சென்ற ஆண்டு டிசம்பரில் சென்னையைச் சுருட்டிச் செயலிழக்கச் செய்தது வர்தா புயல்.

இந்த ஆண்டு ஓகி புயல் தென்கோடிக் கன்னியாகுமரியில் கோர ஆட்டம் ஆடிச்சென்றது.

மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தும் நிலைகுலைந்து போனது அங்கு.

வயல் காட்டில் விளைந்த நெற்பயிர்கள், தென்னை, வாழை, இரப்பர் மரங்கள் எல்லாம் அடியோடு வீழ்ந்து அழிந்தன.

எல்லாவற்றையும் விடக் கொடுமையான செய்தி மீனவப் பெருமக்கள் குறித்தது.

கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நூற்றுக் கணக்கில் கரை திரும்பவில்லை.

தப்பித்து கரை திரும்பிய சிலரைத் தவிர ஏனையோரின் நிலை என்ன என்பது குறித்து நல்ல செய்தி இல்லை.

கடலில் பிணங்கள் மிதப்பதாகச் செய்திகளைத் தொலைக்காட்சியில் பார்க்கிறோம் அதில் உயிர் தப்பியவர்கள் இருக்க மாட்டார்களா என்று நெஞ்சம் பதறுகிறது.

சாலை மறியல், போராட்டங்கள், குடும்பத் தலைவனை இழந்த உறவினர்கள் என்று கடல் நீர் உப்பைவிட, கண்ணீர் உப்பில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள் குமரி மீனவ மக்கள்.

ஆனால் அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப் படவில்லை பிரதமர் மோடியும், தமிழக முதல்வர் எடப்பாடியும்.  

மீனவ மக்களின் உயிர்களை விட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைப் பெரியதாகத் தூக்கிக்கொண்டு கொண்டாட்டங்களில் மகிழ்ச்சி அடைகிறது அ.தி.மு.க.வின் எடப்பாடி அரசு.

ஆர்.கே.நகரில் அனைத்து அமைச்சர்களும் அடங்கி விட்டார்கள் தேர்தல் பணப் பட்டுவாடாவுக்காக.

பிரதமரோ எல்லாம் முடிந்தபின் எட்டிப் பார்ப்பவரைப் போல 19.12.2017இல் கன்னியாகுமரி வருகிறார்.

அதுவும் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கவோ, அவர்கள் இருப்பிடங்களுக்குச் சென்று ஆறுதல் கூறவோ இல்லை.

அரசு விருந்தினர் மாளிகை. அங்கே ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், அதிகாரிகளைச் சந்திப்பாராம் மோடி மீனவ மக்களின் பாதிப்புகளைக் கேட்க.

ஏதோ போனால் போகிறது என்று மீனவப் பிரதிநிதிகள் 10 பேரையும், விவசாயப் பிரதிநிதிகள் 10 பேரையும் அதே விருந்தினர் மாளிகையில் சந்தித்துக் குறைகேட்கப் போகிறாராம் மோடி.

இதற்கு மோடி வராமலேயே இருந்திருக்கலாம்.

டெல்லியில் இருந்து கொண்டு அவர் அறிக்கை கேட்டிருந்தால் முதல்வர், அதிகாரிகள், ஆளுநர் தந்திருப்பார்களே. பிறகு ஏன் இங்கு வரவேண்டும்?

மத்தியில் மக்களுக்கான அரசு இல்லை. மக்களுக்கான பிரதமர் இல்லை, தமிழகத்தைப் போல.

இருந்திருந்தால் மோடி மக்களை நேரில் சந்தித்து மனித உணர்வைக் காட்டியிருப்பார்.

பிரதமரின் இந்தக் கன்னியாக்குமரிப் பயணம் ஆறுதலை தருவதாகவும் இல்லை, மீனவர்களின் அழுகையைத் துடைப்பதாகவும் இல்லை.

விருந்தினர் மாளிகைக்கு வரும் மோடி, பிரதமராக வருகிறாரா? விருந்தினராக வருகிறாரா? புரியவில்லை.