இப்பெல்லாம் யார் சார் சாதி பாக்குறாங்க? கம்ப்யூட்டர், இன்டர்நெட்டுன்னு போயிட்டிருக்கிற இந்த காலத்தில. அதிலயும் நகரமாக வளர்ந்திட்டிருக்கிற இந்த சமயத்தில் யார் என்ன சாதின்னு யாருக்குத் தான் தெரியும்? இருபத்தியொன்னாம் நூற்றாண்டில இருக்கோம். நிலாவில தண்ணீர் இருக்கா? செவ்வாய் கிரகத்துல மனிதன் வசிக்கலாமா? அப்படின்னு ஆய்வு நடத்திட்டிருக்கிறப்ப போய், பக்கத்து வீட்டுக்காரன், பக்கத்துத் தெருக்காரன் என்ன சாதின்னு பாத்திட்டிருக்கிறதா வேலை? என்று தங்களுக்கும், மிகவும் கீழ்த்தரமானதும் அருவருக்கத்தக்கதுமான சாதிக்கும் எந்தவித தொடர்புமில்லை என்பதுபோல பேசிக் கொள்ளும் பெரும்பாலோனோரின் முகத்திற்கு நேராய் அவர்களது வாதமும், நடிப்பும் அப்பட்டமான பொய் என்பதற்கு சாட்சியாக சமீபத்தில் வெளி உலகுக்குத் தெரிய வந்துள்ளது ஒரு நிகழ்வு. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பொதுத் தளங்களில் உள்ளவர்களாலும், மாந்த நேயத்தை விரும்புகிறவர்களாலும், சாதி கட்டமைப்பில் தங்களை அய்க்கியப்படுத்திக் கொண்டு அதனை தங்களின் சுய லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்பவர்கள் உள்ளிட்டவர்களால் பெரிதும் கவனிக்கப்பட்ட ஒரு கீழ்த்தரமான நிகழ்வு.

மதுரையிலிருந்து சுமார் 33 கி.மீ தொலைவிலுள்ள கள்ளிக்குடியிலிருந்து டி.கல்லுப்பட்டி செல்லும் வழியில் அமைந்துள்ளது வில்லூர் கிராமம். அங்கு பட்டியலினத்தைச் சேர்ந்த பள்ளர் 100 குடும்பம், பறையர் 125 குடும்பம், ஆதிக்கசாதி இந்துக்களான தேவர் 1000 குடும்பம், செட்டியார் 40 குடும்பம், பிள்ளை 20 குடும்பம், அய்யர் 20 குடும்பம், ஆசாரி 15 குடும்பம், இசை வேளாளர் 6 குடும்பம், நாவிதர் மற்றும் வண்ணார் 5 குடும்பம் உள்ளிட்ட 5500 மக்கள் வசித்து வருகின்றனர்.

தீண்டாமை வன்கொடுமையின் வடிவங்கள்:

பட்டியலின மக்கள் மட்டும் ஊருக்கு ஒதுக்கப்புறமாக வசித்து வருகிறார்கள். அரசு பள்ளிக்கூடம், தபால் நிலையம், அரசு மருத்துவமனை, அரசு கால்நடை மருத்துவமனை, வங்கி, காவல்நிலையம், பலசரக்குக் கடைகள் மற்றும் நியாய விலைக் கடைகள் என அனைத்து அரசு அலுவலகங்களும் மற்றும் நிர்வாக அமைப்புகளும் ஆதிக்கச் சாதி இந்துக்கள் வசிக்கின்ற பகுதியிலேயே அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அந்தப் பகுதி வாயிலாகவே பட்டியலின மக்களும், தங்களது அத்தியாவசிய பணிகளை செய்துவர கடந்து போக வேண்டிய சூழல் நிலவியுள்ளது. ஆனால் அந்த பாதை பட்டியலின மக்களின் பயன்பாட்டுக்கு மறுக்கப்பட்டுள்ளது. அந்த பாதையை விட்டால், ஊருக்கு ஒதுக்குப்புறமாக காட்டுப்பகுதி அமைந்துள்ளது. அது தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலம். எனவே, நிலத்துக்குச் சொந்தக்காரர் அந்த பாதையை அடைத்துவிட்டார். இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பல ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தியும், இன்று வரையிலும் மாற்றுப் பாதைக்கான திட்டமும் நடைமுறைக்கு வராமலேயே உள்ளது.

கிராமத்தில், ஆதிக்க சாதியினரின் தெருவிற்குள் பட்டியலின மக்கள், இரு சக்கர வாகனங்களில் அமர்ந்து செல்லக்கூடாது. தெரு முனையிலேயே இறங்கி, வண்டியை தள்ளிக்கொண்டுதான் செல்ல வேண்டும்.

கிராமத்திலுள்ள அனைத்து தேனீர்க் கடைகளிலும் பட்டியலின மக்கள், தரையில் அமர்ந்துதான் தேனீர் குடிக்க வேண்டும். இருக்கைகளில் அமரக்கூடாது. உணவகங்களில் தரையில் கோணிச்சாக்குகள் விரித்து அதன் மீது அமர்ந்துதான் சாப்பிட வேண்டும். ஆதிக்கச் சாதியினர் திண்ணைகளிலும், இருக்கைகளிலும் அமர்ந்து சாப்பிடுவார்கள்.

தேனீர்க் கடைகளில், ஆதிக்க சாதியினருக்கு சில்வர் மற்றும் கண்ணாடி டம்ளர்களில் தேனீர் கொடுக்கப்படும். அதில் அவர்கள் குடித்துவிட்டு வைக்கும் டம்ளரை கடைக்காரர்களே கழுவி வைப்பார்கள். ஆனால் பட்டியலின மக்களுக்கு அலுமினிய டம்ளர்களில் தேனீர் வழங்கப்படும். அதில் தேனீர் குடித்துவிட்டு அந்த டம்ளர்களை அவர்களே கழுவி சுத்தம் செய்து வைக்க வேண்டும்.

பொதுபேருந்து நிறுத்த நிழற்குடையில் பட்டியலின மக்கள், ஆதிக்கச் சாதியினருக்குச் சமமாக இருக்கைகளில் அமரக்கூடாது. தரையில்தான் அமர வேண்டும். அல்லது பேருந்து நிறுத்தத்திற்கு தூரமாக நின்று கொண்டு பேருந்து வந்த உடனே ஓடிவந்து ஏறிக்கொள்ள வேண்டும்.

ஆதிக்க சாதியினர் வீடுகளில் விழுகிற சாவுகளுக்கு ஆண்டுதோறும் அவர்கள் தீர்மானிக்கிற குடும்பம்தான் இழவு சொல்லிப் போதல், பறை அடித்தல் போன்ற அடிமை வேலைகளை செய்ய வேண்டும். பள்ளர் சாதியைச் சேர்ந்தவர்கள் தான் பிணக்குழி தோண்டுதல், பிணம் எரிக்க விறகுகள் கொண்டுவருதல் போன்ற வேலைகளைச் செய்ய வேண்டும். தற்போது கரட்டியான் (எ) முனியாண்டி தஃபெ.பாக்கியம் என்பவர் அவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த வயதில் குறைந்தவர்களையும், பட்டியலின மக்கள் அய்யா, சாமி என்ற அழைக்க வேண்டும். அதே வேளையில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த வயதில் குறைந்தவர்களும் பட்டியலினத்தைச் சேர்ந்த தங்களைவிட வயதில் மூத்தவர்களை டே என்றும் பெயரைச் சொல்லி கூப்பிட்டும் வருகின்றனர்.

பட்டியலின மக்களும், ஆதிக்கச் சாதியினருக்கும் சவரம் செய்ய வேறு வேறு கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரே கடையில் சவரம் செய்தல், முடிவெட்டுதல் கூடாது. துணி வெளுப்பதற்கும் வேறு வேறு நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2010 ஆகஸ்ட் மாதத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த தங்கபாண்டியன் என்பவர், ஆதிக்கச் சாதியினரின் தெரு வழியாக மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றார் என்பதற்காக அவரை தற்போதைய பஞ்சாயத்துத் தலைவரின் கணவர் பெரியாம்பளை என்பவரது தலைமையில் சிலர் ஒன்று கூடி தாக்கியிருக்கின்றனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் சமாதானம் பேசி புகாரை திரும்பப் பெற வைத்திருக்கின்றனர். மேலும் இப்பகுதியில் தீண்டாமையே இல்லை என்றும் காவல் அதிகாரிகள் தங்களது உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். இது போன்ற தீண்டாமை வன்கொடுமைகளை பதிவு செய்து பத்திரிக்கையில் செய்தி வெளியிட்ட நிருபரும், பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் இதுபோன்று எழுதியிருக்கிறார்; அந்த செய்தியில் துளியும் உண்மையில்லை என்று காவல்துறையினர் தீண்டாமைக் கொடுமைகளை அங்கீகரித்துள்ளனர்.

இச்சூழலில் கடந்த 30.04.2011 சனிக்கிழமை இரவு 10.45 சுமாருக்கு பட்டியலினத்தைச் சேர்ந்த தங்கபாண்டியன் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் ஆதிக்கச் சாதியினரின் தெருவழியாக கள்ளிக்குடி போய்விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது, அவரை தடுத்து நிறுத்தி ஆதிக்க்ச சாதியினர் தாக்கியிருக்கின்றனர். அவரது மோட்டார் சைக்கிளையும் பிடித்து வைத்திருக்கின்றனர். அவர்களிடமிருந்து தப்பித்துச் சென்ற அவர், காவல் நிலையத்திற்குச் சென்று அந்த நிகழ்வு தொடர்பாக புகார் கொடுத்திருக்கிறார். மறுநாள் காலையில் காவல்துறையினர், தங்கபாண்டியனிடம் அவர் கொடுத்த புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துவிட்டதாக கூறியிருக்கிறார்கள்.

இதனால் தொடர்ந்து அன்று மதியம் வில்லூருக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க், அப்பகுதியல் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளை நேரில் கண்டறிந்து, பட்டியலினத்தைச் சேர்ந்த இருளப்பன் மகன் சமையன், சுப்பையன் மகள் அய்யனார் ஆகிய இருவரையும், ஆதிக்கச் சாதியினரின் தெருவழியாக சைக்கிள் ஓட்டிச் செல்ல சொல்லியிருக்கிறார். அப்போது அங்கு காவல்துறை திரண்டு நின்றதால் ஒன்றும் செய்யாமல், அன்று இரவு பஞ்சாயத்துத் தலைவர் சுப்புலட்சுமி மற்றும் நூற்றுக்கும் அதிகமான ஆதிக்க சாதியினர், அன்று காலை கைது செய்த ஐந்து நபர்களை விடுவிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களிடம் வழக்கு பதிவு செய்துவிட்டதால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்; இப்போது கலைந்து செல்லுங்கள் என்று கூறியதற்கு, 'புகார் கொடுத்த பயல்கள் உயிரோடு இருந்தால் தானே, சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பீர்கள்' என்று கூறி எல்லோரும் ஒன்று திரண்டு பட்டியலின மக்களின் குடியிருப்புக்குள் அரிவாள் ஈட்டி கம்பு, தடிகளுடன் நுழைந்து, தங்கபாண்டியனின் வீட்டு கதவு, டிராக்டர் ஷெட், டைல்ஸ், போர்வெல், சைக்கிள், சமையல் பாத்திரங்கள் மற்றும் அன்று காலையில் காவல்துறையினர் சொல்லி தங்களது தெருவிற்குள் சைக்கிள் ஓட்டி வந்த இருளப்பன் மகன் சமையன் வீட்டின் சிமெண்ட ஓடுகள், முழுவதையும் அடித்து நொறுக்கியிருக்கின்றனர். கண்ணில் பட்ட சைக்கிள்கள் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளார்கள்.

அப்போது செய்தி அறிந்து அங்கு வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் தலைமையிலான போலிசார்கள் அவர்களை கலைந்து போகச் சொல்லி எச்சரித்துள்ளனர். எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரையே கொலை செய்யும் அளவுக்கு முன்னேறிய ஆதிக்கச் சாதியினர், அவரது வாகனத்தையும் அடித்து நொறுக்க ஆரம்பித்துள்ளார்கள். இதன் காரணமாக, கலவரத்தைத் தடுக்க காவல்துறையினர் வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் அதிகமானோரின் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் எட்டுக்கும் அதிகமான வழக்குகளைப் பதிவு செய்து 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக, மேற்படி பாதிக்கப்பட்ட தங்கபாண்டியன் தன்னை மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்து இடித்துவிட்டார் என்றும், ஏன் என்று கேட்டதற்கு தன்னை துப்பாக்கி காட்டி மிரட்டினார் என்றும் பொய்யாக ஒரு புகாரை பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி, காவல்துறையிடம் கொடுத்து வழக்கு பதிவு செய்திருக்கிறார். மேலும் மதுரை உயர்நீதிமன்றத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் ஊருக்குள் முகாமிட்டுள்ள காவல்துறையினரை உடனடியாக வெளியேற உத்தரவிட வேண்டும் என்றும், தங்களுக்கு பாதுகாப்பும் வழங்கக் கோரி நீதிப்பேராணை மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.

தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று கூறும் இந்திய அரசியல் சாசனம் இயற்றப்பட்டு அறுபது ஆண்டுகள் கடந்து போன சூழலில் இன்றளவிலும் தீண்டாமை இங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல் என்று அனைத்து பாடப்புத்தகத்திலும் அச்சடிக்கப்பட்டு வரும் சூழலிலும், ஆண்டு தோறும் தியாகிகள் தினமான ஜனவரி 30 அன்று ஆட்சியாளர்களும், அமைச்சர் பெருமக்களும், அரசு அதிகாரிகளும் தீண்டாமை ஒழிப்பு குறித்து எடுத்துக் கொள்ளும் உறுதிமொழிகளும் வெறும் கண்துடைப்புக்காக மட்டுமோ என்று நியாயமான கேள்வி எழுகிறது.

தீண்டாமை மற்றும் சாதி ஒழிப்பு குறித்து அரசுகள் கடுமையான, தீவிரமான நடவடிக்கைகள் விரைவாக எடுக்க வேண்டும். இதுவரையிலும் போடப்பட்ட திட்டங்களின் தோல்வியையே வில்லூர் நிகழ்வு நமக்கு காட்டுகிறது. தீண்டாமை ஒழிப்பு குறித்த சட்டங்கள் கடுமையாக்கப்படுவதுடன் உறுதியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மத்திய, மாநிலத்தில் உருவாக்கப்படும் பாடப்புத்தங்கள் உலகத் தரத்தில் இல்லாவிட்டாலும் சாதி ஒழிப்பு குறித்து பாடங்கள் நிச்சயமாக இணைக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். சாதி ஒழிக்கப்படுவதிலேயே ஒட்டு மொத்த சமூகத்தின் விடுதலையும் அடங்கியுள்ளது.

-- இ.இ.இராபர்ட் சந்திரகுமார், வழக்கறிஞர், மதுரை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It