தூத்துக்குடி வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் கூடிப் போராட்டம் நடத்திய போது காவலர்களின் துப்பாக்கிச் சூட்டில் சிலர் உயிரிழந்தனர்.

இதைக் கேட்ட நடிகர் ரஜினி தூத்துக்குடிக்கு ஓடோடிச் சென்று பார்த்து விட்டுச் சென்னை திரும்பினார். அப்போது அவர் அளித்த பேட்டியில் காவலர்கள் மீது எந்தத் தவறும் இல்லை. போராடியவர்கள் எல்லாம் வன்முறையாளர்கள் என்று சொன்னார். 

ரஜினியின் தொடர் பேச்சுகள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ், பாஜகவைச் சார்ந்தே இருக்கின்றன.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்கும் ஒரு நபர் ஆணையம் நடிகர் ரஜினியை, நேரில் வர ஆணையிட்டது.

தான் நேரில் வந்தால் ரசிகர்கள் கூட்டம் பெரும் அளவு கூடி விடுவார்கள். அது விசாரணையைப் பாதிக்கும். ஆகவே நேரில் வருவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்குமாறு மனு போட்டிருக்கிறார், நடிகர் ரஜினி.

இது ‘தமாஷ்’ஆக இருக்கிறது. 

இதுவரை நடிகர் ரஜினி எந்தப் பொது நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லையா? 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்குப் பின் தூத்துக்குடி சென்றாரே அவர். அப்பொழுது அங்கு ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடி, அவரால் சட்டம் ஒழுங்கு பாதிக்கவா செய்தது? அல்லது அவர் மாறுவேடமிட்டுச் சென்றாரா?

தான் ஒரு பெரிய கட்சியை உருவாக்கி ஆட்சியைப் பிடிப்பேன் என்று கனவு கண்டு கொண்டிருக்கும் ரஜினி, எந்த இடத்திற்கும் நேரில் செல்லாமல், மக்களைச் சந்திக்காமல் எப்படி அரசியல் நடத்துவார்? 

அவர் கட்சியை ஆரம்பித்துவிட்ட பிறகு அவர் மக்கள் மத்தியில் போக வேண்டுமே, போவாரா? போகமாட்டாரா? அங்கெல்லாம் ரசிகர் கூட்டம் ஏகமாக கூடிச் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகாதா!

மக்களுக்காக மக்களுடன் இருப்பவர்தான் தலைவர். மக்களுக்கு எதிராக, அரசுக்கு ஆதரவாகத் துப்பாக்கியை ஜனநாயகப்படுத்தும் மனிதர் என்றுமே தலைவராக முடியாது. 

தலைமைப் பண்பு என்பது படித்து வருவது அன்று. அது மக்களோடு இருந்து பெறும் அனுபவம். தூத்துக்குடி போராட்டத்தின்போது போராடிய மக்களை வன்முறையாளர்கள் என்று சொன்ன நடிகர் ரஜினிகாந்த் ஒருநபர் ஆணையம் அழைக்கும்போது நேரில் சென்று அவரின் வாக்கு மூலத்தைப் பதிவு செய்ய வேண்டும். ஆனால், நடிகர் ரஜினி நடிகராக மட்டுமே இருக்க முடியும், ஒரு நாளும் தலைவராக முடியாது என்பதை அவரின் ‘பயம்’ காட்டிவிட்டது.

அவர் ஆர்.எஸ்.எஸ்-இன் முகமூடி என்பது மீண்டும் மீண்டும் உறுதி ஆகிக் கொண்டிருக்கிறது.