கடந்த ஆண்டு திசம்பர் 26, 27 தேதிகளில் தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டின் முதல் நாள் பிற்பகல் அரங்கில் ‘ஈழம் நிமிரும் காலம்’ என்கிற தலைப்பில் உரையாற்றக் கிடைத்த வாய்ப்பில், அங்கு முன் வைக்கப்பட்ட கருத்துகள் இவை. நேரம் கருதி முழுமையாய் முன்வைக்க இயலாமல் போன கருத்துகளையும் உள்ளடக்கிய இக்கட்டுரை இங்கு “தமிழீழம் தலை நிமிரும் காலம்” என்கிற தலைப்பில் இடம் பெறுகிறது. இக்கட்டுரை குறித்த மனம் திறந்த விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன.                                                        - ஆசிரியர்

தமிழீழ விடுதலைப் போரின் முன்னணிப் படையாக, ஈட்டிமுனையாக விளங்கியவர்கள் விடுதலைப் புலிகள். இப்புவிக்கோளில் தங்கள் விடுதலைக்காகப் போராடிய வேறு எந்த ஒரு இயக்கமும் கொண்டிராத அளவுக்கு தரைப்படை, கடற்படை, வான்படை என முப்படைகளையும் கொண்டு விளங்கியவர்கள். இதன்வழி இலங்கை நாட்டின் மூன்றில் ஒரு பகுதியாகத் திகழும் தமிழீழத் தாயகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்கள்.

கட்டுப்பாடு என்றால், வெறும் ராணுவக் கட்டுப்பாடாக மட்டும் அல்லாமல், ஒட்டு மொத்த குடிமை நிர்வாகத்தையும் அதாவது, பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ விடுதிகள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், வங்கிகள் முதலான பலவற்றையும் இவர்களே நடத்தி வந்தனர்.

இலங்கை அரசு 1956இல் கொண்டு வந்த சிங்களம் மட்டுமே ஆட்சி மொழிச் சட்டத்தைத் தொடர்ந்து தமிழீழப் பகுதிகளில் எழுந்த எதிர்ப்பை யட்டியும், பின்னாளில் போராளிகள் இயக்கம் வலுப் பெற்றதை யட்டியும் இலங்கை அதிபர்கள் எவரும் ஈழ மண்ணில் கால் வைக்கவேத் தயங்கி எவருமே இப்பக்கம் திரும்பிப் பார்க்காத அளவு செல்வாக்கோடு இருந்தவர்கள்.

மொத்தத்தில் தமிழீழத்தை அங்கீகரிக்க ஏதேனும் நாடுகள் தயா ராக இருந்திருந்தால் தனித் தமிழீழத் தைப் பிரகடனம் செய்யுமளவுக்கு வலிமையோடு இருந்தவர்கள்.

இப்படிப்பட்ட வலிமையோடு விளங்கிய போராளிகள் அமைப்புதான் இன்று கடும் பின்னடைவுகளுக்கும், பேரழிவுகளுக்கும் உள்ளாகியிருக் கிறது. தாங்கள் இதுகாறும் கால் வைக்க அஞ்சிய தமிழீழ மண்ணில் தான், கிளிநொச்சியை வீழ்த்தியபின் அதிபர் ராஜபக்ஷே வந்து பார்வை யிட்டு, சிங்கள ராணுவத்திற்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துச் சென்றிருக்கிறார்.

இச்சூழலில் போராளி அமைப் பின் இப்பின்னடைவுகளுக்கும், பேரழிவு களுக்கும் யார் காரணம், எது காரணம் என்பது பற்றி நாம் ஆராய வேண்டியிருக்கிறது. இப்படி ஆராய்ந்து தெளிந்தால்தான் இதி லிருந்து மீள்வதற்கான வழிமுறைகளும் பிறக்கும் என்று தோன்றுகிறது. இந்த வகையில், இதற்குக் காரணம்

1. இந்திய அரசு, 2. தமிழக அரசு, 3. தமிழக அரசியல் கட்சிகள், அமைப்புகள்.

இந்திய அரசு : இலங்கை சார்ந்த இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை என்பது, இலங்கை அரசு சீனா, பாகிஸ்தான் பக்கம் அதிகம் சாய்ந்து விடாமல் இருக்கவும், அது தன்னைச் சார்ந்து தன்னோடு நெருக் கமாக இருக்கவும் அதற்கு எல்லாவித உதவிகளையும் செய்து அதைச் செல்லப் பிள்ளை மனோபாவத்தோடு நடத்தி வருவதாகவும், இலங்கை சண்டிப் பிள்ளையாக இருந்து தன் காரியங்களைச் சாதித்து வருவதாகவுமே இருந்து வருகிறது என்பதை இலங்கை சார்ந்த இந்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகள் வழி உணரலாம்.

தனித்து நின்று போரிட்டால் புலிகள் அமைப்பை ஒரு போதும் வெல்ல முடியாது என்றிருந்த சிங்களப் படைக்கு அப்புலிகளை வெற்றி கொள்ளவும், படையரண்களைத் தாக்கி அழிக்கவும் அனைத்து உதவி களையும் செய்தது இந்திய அரசு.

ஒருபுறம் தமிழீழப் பிரச்சினை இலங்கை அரசின் உள்நாட்டுப் பிரச்சினை, அதில் தலையிட முடியாது என்று சொல்லிக் கொண்டே, மறு புறம் சிங்கள ராணுவத்துக்கு இந்தியா இப்படிப்பட்ட எல்லா உதவிகளையும் செய்தது.

இந்திய ராணுவ அதிகாரிகளை நேரடியாக களத்துக்கு அனுப்பி சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி அளித் தது. ராணுவ தளங்களைச் செப்ப னிட்டுத் தந்தது. புலிகளின் விமானங் களை எதிர்கொள்ள ராடார்கள் தந்து உதவியது. புலிகள் அமைப்பின் வெளி யுலகத் தொடர்பிற்கு நிலவிய ஒரே வழித்தடத்தை, வங்க, இந்துமாக் கடற் பகுதியைத் தன் கண்காணிப்பில், கட்டுப்பாட்டில் வைத்து, புலிகள் அமைப்பை முடக்கிப் போட சிங்கள அரசுக்கு துணைபோனது.

வெளியில் தெரிந்த இந்த உதவி களுக்கு அப்பால் வெளியில் தெரியாத பல இரகசிய உதவிகளையும் இலங்கை அரசுக்கு இந்தியா செய்தது. காட்டாக, இந்திய விமானப் படைக்குச் சொந்த மான பதினைந்து ஹெலிகாப்டர்களை இலங்கைக்கு இலவசமாக வழங்கியது. இதை இலங்கை பயன்படுத்திக் கொள்ள இந்தியா விதித்த ஒரே நிபந்தனை, இந்திய ஹெலிகாப்டர் மீதுள்ள இந்திய விமானப் படை வண்ணப் பூச்சு எழுத்துகளை அழித்து விட்டு, அவை இலங்கை விமானப் படை வண்ணப் பூச்சு எழுத்துக்ளைப் பதித்துக் கொள்ள வேண்டும் என்பது தான்.

இந்த ஹெலிகாப்டர்களின் துணையோடுதான் இலங்கை ராணு வம் புலிகளின் நடவடிக்கைகளைக் கண் காணித்தது. அவர்களின் பதுங்கு குழிகளை படை முகாம்களைத் தேடி அழித்தது. குண்டு வீசி போராளி களையும், அப்பாவி பொது மக்களை யும் கொன்றொழித்தது.

தமிழக அரசு: இந்திய அரசு, இலங்கை அரசுக்கு இப்படி உதவியது என்றால், அதைத் தட்டிக் கேட்கவோ, தடுத்து நிறுத்தவோ எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், ஈழச் சிக்கலில் இந்திய அரசின் நிலைப்பாடு என் னவோ, அதேதான் தனது நிலைப் பாடும் என்றார் தமிழக அரசை ஆளும் தி.மு.க. தலைவர் கருணாநிதி.

அதேவேளை, தமிழக மக்கள் மத்தியில் தன் செல்வாக்கு சரிந்து விடக் கூடாது, தன் தமிழினத் தலைவர் பட்டத்திற்கு எந்த பங்கமும் நேர்ந்து விடக் கூடாது என்று, தமிழீழ மக்கள் பால் அக்கறையோடு இருப்பதாகவும், அவர்களது பாதுகாப்பிற்கும், நலன் களுக்கும் முயற்சி மேற்கொள்வ தாகவும் ஒருபுறம் பராக்கு காட்டிக் கொண்டே தில்லி அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை போனார்.

கவைக்குதவா கடிதங்களை அனுப்புவது, செயலுக்கு வராத சட்ட மன்றத் தீர்மானங்களை நிறை வேற்றி அனுப்புவது, தில்லி ஆட்சியாளர் களுக்கு இடையூடு ஏற்படுத்தா வண்ணம் கண் துடைப்பாக சில போராட்டங்களை நடத்துவது என இப்படியே பாசாங்கு செய்து தமிழக மக்களை ஏய்த்து வந்தார்.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் போராளிகளும் மக்களும் கடும் நெருக் கடிக்குள்ளான தருணங்களில் கூட அவர்களைப் பாதுகாக்கவோ, போர் நிறுத்தவோ, தில்லியை வலியுறுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், தம்மால் இவ்வளவுதான் முடியும் என்று பிரச்சினையை கை கழுவிய தோடு, பிரச்சினையைத் திசை திருப்பும் நோக்கில் ஈழத்தின் இந்நிலைக்குக் காரணம் போராளி அமைப்புகளின் சகோதர யுத்தமே, சண்டித்தனமே என நாளுக்கொரு அறிக்கை விட்டு, பட்டி மன்றம் நடத்தி பிரச்சினையைத் திசை திருப்பினார்.

மொத்தத்தில், தன் குடும்ப நலன், பதவி நலன், கட்சி நலன் காக்க, தமி ழீழப் போராளிகளுக்கும் மக்களுக்கும் திட்டமிட்டுத் துரோகம் இழைத்தார்.

தமிழக அரசியல் கட்சிகள் : தனித் தமிழ் ஈழ ஆதரவு, தமிழீழ விடு தலைப் புலிகள் ஆதரவு என்பதில் மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், ஈழத்தில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும், போராளிகளையும் பொது மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதில் தமிழகத்தில் ஆளும் கட்சி அல்லாத அனைத்து எதிர்க் கட்சிகளி டமும் ஒருமித்த கருத்து இருந்தது. இதனடிப்படையில் இவை கூட்ட மைப்பாகவோ, தனியாகவோ இயங்கி ஈழ மக்களுக்கு ஆதரவாக பல போராட் டங்களை நடத்தின.

இப்படிப்பட்ட கட்சிகளுக்கு அப்பால், தமிழகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் தமிழீழ மக்களுக்கு ஆதரவாக, ஏதோ ஒரு வகையில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகை யில் அவரவர்களுக்கு சாத்தியப்பட்ட வடிவில் நாளும் ஒரு போராட்டம் நடத்தினர். இத்துடன் பதினைந் துக்கும் மேற்பட்ட உணர்வாளர்கள் ஈழ மக்களின் விடியலுக்காக தங்கள் இன்னுயிர் ஈந்து தீக்குளித்தனர்.

ஆக, தமிழக அரசியல் கட்சிக ளெல்லாம் ஈழ மக்களுக்கு ஆதரவு, தமிழகத்து மக்கள் அனைவரும் ஈழ மக்களுக்கு ஆதரவு என்கிற புறநிலை, கொதிநிலை இருந்தும், இதை ஒன்று திரட்டி, ஒருமுகப்படுத்தி, தீவிரப் போராட்டங்களை நடத்தி தில்லி அரசை நிலைகுலையச் செய்து, இலங்கை சார்ந்த அதன் நிலைபாட்டில் மாற்றம் கொண்டு வரச் செய்யு மளவுக்கு, தமிழகத்தில் நம்பிக்கை யூட்டும் தலைமையோ அமைப்போ இல்லை.

பல்வேறு அமைப்புகள் நடத்திய பல்வேறு போராட்டங்களும் வாடிக் கையான, வழக்கமான போராட்ட வடிவங்களைக் கொண்டதாக இருந் ததே தவிர, தில்லி, தமிழக அரசு களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகை யிலான போராட்டங்களாக இவை அமையவில்லை.

தமிழகத்தில் நிலவிய இக்கொதி நிலையைத் தணிக்கும், திசை திருப்பும் முயற்சியில் கருணாநிதி மேற் கொண்ட பல போலி நடவடிக்கைகள், போராட் டங்களை எதிர்கொள்ளும் அளவுக்கு கருணாநிதியால் நடத்த முடியாத எந்தப் போராட்டத்தையும் இந்த எதிர்க் கட்சிகள் நடத்தவில்லை.

அப்போது மட்டும் தமிழகக் கட்சிகள், அமைப்புகள் அனைத்தும் அல்லா விட்டாலும், ஈழ விடுதலை ஆதரவில் முன்னோடியாகவும், தீவிர மாகவும் இருக்கும் கட்சிகள் மட்டு மாவது ஒன்றுபட்டு, சென்னை சென்ட்ரல், அண்ணா சாலை அல்லது கத்திப்பாரா சந்திப்பில் சில இலட்சம் மக்களைத் திரட்டி ஒரு எழுச்சிமிகு முற்றுகைப் போராட்டத்தைக் கால வரையற்று நடத்தியிருக்குமானால், தெலுங்கானா போராட்டம் போல் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக் குமானால் தில்லி, தமிழக அரசுகள் பணிந்து வருமளவுக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டிருக்கும். அதன் நிலைபாடு களில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கும். குறைந்தபட்சம் போர் நிறுத்தத்திற் கேனும் ஒரு வழி பிறந்திருக்கும்.

ஆனால் அப்படி ஒரு நெருக் கடியை ஏற்படுத்தாமல் அந்தந்தக் கட்சியும் அதனதன் நலன் சார்ந்த நோக்கில் கடைசி வரை தில்லி அரசுக்கு ஆதரவு தந்து வந்ததும், அமைச்சர் பதவியை, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்காமல் நீடித்து இருந்து வந்ததும் மக்கள் மத்தியில் அவநம்பிக் கையை ஏற்படுத்தியது.

தில்லி அரசும் தி.மு.க. தனக்கு ஆதரவாக இருக்கும் வரை பிற எதிர்க் கட்சிகளால் தமக்கு எந்த வகையிலும் பாதிப்பு இல்லை, அப்படி பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எந்தக் கட்சியும் போராடப் போவதும் இல்லை, அப்படியே ஏதும் போராடினாலும் தி.மு.க. அதைப் பார்த்துக் கொள்ளும் என்கிற நம்பிக்கையோடும் தெம் போடும் இருந்தது. நடப்பும் அவ் வாறேதான் முடிந்தது.

இதனால்தான் தமிழகம் புதுவை சார்பில் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், இவர்கள் ஆதரவு இல்லையாயின் ஆட்சியே கவிழ்வது உறுதி என்கிற நிலை இருந் தும், தில்லி அரசு எந்த நெருக்கடிக்கும் ஆளாகாமல், தன் நிலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து சிங்கள அரசுக்கு உதவி வந்தது.

எனவே, விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு, தமிழீழ மக்களின் அவல நிலைக்கு இந்தக் கட்சிகளும் - நாமும் ஒரு காரணம் என்பதையும் நாம் மனம் திறந்து ஏற்றுக் கொள்ளவேண்டும்.

இவற்றை இங்கே குறிப்பிடுவதன் நோக்கம் எந்தத் தலைவரையும் அமைப்பையும் தனிப்பட்ட முறையில் குறை கூறவோ, விமர்சனத்திற்குள் ளாக்கவோ அல்ல. மாறாக, தமிழக அரசியல் கட்சிகள் எல்லாம், தமிழக மக்கள் பிரிவினர் எல்லாம் ஈழ மக் களுக்கு ஆதரவாக இருந்தும், அந்த ஆதரவை வைத்து ஈழ மக்களையும், போராளிகளையும் காப்பாற்ற இயலா மல், நம் கண்ணெதிரில் இப்படி ஒரு பேரழவு நிகழ விட்டோமே, அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந் தோமே, இப்படி ஒரு நிலை நேர ஏதோ ஒரு வகையில் நாமும் ஒரு கார ணமாக இருந்திருக்கிறோமே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான். அதோடு இதுபற்றி நமக்கு சரியான ஒரு புரிதல், தெளிவு இருந்தால் தான் நாம் நமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை செவ்வனே திட்டமிட, நிறைவேற்ற இயலும் என்பதுதான்.

இன்று ஈழ விடுதலைப் போராட் டம் என்பது ஒரு மாபெரும் வீழ்ச் சியைச் சந்தித்துள்ளது. போராளித் தலைவர்களின் யார், யார் உயிரோடு இருக்கிறார்கள், யார் மறைந்தார்கள் என்கிற தெளிவான விபரம் நமக்குக் கிட்டாமல் இருக்கிறது. இந்நிலையில் களத்தில் போராளிகளை வீழ்த்திய சிங்கள இனவெறி அரசு உலகெங்கும் இப்போராளி அமைப்பின் ஆதர வாளர்கள், நிதியுதவி செய்பவர்கள் யார் யார் என இனங்கண்டு அவர் களை வேட்டையாடவும், போராளி அமைப்பின் நிதியாதாரத்துக்கான தொழில், வணிக நிறுவனங்களை, நிறுவனப் பங்குகளை முடக்கவும், பறிமுதல் செய்யவுமான நடவடிக்கை களில் ஈடுபட்டு, போராளி அமைப் பின் அனைத்து வேர்களையும் துண் டிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் போராளிகள் அமைப்பைச் சார்ந்தவர்கள் 3000 முதல் 5000 பேர் வரை தப்பித்து வன்னிக் காடுகளில், புராதன போர்ச்சுக்கீசியக் கோட்டைகளில் ஒளிந்திருப்பதாகவும், கூடிய விரைவிலேயே இவர்கள் தங் களை அணியப்படுத்திக் கொண்டு மீண்டும் கொரில்லாத் தாக்குதல் வழி விடுதலைப் போராட்டத்தைத் தொடர்வார்கள் என்றும் கூறப் படுகிறது. இது தவிர, போராளி அமைப் பின் எதிர்காலத்தை வழி நடத் தும், உரிமை கொண்டாடும் நோக்கில் சில அமைப்புகள். உலகெங்கும் விரவிக் கிடக்கும் ஈழத் தமிழர்களை ஒன்றி ணைத்து நாடு கடந்த தமிழீழ அரசை நிறுவும் முயற்சியில் ஒரு புறமும், மைய அமைப்பு என்கிற முறையில் மாவீரர் நாள் அறிக்கை வெளியிட்டு ஒரு புறமும் அதனதன் போக்கிலான நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில், தமிழீழத்தின் எதிர் காலம் குறித்தும் அதன் உள்ளார்ந்த மற்றும் புறவயமான சிக்கல் குறித்தும் நாம் அறிவார்ந்த நோக்கில் பல வற்றைச் சிந்திக்க வேண்டியுள்ளது.

எந்த ஒரு விடுதலைப் போராட் டத்திற்கும், போராட்டத்திற்கான புறச் சூழல், போராளி அமைப்பின் வலிமை, போராடும் பகுதியின் புவி யியல் இருப்பு, போராளி அமைப்புக் கான பிற ஆதரவுகள், பின்புலம் ஆகிய பல்வேறு காரணிகள் முக்கிய பங் காற்றுகின்றன.

வியட்நாம் அமெரிக்க ஏகாதி பத்தியத்தை எதிர்த்து 30 ஆண்டுகளுக் கும் மேலாகப் போராடியது. அமெரிக்கா நவீனரக ஆயுதங்களைக் கொண்டு போராளிகளை ஒடுக்க முயன்றதுடன், வியட்நாமின் ஒரு தலைமுறையையே முற்றாக அழிக்கும் நோக்கில், விஷம் தோய்ந்த சாக் லேட்டுகளை பள்ளிகள், குடியிருப்புப் பகுதிகளில் விமானத்திலேயே இருந்து வீசியது. அத்தனையையும் முறியடித்து வியட்நாமியர்கள் வெற்றி கொண் டார்கள் என்றால், அதன் வெற்றிக்குக் காரணம் அதன் புவியியல் இருப்பு, ருஷ்ய, சீன நாடுகளின் உதவிகள், அதற்கு ஆதரவான பின்புலன்.

தென்னாப்பிரிக்க நிறவெறி அரசை எதிர்த்த கருப்பின மக்களின் போராட்டத் தலைவர் நெல்சன் மண் டேலா 26 ஆண்டுகள் சிறையிலிருந் தார். இயக்கம் சொல்லொணா நெருக் கடிகளைச் சந்தித்தது. மக்கள் வதைக் குள்ளானார்கள். ஆனாலும் அவர் சிறை மீண்டார். தென்னாப்பிரிக்கா விடுதலை இயக்கம் வெற்றி பெற்றது. காரணம், தென்னாப்பிரிக்காவுக்கு ஆப்பிரிக்க நாடுகள் பலதும் பின்புல னாயிருந்தன. அந்நாடுகள் தென்னாப் பிரிக்காவுக்கு பல வகையிலும் உதவின. எந்த ஒரு ஆப்பிரிக்க நாட் டுக்கும் நெல்சன் மண்டேலா செல் லலாம். அங்கு தங்கலாம். பாதுகாப் பாக இருக்கலாம் என்ப தற்கான வாய்ப்பான சூழல் நிலவியது.

ஆனால் ஈழத்தின் நிலைமை அப்படி யல்ல. இங்கு நடை பெறும் போராட்டத் தின் புறக் காரணங்கள் நியாயங்கள் பற்றியோ, போராளி அமைப்பின் வலிமை, போர்த்திறம், மனத்திண்மை பற் றியோ எவருக்கும் மாற் றுக்கருத்து இருக்க முடி யாது. இருந்தும் இப் போராட்டத்தின் பின் னடைவுக்கு முக்கியக் காரணம், தமிழீழத்தின் புவியியல் இருப்பும், அதன் பின்புலன் அற்ற தன்மையுமே ஆகும்.

முதலில் ஈழத்தின் புவியியல் அமைப்பு. இன்றுள்ள தமிழீழத் தாயகப் பகுதி என்பது வடக்கு கிழக்காக வாலாக நீண்டு, இலங்கை நிலப்பரப்பின் மேற்புறம் அதன் கழுத்தில் ஓர் மாலை அணிவிக்கப் பட்டது போல் அமைந் துள்ளது. ஒரு காலத்தில், தமிழர்கள் இலங்கை அரசின் உயர் பதவிகளை அதிகம் வகித்து சிங்களர் மிகவும் பின் தங்கியிருந்தபோது, சொல்வார்களாம், சிங்கள சிறுவன் ஒருவன் கைகளையும் கால்களையும் முடக்கிக் கொண்டு படுத்திருக்க, தாய் கேட்பாளாம், ‘ஏன் மகனே இப்படி ஒடுங்கிக் கிடக்கிறாய்’ என்று. அதற்கு மகன் சொல்வானாம், என்னம்மா செய்வது, வடக்கேயும் கிழக்கேயும் தமிழர்கள், தெற்கேயும் மேற்கேயும் கடல்கள், எப்படியம்மா காலை நீட்டிப் படுக்க முடியும்’ என் பானாம்.

அதைப்போல இன்று தமிழீழத் தமிழர்களுக்கு, தமிழீழப் போராளி களுக்கு நெருக்கடி. தமிழீழத்திற்கு தெற்கேயும் மேற்கேயும் சிங்களர்கள், சிங்கள அரசின் ஆதிக்கத்திற்குட்பட்ட பகுதி. வடக்கேயும் கிழக்கேயும் கடல்கள். இந்தக் கடற்பகுதிதான் போராளி அமைப்புகளின் வெளியுலகத் தொடர்புக்கு, போக்கு வரத்திற்கு எல்லா வகையிலும் நல்ல வாய்ப்பாக இருந்தது. போராளிகளின் வீழ்ச்சிக்கு சில மாதங்கள் முன்பு வரை இது முழுக்க முழுக்க புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்தது.

ஆனால் இந்தக் கடல் பகுதியை இந்திய அரசு ஆக்கிரமித்து அதைத் தன் கண்காணிப்பில் கட்டுப்பாட்டில் வைத்து, சிங்கள கடற்படைக்கு உதவத் தொடங்கியது முதல் போராளிகளின் பாதைகள் அடைபட்டு அவர்களுக்கு இழப்புகள் ஏற்படத் தொடங்கின. வெளியிலிருந்து புலிகள் வாங்கும் உணவு, மருந்துப் பொருட்கள், ஆயுதங் கள் தடுக்கப்பட்டு கைப்பற்றப்பட் டன. அல்லது கடலில் மூழ்கடிக்கப் பட்டன. அதேபோல களத்திலிருந்து யாரும் வெளியே தப்பித்துச் செல் லவோ, வெளியிலிருந்து யாரும் களத் துக்கு வரவோ முடியாமலும் பாதைகள் மறிக்கப்பட்டன.

இதைத் தாண்டி தமிழீழ விடு தலைப் போராளிகளுக்கு பின்புலமாய் அமைய உள்ள ஒரே மாற்று தமிழகம் தான். ஆனால் இந்தத் தமிழகம் தில்லிப் பேரரசின் கையில் சிக்குண்டு சிறைப்பட்டு, போராளிகளுக்கு எந்த வகையிலும் உதவ முடியாமலும், அல் லது போராளிகளை வரவேற்கவோ, தங்க வைக்கவோ, உணவளிக்கவோ பாதுகாக்கவோ முடியாமலும், போரா ளிகளுக்காக கதறவோ, கண்ணீர் சிந்தவோவும் உரிமையற்றும் கைகள் கட்டப்பட் டதாகவும் வாய்ப் பூட்டு போடப்பட் டதாகவும் இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில், அதாவது தமிழீழம் எதிரிக ளால் சுற்றி வளைக் கப்பட்டு எல்லா பாதைகளும் அடை பட்ட நிலையில், பின்புலமாய் இருக்க வாய்ப்புள்ள தமிழ கமும் அப்படி இருக்க இயலாது சிறைப்பட்டுள்ள நிலையில், போரா ளிகள் என்னதான் வலுமிக்க அமைப் பாக இருந்தாலும் அவர்கள் எவ்வளவு தான் வீர தீரத்தோடு போரிட்டாலும், தமிழீழ விடுதலை எந்த அளவு சாத்தியம்? அப்படியே சாத்தியம் ஆனாலும் அது எந்த அளவு நிலைத்து நீடிக்கும் என்பதெல்லாம் கேள்விக் குரியதாகவே தோன்றுகின்றன.

இப்படிச் சொல்வதால், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்மீது அவ நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவோ அப்போராட்டத்தைச் சிறுமைபடுத்து வதாகவோ அல்லது அதன் நெருக்கடி களை மிகைப்படுத்திக் கூறுவதாகவோ தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இருக்கிற சிக்கலை, புற நிலைமைகளை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப நாம் நமது திட்டங்களை செயற்பாடுகளை வகுத் துக்கொள்ள வேண்டும், அல்லாது மிகைக் கற்பனைகளையும், மிகை மதிப் பீடுகளையும் உருவாக்கிக் கொண்டு, நாம் வாளாயிருந்து விடக்கூடாது. இருக்கிற சிக்கலை உணர்ந்து இதில் நம் பொறுப்புணர்ந்து நாம் செயலாற்ற வேண்டும் என்கிற நோக்கத்திலேயே இவ்வளவும்.

எனவே, இந்த வகையில் தமிழீழம் மலர, அது நிலைத்து நீடிக்க அப் போராட்டத்திற்கென்று ஏதோ ஒரு பின்புலன் தேவை. தமிழீழம் வெளி யுலகோடு போக்குவரத்து வைத்துக் கொள்ள, உதவிகள் பெற, நடமாட அதற்கு ஏதோ ஒரு பாதை தேவை என்பதையும், அது ஈழத்துக்கு சாதகமாக இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் பாதகமாகவேனும் இல்லாமல் இருக்க வேண் டும் என்பதையும் இப்படிப் பட்ட ஒரு பாதை இல்லா மல் தமிழீழ விடுதலைப் போராட்டம் வெற்றிபெற முடியாது என்பதையும் மட்டும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில் இதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி சில சிந்தனைகள்:

இலங்கையைத் தனக்கு அணுக்கமாக வைத் துக்கொள்ள இந்திய அரசு மேற்கொண்ட வெளியுறவுக் கொள்கை, இலங்கை அரசுடனான அதன் அணுகுமுறை ஆகி யன பெருமளவும் தோல்வி என்றே சொல்லலாம். இந்தியா தனக்கு உதவாவிட்டால், தான் சீனா, பாகிஸ் தானிடம் உதவிகள் பெற வேண்டி யிருக்கும் என்று அச்சமூட்டியே, இந்தியாவிடமிருந்தும், அதே வேளை சீனா, பாகிஸ்தானிடமிருந்தும் எல்லா உதவிகளையும் பெற்று போராளி அமைப்பை ஒடுக்கிய இலங்கை அரசு, தற்போது தன் காரியத்தை முடித்துக் கொண்ட களிப்பில் சீனா, பாகிஸ்தான் அரசுகளுடன் நேரடியாகவே கை கோர்த்து நிற்கிறது.

வாரந்தோறுமோ, வாரம் இரண்டு மூன்று முறையோ தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் தாக்கப்படுவதும், மீனவர்கள் பிடித்து வைத்துள்ள மீன்கள் பறிமுதல் செய்யப் படுவதும், வலைகள் மற்றும் மீன்பிடிச் சாதனங்கள் சேதப்படுத்தப்படுவதும் வாடிக்கையாகிப் போன நிலையில் தற்போது தாக்கும் சிங்களக் கப்பற் படையினருடன் சீனப்படையினரும் இருப்பதாகச் செய்திகள் தெரிவிக் கின்றன.

தவிர, தமிழகத்திற்குச் சொந்த மான கச்சத் தீவை தில்லி மூலம் தான மாகப் பெற்ற இலங்கை அரசு, தற் போது அத்தீவை ராணுவதளமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக அது சீனாவின் கூட்டுடன் அங்கு கண்காணிப்புக் கோபுரம் எழுப்பி வருவதாகவும், தளம் அமைப் பதற்கான ஆயத்தப் பணிகளை மேற் கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜபக்ஷே அரசின் இந்த சீன ஆதரவு நடவடிக்கைகள் அமெரிக்கா வுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளன. எனவே அது ராஜபக்ஷேவுக்கும் பொன் சேகாவுக்கும் ஏற்பட்டுள்ள முரண்பாட்டைப் பயன்படுத்தி, ராஜ பக்ஷேவுக்கு எதிராக பொன் சேகாவை உருவாக்கவும், தனக்கு ஆதரவாக பொன்சேகாவைப் படிய வைக்கவு மான நடவடிக்கைகளில் ஈடுபட்டு தற்போது நடைபெறக்கூடிய அதிபர் தேர்தலில் பொன் சேகாவை ஆதரித்து அவரை அதிபராக்கி தனக்கு ஆதரவாக வைத்துக் கொள்ள முயன்று வருகிறது. ஏறக்குறைய இந்தியாவும் இதே நிலைப்பாட்டில் இருக்கலாம் என்று தோன்றுகிறது.

இலங்கை அரசியலைப் பொறுத் தவரையில் அது சிங்கள இனவெறி அரசியலாக, தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டு அரசியலாகவே இருப் பதால், யார் அதிபர் பொறுப்புக்கு வந்தாலும் இலங்கை அரசின் நிலைப் பாட்டிலோ, தமிழர்கள் மீதான அதன் அணுகுமுறையிலோ எந்த மாற்றமும் ஏற்பட்ட தில்லை. அதேபோல தற் போது கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி பொன் சேகாவே அதிபர் பதவிக்கு வந்தாலும் தமிழர் நிலையில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை என்பது உறுதி.

ஆனால், இலங்கை அரசு தமிழர்கள் பால் எப்படிப்பட்ட நிலைப் பாட்டை மேற்கொண்டா லும், இந்தியா, அமெரிக்கா பால் அதன் அணுகுமுறை என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்தே இலங்கை சார்ந்து அந்நாடு களின் அணுகுமுறை இருக் கும். இலங்கை தனக்கு எதி ராகப் போனால், அதைக் கட்டுப்படுத்தி வைக்க இலங்கைக்கு எதிரான

நடவடிக்கைகளை மேற் கொள்ள இந்நாடுகள் தயங்காது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஏற்கெனவே, இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் இலங்கை அரசுக்கு எதிராக, அதற்கு ஒரு நெருக்கடி கொடுத்து தன்னைச் சார்ந்திருக்கச் செய்யும் நோக்கில்தான் போராளி குழுக்களுக்கு இங்கு பயிற்சியளித்தது இந்தியா. எனில் இதில் புலிகள் அமைப்பு சுயேச்சையான வலுவுடன், தமிழீழக் கோரிக்கையில் உறுதியோடு இருப்பதைக் கண்டு இலங்கையில் அக்கோரிக்கை வென்றால் அது இந்தியாவில் தமிழகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ் சியே, பிறகு போராளிகளுக்கு எதிராக அதை ஒடுக்கும் முயற்சியில் ஈடு பட்டது. தற்போதும் நிலைமைகளில் மாற்றம் ஏற்படுமானால், தனது கைக்கு அடக்கமான போராளிக் குழுக்களை உருவாக்க இந்தியா தயங்காது என்று நம்பலாம்.

இது ஒருபுறம் இருக்க, இன்று உள்ளூர்ப் பிரச்சினைகளில் இருந்து உலகப் பிரச்சினை வரை, எதிலும் பிரச்சினையின் தகுதிப்பாடு, நியாயம் பார்த்து அதற்குரிய தீர்வு காண முயல்வதற்குப் பதிலாக ஆதிக்க நல நோக்கிலேயே பிரச்சினைகள் அணுகப் படுவதும், தீர்க்கப்படுவதுமான போக்கு நிலவி வருகிறது. இதனால் ஏகாதிபத்தியங்களும் அதன் வல்லரசு களும் தங்கள் ஆதிக்க நல நோக்கி லேயே தேசிய இனச்சிக்கலையும் அணுகுகின்றன. அவற்றை ஆதரிக் கவோ எதிர்க்கவோ செய்கின்றன.

காட்டாக, வியட்நாம் விடு தலையை எதிர்த்த அமெரிக்கா கொசாவோ விடுதலையை ஆதரிக் கிறது. வியட்நாம் விடுதலையை ஆதரித்த ருஷ்யா, கொசாவோ விடு தலையை எதிர்க்கிறது. ஈழ விடு தலையை எதிர்க்கும் இந்தியா திபெத் விடுதலையை ஆதரிக்கிறது. பங்களா தேஷ் விடுதலையை ஆதரித்த இந்தியா ஈழ விடுதலையை எதிர்க்கிறது. இப் படியே பலதும். இந்த நிலையில் இலங்கை முற்றாக சீனா, பாகிஸ்தான் பக்கம் சாய்ந்து இந்தியாவுக்கு எதிரான நிலை எடுக்குமானால், இலங்கையை வழிக்குக் கொண்டுவர, அதைப் பல வீனப்படுத்த, துண்டாட இந்தியா 1971இல் பாகிஸ்தானுக்கு எதிராக பங்களாதேஷ் ஆதரவு நடவடிக்கை மேற்கொண்டது போல் இலங்கைக்கு எதிராகவும் நடவடிக்கை மேற் கொண்டு, தனக்கு அடக்கமான ஒரு தமிழீழ அரசை ஏற்படுத்த முயற்சிக் கலாம். நிலவும் நெருக்கடிகளைப் பொறுத்து போராளிகள் அமைப்பும் அதை ஏற்கலாம்.

வரலாற்றில் எந்த சாத்தியப் பாடும் முற்றாக நிராகரிக்கத்தக்கதல்ல. அப்படிக் கணிக்கவும் முடியாது. முடியாது என்கிற வகையில் இதற்கான வாய்ப்பு எழலாம். இதன் வழி ஒரு தமிழீழம் அமையலாம். அல்லது குறைந்தபட்சம் நாளையோ, பிறகோ தமிழகத்தில் அமையும் ஒரு மாற்று அரசு ஈழ ஆதரவு அரசாக அமையு மானால், முன்பு எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் உதவியது போல் போராளி களுக்கு உதவ முயலலாம். இது முழு மையாக அல்லா விடினும் ஏதோ ஒரு வகையில் போராளி அமைப்புகளுக்கு ஒத்துழைப்பாக இருக்கலாம். இதன் வழியும் தமிழீழ விடுதலைப் போராட் டம் மீண்டும் வீறு பெற்று எழலாம். நிலவும் சூழலைப் பொறுத்து தனி ஈழம் அமையலாம்.

இந்த இரண்டிற்குமே வாய்ப் பில்லை என்கிற நிலை நேருமானால், தொடர்ந்து தில்லியாலும், அண்டை மாநிலங்களாலும் வஞ்சிக்கப்பட்டு வரும் தமிழகம் எதிர் காலத்தில் தில்லி அரசின் வஞ்சத்தை, புறக்கணிப்பை எதிர்த்துக் கொந்தளித்து எழலாம். அது வீறு மிக்க போராட்டங்களை உரு வாக்கலாம். இது, இந்திய தமிழக அரசுகளின் கட்டுத் திட்டங்களை மீறி ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு உதவலாம், அல்லது ஈழ விடுதலைப் போராளிக் குழுக்கள் தமிழகப் போராளிகளுக்கு உதவவும், தமிழகப் போராளிகள் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு உதவவுமான ஒரு சூழ்நிலை ஏற்பட அதன் வழியும் தமிழீழம் மலரலாம்.

இம்மூன்றுமே அல்லாது இலங் கையின் புவியியல் இருப்பும், ராணுவ ரீதியில் அதன் முக்கியத்துவமும் கருதி அங்கு காலூன்றவும் ராணுவ தளங்கள் அமைக்கவும் போட்டியிட்டும், அதற் கான தருணம் பார்த்தும் காத்துக் கிடக்கும் வல்லரசு நாடுகள் எதுவும் தமிழீழ விடுதலையை ஆதரிக்க வேண்டிய, அதற்கு உதவ வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்துக்குத் தள்ளப் பட்டு அந்த ஒத்துழைப்பின் அடிப்ப டையிலும் தமிழீழம் உருப் பெறலாம்.

ஆக, இப்படிப்பட்ட ஏதாவது ஒரு பின்னணியில், வாய்ப்பில்தான் தமிழீழம் மலர முடியுமே தவிர, இப் போதுள்ள நிலை இப்படியே நீடித் தால் அண்மைக் காலத்தில் தமிழீழம் மலர வாய்ப்பே கிடையாது. இப்படிச் சொல்வதால் இதை அவ நம்பிக்கை யாகவோ, குறை மதிப்பீடாகவோ எடுத்துக் கொள்ளக் கூடாது. மாறாக, இந்த உண்மையைப் புறநிலையைப் புரிந்துதான் நாம் அடுத்த கட்ட நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண் டும். மேற்கொள்ளவும் முடியும் என்ப தற்காகவே இது.

அதேவேளை நாம் நமது கடந்த கால நடவடிக்கைள் பற்றியும் சற்று பரிசீலித்து அதில் தேவைப்படும் மாற் றங்களையும் செய்து கொள்ள வேண்டும்.

1983 ஜூலைப் படுகொலை தொடங்கி, கடந்த 2009 மே மாதம் வரையான இந்த இடைப்பட்ட 26 ஆண்டுகளில், ஈழ விடுதலைக்கு ஆதர வான நமது நடவடிக்கைகள் பெரு மளவும் மாநாடுகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங் கள், அஞ்சலிகள், மறியல்கள், ஒரு வாரம் பத்து நாளைக்கு மேற்படாத சிறைவாசங்கள் என்று இதைத் தாண்டி இதற்காக நாம் வேறு ஏதும் செய்ய வில்லை. சிலர் சில ரகசிய உதவிகள் செய்திருக்கலாம். அது வேறு செய்தி. ஆனால் பொதுவாக, பொதுப்போக் காக என்ன இருந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதற்காக இந்த நடவடிக்கை களைக் குறை கூறுவதாகவோ சிறுமைப்படுத்துவதாகவோ எடுத்துக் கொள்ளக் கூடாது. தமிழகத்தில் நிகழும் சம்பவங்களுக்கு நம் எதிர் விளைவைக் காட்டவும், ஈழ விடு தலைக்கு ஆதரவாக மக்களை விழிப் பூட்டவும் ஒருங்கு திரட்டவும் இந் நடவடிக்கைகள் மகத்தான பங்காற்றி யுள்ளன என்பதை எவரும் மறுக்க முடியாது. என்றாலும் இவற்றின் பலன் எதுவும் கடைசி நேரத்தில் கை கொடுக்கவில்லை. தில்லி அரசின் நிலையில் எந்த மாற்றத்தையும் ஏற் படுத்த இயலாமல் தமிழக அரசுக்கும் நெருக்கடி தர முடியாமல் அவ்வளவும் பயனற்றுப் போய், பேரிழப்புகளுக்கும், பெருங் கொடுமைகளுக்கும் ஆளாக நேர்ந்ததே என்பதை நினைக்கத்தான் வேதனையாக இருக்கிறது. இந்த நிலைமைக்கான காரணம் என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

இப்படி சிந்திக்க நமக்குத் தோன் றுவது, ஈழப் போராட்டம் என்பதை அதிலுள்ள சிக்கல்கள், அதற்காக நாம் ஆற்ற வேண்டிய கடமைகள், செய்ய வேண்டிய தியாகங்கள், தமிழக உரிமை, தமிழ்த் தேச உரிமைப் போராட்டங்களோடு அதற்குள்ள தொடர்புகள் என அதற்குரிய புரித லோடு பிரச்சினையை முன் கொண்டு சென்று மக்களுக்கு உரிய விழிப்பை ஏற்படுத்தாமல், அந்த நோக்கில் அவர்களை அணி திரட்டாமல் அவர் களை பெருமளவும், ஈழப் போராட் டத்தின் பார்வையாளர்களாகவோ, அல்லது தமிழீழ விடுதலைப் போராட் டத்தின் ரசிகர்களாகவோ மட்டுமே வைத்திருந்தோம்.

ஏதோ ஈழ விடுதலைப் போராட் டம் என்பது கால் பந்தாட்டம் அல்லது மட்டைப் பந்தாட்டம் போல் காலரியிலேயே அமர்ந்து பார்த்து கைதட்டி ரசிப்பதுபோல், ஈழ விடுதலைப் போராட்டத்தையும் பார்க்க பயிற்றுவித்திருந்தோம். போரில் புலிகள் வென்றால் மகிழ்ச்சி என்பதால் களத்தில் அவர்கள் சந்திக் கும் நெருக்கடிகளைச் சொல்லாமல் விட்டு புலிகளின் வெற்றிச் செய்திகளை மட்டுமே மக்களுக்குச் சொன்னோம். அவர்களது சாதனைகளை மட்டுமே பெருமளவில் பேசி, அவர்கள் சந்திக் கும் சோதனைகளை விளக்காமல் விட்டோம். இதற்காகவே மேடைகள் தோறும் கைத் தட்டல்களுக்கான உரைகளை வீசினோம். ஈழப் போராட் டத்தின் புற நெருக்கடிகள் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், அது சார்ந்து கிஞ்சித்தும் கவனத்தைச் செலுத்தாமல் மந்திரத்தில் மாங்காய் விழும் என்பது போல் புலிகள் வென்றே தீருவார்கள், தமிழீழம் மலர்ந்தே தீரும் என்று மக்களை மகிழ்ச்சியூட்டி அவர்களைப் பரவசப் படுத்தினோமா என்பதைப் பரிசீலிக்க வேண்டும்.

மட்டுமின்றி இருபத்தைந்து ஆண்டு காலம் இதைச் செய்தது போதாதென்று கடைசி கட்ட நெருக் கடியான தருணங்களிலும் இதையே பேசினோம். புலித் தலைவர்களை யாரும் கிட்டே நெருங்க முடியாது என்றோம். போராளிகளுக்கு எதுவும் ஆபத்து என்றால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்றோம். ஆனால் அதற் கான எந்த முயற்சியுமே இல்லாமல், எவருமே அதற்கு முன்கை எடுக்க முயலாமல் நடந்தேறிய நிகழ்வைப் பார்த்து, தமிழகமே அதிர்ச்சியில் உறைந்ததுதான் மிச்சம். இதிலிருந்து இனியாவது, இப்போதா வது நாம் பாடம் கற்க வேண்டாமா, இதி லிருந்து படிப்பினை பெற்று நாம் நம் நிலையை மாற்றிக் கொள்ள வேண் டாமா என்பதுதான் தற்போது நம் முன் உள்ள கேள்வி.

இப்படியெல்லாம கேட்பது சிலருக்கு உபற்றவதாக, வெறுப்புக் குரியதாகக் கூட இருக்கலாம். யாரு டைய வீரத்தையும். சாகசத்தையும் நாம் குறைத்து மதிப்பிடவில்லை. யாரை யும் புகழவோ, பாராட்டவோ கூடாது என்றும் சொல்லவில்லை. அல்லது வெறும் சோகச் கதையாகவே சொல்லி புலம்ப வேண்டும் என்றோ நாம் சொல்லவில்லை. போர்க்களத்தில் வெற்றியும் தோல்வியும் இயல்பு. இரண்டும் தவிர்க்க இயலாதவை. எனவே இதில் வெற்றியைக் கொண் டாடும் அதே வேளை, தோல்வி களையும் பரிசீலனை செய்ய வேண் டும். அப்படிப் பரிசீலிக்காது வெறும் வெற்றிகளை மட்டுமே நாம் கொண் டாடிக் கொண்டிருப்பதால் நாம் மாபெரும் இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அப்படித்தான் இப்போது சந்தித்தும் இருக்கிறோம். எனவே தான் இதிலிருந்து இனியாவது நாம் பாடம் கற்கவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

எனவே இனியாவது புலிகள் வென்றே தீர்வார்கள், ஈழம் மலர்ந்தே தீரும் என்கிற வாய்ச் சவடால் வெற்று வீச்சு உரைகளைத் தவிர்த்து ஈழம் எப்படி மலரும், புலிகள் எப்படி வெல் வார்கள் என்பது குறித்த சிந்தனையை மக்களுக்கு ஊட்டி, அவர்களை அதில் பயிற்றுவிக்கவும் அதில் அவர்களின் பங்களிப்பை உணர வைக்கவும் வேண் டும். அதாவது வெற்றிகளைக் கொண் டாடுவதிலும் வீர தீரச் செயல்களைப் பாராட்டுவதிலும் மட்டுமே கவ னத்தைச் செலவிட்டு மற்றதைக் கோட்டை விட்டுவிட வேண்டாம் என்றுதான் சொல்கிறோம்.

தவிர, தமிழகத்தில் தமிழீழ விடுதலை ஆதரவுப் போராட்டம் என்பது தமிழக உரிமைகளுக்கான போராட்டங்களோடு நெருக்கமாக தொடர்புடையது. அதாவது தமிழீழ விடுதலை ஆதரவுக் கோரிக்கையின் வலு, தமிழக உரிமைப் போராட் டத்தின் கரங்களை வலுப்படுத்தும். தமிழக உரிமைப் போராட்டங்களின் வலு தமிழீழ விடுதலைப் போராட்டங் களின் கரங்களை வலுப்படுத்தும். தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக ஒவ்வொரு போராட்டத்தையும் நடத்த நாம் படும் அவதிகள், சந்திக்கும் சிக் கல்கள், ஆட்சியாளர்களின் அணுகு முறை ஆகியவற்றை நோக்க இது புரியும்.

ஆகவேதான் தொடர்ந்து நாம் ஒரு கருத்தை வலியுறுத்தி வருகிறோம். அதாவது தமிழகத்தில் தமிழீழ விடு தலைக்கு மட்டுமே குரல் கொடுத்துக் கொண்டிருப்பது தமிழீழத்திற்கும் சரி, தமிழகத்திற்கும் சரி எந்தப் பலனையும் தராது. மாறாக இரண்டிற்கும் அதாவது தமிழீழத்திற்கும் தமிழக உரிமை களுக்கும் குரல் கொடுக்கிற அமைப் பின் வழியே எந்த மாற்றமும் நிச்சயம். ஆகவே, இரண்டிற்கும் குரல் கொடுக்கிற கூட்டமைப்பு - அதாவது தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள், கட்சிகள், தமிழக உரிமைப் போராட்ட ஆதரவாளர்கள், கட்சிகள் அடங்கிய ஒரு கூட்டமைப்பு உரு வாக்கப் படவேண்டும். அவை குறைந்த பட்சத் வேலைத் திட்டத்தின் அடிப்படையில் செயல்பாடுகளை வகுத்து அத்திசையில் போராட்டங் களை முன்னெடுத்துச் செல்ல வேண் டும். கொள்கை பூர்வமாய், கோட் பாட்டுப் பூர்வமாய் கட்சிகள், தலை வர்கள் இதற்கு சம்மதித்தால், இணக்கம் தெரிவித்தால், இதன் நடைமுறைச் செயல்பாடுகள் குறித்து கூடிப் பேசி ஒரு புரிதலுக்கு வரலாம். ஆகவே கட்சிகள், தலைவர்கள், உணர்வாளர் கள் இது குறித்து சிந்திக்கவேண்டும்.

அடுத்து தமிழர்கள் குறிப்பாக கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. வியட்நாமிய விடுதலைப் போராட் டம், தென்னாப்பிரிக்க விடுதலை போராட்டம் என்றால் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களும் குரல் கொடுக்கும், போராடும், அகில இந்தியக் கட்சிகள் போராட வைக்கும். ஆனால் தமிழீழ விடுதலைப் போராட் டம் என்றால் தமிழகம் மட்டும்தான் குரல் கொடுக்க வேண்டும், போராட வேண்டும், மற்ற மாநிலங்கள் எதுவும் இதற்கு செவி சாய்க்காது, போரா டாது, அகில இந்தியக் கட்சிகளும் செவி சாய்க்க, போராட வைக்காது என்கிற கெடுவாய்ப்பான புறநிலையை யும் தமிழர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, தமிழர்கள் தங்களுக்குள்ள கூடுதல் சுமையை, கூடுதல் பொறுப்பை தமிழர்கள் உணர்ந்து செயல்படவேண்டும். இந்தப் புரிதலில் நின்றே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலம் குறித்தும் சிந்திக்க வேண்டும்.

சீன ஆதரவு ராஜபக்ஷே

நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சேவே வெற்றி பெற்று மீண்டும் அதிபர் ஆகியிருக்கிறார். ராஜபக்சேவின் வெற்றி அமெரிக்க, இந்திய அரசுகளுக்கு அதன் ஆதிக்க நலனுக்கு உகந்ததாக இருக்காது. காரணம் ராஜபக்சே சீன, பாகிஸ்தான் பக்கம் ஆதரவு, சாய்மானம் உள்ளவர் என்பது வெளிப்படை.

அதனால்தான் ராஜபக்சேவுக்கு மாற்றாக பொன்.சேகாவை ஜெயிக்க வைத்து அவரைத் தங்களுக்கு அணுக்கமாக வைத்துக் கொள்ள அமெரிக்க இந்திய ஆதிக்க சக்திகள் முயன்றன. ஆனால் அது வெற்றி பெறாமல் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் அமெரிக்க, இந்திய அரசுகளின் இலங்கை சார்ந்த, ராஜபக்ஷே மீதான அணுகுமுறை எப்படியிருக்கப் போகிறது, அது எப்படிப்பட்ட கொள் கையைக் கடைப்பிடிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏனெனில், இலங்கை அரசின் நிலைப்பாடு, இந்த அரசுகளின் அணுகுமுறை சார்ந்ததாகவே இருக்க முடியும். இப்படிப்பட்ட ஆதிக்க அரசுகளின் நிலைப்பாடுகள், அணுகு முறையைக் கணக்கில் கொண்டே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போக்கும், போராளிகளின் எதிர்காலமும் அமையும். போராட்டத்தின் எதிர்காலமும் இதையட்டியே தீர்மானிக்கப்படும். மீண்டும் வரலாற்றில் எதுவும் நிகழலாம், நிகழச் சாத்தியமுண்டு என்கிற நோக்கிலேயே நாம் இதையும் அணுக வேண்டும்.

திபெத் ஆதரவு அமெரிக்கா

ராஜபக்ஷேவின் வெற்றியைத் தொடர்ந்து பொன்சேகா உடனடியாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் உடனடியாக மரணத் தண்டனை விதிக்கப்படவோ, அல்லது வாழ்நாள் முழுவதும் சிறைக் கைதியாக ஆக்கப்படவோ ஆக முயற்சிகள் ராஜபக்ஷே தரப்பில் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக பேசப்படுகிறது.

ராஜபக்ஷேவின் கை ஓங்குவது இனி இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் உகந்ததாக இருக்காது. எனவே ராஜபக்ஷே வின் மீது நடவடிக்கை எடுக்க இவ்வரசுகள் முயலலாம். தற்போதே அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா திபெத்தியத் தலைவர் தலாய் லாமாவை வெற்றை மாளிகையில் சந்தித்து சீனாவுக்கு சின மூட்டியிருக்கிறார். அதாவது ஈழ விடுதலையை ஆதரிக்காத, போராளி அமைப்பின் நடவடிக்கைகளை எதிர்த்த அமெரிக்கா திபெத்தை ஆதரிக்கிறது. அதாவது சீன எதிர்ப்பு நோக்கில் இதைச் செய்கிறது. இந்நிலையில் அமெரிக்க, இந்திய அரசுகளின் சீன எதிர்ப்புப் போக்கு, சீன ஆதரவு ராஜபக்ஷே அரசுக்கு நெருக்கடி கொடுக்க முயலலாம். இதன் வழி போராளிகள் அமைப்பின் கள நிலைமைகளில் ஏதும் மாறுதல்கள் ஏற்படலாம்.

ஆக மீண்டும், வரலாற்றில் எதுவும் நிகழச் சாத்தியமுண்டு என்கிற கோணத்திலேயே நாம் இச்சிக்கலை அணுகவேண்டும். அதேவேளை எது குறித்தும் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டுவதும் மிக முக்கியம்.

வரலாற்று நிகழ்வுகளும் வீர நாயகர்களும்

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டம், பேரிழப்புகளுக்கும் கடும் பின்னடைவுகளுக்கும் உள்ளாகியுள்ள இந்நிலையில் போராட்டத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா என்னும் கேள்வி முன்னிறுத்தப்பட்டு, சர்ச்சை அதை நோக்கி குவிக்கப்படுகிறது.

வரலாற்றில் தனி நபரின் பாத்திரத்தையோ, அதன் முக்கியத்துவத்தையோ எவரும் மறுக்கவில்லை. அதே வேளை ஒரு விடுதலைப் போராட்டம் எந்த ஒரு தனி நபரையோ, அதாவது, சாதனைகளையோ மட்டுமே சார்ந்திருக்கவில்லை. புறச் சூழலின் தேவை, காலத்தின் கட்டாயம், வரலாற்று நிர்ப்பந்தம், எந்த விடுதலைப் போராட்டமும் அதற்கான போராளிகளைத் தவிர்க்க இயலாமல் உருவாக்கிக் கொள்ளும், அந்த வகையில் போராட்டம்தான் முக்கியமே தவிர, தனி மனித உயிர்கள் பற்றிய ஆராய்ச்சி மட்டுமே முக்கியமில்லை.

உயிர்கள் என்று பார்த்தால், பிரபாகரன் மகன் சார்லஸ், அரசியல் பிரிவுத் தலைவர்களாயிருந்த நடேசன், தமிழ்ச்செல்வன், தியாக தீபம் தீலிபன், புலேந்திரன், குமரப்பா இப்படி நீளும் பட்டியலில், முப்பதாண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள் எல்லோரது உயிர்களுமே உயிர்கள்தான். அவையும் மதிப்பு மிக்கவைதான்.

இப்படி களத்தில் வீரச் சமர் புரிந்து உயிர் நீத்த எண்ணற்ற தியாகிகள் வரிசையில் யாருக்கும் எதுவும் நேரலாம், நேராமலும் போகலாம். பிரபாகரனுக்கும் அப்படியே. அவரும் மனிதரே. அவருக்கு எதாவது நேர்ந்தும் இருக்கலாம். நேராமலும் இருக்கலாம். நேராமல் இருந்தால் மகிழ்ச்சி. அப்படி இருக்க வேண்டும் என்பதுதான் பலரது விருப்பமும்.

இந்தப் புரிதலோடு, இந்த மட்டத்தோடு இந்தப் பிரச்சினையை விட்டு அடுத்த பணியைப் பார்ப்பதை விடுத்து, எங்கு சென்றாலும், யாரைப் பார்த்தாலும் இந்தக் கேள்வியையே முன்னிறுத்தி ஏதோ வீரசாகச மர்மக் கதையின் ஒரு புதிர் போல அதை ஆக்குவது, அடுத்து நாம் ஆற்றவேண்டிய பணிகள் குறித்த, கடமைகள் குறித்த கவனத்திற் உரிய அழுத்தம் தராமல் அது பற்றி யோசிக்காமல், இந்தப் புதிருக்கான விடையைத் தேடுவதிலேயே சிந்தனையாக குவிக்ம்.

ஆகவே, சராசரி உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தராமல் அறிவியல் ரீதியில் இதைச் சிந்தித்து அடுத்து என்ன செய்வது என்கிற நோக்கில் நம் கவனத்தைச் செலுத்தலாம் என்று படுகின்றது. அதோடு உலகப் புரட்சியாளர் செகுவேராவின் திருவுருவம் வர்த்தக நிறுவனங்களுக்கு எப்படி வணிகப் பொருளாக ஆக்கப்பட்டுள்ளதோ அதே போல தமிழ்ச் சூழலில் பிரபாகரன் திரு உருவப்படமும், அவர் சார்ந்த பரபரப்புச் செய்திகளும் வர்த்தக ஊடகங்களுக்கு பிரபாகரன் படம் போட்டால், அவர் குறித்த செய்திகளைப் போட்டால் இதழ பரபரப்பாக விற்பனையாகும் என்கிற அளவில் வணிகப் பொருளாக ஆக்கப் பட்டுள்ளது. அதேபோல விற்பனையும் ஆகிக் கொண்டிருக்கிறது.

எனவே இப்படிப்பட்ட சூழலில் உணர்வாளர்கள் நாமும் இதற்குப் பலியாக வேண்டாம் என்பதே வேண்டுகோள். ஆகவே இந்த விவாதத்தைச் சர்ச்சையை இத்துடன் ஏறக்கட்டி வைத்து, அடுத்து ஆக வேண்டிய காரியத்தை, அதாவது ஈழ விடுதலைப் போர் பின்னடைவுக்கு ஆளானது ஏன், அதற்கான சூத்ரதாரிகள் யார் என்பதை ஆராய்ந்து, அவர்களுக்கு எதிராக மக்களை விழிப்படைய வைப்பதிலும், அவர்களை ஒருங்கு திரட்டுவதிலும், ஆதிக்க சக்திகளுக்கு எதிராக அவர்களைப் போராட வைப்பதிலும் நாம் நம் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பொதுவான வேண்டுகோள்.

இலங்கைத் தேர்தல்

இலங்கையில் வரும் ஏப்ரல் 8ஆம் நாள் நடைபெற இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மகிந்த ராஜபட்சேவை எதிர்த்து எதிர்க் கட்சிகள் சனநாயக தேசியக் கூட்டணி என்கிற பெயரில் ஒரு கூட்டணியை அமைத்து போட்டியிட போவதாகவும் அதற்கு பொன்சேகா தலைமை ஏற்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

கடந்த சனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபட்சேவை எதிர்த்து உருவான கூட்டணி அத்தோடு முடிந்துபோக தற்போது புதுக்கூட்டணி உருவாகியுள்ளது, இதில் தீவிர தேசியவாத இயக்கமான ஜனதா விமுக்தி பெரமுணா முக்கிய கூட்டாளியாக இருக்கும் எனப்படுகிறது.

முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தனித்து போட்டியிடும் என்பது போலவும் எனவே தனது தலைமையில் பிற உதிரிக் கட்சிகள் ஒன்றுசேர வேண்டும் என்பது போலவும் அது அறிவிப்பு விடுத்துள்ளது.

இதற்கிடையே பொன்சேகா மீதான குற்றச்சாட்டுகள் அவரைத் தேர்தலில் நிற்க அனுமதிக்குமா? அவரது வேட்பு மனு ஏற்கபடுமா? ராஜபட்சே இதை அனுமதிப்பாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இலங்கை தேர்தல் எப்படியானலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை அரசியல் சிங்கள இனவாத அரசிய லாகவே இருக்கும் என்பதால் இதன் விளைவுகள் பற்றி பொருட்படுத்தாமல் தமிழர்கள் மாற்று அரசியல் குறித்து சிந்திக்க வேண்டும்.

- இராசேந்திர சோழன்

Pin It