சமூக சேவைத் திட்டங்களில் அக்கறை கொண்டிருக்கும் நிறுவனங்கள் அல்லது ஏதாவது கட்டாயத்தால் சமூக சேவைத் திட்டங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் ஆகியவை இன்று கார்பரேட் சமூக பொறுப்புணர்வு அம்சங்களில் அக்கறை கொள்கிறவர்களாய் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றன. தங்களின் லாபத்திலோ, செலவிலோ ஒரு பகுதியை இதற்கென செலவிட வேண்டும் என்ற கட்டாயத்தாலே பெரும்பாலும் அச்சேவைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவை அந்த நிறுவனங்களுக்கு பெயரும் புகழும் தரும் அம்சங்களாகவும் சாதாரண மக்களுக்கு தங்களை சமூக சேவையாளர்களாகக் காட்டிக் கொள்ளவும் பயன்படுகின்றன.

வியாபார நியதியோ, தர்மமோ இதில் உள்ளடங்கி இருப்பதாக காட்டப்பட்டாலும், இவை அனைத்தும் நிபந்தனைகளுக்கு உட்பட்டே நடைபெறுவதாகச் சொல்லலாம். அதிகமாய் புகைவிடும் வாகனங்களுக்காக முன்பு எந்தச் கூச்சமும் இன்றி அபராதம் செலுத்திய தொழில் நிறுவனங்கள், இன்று அவ்வகை வாகனங்களை புறந்தள்ளிவிட்டு விலையுயர்ந்த வாகனங்களை நடைமுறைக்கு கொண்டு வருகின்றன. அல்லது சிக்கன நடவடிக்கைக்காக அவ்வகை வாகனங்களை அவ்வப்போது பயன்படுத்தும்போது கட்டும் சிறிய அளவு அபராதத்தைப் பற்றி எந்த வகையிலும் அவர்கள் கவலைப்படுவதில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட கட்டுப்பாட்டு நிறுவனங்களில் சான்றிதழ் பெறும் நிர்பந்தங்களுக்காக மட்டுமே, தொழில்நுட்ப மாற்றம் செய்யப்பட்ட வாகனங்களை, இந்த கார்பரேட் நிறுவனங்கள் வீதிகளில் உலாவ விடுகின்றன. கட்டுப்பாடு விதிக்கப்படுவதற்கு முன்னதாகவே இதைச் செய்திருக்கலாமே?

சமூக சேவைத் திட்டங்களிலும், குறிப்பாக கல்வி விஷயங்களில் அக்கறை கொள்பவர்கள் எப்போதும் அதிகமாய் இருந்திருக்கிறார்கள். ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குதல், சீருடை தருதல், பள்ளி கல்லூரி கட்டணங்களை செலுத்துதல் என்று அது தொடங்குகிறது. இன்றைக்கு அது வளர்ந்து எய்ட்ஸ் சிகிச்சை விழிப்புணர்வு முகாம்கள், முழு சிகிச்சை என்று நீட்சி பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் ஆப்ரிக்க நாடுகளில்தான் கார்பரேட் சமூக பொறுப்புணர்வு செயல்பாடுகள் தொடங்கப்பட்டு அதிகளவில் நடைபெற்று வந்திருக்கின்றன. இன்றைக்கு மூன்றாம் உலக நாடுகளில் அதே நடவடிக்கைகள் பரவலாக்குவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. ஆரம்பத்தில் ளுயு 8000 மற்றும் ஐளுழு சான்றிதழுக்காக இப்படிப்பட்ட நடவடிக்கைகள் பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நடவடிக்கைகள் அந்த நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள் மீதும், பொருட்களை வாங்கும் நுகர்வோர் மத்தியிலும் நல்ல எண்ணத்தையும், நம்பகத்தன்மையையும் உருவாக்க முயற்சிக்கின்றன. சமூகப் பொறுப்புணர்வில் அக்கறை கொண்ட நிறுவனத்தின் உற்பத்திப் பொருள் என்ற முத்திரை, தங்களை பிற நிறுவனங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்ற பிரம்மையை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். “நியாய வணிக”த்துக்கு எதிராக செயல்படும் பல நிறுவனங்கள், வியாபாரத்தில் இன்றைக்கு பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பதால், மற்ற நிறுவனங்களும் இப்படிப்பட்ட செயல்பாடுகளுக்கு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

ஆனால், தனியார்மய நடவடிக்கைகளுக்கு ஆதரவாக கார்பரேட் சமூக பொறுப்புணர்வு செயல்பாடுகள் மாற்றப்படுகின்றன. தனியார் தொழில் நடத்துவதாலேயே, இந்த வகை நடவடிக்கைகள் சாத்தியமாகின்றன என்ற விளம்பரயுக்தி அந்த நிறுவனங்களுக்கு சாதகமாக அமைகிறது. பொருளாதார கட்டுப்பாடு முழுவதும் அரசிடம் இருந்து தனியாருக்கு மாற வேண்டும் என்ற போக்கின் அடிப்படையில் இவை அமைந்திருக்கின்றன. அரசு நிறுவனங்களின் செயல்பாடு அதிருப்தி தரும் நிலையில், தனியார் நிறுவனங்கள் சிறந்த சேவை தருவதாக நிலவும் நம்பிக்கைக்கு ஒப்பானது இது. திறந்த முறை சந்தையில் பொருட்களின் நுகர்வுக்கும், நலத்திட்டங்களுக்குமான பாலமாக சமூகப் பொறுப்புணர்வு செயல்பாடுகள் அமைகின்றன.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக பொதுவுடமைத் தத்துவத்துக்கு நேர்ந்த இறப்பு, இன்றைக்கு திறந்தவெளிச் சந்தை பரவலாக பெருமளவு வழிவகுத்திருக்கிறது. உலக வியாபாரம் சாதாரணமாகிவிட்டது. வியாபார குறுக்கீட்டு தடைகள் வெகுவாக குறைந்திருக்கின்றன. பொதுத்துறை நிறுவனங்களின் சாவும், அரசே அதை ஒழிக்கும் நடவடிக்கைகளும் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

அன்றாட வாழ்க்கையில் பொருட்களை வாங்கிக் குவிக்கும் இயந்திரங்களாக மக்களை நுகர்வு கலாச்சாரம் மாற்றிவிட்டது. அந்த பொருட்களை உற்பத்தி செய்வதற்காக பெரும் நிறுவனங்கள் தங்களை விரிவாக்கிக் கொள்கின்றன. இது பற்றிய கல்வியையும் விழிப்புணர்வையும் பரவவிடாமல் ஊடகங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் அந்த நிறுவனங்கள் பார்த்துக் கொள்கின்றன. தொண்டு நிறுவனங்களின் செயல்பாட்டாலும் அதிரடி நடவடிக்கைகளாலும், அது பற்றிய விழிப்புணர்வு கல்வி குறித்த அக்கறையை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. எங்கள் செயல்பாடு “லாபத்துக்கு மட்டுமல்ல” என்ற நோக்கம் மக்கள் மீது மீண்டும்மீண்டும் திணிக்கபடுகிறது. மக்கள், புவி, லாபம் ஆகிய அம்சங்களில் தொழிலாளர்கள், நிறுவன முதலீடுகள், லாபம் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வைக்கப்பட்டு பார்க்க கட்டாயப்படுத்தப் படுகிறது. அதற்கு பதிலாக வளங்குன்றாத சுற்றுச்சூழலும், சமூகப் பொருளாதாரமும், தொழிலாளர் நலனையும் மக்கள்நல இயக்கங்கள் வலியுறுத்தப்படுகின்றன.

தொழிலாளர் நலனும், கார்பரேட் சமூகப் பொறுப்புணர்வும் அதிகளவில் பேசப்பட்டு வரும் காலகட்டத்தில்தான் நவீனக் கொத்தடிமைத்தனமும் விரிவடைந்து வருகிறது.

கொத்தடிமைத்தனம் என்பது ஆப்ரிக்க நாடுகளில் பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்து வருவதையும், பிற நாடுகளில் அதன் தொடர்ச்சியும் பற்றி வரலாற்று கூறுகள் தெரிவிக்கின்றன. இதற்கு நிலப்பிரபுத்துவ அமைப்பும், ஜாதிய இறுக்கமும் பொருளாதார இடைவெளிகளும் அடிப்படைகளாக இருந்திருக்கின்றன. பாலியல் சுரண்டல், உழைப்பு சுரண்டல், உடல் ரீதியான வன்முறைகள் கொத்தடிமை முறையின் பாதகங்களாக அமைந்திருக்கின்றன. வறுமையும், சட்ட ரீதியற்ற நடவடிக்கைகளும் மனிதர்களை மிருகங்களாக நடத்த வழிவகை செய்கின்றன. கொத்தடிமைத்தனத்துக்கோ அல்லது கட்டாய வேலை சுரண்டலுக்கோ 3 வருட சிறையும், ரூ. 2000 குறைந்தபட்ச தண்டனையும் என்றாகியுள்ளது. இந்த குறைந்தபட்ச சட்ட ரீதியான விதிகள் மூலம் அமல்படுத்த முடியாதபடி சூழலை முதலீட்டாளர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

வெளிப்படையான கொத்தடிமைத்தனம் என்து இல்லாமல் “உழைப்பு சுரண்டல்” மூலம் இளம் வயதினர் கடத்தப்படுவது சாதாரணமாகிவிட்டது. வேலைக்கான பெருமளவு சக்தி, விலையில்லாமல் கிடைக்கும் தேசங்களில் இவ்வகை கடத்தல் அதிகம் நடைபெறுகிறது. அவர்கள் “கேம்ப் கூலிகள்” என்ற அடிப்படையில் வேலை வாங்கப்படுகிறார்கள். அந்நிலையிலிருந்து அவர்களை விடுவிக்க போதுமான சட்டவிதிகள் இருந்தும், பயன்படுத்தப்படுவதில்லை. பயிற்சி பெறும் தொழிலாளர்கள், குறைந்த காலப் பயிற்சி மட்டுமே பெற்றுள்ளதாக காரணம் காட்டி விலக்கப்படுகிறார்கள். “பேரம் பேசுதல்” என்ற அடிப்படையில் அமைந்த உரையாடல், தொழிற்சங்கங்களின் வாழ்க்கையை ஓட்டப் போதுமான உரையாடல்களாக அமைந்து விடுகின்றன. அதே நேரத்தில் தொழிலாளர்களும் தாங்கள் சார்ந்துள்ள சங்கங்களுக்கு நம்பகமானவர்களாக இருப்பதில்லை. தங்களுக்குப் பிரச்சனை என்று வருகிறபோது மட்டுமே தொழிற்சங்கங்களை அணுகுகிறார்கள். ஆனால் அவை தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்களுக்கு நம்பகமானவர்களாக மாறிப் போய் விடுகின்றன.

இவ்வகையில் “குழந்தை உழைப்பு” என்பது கட்டாய உழைப்பென்றாகி விடுகிறது. பொருளாதார அடிமைத்தனமோ குறைந்தபட்சக் கூலிக்காக அடிமைகளாக இருப்பதோ, உயிர் வாழ்வதற்காக சாதாரணமானவர்கள் மேற்கொள்ளும் வாழ்க்கை வழியாகிவிடுகிறது.

இன்றைக்கு பெருநகர் சார்ந்த தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களில் பெரும்பாலும் இவ்வகைக் கட்டாயங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இவ்வகை வேலைகளுக்காக குறைந்த வயதினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். வெறும் உணவும் தங்குவதற்கான இடமும் ஆகிய கவர்ச்சிப் பொருட்களால் ஈர்க்கப்படுகிறார்கள். தொழிலாளர்கள் என்பதற்காக எந்த அத்தாட்சியும் இன்றி அவர்கள் வேலை வாங்கப்படுகிறார்கள். குறைந்தபட்ச சம்பளம், ஆயுள் பாதுகாப்புத் திட்டம், சேவைத் திட்டங்கள், உடல்நலத் திட்டங்கள் எவையும் அமல் படுத்தப்படாமல், அவர்களது வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது. திறந்தவெளிச் சந்தையின் எல்லாவிதக் கூறுகளும் இவ்வகைத் தொழிலாளர்களை மிகக் குறைந்த சம்பளத்துக்கு அடிமைப்படுத்துகின்றன. கொடுக்கப்படும் குறைந்த சம்பளமும் மறுக்கப்பட்டு, தொழில் நிறுவனங்களின் லாபமே குறிக்கோளாகக் கொண்டு நவீன முதலீட்டாளர்கள் களம் இறங்குகிறார்கள்.

இந்நிலையில் தொழிலாளர்களுக்கு வாழத் தேவையான சம்பளம் கிடைப்பதில்லை, கிடைக்கும் தொகை அவர்களின் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றுவதில்லை. எந்தவித சேமிப்பும் இருக்காது. நோய்களையும், உபாதைகளையும் சேமித்து வைத்திருப்பது மட்டும்தான் அவர்களின் வாழ்க்கையில் நிகழ்கிறது. உடல்நல கவனமோ, முறையான பொழுதுபோக்கு நடவடிக்கைகளோ இல்லாமல் வேலைக்குள்ளேயே கிடந்து உழல்கிறார்கள்.

பல்வேறு அரசுத்துறை சார்ந்த ஊழியர்களின் வயது, உற்சாகம் இழந்த நிலையில் இருப்பதால் பெரும் சவால்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போகிறபோது புதிய தொழிலாளர்களுக்கான தேவை உருவாகிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில்தான் பெரும் தொழிற்சாலைகளுக்கு புதிய தொழிலாளர்களும் கிராமப்புற பகுதிகளிலிருந்து நாட்கூலி அடிப்படையில் கொண்டு வரப்படுகிறார்கள். உரிமைகளைப் பெறுவதற்கான தொழிற்சங்க அடிப்படை உரிமைகளும் இன்றி வேலை வாங்கப்பட்டு, சுரண்டப்படுகிறார்கள். கிராமப் பொருளாதாரம் மூலமான சுயதேவை பூர்த்தி போன்ற அம்சங்களுக்கான அடிப்படைகள் முற்றிலும் சீர்குலைந்து போயிருக்கிற சூழல்கள் உருவாகின்றன. இப்படியாக உலகமயமாக்கலும், திறந்தவெளி சந்தையும், முதலாளித்துவ அமைப்புகளும் புதிய தொழிலாளர்களை இன்று கொத்தடிமைகளாகவே வைத்திருக்கின்றன.

தொழில் நிறுவனங்களின் சர்வதேச முத்திரை, அளவுகோல் நிர்ணயிக்கும் நடவடிக்கைகளில் தொழிலாளர்களின் நலவாழ்வும் சமூகப் பாதுகாப்பும் கார்பரேட் சமூகப் பொறுப்புணர்வு அம்சங்களாக வலியுறுத்தப்படுகின்றன. ஆனால் கொத்தடிமைத்தனத்தின் இன்னொரு முகமாய் எவ்வித உரிமைகளும் தரப்படாமல், சாதாரணத் தொழிலாளர்கள் கொத்தடிமைகள் ஆக்கப்பட்டு உழைப்பைச் சுரண்டி தொழில் நடத்துவது சாதாரணமாகிவிட்டது. இந்த இரு நிலைகளின் முரண்கள்தான் இன்றைய முதலாளித்துவத்தின் கோர வடிவமாகவும், நிதர்சனமாகவும் அமைந்துள்ளது. இதிலிருந்து மீள்வதற்கான குரல்கள் இன்றி தொழிலாளர்கள் அடிமைகளாக இருப்பதால், சாதாரண அடிப்படைத் தேவைகளில் திருப்தியடைந்து வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். இதுவே முதலாளித்துவத்துக்கு வெகு சாதகமான நவீன அடிமைகளை உலகம் முழுவதும் இந்த நூற்றாண்டில் உருவாக்கிவிட்டது. அடுத்த நூற்றாண்டு இவ்வகை அடிமைகளையே எங்கும் தொழிலாளர்கள் ஆக்கியிருக்கும்.

Pin It