சிறந்த பகுத்தறிவாளரும், சமூக நீதிப் போராளியுமான நரேந்திர தபோல்கர் 20.08.2013 அன்று பூனாவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

NarendraDabholkar_3801945ஆம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில், தன் பெற்றோருக்குப் பத்தாவது பிள்ளையாகப் பிறந்த தபோல்கர் அறிவியல் பார்வை உடையவராக வளர்ந்தார். மிராஜ் மருத்துவக் கல்லூரியில் பயின்று மருத்துவர் ஆனார். 12 ஆண்டுகள் மருத்துவராகப் பணியாற்றிய அவர், 1980 முதல் முழு நேரச் சமூகப் பணியாளராகத் தன்னை மாற்றிக் கொண்டார். ஒரு ஊருக்கு ஒரு கிணறுதான் இருக்க வேண்டும் என்ற போராட்டத்தை அவர் தொடங்கிய போது வரவேற்பும், எதிர்ப்பும் கலந்து வந்தன. சாதிக்கு ஒரு கிணறு இருப்பது அநீதி என்றார் அவர்.

1989ஆம் ஆண்டு ‘மூட நம்பிக்கை எதிர்ப்பு’ இயக்கம் ஒன்றைத் தொடங்கி னார். ‘சாதனா’ என்னும் வார இதழையும் .நடத்தி வந்தார். மூட நம்பிக் கைகளை எதிர்த்து 3000க்கும் மேற்பட்ட கூட்டங்களை அவர் மராட்டியத்தில் நடத்தியுள்ளார். பில்லி, சூனியம், தாந்திரிகம் முதலானவற்றை அவர் எதிர்த்தார்.

தலித் ஆதரவு இயக்கங்களில் தீவிரமாகப் பங்கேற்ற அவர், மராத்தாப் பல்கலைக் கழகத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்.

கடந்த மார்ச் மாதம், அசராம் பாபு சாமியாரின் குழுவினருடன் ஒரு மோதலில் ஈடுபட வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது. (இப்போது பாலியல் வழக்கு ஒன்றில் சிக்கியுள்ள அதே சாமியார்). ஒரு விழாவில் குடிநீரை அவர்கள் வீணாக்கினார்கள். அதனை எதிர்த்த தபோல்கரை அவர்கள் தாக்க முற்பட்டனர்.

எல்லாவற்றையும் தாண்டி, மூட நம்பிக்கை எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவர அவர் மிகவும் பாடுபட்டார். என்ன கொடுமை....... அவர் இறந்த இரண்டாம் நாள் அந்தச் சட்டத்தை மராட்டிய அரசு கொண்டு வந்து நிறைவேற்றியது.

தான் கொண்ட கொள்கைக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய தபோல்கரை, கடந்த 20ஆம் நாள் காலையில், சில வெறியர்கள் பூனாவின் தெரு ஒன்றில், அவர் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக் கொன்று விட்டனர்.

உலகம் முழுவதும் உள்ள சமூக நீதிப் போராளிகள், பகுத்தறிவாளர்கள் அனைவரது நெஞ்சிலும் தபோல்கர் என்றும் வாழ்வார். தபோல்கருக்கு நம் வீர வணக்கம்!