தேர்தலே இன்னும் முடியவில்லை. வாக்குகள் எண்ணிக்கை நடைபெறவில்லை. ஆட்சிக்கு வரும் கனவு மிகத் தொலைவில் கூட இல்லை. ஆனாலும் அண்ணாமலை மற்றும் அவர் சார்ந்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் அடாவடித்தனங்கள் ஆரம்பமாகி விட்டன.

கோவைத் தொகுதியில் நாடாளுமன்ற வேட்பாளராகப் போட்டியிடும் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இரண்டு நாள்களுக்கு முன்பு அத்தொகுதியில் உள்ள ஆவாரம்பாளையம் என்னும் பகுதிக்கு வாக்குகள் கேட்கச் சென்றிருக்கிறார். எப்போது தெரியுமா? இரவு 10:30 மணிக்கு மேல். இரவு 10 மணிக்கு மேல் எந்தத் தேர்தல் பரப்புரையும் நடைபெறக் கூடாது என்று கூறுகிறது தேர்தல் நடத்தை விதி. ஆனால் இவரோ அந்த இடத்திற்கே பத்து முப்பது மணிக்குத்தான் வருகிறார். அதற்குப் பிறகு தன் பரப்புரையைத் தொடங்குகிறார்.annamalai bjp 447அப்போது அங்கு வந்த திமுகவினர் சிலர், ஒலிபெருக்கியைத் துண்டித்து விட்டுப் பிறகு பேசுங்கள் என்று சொல்கிறார்கள். அப்போது அங்கு என்ன நடந்தது என்பதை எல்லா ஏடுகளும் ஊடகங்களும் நமக்குத் தெரிவிக்கின்றன!

அண்ணாமலையுடன் வந்த ஆர்எஸ்எஸ் குண்டர்கள் உடனே திமுகவினரைத் தாக்குகின்றனர். காவல்துறையினர் தடுத்து நிறுத்தாமல், சமாதானம் பேசுகின்றனர். கோவையில் உள்ள காவல்துறை, பல நேரங்களில் அரசின் காவல்துறையாக இல்லாமல், ஆர்எஸ்எஸ் இன் காவல்துறையாக இருக்கிறது என்று நண்பர்கள் குற்றம் சாற்றுவார்கள்! அது உண்மைதானோ என்று எண்ணத் தோன்றுகிறது.

திமுகவினரைத் தாக்கிய சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலையின் மீதும் வழக்கு பதிவாகி இருக்கிறது. ஆனாலும் அண்ணாமலையின் அடாவடித்தனங்கள் குறையவில்லை. தேர்தல் நடத்தை விதி தனக்குப் பொருந்தாது என்பது போல அவர் நடந்து கொள்கிறார்.

எல்லாவற்றுக்கும் ஏப்ரல் 19 அன்று கோவை மாநகர மக்கள் விடை சொல்வார்கள். அண்ணாமலையின் தோல்வி உறுதி செய்யப்பட்டதுதான் என்றாலும், அவர் தன் கட்டுத்தொகையையும் இழந்தார் என்று வரப் போகும் செய்திதான் அடாவடித்தனத்திற்கு எதிரான, ஜனநாயகத்திற்கு ஆதரவான வெற்றிச் செய்தியாக அமையும்! அமையட்டும்!!

- சுப.வீரபாண்டியன்