மேட்டுப்பாளையம் நடூர் ஏடி காலனி கண்ணப்பன் நகர் பகுதியில் கனமழை காரணமாக 02.12.2019 அன்று தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்தது.

அதன் அருகில் உள்ள நான்கு வீடுகளில் வசித்த ஆனந்தன் (38), நதியா (35), மகன் லோகராம் (10), அட்சயா (6), அறுக்கானி (40), ஹரிசுதா (19), மகாலட்சுமி (10), சின்னம்மாள் (60), ரூக்குமணி (42), திலகவதி (38), பழனிசாமி மனைவி சிவகாமி (38), வைதேகி (22), நிவேதா (20), ராமநாதன் (17), குருசாமி (35), ராமசாமி மனைவி ஏபியம்மாள் (70), மங்கம்மாள் (70) ஆகிய 17 பேர் பலியானார்கள். இந்தக் கோர சம்பவத்தை மழையின் காரணமாக ஏற்பட்ட விபத்து என்ற அளவில் நாம் கடந்து சென்று விட முடியாது.

mettupalayam dalit agitationஇந்த விபத்திற்குக் காரணமான சுவர் சாதாரணச் சுவர் அன்று. அது தீண்டாமைச் சுவர். அது இடத்தின் உரிமையாளருக்குச் சொந்தமான இடம். அதில் கட்டுவது எப்படித் தீண்டாமைச் சுவர் ஆகும் என்று சிலர் கேட்கலாம். அந்த இடத்தின் உரிமையாளர் நான்கு பக்கமும் சுவர் எழுப்பியுள்ளார். ஆனால், மூன்று பக்கங்களில் உள்ள சுவரின் உயரம் சுமார் 8 அடிகள். தற்போது விழுந்து பலரைப் பலியாக்கியுள்ள சுவரோ 20 அடி உயரம். அந்தச் சுவரின் நீளம் 80 அடி. மற்ற மூன்று பக்கங்களிலும் தலித் அல்லாதவர்கள் இருப்பதால் உயரமான சுவர் இல்லை. ஆனால், அருந்ததியர் இருக்கும் திசையில் மட்டும் 20 அடி உயரச் சுவர். அருந்ததியரையும் அவர்களின் வீடுகளையும் கூடக் காணக் கூடாது என்கிற தீண்டாமை மனப்போக்கையே இது காட்டுகிறது.

உரிய பாதுகாப்பு இல்லாமல் கட்டப்பட்டுள்ள இந்தச் சுவர் ஆபத்து விளைவிக்கும் என்று அப்பகுதி மக்கள், அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்துள்ளார்கள். விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட இந்தச் சுவரை அகற்ற, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரோ, மாவட்ட நிர்வாகமோ, அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி இருக்கின்றனர்.

இடத்தின் உரிமையாளரின் ஆணவமும் அதைக் கண்டு கொள்ளாத அரசின் அலட்சியமும்தான் இந்த 17 உயிர்கள் பலியானதற்கு உண்மையான காரணம். பலியான 17 பேரின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு உடல்களைக் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்ற முயற்சித்தனர். இருப்பினும் மக்கள் போராடியதன் விளைவாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையிலேயே உடற்கூறாய்வு நடத்தப்பட்டது. கொட்டும் மழையில் மருத்துவமனை வளாகத்தில் உடல்கள் கிடத்தப்பட்டு இருந்தன. அத்துடன் உடல்களை உடனே பெற்று எரியூட்டி விட வேண்டுமென்று காவல்துறையினர் மிரட்டியதால் சுடுகாட்டில் ஒரே நேரத்தில் ஆங்காங்கே 17 உடல்களை எரித்த அவலமும் அங்கு அரங்கேறியது. இதை எல்லாம் பார்க்கும் போது தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்களின் உயிருக்கும், உயிரற்ற உடலுக்கும்கூட இங்கு மரியாதை இல்லை என்பது புலனாகிறது.

இந்தத் துயரத்திற்குக் காரணமான இடத்தின் உரிமையாளரைக் கைது செய்ய வேண்டும் என்று சமூக நீதிக்காகப் போராடிய திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் தோழர் வெண்மணி, தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன் உள்பட 50க்கும் மேற்பட்ட தோழர்களைக் கடுமையாகத் தாக்கிச் சிறைப்படுத்தியுள்ளது காவல்துறை. குற்றவாளியைக் கைது செய்யாமல், போராடும் தோழர்களைக் கைது செய்த அட்டூழியத்தைக் கண்டிக்க ஊடகங்களுக்கு முதுகெலும்பு இல்லை.

தி.மு.க தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்திய பிறகுதான் அந்த இடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு உள்ளார். தளபதி மு.க.ஸ்டாலின் வந்து சென்றதால் தானும் வர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி முதல்வர் எடப்பாடியும் வந்து சென்றார். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்த ரூ. 4 லட்சம் இழப்பீட்டுத் தொகை ரூ. 10 லட்சம் என்று உயர்த்தப்பட்டதுடன் அவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கவும், தகுதியுள்ள நபருக்கு அரசு வேலை அளிக்கவும் முதல்வர் உறுதியளித்தார்.

இந்தக் கோர சம்பவத்தில் பலியான நிவேதா மற்றும் ராமநாதன் ஆகியோரின் தந்தை செல்வராஜ் “எல்லாத்தையும் இழந்துட்டேன், இனி எதுவுமில்லை” என்று கூறித் தனது இரண்டு பிள்ளைகளின் கண்களைத் தானமாக வழங்கினார். அதே போல் தந்தையை இழந்த ஒரு சிறுமி கண்ணீர் நிறைந்த கண்களுடன் ‘‘நான் ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். எங்கப்பாதான் மேல போயிட்டாரு, எனக்கு புக்கும் நோட்டும் துணிமணியும் கொடுத்தீங்கனா எங்க அம்மாவ காப்பாத்தி விட்டிருவேன்'' என்று தொலைக்காட்சிகளில் பேட்டியளித்தார். சாதியைக் காட்டி இந்தச் சமுதாயம் தங்களை ஒதுக்கினாலும் தங்களது செயலால் இவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள்.

நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடிய தலைவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் காட்டுமிராண்டித்தனமாகக் காவல்துறையினரால் அடித்து இழுத்துச் செல்லப்படுகிறார்கள். உயர் நீதிமன்றத்தை "மயிர்" என்று கேவலப்படுத்திய எச். இராஜா, பெண் பத்திரிக்கையாளர்களின் நடத்தை குறித்து ஆபாசமாகக் கருத்துத் தெரிவித்த எஸ்.வி.சேகர் போன்றோர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கிய காவல்துறை, உரிமைக்காகப் போராடிய தோழர்களின் மீது மட்டும் பாய்ந்ததற்குக் காரணம் சாதியைத் தவிர வேறொன்றும் இல்லை.

எனவே 17 பேர் பலியானதற்கு நீதி கேட்டுப் போராடிய தலைவர்களை விடுதலை செய்வதுடன் அவர்களின் மீது பதியப்பட்ட வழக்குகளையும் இரத்து செய்ய வேண்டும். அப்பகுதி மக்கள் பல முறை புகார் கூறியும் இந்தச் சுவரை அகற்றுவதற்கு எவ்வித முயற்சியும் எடுக்காத அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள இடத்தின் உரிமையாளரின் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து சரியான தண்டனை பெற்றுத் தர, அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்பது சத்தியமா, இல்லை வெறும் சம்பிரதாயமா என்பதை அரசின் நடவடிக்கைகளைப் பொறுத்தே மக்கள் நம்புவார்கள்.

- வழக்கறிஞர் இராம.வைரமுத்து