ஊதிய சட்டம் 2015 என்ற ஒரு சட்டத்தை, தொழிலாளர் நலத் துறை முன்வைத்திருக்கிறது. அச் சட்டம், தற்போதுள்ள குறைந்த பட்ச ஊதியச் சட்டம் 1948, ஊதியம் வழங்குதல் சட்டம் 1936, போனசு சட்டம் 1965 மற்றும் சம ஊதியச் சட்டம் 1976 ஆகிய நான்கு சட்டங்களுக்கு மாற்றாக அமையும்.

தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பிரதிபலிக்கவும், "மேலும் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும்" என்பதாலும், இந்த மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாக அமைச்சரக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தப் புதிய சட்டத்தில் கொண்டு வரப்படும் மாற்றங்களைப் பார்க்கும் போது, அது (1) ஊதியத்தை நிர்ணயிப்பதில் தொழிலாளர்களும், அவர்களுடைய சங்கங்களும் எழுப்பிவரும் நெடுநாளைய கோரிக்கையை நிராகரிக்கிறது என்பதும், (2) உழைப்புச் சுரண்டல் தீவிரமடைய அனுமதிக்கிறது என்பதும், தெளிவாகிறது. சுருக்கமாகச் சொன்னால், இது தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளை நிராகரிப்பதோடு, முதலாளி வர்க்கத்தின் கோரிக்கையை நிறைவேற்றுகிறது.

குறைந்த பட்ச ஊதியம்

குறைந்த பட்ச ஊதியத்தின் வரையறையும், அது எப்படித் தீர்மானிக்கப்படுகிறது என்பதும் நமது நாட்டுத் தொழிலாளி வர்க்கப் போராட்டத்தின் ஒரு முக்கிய பிரச்சனையாக இருந்து வருகிறது.

சமூக உற்பத்தியில் தன்னுடைய பங்கை அதிகரிப்பதற்காக, முதலாளி வர்க்கம் குறைந்த பட்ச ஊதியத்தை முடிந்த வரை அடிமட்டத்திற்குத் தள்ள விரும்புகிறது. குறைந்த பட்ச ஊதிய அளவைக் குறைப்பதன் மூலம், முதலாளி வர்க்கம் ஊதியத்தின் பொது அளவை தாழ்த்துகிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறைந்தபட்ச ஊதிய அளவை, பெரும்பான்மையான தொழிலாளர்களுடைய ஊதியத்திற்கு ஒரு வரையளவைத் தீர்மானிக்கிறது. இந்த குறைந்த பட்ச ஊதிய அளவிற்குக் கீழே ஒரு கணிசமான தொழிலாளர்கள் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அரிதாக இருக்கும் வேலைகளைப் பெறுவதற்கு நிலவும் போட்டியும், ஊழல் நிறைந்ததாகவும், தொழிலாளர் விரோதமானதாகவும் இருக்கும் செயலாக்க இயந்திரமும் இதை உறுதி செய்கின்றன. இன்னொரு கணிசமான பிரிவினர் குறைந்த பட்ச ஊதியத்தைப் பெறுகின்றனர்.

உயர்ந்து வரும் விலைவாசிக்கு ஏற்பவும், பண வீக்கத்தை ஈடுகட்டுகின்ற வகையிலும் குறைந்தபட்ச ஊதியமானது திருத்தப்பட வேண்டும். ஆனால் சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் இந்த ஊதியங்களை அவ்வப்போது திருத்துவதற்கு மறுத்து வருகின்றனர். அப்படி உயர்த்தப்பட்டாலும், அந்த உயர்வு உண்மையான விலைவாசி உயர்வை எப்போதும் ஈடு கட்டுவதில்லை. குறைந்த பட்ச ஊதிய மாற்றங்களை ஆராய்ந்து பார்த்தால், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அதைத் திருத்திய பின்னர், அந்த ஊதியங்கள் கடந்த இருபத்தைந்தாண்டுகளாக உண்மையில் வீழ்ச்சி கண்டு வந்திருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன. இக் காலகட்டத்தில்தான் முதலாளிகளுடைய இலாப விகிதம் ஒட்டுமொத்தமாக தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது.

குறைந்தபட்ச ஊதியச் சட்டம் 1948-இன் படி, சில குறிப்பிட்ட தொழில்களுக்கு மத்திய அரசாங்கம் குறைந்த பட்ச ஊதியத்தைத் தீர்மானிக்கிறது. பிற தொழில்களுக்கு மாநில அரசாங்கங்கள் அதைத் தீர்மானிக்கின்றன. தேசிய அளவில் ஒரு அடிப்படை குறைந்தபட்ச ஊதியத்தை அறிவிக்க வேண்டுமெனவும், அதற்குக் கீழே எந்த மாநில அரசாங்கமும் குறைந்தபட்ச ஊதியத்தை வைக்க முடியாதவாறு இருக்க வேண்டுமெனவும் தொழிலாளர்கள் கோரி வருகின்றனர். மேலும் இந்த ஊதியங்கள், தொழிலாளர் நிலைக் கருத்தரங்கு 1958-இன் பரிந்துரைகளின்படியும், பின் வந்துள்ள உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்களின் அடிப்படையிலும் இருக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரி வந்துள்ளனர். குறைந்த பட்ச ஊதியமானது, 4 பேருள்ள ஒரு குடும்பத்திற்கு ஆரோக்கியமான உணவையும், போதுமான குடியிருப்பையும், கல்வி, சுகாதாரம், உடல்வளம், போக்குவரத்து, துப்புறவு, குடிநீர், மின்சாரம் போன்ற தேவைகளை உறுதி செய்ய வேண்டும். இந்த ஊதியங்கள், இன்றைய நவீன தொழிலாளியின் தேவைகளை நிறைவு செய்வதாக இருக்க வேண்டுமெனவும் தொழிலாளர்கள் கோரியிருக்கின்றனர்.

இந்தக் கோரிக்கையை மாறிமாறி வந்த அரசாங்கங்கள் தொடர்ந்து புறக்கணித்து வந்துள்ளன. இந்தப் புதிய ஊதியங்கள் சட்டம், மேலும் ஒரு படி பின்னோக்கிப் போகிறது. இது குறைந்தபட்ச ஊதியத்தைத் தீர்மானிப்பதை மாநில அரசாங்கங்களிடமே விட்டு விடுகிறது. இதன் காரணமாக, முதலாளிகளுக்கு சாதகமான முதலீடு செய்வதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்காக, மாநில அரசாங்கங்கள் போட்டி போட்டுக் கொண்டு, குறைந்தபட்ச ஊதியத்தை முடிந்தவரை அடிமட்ட நிலைக்குக் கொண்டு வருவார்கள்.

இது "அதிக வேலைவாய்ப்பை" உருவாக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். பெரும்பான்மையான தொழிலாளர்களுடைய ஊதியங்கள் தொடர்ந்து சரிந்து வந்திருக்கிறது என்பது பொருளாதார நெருக்கடியின் பின்னணியாக இருக்கிறது என்பது உண்மை. சந்தையில் உள்ள பொருட்களை வாங்குவதற்குப் போதுமான பணம் தொழிலாளர்களிடம் இல்லை. எனவே விற்காமல் மிகவும் அதிகமாக சரக்குகள் குவிந்திருப்பதால், முதலாளிகள் உற்பத்தியை நிறுத்த வேண்டியுள்ளது.

பெண் தொழிலாளர்களுக்கு எதிராக பாரபட்சம்

இன்றுள்ள சம ஊதிய சட்டம் 1976-உம், பெண் தொழிலாளர்கள் தொடர்பான மற்ற பிற சட்டங்களும், வேலை வாய்ப்புகளிலும்,  சமமான வேலைக்கு சமமான ஊதியம் பெறுவதிலும் பெண் தொழிலாளர்களுக்கு எதிரான பாரபட்சத்தை அகற்றவில்லை.  அண்மை ஆண்டுகளில் தொழிலாளர்கள் அணியில் மேலும் மேலும் பெண்கள் சேர்ந்து வருவதால், தொழிலாளி வர்க்க இயக்கம் குறிப்பாக பெண் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை கையிலெடுத்து வருகின்றனர். வேலை செய்யுமிடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு, குழந்தை பராமரிப்பு வசதிகள், மகப்பேறு விடுப்பு போன்றவை அதில் அடங்கும். பெண்கள் திருமணம் செய்து கொண்டதும், அல்லது அவர்கள் கருவுற்றதும் அவர்களை வேலையிலிருந்து நீக்குவதை பல நிறுவனங்கள் வழக்கமாகவே கொண்டிருக்கும் பிரச்சனையை முன்வைத்து, தொழிலாளி வர்க்கம் போராடி வருகிறது.

குறிப்பாக பெண் தொழிலாளர்கள் தொடர்பான இந்த கோரிக்கைகள் எதையும் ஊதியங்கள் சட்டம் 2015 தீர்க்கவில்லை. உண்மையில் இது ஒரு அடி பின்னால் சென்றிருக்கிறது. முந்தைய சட்டம், வேலை வாய்ப்பில் பெண் தொழிலாளர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதை தடுப்பதோடு, தொழில் சக்தியில் பெண்கள் பெருமளவில் பங்கேற்பதை உறுதி செய்ய, 50% பெண்களைக் கொண்ட அறிவுரைக் குழுக்களை அரசாங்கம் அமைக்க வேண்டுமெனவும், பெண் தொழிலாளர்களுடைய புகார்களை விசாரிப்பதற்கு தொழிலாளர் அதிகாரிகளை நியமிக்க வேண்டுமெனவும் கூறுகிறது. ஊதியங்கள் சட்டம் 2015-இல், வேலை வாய்ப்பில் பெண்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டப்படுவதை தடுத்தோ, அல்லது அறிவுரைக் குழு அமைப்பது பற்றியோ அல்லது தொழிலாளர் அதிகாரிகளை நியமிப்பது குறித்தோ எதுவும் இடம்பெறவில்லை.

"கண்காணிப்பு அரசை" மாற்றி "ஊக்குவிப்பவர்கள்" கொண்டு வரப்படும்

இது முதலாளிகளுடைய நெடுநாளைய கோரிக்கையாகும். இந்தப் புதிய சட்டம், தொழிற்சாலை கண்காணிப்பாளர்களையும் அவர்களுடைய அதிகாரத்தையும் அகற்றி விடுகிறது. அது, "ஊக்குவிப்பவர்கள்" என்ற புதிய வேலையை உருவாக்குகிறது. அவர்கள் இந்த புதிய சட்டத்தை "நடைமுறைப்படுத்துவதற்கு" முதலாளிகளுக்கு உதவுவார்கள்! இந்த "ஊக்குவிப்பவர்கள்", இன்றைய கண்காணிப்பாளர்கள் செய்வதை முறைப்படி இவர்களும் செய்வார்கள். அதாவது, முதலாளிகளிடம் அவர்கள் இந்த சட்டத்தை மீறுகிறார்களென சொல்லி, முதலாளிகள் தங்களைக் காத்துக் கொள்ள மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரை கொடுப்பார்கள். அதாவது, தொழிலாளர்களுடைய உரிமைகளை மீறியதற்காக முதலாளிகள் இலஞ்சம் எதுவும் கொடுக்க வேண்டியத் தேவை இருக்காது. மற்றும், ஒரு நேர்மையான கண்காணிப்பாளர் தொழிலாளர்களுடைய உரிமைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென கேட்பதற்கு எந்த இடமும் இருக்காது.

"கண்காணிப்பு அரசு" மீது தொழிலாளர்களுக்கு எந்த விருப்பமும் இல்லை. அவர்கள் விரும்புவதெல்லாம், தங்களுடைய உரிமைகளுக்கு உத்திரவாதமும், சட்டத்தால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். இந்தப் புதிய சட்டம் உரிமைகளுக்கு உத்திரவாதமோ, அதை நடைமுறைப்படுத்துவதற்கு வழிமுறைகளையோ அளிக்கவில்லை.

புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, எல்லா ஊதியம் மற்றும் சம்பளம் வாங்குபவர்களைத் தொழிலாளர்களாக மின்னணுவியல் முறையில் பதிவு செய்ய முடியும் என்பதைத் தொழிலாளர்கள் கோரி வருகின்றனர். நவீன விளக்கங்களின் அடிப்படையில் தொழிலாளர்களுடைய உரிமைகள், அவற்றை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளோடு நிறுவப்பட வேண்டும். இந்த உரிமைகளில், வளமான உணவு, ஆடைகள், போதுமான இருப்பிடம், குழந்தைகளின் கல்வி, குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம், மருத்துவ வசதிகள் மற்றும் காயங்களுக்கு பாதுகாப்பு, ஓய்வூதியம் போன்றவற்றை உறுதி செய்யும் ஒரு குறைந்த பட்ச ஊதியமும் அடங்கும். தொழிலாளர்களுடைய இக் கோரிக்கையை இச் சட்டம் பொருட்படுத்தவேயில்லை.

ஊதியங்கள் சட்டம் 2015-ஐ இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி கண்டனம் செய்கிறது. தொழிலாளர் உரிமைகளுடைய நவீன விளக்கத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தை தொழிலாளி வர்க்கமும், அதனுடைய எல்லா அமைப்புக்களும் தீவிரப்படுத்த வேண்டுமென அறைகூவல் விடுகிறது.