வருடா வருடம் 12 வது வகுப்பு தேர்வு முடிவுகள் ஒருவித எதிர்பார்ப்போடு வருவதும்.. வந்ததும் அதில் மாநிலவாரியாக.. மாவட்டவாரியாக..பள்ளிவாரியாக.. பல மாணவர்கள் முன்னிலை பெறுவதும் அவர்களை நாளிதழ்கள் பேட்டி காண்பதும்.. அவர்களும் தங்கள் சாதனைகளால் பெருமை கொண்டு வருங்காலத்தில் நான் கலக்டர் ஆவேன்.. ஆடிட்டர் ஆவேன்.. டாக்டராவேன்.. பொறியாளராவேன்.. என்று தங்களின் வண்ண வண்ண கனவுகளை எடுத்துவிடுவதும்.. ஒரு தொடர்கதையாக காட்சிகள் மாறாத நாடகமாக வருடாவருடம் நடக்கிறது. ஒன்றை கவனித்தீர்களா? யாராவது ஒருவர் நான் விவசாயி ஆவேன் நாட்டின் உணவுத் தேவையை போக்குவேன்.. என் நாட்டு மக்கள் பஞ்சத்தால் வாடுவது எனக்கு வேதனையளிக்கிறது.. அதை நீக்க பாடுபடுவேன் என்று சொன்னதுண்டா?

சொல்லாததற்குக் காரணம் மாணவர்களல்ல முட்டாள் கல்வியாளர்களும் சுயநல அரசியல்வாதிகளூம் தான். மூன்று வேளை ருசியாகத் தின்ன வேண்டும் என்று நினைக்கும் மக்களும் கூட விவசாயம் பற்றிப் பேசாமல் இருக்கக் காரணம்  முட்டாள் கல்வியாளர்களும், சுயநல அரசியல்வாதிகளும் தான். பாடத்திட்டத்தில் விவசாயம் இல்லை. அதை எழுதவேண்டும் சொல்லித்தர வேண்டும் என்ற எண்ணம் ஆசிரியர்களுக்கும் இல்லை. நல்ல விளைச்சல் நிலங்களை அன்னிய முதலீட்டு முதலாளிகளுக்கு கொடுக்க விவசாயிகளிடமிருந்து வயல்வெளிகளை கொஞ்சமும் சுரணையில்லாமல் அபகரித்து கொடுப்பது... நாட்டு மக்களை ஏமாற்ற தரிசு நிலங்களை இலவசமாக ஏழை விவசாயிகளுக்குத் தருவோம் என்று நாடகமாடுவது..

புலிகளை ஆதரித்தாலோ மாவோ ஆதரவு பேசினாலோ இறையாண்மை பேசும் தேசபக்தி நடிகர்கள் ஏழை மக்களின் அடிப்படை உணவுத் தேவையான விவசாயத்தைப் புறக்கணித்து இறையாண்மையை நாசமாக்குவதை தடுக்க‌ எந்த தடா பொடாவைப் பயன்படுத்துவது? மரங்களை அழித்து மலைகளை உடைத்து இயற்கையை நாசப்படுத்தி மழையைக் குறைத்து விவசாயிகளின் வாழ்க்கையை நாசப்படுத்தி நகரங்களை நோக்கி அவர்களை ஓட ஓட துரத்தும் அயோக்கியத்தனத்துக்கு இறையாண்மையில் தண்டனை இல்லையா? விவசாயிகளின் இந்த வாழ்வை எந்த மாணவன் விரும்புவான்?

நகர நாகரீகத்தின் தாக்கத்தில் வாழ முடியாதபடி ஏழைகள் துரத்தப்படுகிறார்கள்... விவசாயம் செய்ய முடியாமல் நகரை நோக்கி விவசாயி ஓடுகிறான்.. இவர்கள் எந்தப் புள்ளியிலும் சந்திக்க முடியாதபடி அரசின் கையில் மதுக்கடை.. தனியார் கையில் கல்வி.. ஏழை மாணவனுக்கு வேலை வாய்ப்பில் உத்திரவாதமில்லாமல் கல்விக்கடன்.. கடனில் கற்றவனின் அப்ப‌னும் ஏழை.. வேலையில்லா மகனும் ஏழை.. ஏழை எப்போதும் ஏழையாகவும் பணக்காரன் எப்போதும் பணக்காரணாக இருக்க ஆள்வோரின் அருமையான சதி.. இதை எப்படி உடைக்கப்போகிறோம்?

- அ.இளஞாயிறு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It