நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க, சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அது என்ன ஆனது என்றே தெரியவில்லை. இதில் அதிமுகவின் செயல்பாடு பற்றி...

anitha 311சட்டத்தின்படி ஆட்சி நடந்திருந்தால், அரசமைப்புச் சட்டத்தின்படி தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைத்திருக்க வேண்டும். 2007 ஆம் ஆண்டே குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வை ரத்து செய்து ஒரு சட்டம் இருந்தது.

மத்திய அரசு நீட்டை நடைமுறைப்படுத்துவதற்காக ஒரு சட்டத்தைக் கொண்டு வந்த போது தமிழ்நாடு அரசு மீண்டும் ஒரு சட்டத்தை இயற்றிக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியது. சட்டம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படாமல் அது உள்துறை அமைச்சகத்திலே இருக்கிற போது அதை அனுப்பச் சொல்லி மத்திய அரசை வலியுறுத்தியிருக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இது குறித்து கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். அ.இ.அ.தி.மு.க வைச் சேர்ந்தவர்கள் 37 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஏன் அவர்கள் கேள்வி எழுப்பவில்லை? பல்வேறு காரணங்களுக்காக நாடாளுமன்றத்தை முடக்கியவர்கள் சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா எதற்காக உள்துறை அமைச்சகத்தில் இருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் வலுவாகக் குரல் எழுப்ப வேண்டியவர்கள் ஏன் குரல் எழுப்பவில்லை? துணை சபாநாயகராக இருந்த தம்பிதுரை ஏன் இது பற்றி பேசவில்லை. ஏன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவில்லை? இந்த சட்டப்பேரவை இருக்கிற வரைக்கும் நாம் எதுவும் செய்யமுடியாது.

சட்டப்பிரிவு 246 அட்டவணை schedule 7 இல் மூன்று பட்டியல்கள் உள்ளன. 1.Union List, 2. State List, 3.Concurrent List. பட்டியல் 1 வரிசை 44 பல்கலைக்கழகங்களை உருவாக்க கலைக்க மத்திய அரசுக்கு உரிமையில்லை என்று சொல்கிறது. பட்டியல் 2 வரிசை 32 - பல்கலைக்கழகங்களை உருவாக்க ஒழுங்குபடுத்த கலைக்க மாநில அரசுக்கே உரிமையுண்டு என்று சொல்கிறது. கல்வி பட்டியல் 3 இல் இருக்கிறது. அதில் வரிசை 25 தரத்தைத் தீர்மானித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் பற்றி பேசுகிறது. மாணவர் சேர்க்கை, கட்டணம் தீர்மானித்தல் ஒழுங்குப்படுத்துதலுக்குக் கீழ் வருகிறது. ஒழுங்குபடுத்துதல் மாநில அரசிற்கு இருக்கிற உரிமை. இந்த ஒழுங்குபடுத்துதல் குறித்து சட்டம் இயற்றுவதற்கு மாநில சட்டப்பேரவையே மிகவும் பொருத்தமானது என உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்பு அமர்வு Modern Dental College வழக்கில் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இவ்வளவு தெளிவாக அரசமைப்புச் சட்டமும் நீதிமன்றத் தீர்ப்பும் இருக்கின்ற வேளையில் மாநில உரிமை பறிபோவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது நியாயமா?

நீட் தேர்வில் எந்த அளவிற்கு ஏற்றத்தாழ்வு இருக்கிறது?

வசதி படைத்தவர்களும், பணம் வைத்திருப்பவர்களும் மட்டுமே இனி மருத்துவக் கல்லூரியில் சேர முடியும். மூன்று முறை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வயது உச்ச வரம்பு கிடையாது. பத்திரிக்கைச் செய்திகளின் படி கடந்த இரண்டு ஆண்டுகளில் 50% மேற்பட்டோர் குறைந்த பட்சம் ஓராண்டாவது நீட்டுக்காகப் பயிற்சி எடுத்தவர்கள். மூன்று ஆண்டுகள் வரைக்கும் ஒருவர் படித்துவிட்டு நீட் எழுதுவார். இன்னொருவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டு நீட் எழுதுவார். இருவரும் சமப் போட்டியாளர்களா? இதில் யார் வெற்றிபெறுவார்கள்?

சட்டத்தையும் மீறி நீட் தேர்வு திணிக்கப்படுவதன் நோக்கம்?

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை தேர்வு இயக்ககம் வைத்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்ட தகுதிவாய்ந்த முதுகலை ஆசிரியர்கள், அரசு அதிகாரிகளால் தேர்வு நடத்தப்பட்டு கொடுக்கப்படும் சான்றுக்கு எந்த மதிப்பும் தரமாட்டோம். பல்கலைக்கழகங்கள் தான் மாணவர் சேர்க்கை குறித்து தீர்மானிக்க வேண்டும். ஆனால் பல்கலைக்கழகங்களுக்கு அந்த உரிமையை நாங்கள் தர மாட்டோம். National Testing Agency என்ன தகுதி இருக்கிறது. மாநில ஆசிரியர்களைவிட இவர்கள் சிறந்தவர்கள் என்று சொல்ல என்ன ஆதாரம் இருக்கிறது. இதன் நோக்கம் மாநில உரிமைகளைப் பறித்துவிட்டு ஒற்றை ஆட்சியில் நாட்டை நடத்துவது. பின்னர் யார் வேண்டுமானாலும் தேர்வு நடத்தலாம் என்று வணிக ரீதியாக இதனை மாற்றுவது. சந்தையில் ஒரு அமைப்பின் மதிப்பைக் கூட்டிவிட்டு அதில் படிப்பதே சிறந்தது என்கிற நிலையை உருவாக்கிவிட்டால் அரசாங்கம் பல்கலைக்கழகமே நடத்த வேண்டியதில்லை. ஒட்டுமொத்தமாகச் சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைத்துக் கல்வியைச் சந்தையில் கொண்டுபோய் கொடுக்கும் முயற்சி இது.

தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்கள் எதிர்க்கவில்லை என்று சொல்லப்படுவது பற்றி…

சட்டீஸ்கரில் போராட்டம் நடந்தது. மம்தா பானர்ஜி எதிர்த்தார்கள். ஒடிசாவில் இருந்தும் எதிர்ப்புகள் இருந்தது. பல மாநிலங்களிலும் எதிர்ப்புகள் இருந்தன. அளவு வேண்டுமானால் மாறியிருக்கலாம். குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்த 13 ஆண்டுகளில் ஒரு மாநில அரசு மருத்துவக் கல்லூரி கூட திறக்கப்படவில்லை. அதே காலகட்டத்தில் இங்கு பல மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. பல மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகளே கிடையாது. பல மாநிலங்களில் சீட்டுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்தியாவிலேயே மருத்துவக் கல்லூரிகளும் அதிகம் சீட்டுகளும் அதிகம். இயல்பாக இங்கு எதிர்ப்பு வராதா? சமூகநீதிக்கான போராட்டக்களம் தமிழ்நாடு. முதல் சட்டத் திருத்தமே பெரியாரால் வந்தது.

நேர்காணல்: தோழர் மா.உதயகுமார்