சுதந்திர இந்திய அரசியல் சட்ட அமைச்சராக இருந்து அரசியலமைப்புச் சட்ட உருவாக்கப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் போதே இந்துச் சட்டத் தொகுப்பை முற்போக்கான முறையில் திருத்தி அமைக்க ஒரு மசோதாவை அம்பேத்கர் முன்மொழிந்தார். அரசியல் நிர்ணய சபையானது நாட்டின் நாடாளுமன்றமாகவும் இயங்கி வந்தது. அங்கே அது விவாதத்திற்கு வந்தது. பின்னர் அது பொதுக் குழுவின் பரிசீலனைக்கு விடப்பட்டது. 1948 பிப்ரவரியில் அந்தத் தீர்மானத்தைச் சபையில் முன்மொழிந்து அதன் சாரத்தை எடுத்துரைத்தார். அதைப் படித்தால் மசோதா எவ்வளவு முற்போக்கானது, எந்த அளவுக்குப் பெண்ணுரிமை பேசக்கூடியது என்பது புரிகிறது. அந்த அளவுக்கு அது பிராமணியத்தின் அடிமடியில் கைவைப்பதாகவும் இருந்தது. அவருடைய பேச்சையும், ஏற்பட்ட குறுக்கீட்டையும் கவனியுங்கள்.

பி.ஆர். அம்பேத்கர்: தற்போதுள்ள சட்டப்படி மணமக்கள் இருவரும் ஒரே சாதியை அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட உபசாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற விதிமுறை புதிய சட்டத் தொகுப்பில் நீக்கப்பட்டுள்ளது.

பண்டிட் தாகூர் பர்கவா: இருவேறு சாதியினருக்கு இடையே நடைபெறும் திருமணம் செல்லத்தக்கதா?

பி.ஆர். அம்பேத்கர்: என்னுடைய பேச்சைத் தொடர விடுங்கள். மதிப்பிற்குரிய உறுப்பினர் பின்னர் கேள்வி கேட்டால் அதற்கான பதிலை அளிக்கிறேன். ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்  கோத்திரபிரவாரா  திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பது இப்போதுள்ள முறை. ஆனால் புதிய சட்டத் தொகுப்பில் அதற்குத் தடை ஏதும் இல்லை. இது இரண்டாவது சரத்தாகும். மூன்றாவதாக, பழைய முறையில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம், அதாவது பலதார மணம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் புதிய சட்டத் தொகுப்பில் ஒருதார மணம் வலியுறுத்தப்பட்டுள்ளது. பழைய முறையில் சடங்கு ரீதியில் நடைபெற்ற தீர்மானம் எந்தச் சூழ்நிலையிலும் ரத்து செய்யப்பட முடியாதது. ஆனால் புதிய சட்டத் தொகுப்பில் சில குறிப்பிட்டக் காரணங்களுக்காகத் திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், பிரிந்து வாழவும், திருமண முறிவு ஏற்படவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது முற்றிலும் புதியதொரு மாற்றமாகும்.

எத்தகைய முற்போக்கான சட்டத்தொகுதி மசோதாவைக் கொண்டு வந்திருக்கிறார் அம்பேத்கர் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும். பலநூறு ஆண்டுகளாகத் தர்ம சாஸ்திரங்கள் கூறிவந்த சாதிய  ஆணாதிக்கக் குடும்ப வாழ்வுக் கூறுகளை இது மாற்றியமைக்கப் பார்த்தது. பிராமணிய வாதிகள் மத்தியில் இது பெரும் பரபரப்பாகிப் போனது. ராமராஜிய பரிஷத் முதல் காஞ்சி சங்கர மடம் வரை திடுக்கிட்டுப் போனது. அவர்களது எதிர்ப்பு ஒருபுறம் இருந்தாலும், பொதுக்குழுவுக்குப் போன இந்த மசோதா சிதைவுக்கு ஆளாகாமல் நல்லபடியாகவே திரும்பி வந்தது. அப்படித் திரும்பி வந்த மசோதா மீது சபையில் மீண்டும் விவாதம் 1949 பிப்ரவரியில் துவங்கியது. அப்போது இந்த மசோதாவை நியாயப்படுத்தியும், மாதர் உரிமைக்காகவும் அம்பேத்கர் வாதாடியது அபாரமாகும். பழைமைவாதிகளை அவர்கள் கைகளை வைத்தே அவர்களது கண்களை நோண்டினார். பிரமாதமான தர்க்க வாதத்தையும், அற்புதமான சாதுர்யத்தையும் காட்டினார்.

"சாதியத் தடைகளை ரத்து செய்வது என்ற முதலாவது சர்ச்கைக்குரிய விசயத்தை எடுத்துக்கொள்கிறேன். இந்த  மசோதாவைப் பொறுத்தமட்டிலும், புதியதற்கும் பழையதற்கும் இடையே ஒருவகையான சமரசத்திற்கு வருவதற்கு அது முயல்கிறது. இந்துச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபர், வைதீக முறையைப் பின்பற்றுவதற்கு விரும்பினால், அதை அவர் அமுல்படுத்துவதை இந்த மசோதா தடுக்கவில்லை. அதே முறையில் சீர்த்திருத்தவாதியாக இருக்கின்ற வர்ணம், சாதி அல்லது உபசாதியில் நம்பிக்கை இல்லாத ஓர் இந்து, தனது வர்ணத்திற்கு வெளியில், தனது சாதிக்கு வெளியில், தனது உபசாதிக்கு வெளியில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் அந்தத் திருமணம் செல்லுபடியாகும் என்று இது கருதுகிறது. எனவே திருமணம் சம்பந்தப்பட்டதைப் பொறுத்தவரையில், எத்தகைய நிர்பந்தமும் சுமத்தப்படுவதில்லை" என்றார் அம்பேத்கர்.

இரு ஒரு எளிமையான வாதம். பழைய இந்துத் தொகுப்பின் படி பொதுவாகச் சாதிமறுப்புத் திருமணம் செல்லுபடியாகாது. அன்று மாகாணங்களில் நிலவிய நிலைமையை சபை உறுப்பினர் பக்ஷி தேக்சந்த் இப்படித் தொகுத்துக் கூறினார்: சுசுசில மாகாணங்கள் அனுலோமத் திருமணங்களை அனுமதிக்கின்றனர். பிற மாகாணங்கள் இவற்றை அனுமதிப்பதில்லை. இந்தப் பிற மாகாணங்களில், சில ஸ்மிருதிகளில் அனுலோமத் திருமணங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், அவை அங்கீகரிக்கப்படுவதில்லை என்று நீதிமன்றங்கள் தீர்ப்புக் கூறியுள்ளன. அனேகமாக எல்லா மாகாணங்களிலும் பிரதிலோமத் திருமணங்கள் செல்லத்தக்கவை அல்ல என்று தீர்ப்புக் கூறப்பட்டுள்ளது".

அதாவது கணவன் உயர்ந்த சாதியாகவும், மனைவி தாழ்ந்த சாதியாகவும் இருக்கின்ற அனுலோமத் திருமணங்களாவது சில மாகாணங்களில் ஏற்கப்பட்டன. ஆனால் கணவன் தாழ்ந்த சாதியாகவும், மனைவி உயர்ந்த சாதியாகவும் இருக்கிற பிரதிலோமத் திருமணங்கள் எங்கேயும் அனுமதிக்கப்பட்டதில்லை.

உயர் சாதிக்காரர்கள் தங்கள் பெண்களைத் தங்கள் சொத்தாகவும், தங்களது சாதித் தூய்மையைக் காக்கவேண்டிய கர்ப்பப் பைகளை உடையவர்களாகவும் கருதியதால், அவர்களைக் கீழ்ச்சாதியினர்  மணப்பதை அனுமதிக்கவில்லை.

அம்பேத்காரோ அதையும் அனுமதிக்கும் மசோதாவை முன்மொழிந்தார்.  இந்துக்களுக்கான சட்டத் தொகுதியின் மூலமும் சாதி மறுப்புத் திருமணங்களைச் செய்ய முடியும் என்ற ஆக்கப்பார்த்தார். இந்து மதமும், சாதியும் பிரிக்க முடியாதவை என்றிருந்ததைப் பிரிக்கப் பார்த்தார். ஆனால் இதை இந்துக்களின் விருப்பத்திற்கு விட்டார்.

சாதி மறுப்புத் திருமணம்தான் செய்ய வேண்டும் என்று இந்துக்களைக் கட்டாயப்படுத்தவில்லை. சாதித் திருமணமும் செய்யலாம், சாதிமறுப்புத் திருமணமும் செய்யலாம் என்று ஆக்கினார். காலந்தோறும் பிராமணியத்தைக் கண்டுவரும் நமக்கு இதுவேகூடப் பெரிய விஷயம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

2012 ஏப்ரல் 14 மாமேதை அம்பேத்கரின் 122ஆவது பிறந்தநாள்