ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால், அந்தப் பொய் உண்மை போன்ற வடிவத்தை அடைந்துவிடும் என்று சொன்னார் பால் ஜோசப் கோயபல்ஸ்.

நாசிசத்தின் கொள்கையில் வளர்ந்த இவர், அடால்ப் இட்லரின் நெருங்கிய நண்பர். ஜெர்மானிய நாசிசத்திற்கும், இந்திய பா.ஜ.க.விற்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை. ஆரியத்தின் மேலாதிக்கம்தான் இரண்டிற்கும் குறிக்கோள்.

பா.ஜ.க.வில் இனம், மொழி, மதம், சாதி, நாடு, நடப்பு என்று எல்லாவற்றிலும் பொய் சொல்லக் கொஞ்சமும் தயங்கமாட்டார்கள்.

சென்னை மெரினாவில் சல்லிக்கட்டுப் போராட்டம் அமைதியாக நடந்தது. இறுதிநாளில் காவலர்கள் அத்து மீறியதால் அது கலவரமாக மாறியது.

உடனே பா.ஜ.க.வினர் சொன்னார்கள் ‘தீவிரவாதிகள் ஊடுருவி விட்டார்கள், அவர்களால்தான் கலவரம் ஏற்பட்டது என்று.’

அதே நேரத்தில் தொலைக்காட்சிகளில் காவல்துறையின் பெண் காவலர் உட்பட, மேலும் சில காவலர்கள், அங்கிருந்த வண்டிகளுக்குத் தீ வைத்த காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் போராடிய போது காவல்துறையினர் அத்துமீறி தூப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டார்கள்.

அங்கே தூப்பாக்கியால் சுட்ட காவலர்களை அதே கோலத்துடன் தொலைக்காட்சியில் காட்சியாக ஒளிபரப்பினார்கள்.

அப்போதும் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, எச்.ராஜா போன்ற பா.ஜ.க.வினர் சொன்னார்கள், தீவிரவாதிகள் புகுந்துவிட்டார்கள் என்று.

இப்பொழுது சேலம் எட்டு வழிச் சாலைக்கு எதிராக மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுதும் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லிக் கொண்டிருக்கிறார். இங்கேயும் தீவிரவாதிகள் நுழைந்துவிட்டார்கள் என்று.

அவர் ஒன்றை மறந்துவிடக் கூடாது. அவர் ஒரு மத்திய அமைச்சர். தீவிரவாதிகள் தமிழகத்தில் நுழைந்துவிட்டார்கள் என்றால், அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது.

ஆதாரம் இல்லாமல் அவர் சொல்லமாட்டாரே என்றால், ‘‘அதெல்லாம் எனக்குத் தெரியாது, நான் சொல்லிவிட்டேன். என் வேலை முடிந்தது. காவல்துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று சொல்கிறார்கள்.

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவது மத்திய அமைச்சரவையில் பொறுப்பு வகிக்கும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அழகில்லை.

முதலில் இவர் யாரைத் தீவிரவாதி என்று சொல்கிறார் என்று உறுதி செய்ய வேண்டும்.

அவர்களை அடையாளம் காட்ட வேண்டும்.

அதற்குரிய சாட்சிகள், சான்றுகளை மக்கள் முன் வைக்க வேண்டும். இதுதான் பொறுப்புள்ள ஓர் அமைச்சருக்கு அழகு.

இதையெல்லாம் விட்டுவிட்டு பொத்தாம் பொதுவாக ‘தீவிரவாதிகள் நுழைந்துவிட்டார்கள், சமூக விரோதிகள் நுழைந்துவிட்டர்கள்’ என்று திரும்பத் திரும்பச் சொல்வது நாட்டின் அமைதிக்குக் குந்தகம் ஏற்பட வழிவகுக்கும்.

இனியும் வேண்டாம் கோயபல்ஸ் வேலைகள்.