anna university 532எம்.டெக் படிப்புகளில் இந்த ஆண்டு மத்திய அடரசின் இடஒதுக்கீட்டை அண்ணா பல்கலைக்கழகம் பின்பற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாநில அரசின் 69% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இத்தனை ஆண்டுகள் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு குழப்பம் ஏற்படுத்தி இடஒதுக்கீட்டை நசுக்கும் வேலையைச் செய்திருக்கிறது பார்ப்பனீய மோடி அரசு.

ஆளுநர், துணைவேந்தர் போன்ற நியமனப் பதவிகளை வைத்து மாநிலங்களின் உரிமைகளில் மூக்கை நுழைத்து, மத்திய அரசு பல்வேறு இடையூறுகளைத் தொடர்ந்து செய்து வருகிறது.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வியுரிமையைப் பறிக்கும் வகையில் அவர்களுக்கான இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்யத் தொடந்து அரசியல் அமைப்பிற்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது மத்திய பாஜக அரசு.

மத்திய அரசின் 49.5% இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தரப்பில் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தாண்டு மத்திய அரசின் 49.5% இடஒதுக்கீடு அடிப்படையில், மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இடஒதுக்கீடு பற்றி அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் சொல்வதை ஏற்றுக் கொள்வதானால் எதற்கு இங்கு மாநில அரசு 69% இடஒதுக்கீட்டுக் கொள்கையைக் கடைபிடிக்க வேண்டும்? இவ்வளவு அப்பட்டமாக அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசை மதிக்காமல் செயல்படுவது ஆளும் அதிமுக அரசின் பலவீனத்தைக் காட்டுகிறது. இதனால் பாதிக்கப்படுவது பார்ப்பனர் அல்லாத மாணவர்கள்தான்.

ஆட்சி மாற்றம் நடைபெற்று தி.மு.கழக அரசு அமைந்தவுடன் தமிழ்நாட்டில் கல்வி வேலை வாய்ப்புகள் அனைத்திலும் 69%
இடஒதுக்கீடு நிலைநாட்டப்படும் நாள் விரைவில் வரும்.

- கருஞ்சட்டைத் தமிழர்