ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடைபெறும் ‘துக்ளக்’ இதழின் ஆண்டுவிழா இந்த ஆண்டும் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவிற்குச் சென்று வந்த நண்பர்கள், அ.தி.மு.க. பொதுக் கூட்டத்திற்குப் போய்வந்தது போல் இருந்ததாகக் கூறினார்கள்.

முதலில் வாசகர்கள் சார்பில் சிலர் பேசியுள்ளனர். பிறகு, எஸ்.குருமூர்த்தி, பழ.கருப்பையா, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகன் ஆகியோர் உரையாற்ற, இறுதியில் சோ பேசியிருக்கிறார்.

கடந்த 40 ஆண்டுகளாக நேர்மை, நீதி காக்க வெளிவந்து கொண்டுள்ள பத்திரிகை துக்ளக்தான் என்று பழ.கருப்பையா பாராட்டியிருக்கிறார். அவர் எப்போதும் நேர்மை, நியாயம் பற்றி மிகுதியும் கவலைப்படுகின்றவர். அதனால்தான், ஜெயலலிதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். காந்தியவாதி என்று தன்னைக் கூறிக்கொள்ளும் அவர், காந்தியாருக்குப் பிறகு கண்டெடுத்துள்ள மகாத்மா ஜெயலலிதாதான்.

இப்போது மட்டுமில்லை, தொடக்கத்திலிருந்தே தி.மு.க. ஆட்சி, ஒரு அராஜக ஆட்சிதான் என்பது அவர் கருத்து. ஆனால் நடுவில் கொஞ்சகாலம் அவர் தி.மு.க.வில் உறுப்பினராக இருந்தார் என்பது இப்போது நம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. எஸ்.குருமூர்த்தி, சோ மாதிரியே இன்னொரு ‘யோக்கியர்’. முருகன் இப்போது சரத்குமார் கட்சியில் இருக்கிறார். (அது சரி, சரத்குமார் கட்சி இப்போது எங்கே இருக்கிறது?).

இறுதியில் பேசியுள்ள சோ, எப்படியாவது வரும் தேர்தலில், தி.மு.க வைத் தோற்கடித்து விட வேண்டும் என்பது குறித்தே கவனம் செலுத்தியுள்ளார். தேர்தலில் யாரும் வாக்களார்களுக்குப் பணம் கொடுப்பதில்லை என்று முடிவெடுத்தால், அ.தி.மு.க.தான் வெற்றிபெறும் என்று ஓர் அரிய கண்டுபிடிப்பையும் வெளியிட்டுள்ளார்.

தி.மு.க.வின் மீதும் கலைஞரின் மீதும் இவர்களுக்கெல்லாம் என்ன கோபம்? ஏன் இவர்கள் இப்படி எரிந்து விழுகிறார்கள்? பத்திரிகை சுதந்திரத்தில் தி.மு.க. அரசு குறுக்கிட்டதா அல்லது குறிப்பாகத் துக்ளக் இதழுக்கு ஏதேனும் இடையூறு செய்கிறதா என்றெல்லாம் எண்ணிப் பார்த்தால் ஒரு விடையும் கிடைக்கவில்லை.

காலகாலமாக, சோ, சுப்பிரமணிய சாமி போன்ற பார்ப்பனர்களுக்கும், சில பார்ப்பன அடிமைகளுக்கும் தி.மு.க. மீது, குறிப்பாகக் கலைஞர் மீது இருந்துவரும் பகையே இதற்கான காரணம் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஜெயலலிதா தன் ஆட்சியில் எவ்வளவோ தீமைகள் புரிந்தார். சமூகத்தின் சகல தரப்பினர் மீதும் ஒடுக்குமுறைகளை ஏவிவிட்டார். எல்லாவற்றையும் தாண்டி, பார்ப்பனர்கள் ‘லோக குரு’ என்று சொல்லித் தலையில் வைத்து ஆடும் சங்கராச்சாரியையே கைது செய்தார். அத்தோடு நிற்காமல், அவர் செய்த பாலியல் குற்றங்களையயல்லாம் அம்பலப்படுத்தி, அவரைப் புழுதியில் போட்டுப் புரட்டி எடுத்த பின்னும், அவர்கள் ஜெயலலிதாவைத்தான் ஆதரித்தனர்.

அதற்குப் பெயர்தான் ‘இனப்பாசம்’ என்பது.

ராஜாஜிக்குப் பிறகு, அவர்களுக்குக் கிடைத்த ஒரே சொத்து அந்த அம்மையார்தான். அவரும், அவர் கட்சியும் இப்போது கலகலத்துப் போயிருப்பது கண்டு, கலங்கிப் போயிருக்கிறார் சோ.அதனால்தான் தன் நடுநிலை வேடத்தை எல்லாம் கூடக் கலைத்துவிட்டு, நேரடியாகவே வீதிக்கு வந்து, அ.தி.மு.வுக்கு ஆதரவு கேட்டுள்ளார்.

தி.மு.க.வை விடக் கடுமையாகப் பார்ப்பனர்களைச் சாடும் திராவிடர் கழகம் போன்ற பல அமைப்புகள் இங்கே உள்ளன. இன்னும் சொன்னால், தி.மு.க.வில் பார்ப்பனர்களைச் சாடிப் பேசுகின்றவர்கள் மிகக் மிகக் குறைவுதான். இருப்பினும், கலைஞர் மீது அவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் என்றால், அவர் அதிகாரத்தில் உள்ளார் என்பதுதான்.

இன்றைக்குத் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மக்கள் தலைவராகவும், ஐந்தாவது முறையாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளவராகவும் உள்ள கலைஞர், தான் பெரியாரின் பிள்ளைதான் என்பதை அடிக்கடி வெளிப் படுத்துகின்றார். மேடைகளில் பகுத்தறிவுக் கருத்துகளையும், பார்ப்பன எதிர்ப்புச் செய்திகளையும் வெளிப்படுத்துகின்றார். திராவிடர் கழகத் தலைவர் வீரமணியைத் தன் பக்கத்திலேயே உட்கார வைத்துக் கொள்கின்றார்.

பொறுக்குமா அவாளுக்கு? அதுதான் பொங்கி எழுகின்றார்கள். எப்படியாவது இந்த மனிதரை ஆட்சிக் கட்டிலிலிருந்து அகற்றிவிட முடியாதா என்று துடியாய்த் துடிக்கிறார்கள். ஆனாலும் பாவம் என்ன செய்வது? என்றைக்கும் இல்லாத அளவு, இன்றைக்கு அவருடைய செல்வாக்கு கூடியுள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் அவர் அறிவித்த திட்டங்களைத் தாண்டி, இன்று அவர் அறிவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு திட்டமும், அவருடைய புகழையும், ஆட்சியின் செல்வாக்கையும் உயர்த்திக் கொண்டுள்ளன.

இந்தியாவிலேயே, மகளிர் சுயநிதிக் குழுக்களின் மூலம் கூடுதல் பயன்பெற்றிருக்கும் மாநிலம் தமிழ்நாடாகத்தான் உள்ளது. அதனால்தான் இப்போதெல்லாம் தேர்தல்களில் பெண்கள் கூடுதலாக வாக்களித்தால், தி.மு.க.வின் வெற்றி உறுதி என்றாகிறது. கலைஞர் உயிர்க் காப்பீட்டுத் திட்டம், கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்குப் பேருதவி செய்யும் திட்டமாக உள்ளது. ஆந்திர மாநிலத்தில் தோல்வியடைந்த அத்திட்டம், தமிழ்நாட்டில் மிகப் பெரும் வெற்றி அடைந்துள்ளது.

அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி மிகப் பெரும் அளவில் எழுந்து கொண்டிருக்கும் எட்டு மாடி நூலகக் கட்டிடமும், புதிய சட்டமன்ற வளாகமும் அவர் பெயரை வரலாற்றில் நிலையாகப் பதிக்கவுள்ளன. கூரை வீடுகளே இல்லாத நிலையை உருவாக்கும் ‘அனைவருக்கும் வீடு’ திட்டமும் அரிய பாராட்டைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சோவும், அவரைச் சுற்றியுள்ள கும்பலும் எழுப்பும் இரைச்சல் எவர் காதிலும் விழப்போவதில்லை. எனினும் ஒன்றைத் தமிழின உணர்வாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பார்ப்பனர்களைப் பார்த்தாவது நாம் பாடம் படிக்க வேண்டும். அவர்களின் ஆசைக்கு நாம் என்றும் துணைபோய்விடக் கூடாது என்ற எண்ணம் நம் நெஞ்சில் உறுதிப்பட வேண்டும்.

சுப.வீரபாண்டியன்