"மாட்டுக்கறி தின்னும் புலையா - உனக்கு
மார்கழித் திருநாளா?'' - என்ற கேள்வியால்தான் அன்று நந்தன் முகத்தில் அறைந்தனர். இன்றும் தொடர்கிறது நந்தன் கதை.

உண்ணும் உணவு, செய்யும் தொழில் எல்லா வற்றுடனும் சாதி முடிச்சைச் சலிக்காமல் போட்டது, இந்துத்வாவின் வருண சமூகம். உண்ணும் உணவில் ஒருவருக்கு உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டதும், உண்ணும் உணவைக் கொண்டு ஒருவரின் சாதி நிர்ண யிக்கப்பட்டதும், உலகிலேயே இங்கு மட்டும்தான்.

brahmins_321ரத்தக்கண்ணீர் படத்தில் ராதா சொல்வார் - இங்கதான்டா சாப்பிடறதுல கூட ரெண்டு கட்சி வச்சிருக்கான் - என்று. அது கட்சியன்று, சாதி. இரண்டல்ல இரண்டாயிரம். பார்ப்பனர்கள் புலால் உண்ணாதவர்களாம். அதனால் உயர்ந்தவர்களாம். அவர்களைப் பார்த்து சைவப் பிள்ளை, சைவச் செட்டியார், சைவ முதலியார் என ஒரு வரிசை. பெரியார் சொல்வார், "இவனுங்க எல்லாம் ஒன்றரைப் பார்ப்பானுக்குச் சமம்'' வரலாற்றைப் புரட்டினால், புலால் உண்ணும் பழக்கமே எங்கிருந்து, யாரிடமிருந்து வந்தது என்பது புரியும். யாகம் நடத்தி, அந்த யாகத்தீயில் மாடுகளையும், குதிரைகளையும் வெட்டிப்போட்டு, நெய் வழிய வழிய புலால் உண்ட கூட்டம் எது என்பதைப் "புனித வேதங்கள்' புகலும்.

"ரிக்வேதகால ஆரியர்கள்' என்னும் நூலில் ராகுல சாங்கிருத்தியாயன், "அவர்களிலே (ஆரியர்களில்) மாமிசம் உண்ணாதவர்களே எவரும் இல்லை எனலாம். பெரிய பெரிய ரி´கள், முனிவர்களுக்கு விருந்து படைக்க வேண்டுமென்றாலும் புலால் மிகவும் அவசியமான ஒன்றாகும்'' என்று எழுதியுள்ளார்.

"தன் மகன் புலவனாகவும், புகழ்பெற்றவனாகவும், நல்ல பேச்சாளனாகவும், எல்லா வேதங்களையும் படித்தவனாகவும், முழு ஆயுளைக் கொண்டவனாகவும் இருக்க வேண்டுமென விரும்பினால், தாயானவள் நெய்யுடன் கலந்த பொலி எருது அல்லது எருதுவின் மாமிசம் கலந்த சாதம் சாப்பிட வேண்டும்'' என்கிறது பிரகதாரண்ய (6-4-18) உபநிடதம்.

அன்று வாழ்ந்த ஜீவகாருண்ய சீலர் புத்தர் மட்டுமே. "அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின், ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று' என உரைத்தவர் வள்ளுவர் மட்டுமே. மற்ற அனைவரும் மாட்டுக்கறி தின்ற மகானுபாவர்கள் தாம்!

அவர்கள் தின்ற போதெல்லாம், மாட்டுக்கறி என்பது மாமுனிவர்களின் உணவாய் இருந்தது. அதனையே நாம் தின்னத் தொடங்கிய பின், அது அருவெறுக் கத்தக்க உணவாகிவிட்டது. கொல்லாமை அறம் கூறி அன்று பெளத்தமும், சமணமும் மக்களிடம் செல்வாக்குப் பெறுவதை அறிந்த ஆதி சங்கரர், அதனைத் தன் கொள்கையாக வரித்துக் கொள்ள முயன்றார்.

பெளத்தத்தின் பல சிறப்புக் கூறுகளைத் தன் கையில் எடுத்துக்கொண்டு, தன் மதமே அஹிம்சை போற்றும் அரிய மதம் என ஆரவாரம் செய்தார். அதனால்தான்அவரைப் "பிரசன்ன பெளத்தர்' (பெளத்தத்தின் பின்னால் மறைந்து நிற்பவர்) என்று இன்றும் கூறுகின்றனர். இப்படித்தான் பார்ப்பனர்கள் "சைவர்களாக' ஆயினர். அவர்கள் சைவர்கள் ஆனவுடன், அசைவர்கள் ஈனப்பிறவிகள் என்று அறிவிக் கப்பட்டனர்.

அசைவம் என்று சொல் லப்படும் புலால் உண்ணும் பழக்கத் திலும் பல நிலைகள் கற்பிக்கப் பட்டன. ஆடு, மீன், கோழி தின்பவர்கள் சற்று உயர்தரம். "கோமாதா' என்று போற்றப்படும் மாட்டின் கறியை உண்பவர்கள் புலையர்கள், கீழானவர்கள். அவர்களைத் தீண்டவே கூடாது. பன்றிக்கறி தின்பவர்களோ அவரினும் கீழான வர்கள். பூனைக்கறி, நரிக்கறி தின்பவர் கள் எல்லோரும் இழிவானவர்கள்.

எழுதப்படாத சட்டமாக இன்றுவரை நம் சமூகத்தில் இதுதானே நிலவுகிறது? உழைக்கும் மக்கள் மாட்டுக்கறியை விரும்பி உண்பதற்கான காரணம் என்ன? குறைந்த செலவில், நிறைந்த புரதம் அதில் உள்ளது என்பதுதான். வெயிலில் போராடி, வியர்வை சிந்தி உழைப்போர் தங்களுக்குத் தேவையான புரதச் சத்தைப் பெறுவதற்கு அந்த உணவை நாடுகின்றனர். அதிலென்ன குற்றம்? அதிலென்ன அருவெறுப்பு? கோழி, கண்டதையும் தின்கிறது. மீனோ அழுக்கையே ஆகாரமாகக் கொள்கிறது. அவற்றை எல்லாம் தின்னலாமாம். அது நாகரிகமாம். ஆனால், புல், வைக்கோல், பருத்திக்கொட்டை, புண்ணாக்கு ஆகியனவற்றை மட்டும் உண்டு வளரும் பசு மாட்டின் கறி அருவெறுப்பாம். எந்த ஊர் நியாயம் இது! அவாளின் அந்த ஊர் நியாயம்தான்...வேறென்ன?

மேலை நாடுகளில் நூற்றுக்கு தொன்னூறு பேருக்கு மேல், மாட்டுக்கறியும், பன்றிக்கறியும்தான் உண்கிறார்கள். அமெரிக்காவில் வான்கோழிக் கறிதான் சிறப்பு விருந்து. தென் அமெரிக்காவில் குதிரைக் கறியும், அரபு நாடுகளில் ஒட்டகக் கறியும் சாதாரணமானவை. சீனாவில் தவளை, பாம்பு எல்லாம் உணவு வகைகளே. கொரிய நாட்டின் தலைநகரில் (சீயோல்) நாய்க்கறிக்குத் தனி வரவேற்பு உண்டு.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான உணவுப் பழக்கம் உள்ளது. அவரவரின் தேவை, சுவையைப் பொறுத்ததாகவும், அந்தந்த நாட்டுச் சூழல், பருவநிலைகளைப் பொறுத்த தாகவும் உணவுப் பழக்கம் அமைகின் றது. ஆனால் உணவை வைத்து உயர்வு தாழ்வு எங்கும் கற்பிக்கப்படுவதில்லை, இந்தியாவைத் தவிர.

அதனால்தான், ஜெயலலிதா மாட்டுக்கறி தின்னும் பழக்கமுடையவர் என்று நக்கீரன் எழுதியவுடன், அவர்களின் அலுவலகத்தைக் கல்லால் அடிக்கின்றனர். எங்கள் தலைவியை எப்படி இழிவுபடுத் தலாம் என்கின்றனர்.

இதிலே இழிவு எங்கிருந்து வந்தது. ஒரு வேளை அவருக்கு அந்தப் பழக்கம் இல்லையயன்றால், நக்கீரன் தவறான செய்தி வெளியிட்டதாய்ச் சொல்லி, அதற்குரிய சட்ட நடவடிக்கையை எடுத்துக்கொள்ளட்டும். ஜெயலலி தாவை நக்கீரன் இழிவுபடுத்தி விட்ட தாக ஏன் சொல்ல வேண்டும்?

அப்படிச் சொல்வதன் மூலம், மாட்டுக்கறி தின்பது இழிவு என்று தானே ஆகிறது. அப்படியானால் மாட்டுக்கறி தின்பவர்கள் அனைவரும் இழிவானவர்கள் என்பதுதானே பொருள். அப்படிச் சொல்வது தீண்டாமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றம் என்பது ஒருபுறமிருக்க, மாட்டுக்கறி தின்னும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை இழிவானவர்கள் என்று சொல்ல எவனுக்கும் உரிமை யில்லை என்பதை உணர வேண்டும்.

மாட்டுக்கறி தின்பவர்கள் அனைவரும் இழிவானவர்கள் என்றால், அந்த இழிந்தவர்களின் வாக்குகள் இனி எங்களுக்கு வேண்டாம் என்று அவர்கள் முதலில் அறிவிக்கட்டும். அதன்பின், நக்கீரன் அலுவலகத்தைத் தாக்கலாம். அப்படித் தாக்குகிறவர்களும், மாட்டுக் கறி சாப்பிடாத "அவாளாகவே' மட்டும் இருக்க வேண்டும் !