daadhaar for cows

இனப்பெருக்கத்திற்காக ராஜஸ்தானிலிருந்து 50 மாடுகளைத் தமிழக அரசின் சார்பில் விலைக்கு வாங்கி, இரண்டு லாரிகளில் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவந்த, தமிழ் நாட்டைச் சேர்ந்த, கால்நடை மருத்துவர் ஒருவர், நான்கு அரசு ஊழியர்கள் ஆகியோர், பசுப் பாதுகாப்புக் குழு என்று சொல்லிக்கொள்ளும் வன்முறைக் கூட்டத்தினரால், ராஜஸ்தானில் தாக்கப்பட்டுள்ளனர்.

பசு வதையைத் தடுக்கிறோம் என்ற பெயரில், இனப்பெருக்கத்திற்காக வாங்கி வந்த மாடுகளைத் தடுத்துக் கொண்டுபோய் உள்ளனர். ஒரு லாரியைத் தீ வைத்துக் கொளுத்த முயன்றுள்ளனர். தமிழர்களைத் தாக்கியுள்ளனர். இது குறித்து வாய் திறக்கவில்லை தமிழக அரசு.

சட்டப்படி ஆவணகளைக் காட்டி, ஜெய்சல்மர் மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழையும் பெற்று வந்துள்ள தமிழக அரசு ஊழியர்கள், பால்மர் மாவட்டத்தில் இடைமறிக்கப்பட்ட வேளையில், அனைத்துச் சான்றுகளையும் காட்டியுள்ளனர். ஆனால் அந்த வன்முறைக் கும்பல், எதனையும் ஏற்கவில்லை. கண்மூடித்தனமாக அவர்களை அடித்துள்ளனர்.

மாட்டிறைச்சித் தடைச் சட்டத் திருத்தம் வந்து இரண்டு வாரங்கள் ஆகி விட்டன. இன்னமும் அந்த ஆணையைப் படித்துப் பார்க்கவில்லை என்று சொல்லும் ஒருவர்தான் தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கின்றார். ராஜஸ்தானில் தமிழர்கள் தாக்கப்பட்டிருக்கும் இந்த வேளையிலும் அவர் வாய் மூடி மௌனமாக உள்ளார்.

நாதியற்றுப் போனோம் நாம்!