இந்திய ஒன்றியத்தின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்க இருக்கிறார் திரெளபதி முர்மு அவர்கள்.

அண்டை நாடான இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே அதிபராகி விட்டார். ஏறத்தாழ இருவரும் ஏககாலத்தில் நாட்டின் தலைமைப் பொறுப்புகளை ஏற்கிறார்கள்.

ராஜபக்சே சகோதரர்களால் இலங்கை சின்னாபின்னமாக ஆக்கப்பட்டு விட்டது.

ஈழத்தின் மீது நடத்தப்பட்ட போர், ஐ.எம்.எப் இடம் வாங்கிய அத்துமீறிய கடன், தாமரைத் தூண் கட்டிய மக்களின் வரிப்பணம், அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு சீனாவிடம் கொடுத்து விட்டு வாங்கிய பில்லியன் கணக்கான கடன், அளவுக்கு மீறி அச்சடிக்கப்பட்ட ருபாய் நோட்டுகள், பண மதிப்பிழப்பு, உணவுக்கும் - எரிபொருளுக்கும் அலைந்து கொண்டிருக்கும் மக்கள், அரசை எதிர்த்து மக்களின் போராட்டம் இப்படிப்பட்ட சூழலில் இலங்கையின் அதிபராக ஆகியிருக்கிறார் ரணில்.

இந்திய ஒன்றியத்தின் உதவியைத் தவிர வேறு எந்த உதவியும் கிடைக்காத நிலையில், உதவி செய்ய உலக நாடுகள் தயங்கும் நிலையில் பொறுப்பேற்றுள்ளார் ரணில் விக்ரமசிங்கே. என்ன செய்யப் போகிறார், அவர்?

இந்திய ஒன்றியத்தின் மோடி அரசு, அரசின் சொத்துக்களான வங்கிகள், எல்.ஐ.சி, ஏர்இந்தியா, தபால் தந்தித்துறை, நிலக்கரிச் சுரங்கங்கள், இரயில்வே என்று ஒவ்வொன்றாகத் தனியார் மயப்படுத்தி வருகிறது. இது பெரிய அளவில் வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்கக் கூடும்.

போதாக்குறைக்கு ஏழை நடுத்தர மக்களைப் பாதிக்கும் அளவுக்குப் பால், அரிசி, வெண்ணெய், இறைச்சி, பள்ளிக் குழந்தைகளுக்கான பென்சில், ரப்பர், நோட்டுகள் என்று ஜி.எஸ்.டி. வரிகளைத் திணித்துக் கொண்டு இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ருபாயின் மதிப்பு ஏறத்தாழ 80 என்று சரிந்து பணவீக்கத்தைக் காட்டுகிறது.

முக்கியமாக ஒன்றிய அரசுக்கும், மாநிலங்களின் அரசுகளுக்குமான முரண்பட்ட நிலைகள், அதில் ஒன்றியம் காட்டும் ஆதிக்கம்....

இப்படிப்பட்ட நிலையில் திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் ஆகிறார். நாட்டின் எதிர்காலம் சிறப்படைய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

பழங்குடிச் சமூகத்தில் இருந்து, குறிப்பாக ஒரு பெண் குடியரசுத் தலைவராகிறார் என்பது மகிழ்ச்சியே.

ஆனால் அந்த மகிழ்ச்சி மட்டும் போதாது. பழங்குடி மக்களின் கல்வி உள்ளிட்ட அவர்களின் வாழ்க்கையும் உயர வேண்டும். இதுவும் சமூக நீதியில் அடங்கும்.

இதோ வாழ்த்து தெரிவிக்கிறார் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘இந்தியாவின் மிக உயர்ந்த அரசியலமைப்புப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்முவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவில் இருந்து வந்துள்ள நீங்கள், அரசியலமைப்புசார் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த, உரிமைகள் மறுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகத் துணை நிற்பீர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்’!