சமச்சீர் கல்விக்கு ரூபாய் 200 கோடி செலவில் 6 கோடியே 33 லட்சம் பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு பள்ளிக்கு அனுப்பப்படாமல் அப்படியே முடங்கிக்கிடக் கின்றன. இதற்கிடையே பழைய பாடப்புத்தகங்களும் அச்சிடப்பட்டுத் தயாராகின்றன.

பள்ளிகள் திறந்து இரண்டு மாதகாலம் ஆகிறது. எந்தப் பாடநூலையும் படிக்காமல் 1 கோடியே 20 லட்சம் மாணவர்கள் கவலையுடனும் குழப்பத்துடனும் உள்ளனர். பாடப்புத்தகங்களைப் படிக்காமலேயே பள்ளி நாட்கள் வீணாய்க் கழிந்து கொண்டிருக்கின்றன. பிள்ளைகள் வரும் காலாண்டுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்களா என்ற திகைப்பில் பெற்றோர்கள் உள்ளனர்.

இதற்கு முன் இல்லாத ஒரு புதிய கல்வித் திட்டத்திலான - கல்வியில் சமூக நீதியை நோக்கிய அடிவைப்பாக அமைந்த சமச்சீர் கல்விக்குத் துவக்கத்திலேயே இப்படி முட்டுக்கட்டையா என்ற மலைப்புதான் ஏற்படுகிறது.

சமச்சீர் கல்வித் திட்டம் என்பது சும்மா வந்ததல்ல... முற்போக்காளர்களின், சமூகநீதி ஆர்வலர்களின், மாணவர் நலனில் அக்கறை கொண்டோரின், மாணவர் களின் பல்லாண்டு போராட்டங்களுக்கும் கருத்துப் பிரச்சாரங்களுக்கும் பிறகே மாநில அரசால் ஏற்கப்பட்டு வந்த அந்த ‘வாராதுபோல் வந்த மாமணியைத் தோற்போமோ’ என்று அவர்கள் மாநிலமெங்கும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி இந்த ஆண்டிலேயே துவக்கப்பட வேண்டுமென்றும், சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்கள் ஜூலை 22க்குள் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்றும் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தாமல் தமிழக அரசு உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்தபோதும் உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடை விதிக்க மறுத்ததுடன், ஆகஸ்ட் 2க்குள் சமச்சீர் கல்விப் பாடநூல்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டுமென்றும் தமிழக அரசுக்கு ஆணை பிறப்பித்துள்ளது.

உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் வழங்கியுள்ள தீர்ப்பினை அரசு ஏற்பதுடன், முந்தைய அரசின் சமச்சீர் பாடநூலில் அரசு காணும் குறைகளை நீக்கி சமச்சீர் கல்வியைத் தொடருவதே சாலச் சிறந்தது.

சாதி வேறுபாடு, மத வேறுபாடு என்றுள்ள நம் சமுதாயத்தில் கற்கும் கல்வி யிலும் மாணவரிடையே வேறுபாடு வேண்டுமா?

பாட நூலில் சமச்சீர் போல், அனைத்து வகை கல்விக்கூடக் கட்டமைப்பு வசதிகளிலும் சமச்சீர் மிகவும் அவசியம். தொழிற்சாலைகளில் போல், கல்விச் சாலை களில் லாபமீட்டும் பொருளுற்பத்தி நடைபெறாமல் இருக்கலாம்; ஆனால், தேசத்தின் மேன்மைக்கான அறிவுச் செல்வம் உற்பத்தி செய்யப்படும் இடம் கல்விச் சாலைகள் தான்.

பொருள் குவிப்பை நோக்கமாகக் கொண்டு செயல்படும் தனியார் பள்ளி முதலாளிகளின் ‘மேலான’ ஆலோசனைக்கும், நிர்பந்தத்திற்கும் ‘தரம்-உலகத்தரம்’ தங்களால்தான் தரமுடியும் என்பது மாதிரியான தந்திரச் சொல்லாடல்களுக்கும் இலக்காகிவிடாமல் மாணவர்களின் நலனையும் சமூக நீதியையும் முன்நிறுத்தித் தமிழக அரசு கடமையாற்றல் வேண்டும்.

சமச்சீர் கல்வி என்பது தவிர்க்க இயலாத வரலாற்றுத் தேவை ஆகும். எவ்விதப் பிடிவாதத்தாலும் இதனை வெகு காலத்துக்கு ஒதுக்கிவைக்கமுடியாது. எனவே, இதை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொண்டு தமிழகத்தின் எதிர்கால நலனுக்கு எதிராக நிற்காது வழிவிடவேண்டும் என்பதே நாம் சொல்ல விரும்புவது.

(27-07-2011)

Pin It