வான் பொய்ப்பினும் தான் பொய்யா காவிரி இன்று பொய்த்துப் போய்விட்டது. சோறுடைத்த சோழ நாட்டு விவசாயிகள் சோற்றுக்கே திண்டாட வேண்டிய அவலநிலை.

கடந்த காலங்களில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் போராட்டங்கள், அரசியல் கட்சிகளின் போராட்டங்களைத் தொடர்ந்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்குகளைச் சந்தித்ததின் விளைவாக, 192 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது. கர்நாடகத்திற்கு 270 டி.எம்.சி. நீர் ஒதுக்கப்பட்டது.

இத்தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டதும், காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவையு-ம் அமைக்க நடுவர் மன்றம் உத்தரவிட்டது.

கர்நாடாக மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்றார். ஒட்டுமொத்த இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் அமைச்சராக உள்ள ஒருவர், இப்படிப் பொறுப்பற்றுப் பேசலாமா என்று, பொறுப்பான தமிழக முதல்வர் கண்டிக்க முன்வரவில்லை. அது தேவையற்ற வேலை என்றும் சொல்லிவிட்டார்.

வாரியம் அமைப்பதைப் பற்றி எந்த யோசனையும் இல்லை என்கிறார் பிரதமர் மோடி. அவருக்கு கால அவகாசம் வேண்டாமா என்று பாசத்தைக் கொட்டுகிறார் ஜெயலலிதா.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி மத்திய அரசை வலியுறுத்த, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று, தி.மு.கழகத் தலைவர் கலைஞர் உள்ளிட்ட, தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. தான் டெல்லி சென்று, பிரதமரிடம் மனு கொடுத்ததே போதும், காவிரி நீர் வீட்டு வாசலுக்கு வந்துவிடும் என்னும் அளவுக்குத் தமிழக முதல்வர் ஜெயலலிதா நடந்து கொள்கிறார்.

வாரியம் அமைப்பதில் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த கருத்து கொண்டிருப்பதால், அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி, அவற்றின் கருத்தைக் கேட்க வேண்டிய தேவை இல்லை என்று ஆணவத்துடன் அறிவித்து விட்டார். அப்படிப்பார்த்தால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்பதில் கர்நாடாக அரசியல் கட்சிகள் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளன. இருந்தும் கர்நாடக முதல்வர் சித்தராமையா அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவில்லையா?

இதுபோன்ற சிக்கல்களில், சட்ட ரீதியான அழுத்தம் கொடுப்பது ஒருபுறம் நடந்தாலும், அரசியல் ரீதியிலான அழுத்தம் கொடுப்பதும் அவசியமானது என்பது ஜெயலலிதாவுக்குத் தெரியாதா?

தெரியும். ஆனாலும், தமிழக மக்களின் நலனைவிட, தான் என்னும் ஆதிக்க எண்ணமே அவரிடம் மிகுந்துள்ளது. இந்தப் போக்கு எந்தவிதத்திலும் நல்லதில்லை.