக இரண்டு கட்சிகளின் தலைமையும், அதன் தொண்டர்களை நடத்துவதில் என்ன வேறுபாடு இருப்பதாக உணருகிறீர்கள்?

மா.சுப்ரமணியன்: திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை. அதற்கு நானே உதாரணம். எந்தவிதமான குடும்பப் பின்னணியும் இல்லை, ஜாதிப் பின்னணியும் இல்லை, பொருளாதார வசதியும் இல்லை. அப்படியிருந்த நானே சட்டமன்ற உறுப்பினராகவும் மேயராகவும் இருந்ததற்குக் காரணம் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்பட்டதுதான்.

தொண்டர்கள் சமமாக நடத்தப்படுகிறார்கள். சுயமரியாதை உணர்வோடு எல்லோருமே அணுகப்படுகிறார்கள். ஆனால் அதிமுகவில் எதுவும் இருக்காது. முதலமைச்சராக அறிவிக்கப்பட்டவுடன் எடப்பாடி எப்படி விழுந்து கும்பிட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் அதற்குப் பிறகு தன்னை யாரும் தேர்ந்தெடுக்கவில்லை என்றும், தானாகவே வந்தேன் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார். எடப்பாடி மட்டுமல்ல எல்லா அதிமுகவினரும் அப்படியேதான் இருப்பார்கள்.

- மா.சுப்ரமணியன்