mkstalin 471தமிழ்நாடு அரசின் அனைத்துப் பணியிடங்களிலும், 100% தமிழக இளைஞர்களையே நியமிக்கும் பொருட்டு, அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ்த் தாளை அறிமுகப்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் வெளிமாநிலத்தவர் அரசுப் பணிகளில் சேர்ந்த நிலையில், அதைத் தடுக்கும் வகையில் இந்த அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.

“தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணி இடங்கள் அனைத்திலும் தமிழ் இளைஞர்களை 100% நியமனம் செய்யும் பொருட்டு தேர்வுகள் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தால் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்படும்” என்கிற அரசாணையைத் தமிழக அரசின் மனித வள மேலாண்மைத் துறை வெளியிட்டிருக்கிறது.

திராவிட இயக்க அரசியலால், சமூக நீதியால் தமிழ் நாட்டில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி, தமிழர்களுக்குப் பயன்படாது பிற மாநிலத்தவருக்குப் பறிபோகும் நிலையைத் தடுத்து நிறுத்தும் போரைத் திமுகழக அரசு தொடுத்திருக்கிறது.

தமிழர் உரிமைகளை, கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக, நிலைநாட்டத் தவறியதால் ஏற்பட்ட பின்னடைவு இந்த ஆட்சியில் சரி செய்யப்படுகிறது.

இதே போல் பெருகிவரும் தனியார் துறைகளிலும், தமிழக அரசு இங்கே கொண்டு வர இருக்கும் தொழில் முதலீடுகள் மூலம் உருவாக இருக்கும் புதிய வேலைவாய்ப்புகளிலும், தமிழ் இளைஞர்களுக்குப் பெரும்பான்மை இடம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் அரசு செயல்படும் என்கிற நம்பிக்கையும் மேலெழுகிறது.

அதேபோல் மத்திய அரசின் நிறுவனங்களில் குறிப்பாக, நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் (NLC), தமிழர்கள் புறக்கணிக்கப்படும் நிலை மாறி அங்கும் தமிழ் இளைஞர்களுக்குப் பணியிடங்கள் உறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கையையும் இந்த அரசாணை ஏற்படுத்துகிறது.

நீதிக்கட்சி தொடங்கி, தந்தை பெரியார், கல்வி வள்ளல் காமராசர், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரைத் தொடர்ந்து திராவிட இயக்கத்தின் நீட்சியாக , தமிழர் உரிமைகளைப் பாதுகாக்கும் அரணாக இருக்கிறார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அவரை அனைத்துத் தமிழர் இல்லங்களிலும், கட்சி வேறுபாடின்றி இன்று மக்கள் கொண்டாடுகின்றனர்!

மா.உதயகுமார்