இது ஊடகங்களின் உலகம். தீர்மானிப்பவர்களாகவும், தீர்ப்பெழுதுபவர்களாகவும் ஊடகவியலாளர்கள் மாறிக் கொண்டிருக் கிறார்கள். ஒன்றைக் குறித்துத் தீர்மானிப்பதற்கும் தீர்ப்பெழுதுவதற்கும் முன்பாக அது பற்றிய முழுமையான பின்னணியை அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஒரு நாளின் இருபத்து நான்கு மணிநேரத்தின் ஒவ்வொரு நொடியிலும் பரப்பரப் பூட்டும் செய்திகளைத் தர வேண்டிய நெருக்கடியில் உள்ள ஊடகவிய லாளர்கள் அச்செய்தியின் முழுப் பின்னணியையும் அறிந்தவர்களாகவும், அது பற்றி ஆராய்பவர்களாகவும் இருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. அந்தக் கேள்வியின் தொடர்ச் சியாக மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசியாரின் நினைவு வருகிறது.

திராவிட இயக்கக் கொள்கைப் பாதையில் இறுதிவரை தளராமல் நடைபோட்டவர் சிந்தனையாளர் சின்னக்குத்தூசியார். அவர் பிறந்தது அக்கிரகாரத்தில் என்பது அநேகம் பேருக்கு ஆச்சரியமானதாகக் கூட இருக்கலாம். தான் பிறந்த சமூகத்தின் ஆதிக்கவுணர்வுக்கு எதிராகப், பெரியாரின் விரல் பற்றி நடந்த அதிசய மனிதர் சின்னக்குத்தூசியார். அவர் மூத்த பத்திரிகையாளர் என்பது ஓர் அடையாளமேயன்றி, அவர் பற்றிய முழுமையான வடிவமன்று. கொள்கையைச் சொல்வதற்கு அவர் ஏந்திய கருவி, பேனா. அந்தப் பேனாவின் மை அச்சு வாகனம் ஏற, பத்திரிகைகள் பயன்பட்டன. அவர் பத்திரிகையாளராக பரிணமித்தார்.

தான் சார்ந்த இயக்கத்திற்காகவே அவர் எழுதினார். எனினும், தன்னுடைய இயக்கத்திற்கு அப்பால் நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஊன்றிக் கவனித்தார். அரசியலில் ஏற்படும் மாற்றங்கள், உலகத்தின் போக்குகள் ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாகவும், ஆழமாகவும் படித்தார். அலசினார். விவாதித்தார். அதனால்தான், திராவிட இயக்கத்தின் மீதும், தி.மு.கழகத்தின் மீதும், கலைஞர் மீதும் வைக்கப்பட்ட ஒவ்வொரு விமர்சனத்திற்கும் அவரால் முரசொலி ஏட்டில் ஆணித்தரமாகப் பதில் தர முடிந்தது. அவர் தன்னுடைய எழுத்துகளைத் தீர்ப்புகளாக முன்வைக்கவில்லை. தெளிவுரைகளாகத் தந்தார்.

தந்தை பெரியாரால் திருச்சியில் உள்ள, அவரது ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர் சின்னக்குத்தூசி என்கிற திருவாரூர் இரா. தியாகராசன். தன்னுடைய ஆசிரியர் பயிற்சிக்கான பாடப்புத்தகங்களையும் பெரியாரே வாங்கித் தந்தார் என்பது சின்னக் குத்தூசியார் பெற்ற பெரும்பேறு. குன்றக்குடி அடிகளாரின் பள்ளியில் சின்னக்குத்தூசியார் சிறிது காலம் பணியாற்றினார். தி.மு.கவில் ஈடுபாடு கொண்டிருந்த அவர், தமிழ்த்தேசியக் கட்சியை ஈ.வெ.கி. சம்பத் தொடங்கியபோது அதில் இணைந்தார். பின்னர் அக்கட்சி, காங்கிரசில் சேர்ந்த போது, பெருந்தலைவர் காமராசரின் நெருக்கத்திற்குரியவரானார். நெருக்கடி நிலைச் சட்டம் நடைமுறைக்கு வந்து, காமராசர் மறைந்த பிறகு, மீண்டும் தி.மு.க.வின் ஆதரவாளரானார். இறுதி மூச்சு அடங்கும் வரை கலைஞருக்குப் பக்கபலமாக இருந்தார். எல்லா நேரத்திலும் அவர் உறுதியான பகுத்தறிவுவாதியாகவே வாழ்ந்தார். பெரியாரின் கொள்கை வழியிலேயே செயல்பட்டார்.

தலைவர்கள் பலரிடமும் அவருக்கு இருந்த நெருக்கத்தை, ஒரு போதும் அவர் தன் தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதில்லை. அந்த நெருக்கம், இயக்கத்தின் வளர்ச்சிக்குத் துணை நிற்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர் செயல்பட்டார். அவர் மீது கொண்ட அன்பினால், தலைவர்கள் அவருக்கு ஏதேனும் உதவிகள் அளிக்க முன்வந்தாலோ, விருதுகள்-பரிசுகள்-பதவிகள் தந்தாலோ அதனை உறுதியாக மறுத்துவிடுகிற மனப்பாங்கு அவரிடம் இருந்தது. சுயமரியாதைக் காரர்களுக்கு மிகவும் முக்கியமானது தன்னல மறுப்பு. தன்னுடைய தேவைகளைப் புறக்கணிக்கக் கூடிய மனத்துணிவு. அது, சின்னக் குத்தூசியாரிடம் இருந்த உயர்ந்த குணம்.

குடும்ப வாழ்க்கையும் அதன் அடக்கமான மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட உறவுகளும், நிரந்தர வருமானம் ஏதுமற்ற தன்னை நெருக்கடிக் குள்ளாக்கிவிடக் கூடாது என்பதற்காக அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. நண்பர்கள் மட்டுமே அவருடைய பிரிக்க முடியாத உறவினர்களாக இருந்தார்கள். அந்த நண்பர்கள், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்களாகவும், மாற்றுக் கருத்துடையவர்களாகவும் கூட இருந்தார்கள். ஆனால் அவர்களுடனான நட்பும் சிதைவுறாமல், தன்னுடைய கொள்கையிலும் தடம் மாறாமல் பாதுகாத்த பண்பாளர் சின்னக்குத்தூசியார்.

கதை, கவிதை ஆகியவற்றை அவர் எழுதியிருக்கிறார். நாடகங்களில் நடித்திருக் கிறார். ஆனாலும் கட்டுரை வடிவம்தான் அவருடைய எழுத்தின் வீச்சுக்கு ஏற்றதாக அமைந்திருந்தது. பல புனைப்பெயர்களில் அவரது கட்டுரைகள் வெளியாகியிருப்பினும், திராவிட இயக்க எழுத்தாளர் குத்தூசி குருசாமி அவர்களின் எழுத்துகள் மேல் கொண்ட தாக்கத்தால், சின்னக்குத்தூசி என்ற புனைப்பெயரில் பல கட்டுரைகளை எழுதினார். பின்னர் அதுவே அவருடைய இயற்பெயரைப் பின்னுக்குத் தள்ளி, நிலைத்த பெயராகிவிட்டது.

திராவிட இயக்கத்தை மட்டுமே அவர் ஆதரித்து எழுதினாலும், பத்திரிகையாளர் என்ற முறையில் அனைத்துத் தரப்பு பத்திரிகையாளர்களிடமும் சகோதரராகப் பழகினார். வயது பேதம்-பாலின வேறுபாடு-மொழி பாகுபாடு இன்றி பல தரப்பு ஊடகத் தினரும், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் இருந்த அந்தச் சிறிய வாடகை அறைக்கு வருவார்கள். வஞ்சனையின்றி, அத்தனை பேருக்கும் தகவல்களை அள்ளி வழங்குவார் சின்னக்குத்தூசியார். பத்திரிகைதுறையில் திறம்பட பணியாற்ற வேண்டும் என ஊக்குவிப்பார். சிலர், அவரது இயக்கத்திற்கு எதிரான கருத்துகளை எழுதுபவர்களாகவும் இருப்பார்கள். அவர்களின் கருத்தை ஏற்காவிட்டாலும், பணியைப் பாராட்டுவார். ஈழச் சிக்கல் முதல் அமெரிக்க பொருளாதாரம் வரை அலசுவார். வரலாற்றுத் தகவல்கள்-புள்ளி விவரங்கள்-பழைய அரசியல் நிகழ்வுகள் பருவமழை போலக் கொட்டிக் கொண்டிருக்கும். அவரவருக்குத் தேவையான அளவில் எடுத்துக் கொள்வார்கள். பத்திரிகையாளர்களுக்கான ‘பல்கலைக் கழகமாக’ அவர் திகழ்ந்தார்.

எளிமையும் நேர்மையும்தான் அவருடைய உடைமைகள். தன் சொந்த வாழ்வு குறித்து அவர் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக எந்தளவு பாடுபட முடியுமோ அதைச் செய்யவேண்டும் என நினைத்தார். மூச்சடங்கும்வரை உழைத்தார். திராவிட இயக்கம் நூறாம் ஆண்டைக் காண்கின்ற இந்நேரத்தில், சின்னக்குத்தூசியார் என்ற சிந்தனையாளரை நினைப்பது மட்டும் கடமையாகாது. திராவிட இயக்கத்திற்காக அவர் மேற்கொண்ட பணிகள், வெற்றிடமாகிவிடாமல் செயலாற்றுவதே கடமையாகும். அதுவே அவரது பெயருக்குச் சேர்க்கப்படும் பெருமையாகும்.