இந்தியாவின் மொழிச் சிக்கல் மூன்று வகைப்பட்டது. ஒன்று ஆட்சி தொடர்பானது, இரண்டாவது கல்வி தொடர்பானது, மூன்றாவது இசை, வழிபாடு முதலியன தொடர்பானது.

anna 322இப்போது எழுந்திருப்பது கல்வி தொடர்பான மொழிச் சிக்கல். இதனை 1937ஆம் ஆண்டின் தொடர்ச்சி என்று சொல்லலாம். அப்போது தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ராஜாஜி, கல்விக்கூடங்களில் தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்து, இந்தியும் மூன்றாவது கட்டாயப் பாடம் என்னும் ஆணையை வெளியிட்டார். அதனை எதிர்த்து நாடெங்கும் கிளர்ச்சிகள் நடைபெற்றன.

1939ஆம் ஆண்டு, இந்தியாவெங்கும் காங்கிரஸ் கட்சி பதவி விலகுவது என்று முடிவெடுத்ததற்கு இணங்க, ராஜாஜியும் பதவி விலகினார். அதன்பின் 1940இல் ஆங்கிலேய அரசு அந்த ஆணையைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. எனினும், பள்ளிகளில், கட்டாயப் பாடமாக இல்லையென்றாலும், விருப்பப் பாடமாக இந்தி நீடித்தது. இந்தி வினாத்தாளையாவது அப்படியே திரும்ப விடைத்தாளில் எழுதிவிட்டுப் போகுமாறு அன்றைய மாணவர்கள் வலியுறுத்தப்பட்டனர்.

1967இல் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அறிஞர் அண்ணா, 23-1-1968 அன்று சட்டமன்றத்தைக் கல்வி தொடர்பான மொழிச்சிக்கல் குறித்துப் பேசுவதற்காக மட்டுமே கூட்டினார். அன்றுதான் மும்மொழிக் கொள்கை என்னும் கோட்பாடு முற்றிலுமாக அகற்றப்பட்டு, தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் இனி இருமொழிகள்(தமிழ், ஆங்கிலம்) மட்டுமே கற்பிக்கப்படும் என்று திட்டவட்டமாக அண்ணா அறிவித்தார். இன்று வரை அந்நிலையே தொடர்கிறது. இப்போது புதிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரையில், இந்தியா முழுவதும் மும்மொழிக் கொள்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, இந்தியா முழுமைக்கும்தானே இத்திட்டத்தைக் கொண்டு வருகிறோம் என்று சமாதானம் சொல்லப்படுகிறது. இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயப் பாடமாக இருக்குமென்றும், இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியாவின் மொழிகளில் ஏதேனும் ஒன்று மூன்றாவது மொழிப் பாடமாக இடம்பெறும் என்றும் கூறுகின்றனர்.

இந்தக் கூற்றிலேயே ஒரு சமத்துவமின்மை இருப்பதைக் காண முடியும். இந்தியாவின் மொழிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு இருக்கிறது. ஆதலால், அண்டை மாநில மொழி ஒன்றை அல்லது இந்தியின் கிளை மொழி ஒன்றை அவர்கள் படித்துக் கொள்ளலாம். ஆனால் நாமோ, நமக்குத் தொடர்பும் பயனும் அற்ற இந்தி மொழியைத்தான் கட்டாயம் படித்தாக வேண்டும்.

தேவையையும், திறமையையும் ஒட்டி நாம் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். அது அவரவர் விருப்பமும், உரிமையும் சார்ந்ததாகும். ஆனால் எந்தவொரு மொழியையும் படித்தே தீர வேண்டும் கட்டாயப்படுத்துவது ஆதிக்கப் போக்கின் அடையாளமே.

ஆதிக்கத்தை எதிர்த்து அன்றும் தமிழகம் களத்தில் நின்றது. இன்றும் களம் காண அணியமாய் உள்ளது. நாம் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை. ஆனால் எல்லா விதமான ஆதிக்கத்துக்கும் எதிரானவர்கள்.

மொழி அறிவு சிறந்தது என்பதை நாம் மறுக்கவில்லை. அதனினும், மொழியால் பெறும் அறிவே மிக மிகச் சிறந்தது என்பதை அரசும் ஆதிக்கவாதிகளும் உணர்ந்திட வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் பணக்கார மாணவர்கள் இந்தியைக் கற்றுக் கொள்ள வாய்ப்பு உள்ளது. ஆனால் அரசுப் பள்ளிகளில் அந்த வாய்ப்பு ஏழை மாணவர்களுக்கு ஏன் மறுக்கப்பட வேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

அடிப்படைத் தேவைகளை நோக்கியே அரசு செயல்பட முடியும். அதனை மிஞ்சிய ஓவ்வொருவரின் தேவையையும், ஒட்டுமொத்த மக்களின் வரிப்பணத்தில் அரசு நிறைவேற்ற முடியாது. அப்படிப் பார்த்தால், உலகில் மிகுதியான மக்களால் பேசப்படும் பிரெஞ்சு, ஸ்பானிஷ், சீனம் ஆகிய மொழிகளையும் ஏழைப் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்கக் கூடாதா என்ற வாதமும் எழும்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் ஏழைப் பிள்ளைகளுக்கு இந்தி கற்றுக் கொடுப்பதோ, பன்மொழி அறிவை வளர்ப்பதோ இவர்களின் நோக்கம் இல்லை. இந்தியை, இந்தி வழி சமஸ்கிருதத்தைத் திணிப்பதும் அதன் மூலமாக பார்ப்பனிய வல்லாதிக்கத்திற்கு வழிவிடுவதுமே மத்திய அரசின் நோக்கம்.

அந்த நோக்கத்திற்கு மானமிகு தமிழர்களாகிய நாம் ஒருநாளும் மண்டியிட மாட்டோம்.