ilagovan karuchettaithamilar feb14நம்பிக்கை தரும் நான்கைந்து சொற்கள் - யாரிடமிருந்தோ, யாருக்கோ பெரும்பாலான நேரங்களில் தேவைப்படுகின்றன. தன்னம்பிக்கை உடையவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட, பல நேரங்களில், தங்களின் மதிப்பிற்குரியவர்கள், நலம் விரும்பிகள், தங்கள் மீது அன்பு கொண்டவர்களிடமிருந்து, நம்பிக்கை தருகின்ற பேச்சினை எதிர்பார்ப்பது இயல்பான ஒன்றாக இருக்கிறது. அதற்கேற்றாற்போல், தன்னம்பிக்கை ஊட்டும் தலைப்புகளோடு பல புத்தகங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. அவற்றுள் பெரும்பான்மையும், மொழி பெயர்ப்பு நூல்களாக இருக்கின்றன. தமிழில் எழுதப்பட்டவை மிகச்சிலவே.

இதுவும் தன்னம்பிக்கை ஊட்டும் ஒரு புத்தகம்தான். ஜெயிப்பது நிஜம்என்னும் தலைப்பில் கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. இது மற்றவர்களுக்கு நம்பிக்கையை மட்டும் சொல்லிச் செல்லும் நூலாக இல்லாமல், நூலாசிரியர் இளங்கோவின் தன்னம் பிக்கை நிறைந்த வாழ்வைக் கதைப்போக்கில் சொல்லும் நூலாக இருக்கிறது.

இளங்கோ பிறவியிலேயே பார்வைக் குறைபாடு உள்ளவர். ஆனால் இந்த நிமிடம் வரை, அந்தக் -குறைபாட்டை மனதளவிலும், நடைமுறையிலும் உணர்ந்ததே இல்லை என்பதை இந்நூலைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

17 தலைப்புகளில், தன் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகளையும், அதையட்டிய தன்னுடைய போராட் டங்களையும் நூலினுள் பதிவு செய்திருக்கிறார் இளங்கோ. எனக்கு sight இல்லை, ஆனால் vision இருக்கிறது. sight என்பது ஒரு பிரதிபலிப்பு, அவ்வளவுதான்.

ஆனால் vision என்பது அப்படியல்ல, அதையும் தாண்டி ஊடுருவி தொலைநோக்கோடு பார்ப்பது.எனவே பார்வை உடையவர்கள் அனைவரும் vision ம் பெறவேண்டும் என்பதே என் ஆசைஎன்னும் அவருடைய சொற்களில் தெறிக்கும் தன்னம்பிக்கை, இப்புத்தகம் முழுவதும் நிரம்பி வழிவதைப் பார்க்க முடிகிறது.

பத்தாம் வகுப்புவரை தமிழ்வழியில் படித்துவிட்டு, 11,12ஆம் வகுப்புகளை ஆங்கில வழியில் படித்திருக்கிறார். ஆங்கிலத்தில் சரளமாகப் பேச வேண்டும் என்பது சிறு வயதிலிருந்தே தன்னுடைய கனவாக இருந்தது என்று சொல்லும் இளங்கோ, ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டமும், ‘ஆங்கிலத்தை எப்படிக் கற்றுத் தருவது?’ என்னும் தலைப்பில் எம்.பில்., பட்டமும் பெற்ற வர். தன்னுடைய ஆங்கிலப் புலமையால் அனைவரையும் வியப் பில் ஆழ்த்தியும், தன் வயப்படுத்தியும் வரும் மாற்றுத்திறனாளி இவர்.

ஆங்கிலத்தை அறிவாக அணுகாமல் மொழியாக அணுக வேண்டும்என்கிறார். இதைத்தான் ஆங்கில மோகத்திற்கும், ஆங்கில மொழி அறிவுக்கும் இடையிலான வேறுபாடாக நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதை எளிமையாக, குறளை விடச் சுருங்கச் சொல்லிவிட்டார்.

தன்னைப் படிக்கவைத்து ஆளாக்கிய தன்னுடைய தாயை நன்றியோடு நினைவுகூறும் அதே நேரத்தில், தன்னைப் பள்ளி யில் சேர்க்கும் பொறுப்பினைக்கூடத் தட்டிக்கழித்த தந்தையைப் பற்றியும், சிறிதும் வருத்தமே இல்லாமல் போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார். பத்தாம் வகுப்புவரை சிறப்புப் பள்ளியில் படித்துவிட்டு, பதினொன்றாம் வகுப்புக்கு ராயப்பேட்டை யிலுள்ள சாதாரண பள்ளியில் சேருவதற்காகப் போகிறார். அங்கேதான் தந்தை பொறுப்பில் இருந்து நழுவிக்கொள்ள, தானாகவே பள்ளியில் சேர்ந்தது எப்படி என்பதைப் படிக்கும் போது, யார் யாரோ சுயம்புஎன்று சொல்லிக் கொள்கிறார் களே, உண்மையில் அந்தச் சொல் இவருக்குத்தான் பொருந்தும் என்று தோன்றுகிறது.

அந்தப் பள்ளியின் முதல்வர், ‘நீ நல்லா படிப்பேன்றது, உன்னோட மார்க் சீட்டைப் பார்த்தாலே தெரியுதுப்பா. ஆனா, இங்க 11ஆம் வகுப்பு 3வது மாடியில் இருக்கு. எப்படி உன்னால போக முடியும்?’ என்று தயங்கிக்கொண்டே சொல்கிறார். ஸ்டெப்ஸ் ஏறிப்போறதுக்கு கால்தான் நல்ல ஸ்ட்ராங்கா இருக்கணும் சார். எனக்குக் கண்தானே தெரியாது? என்னோட கால் ரெண்டும், நல்லா ஸ்ட்ராங்கா இருக்கு. அதுபோதும் சார் எனக்குஎன்ற இவரின் பதிலைக் கேட்டதும், எழுந்து வந்து முதுகில் தட்டிக்கொடுத்து, உடனே பள்ளியிலும் சேர்த்துக் கொள்கிறார்.

கணக்கு வைத்திருக்கும் வங்கியில் காசோலைப் புத்தகமும், ஏ.டி.எம். அட்டையும் கேட்டு விண்ணப்பிக்கிறார். வங்கியில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. கேட்டபோது, ‘உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக் கப்பட்டுவிட்டது. பார்வையில்லாத நீங்கள் எப்படிப் பாதுகாப் பாக இவற்றைக் கையாளுவீர்கள்?’ என்ற கேள்வியாக வருகிறது பதில்.

என்னுடைய ட்ரான்ஷாக்சனுக்கு நான் முழுப்பொறுப் பையும் ஏத்துக்கிறேன். நீங்க டெபிட் கார்டையும், செக் புக்கையும் கொடுங்க சார்என்கிறார். ஏற்கனவே அறிமுகமான ஒரு பெண் ஊழியர் வந்து, இவரைப் பற்றி எனக்கு நன்கு தெரியும் என்று சொல்ல, டெபிட் கார்டு கிடைக்கிறது. அடுத்து செக்புக்.

இங்கே பார்வையற்றவர் எப்படிக் கையெழுத்துப் போடுவார் என்பது பிரச்சினையாகிறது. இவரும் வழக்கம்போல், ‘கையெழுத்துப் போடுறதுக்குக் கை நல்லா இருந்தா போதும். எனக்குக் கையும், பத்துவிரலும் நல்லா இயங்குது. இது போதாதா கையெழுத்துப் போட? எனக்குக் கண்டிப்பா செக் புக் வேணும்என்று தன் உரிமையை நிலைநாட்டுவதில் உறுதியாக இருக்கிறார்.

அடுத்த அம்பு ஏவப்படுகிறது. கையெழுத்துப் போடுவீங்க சரி...அதைச் சரியா, சரியான இடத்துல எப்படிப் போடுவீங்க?’

செக்ல எங்க வேணா கையெழுத்துப் போடலாமா? கிடையாதில்லே...ஒரு குறிப்பிட்ட இடத்துல அதாவது பாட்டம் ரைட்லதானே போடணும்? அது எனக்கு நல்லாவே தெரியும்...கரெக்ட்£ அந்த இடத்துல என் கையெழுத்தைப் போடுவேன், உங்களுக்கு வேறென்ன பிரச்சினை?’ என்று அசராமல் அம்பை அந்தப் பக்கம் திருப்பிவிடுகிறார். பார்வைக் குறைபாடுள்ள ஓவியர்கள், ஆசிரியர்கள், கார் ஓட்டுபவர்கள் என்று ஒரு நீண்ட விளக்கத்திற்குப் பிறகு, செக் புக்கோடு வங்கியில் இருந்து வெளியில் வருகிறார்.

ஒரு பார்வையற்ற சிறப்புத் திறனாளி தன்னோட அடிப்படை உரிமைகளைக் கூடப் போராடித்தான் பெறவேண்டிய நிலையில் நம் நாடு இருப்பதை நினைத்து என்ன சொல்வது என்றே தெரிய வில்லை என வேதனைப்படுகிறார் இளங்கோ. தமிழ்நாட்டில் இன்றைய காலகட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்குப் போராடக்கூட உரிமை மறுக்கப்படுவதை என்னவென்று சொல்ல? அவர்கள் கேட்பது உரிமைகளைத்தான், சலுகைகளை அல்ல என்பதை நாம் உணரவேண்டும்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு ஆங்கில மொழிப் பயிற்சி, பெரிய தொழில் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்குத் தொழில்முறைப் பயிற்சிகளை அளித்து வருகிறது இவருடைய ACE PANACEA SOFTSKILLS PVT. LTD.. என்னும் மனிதவள மேம்பாட்டு நிறுவனம். அதன் நிர்வாக இயக்குனராகச் சிறப்பாக செயல்பட்டுவரும் இவர், இசையை முறைப்படிக் கற்று, தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும், திரைப்படப்பாடல் களைப் பாடும் தொழில்முறைப் பாடகராகவும் உள்ளார். விளம்பரப் படங்களுக்குப் பின்னணிக் குரல் கொடுப்பது, இசைக் கருவிகளை இசைப்பது, பல குரலில் பேசுவது என அடுக்கடுக்கான திறமைகளை அருமையாக வெளிப்படுத்தி வருகிறார்.

இருத்தல் வேறு, வாழ்தல் வேறு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்லும் இவரிடம், ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்று யாராவது கேட்டால், ‘‘On the top of the world, as usual’’ என்றுதான் எப்போதும் விடை சொல்வாராம். தன்னைத்தானே மதித்தல் என்பது இதுதானே!

உண்மையில் இந்நூல், வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துக் கொண்டிருப்பவர் எழுதிய வாழ்வியல் நூல்! வாங்கிப்படித்து, நாமும் வாழ்ந்து காட்டுவோம்!