“பொட்டச்சிக்கு எதுக்குப் படிப்பு? கல்யாணம் பண்ணமா, ரெண்டு குட்டி போட்டமான்னு இல்லாம!” 

இப்படி ஒரு தொலைக்காட்சித் தொடர் விளம்பரத்தைக் கேட்டேன். 

இரண்டாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த பெண்ணினம் பல அலைக்கழிப்புகளுக்கிடையே சமூக அக்கறை கொண்ட சில தலைவர்களின் போராட்டங்களால் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளைப் பெற்று படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருகின்றது. இத்தகைய சூழலிலும் வார்த்தைகளாலும், வக்கிரச் செயல்களாலும் பெண்களின் உணர்ச்சிகளைக் கொல்லும் செயலைச் சமுதாயம் செய்து வருகின்றது. அதனோடு ஊடகங்களும் தம் பங்கிற்குப் பெண்களின் மனங்களைப் புண்படுத்தி வருகின்றனவே என்ற வேதனை வெளிக்கிளம்புகிறது. 

சங்க காலத்தில் பெண்கள் மிக்க மதிப்புடன் நடத்தப்பட்டார்கள். கல்வி பயின்றார்கள் சமூகத்தில் மிகச் சிறந்த இடத்தைப் பெற்றிருந்தார்கள். பண்டைக்காலத்தில் தாய்வழிச் சமூக அமைப்பே இருந்தது. தாயின் மறைவுக்குப் பிறகு அவளின் சொத்து மகனுக்கோ அவன் குழந்தைகளுக்கோ உரியது அன்று ; மாறாக மகளுக்கோ அவள்வழி குழந்தைகளுக்கோதான் சேரும். இந்த அமைப்பு தான் “மருமக்கள் தாயம்” என்றழைக்கப்பட்டது. இதனைக் கருநாடகத்தில் “அலிய சந்தானம்” என்றழைத்தனர்.  

தாய்வழி உறவினருக்கே சிறப்பிடம் இருந்தது. மகனுக்கும் மகளுக்கும் பிறப்பு முதல் இறப்பு வரை நடக்கும் பெயர் சூட்டுவிழா, காது குத்தும் விழா, பூப்பு விழா, திருமண விழா ஆகிய அனைத்திலும் தாய்மாமனே முதலிடம் பெறுவார். 

தமிழ்நாட்டில் தாய்த்தெய்வ வழிபாடான அம்மன் வழிபாடே மிகத் தொன்மை யானது. மழையை நல்குபவள் “மாரியம்மன்” எனவும், நோய் தீர்ப்பவள் “மகமாயி” எனவும் பெண் தெய்வங்கçளையே இன்றும் சிற்றூர் மக்கள் வழிபடுவது கருதத்தக்கது. புத்த மதத்தில் “தாராதேவியையும்” சமண மதத்தில் “சங்கரேஸ்வரியையும்” பெண் தெய்வங்களாக வழிபட்டு வருகின்றனர். கங்கா, யமுனா, காவேரி, கோதாவரி என நதிகளின் பெயர்களும், பூமாதேவி என மண்ணையும், இயற்கை அன்னை என மலை, மரம், மலர்களையும் பெண்ணாகவே பார்க்கும் நிலை ஓங்கி இருந்தது ; இருக்கிறது. 

ஆண்வழிச் சமூக அமைப்பு முழுமையாகத் தலைமை பெறாத நிலை சங்க காலத்தில் நிலவியதால் பெண்கள் ஆணுக்கு நிகரான வாழ்வை அடைந்திருக்கிறார்கள். சங்க காலத்தில் சிறப்புற்று விளங்கிய 473 புலவர்களில் 30 பேர் பெண்டிராக அமைந்துள்ளனர். பெண்களுக்குச் சம உரிமை வழங்கும் காதல் மணம் பொதுவாக நடைமுறையில் இருந்தது. பெண்ணைவிடச் சிறந்தவர் யாருமில்லை என எண்ணினர். 

“குன்றக் குறவன் கடவுள் பேணி 

இரந்தனன் எல்வளைக் குறுமகள் 

ஆயரி நெடுங்கண் கலுழச் 

சேயகால் தெய்ய நீ பிரியும் நாடே!” 

இறைவனை வேண்டி நோன்பிருந்து பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர் என ஐங்குறுநூறு(257) கூறுகின்றது. 

ஆண் குழந்தைகளுக்குப் பெயர்களை வைக்கும் போதும் யசோதை குமாரன், சீதாராமன், கெளதமி புத்திரன் என்றெல்லாம் பெண்பெயரையே முகமைப்படுத்தி வைத்தனர். பாடல்களிலும் “யாயும் ஞாயும் யாரா கியரோ” எனத் தாய் முதன்மைப் படுத்தப்பட்டு, பின்பே “எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்” எனத் தந்தை பின்வைத்துப் பாடப்பட்டார். இவ்வாறு அனைத்துத் துறைகளிலும் சம உரிமை பெற்று வாழ்ந்த பெண்டிர் பிற்காலத்தில் தம் உரிமையை இழந்து அடிமையாகிவிட்டதை இலக்கியங்களும் இன்ன பிறவும் காட்டுகின்றன.

தொல்காப்பியர் காலத்திலேயே பெண்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டனர். போர்க்களம் சென்று, வாள்வீசி வெற்றி வாகை சூடிய பெண்களை, 

“எண்ணரும் பாசறைப் பெண்ணோடும் புணரார்” எனவும் 

“முந்நீர் வழக்கம் மகடூ வோடில்லை” எனவும் பெண்களை வீட்டுக்குள்ளே அடக்கி வைக்கும் முறை தொடங்கிவிட்டது. 

பெண் இளமையில் தந்தையையும், மணமானபின் கணவனையும், விதவையானவள் மகனையும் சார்ந்து நிற்கவேண்டும் என்று விதி செய்தது மநுஸ்மிருதி ( அத்:5, ஸ்லோ:148). வட இந்திய ஆரிய மரபு குழந்தைப் பருவ மணத்தை ஊக்குவித்தது. விதவைக்கு மறுமண உரிமையைத் தடுத்தது. கணவன் இறந்தபின் தீப்பாய்ந்து உயிர் துறத்தலைக் கட்டாயமாக்கியது. எட்டு வயது பெண்ணுக்குத் திருமணம் ( பால்ய விவாகம் ) செய்விக்கலாம் என்றது மநுஸ்மிருதி. 

விதவைகள் காய்கனி, கிழங்கு போன்ற சிற்றுணவை மட்டும் உண்டு வாழ்நாளெல்லாம் நோன்பிருக்க வேண்டும். ஆனால் ஆண்களுக்கு மட்டும் பலதார திருமணத்திற்குத் தடையே இல்லை. சமூகத்தில் ஆண் தலைமை ஏற்பட்டதும் பெண்ணுக்குரிய கல்வி, சொத்துரிமைகள் மறுக்கப்பட்டன. நாளடைவில் பெண் ஒரு போகப் பொருள் ஆக்கப்பட்டாள். ஊர்க் கோவில் திருவிழாக்கள் நிகழும் போது எந்தப் பெண்ணும் எந்த ஆணோடும் உறவாடலாம் என்ற பழக்கம் இருந்துள்ளது.

விருந்தினர்கள் வரும்போது அவர்கள் மனத்தை நிறைவுபடுத்த மனைவியை, வந்த விருந்தினருடன் உடலுறவாட அனுமதித்தனர். தம் மனைவியை வீட்டிற்கு வந்த சிவனடியார்க்கு வழங்கிய நிகழ்ச்சியை இயற்பகை நாயனார் கதை மூலம் பெரிய புராணம் காட்டுகிறது. 

கேரளத்தில் நாயர் குடும்பத்தில் திருமணம் செய்து கொண்ட ஒவ்வொரு இளம்பெண்ணும் திருமணம் செய்த முதல் மூன்று நாட்களுக்கு நம்பூதிரிப் பார்ப்பனர்களோடு உடலுறவு கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. திருவிதாங்கூர் அரச பரம்பரையைச் சேர்ந்த இளவரசி ஆனாலும் இதற்கு விதிவிலக்கு இல்லை. நம்பூதிரி ஊரில் இல்லை எனில் உரிய நம்பூதிரி ஊருக்கு வந்து உறவு கொள்ளும் வரை, மணம் முடித்த இளம்பெண் காத்திருக்க வேண்டும். அதுவரை மணப்பெண்ணும் மணமகனும் சேரும் முதலிரவு ( சாந்தி முகூர்த்தம்) நிகழாது. இப்படிப்பட்ட இழிநிலைக்குப் பெண்கள் பிற்காலத்தில் தள்ளப்பட்டார்கள்

“பெண் எதையும் தானாக செய்து கொள்ள உரிமையற்றவள், சபல புத்தியுள்ளவள், ஒரு ஆண்மகனைப் பெற்றெடுப்பதற்காக எந்த ஆணும் இன்னொருவன் மனைவியைப் பயன்படுத்தலாம்” இப்படிப் பெண்ணுக்கெதிராகத் தீவிரமாக எழுதி வைத்திருக்கிறது இந்திய மண்ணின் பார்ப்பன மநுநீதி. 

நமது இதிகாசங்கள் முதல் இலக்கியங்கள் வரை தேவதாசிகள் பற்றியும் பரத்தையரைப் பற்றியும் நிறையவே பேசியுள்ளன. ‘கொண்டி மகளிர்’ கோயிலில் விளக்கேற்றும் பொறுப்பிற்கு ஆளாக்கப்பட்டிருந்தனர் என்றும் அவர்கள் போரில் பிடிபட்டவர்கள் என்றும் பட்டினப்பாலை கூறுகிறது. 

திருக்குறள் ‘வரைவின் மகளிர்’ என்று பேசுகிறது. அகத்துறை இலக்கியங்கள் எவற்றைத் தொட்டாலும் ‘பரத்தையர் வீடு’ சென்ற தலைவன், தலைவி ஊடல் பற்றிப் பேசுகின்றன. காதற்பரத்தையர், இற்பரத்தையர், சேரிப்பரத்தையர் என பல்வேறு பெயர்களில் இலக்கியம் அழைக்கிறது. 

தமிழ்நாட்டில் கோயில்களில் நடனமாடி, அங்கு இருக்கும் பார்ப்பனர்களோடும், பெரிய மனிதர்களோடும் உல்லாசமாக இருந்த பெண்கள் தாசிகள் அல்லது தேவதாசிகள் எனப்பட்டனர். பின்னாளில் கூடா ஒழுக்கத்தில் பிறந்த பெண்களும், முதிர் கன்னியரும் தேவதாசிகாளாக்கப்பட்டனர். இம்முறை காலப்போக்கில் ஒரு குலமாகவே ஆக்கப்பட்டது. 

பெண்களைக் காலம் காலமாக அடக்கி ஒடுக்கி சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் முதலில் பார்ப்பனீயமும், பிற்காலத்தில் ஒட்டு மொத்த ஆணினமும் தன் விருப்பத்திற்கேற்றவாறு ஆட்டிப்படைத்தனர். வாய் பேசாத ஊமைகளாகவே, எதிர்த்துப் பேசாத கோழைகளாகவே அடக்கப்பட்டுக் கிடக்கின்றனர் பெண்கள். 

இழிவானவர்களாக, ஒதுக்கப்பட வேண்டியவர்களாக, பரத்தமைத் தன்மையுடைவர்களாக இச்சமூகத்தால் அடக்கப்பட்டு வந்த பெண்ணினம் இந்த ஆணாதிக்கச் சமூகத்தின் பிடியிலிருந்து விடுதலை பெறவேண்டும். 

பெண்ணே! பிணைக்கப்பட்ட அடிமை விலங்கறுத்து அலைகளாய் ஆர்த்து வா! கண்களில் அக்கினித் திராவகம் பொங்கட்டும்! ஆசைப்பார்வையில் அணுகுண்டு உற்பத்தி செய்! மின்னும் கன்னங்களில் மின்சாரம் சேகரி! பஞ்சுக் கரங்களிலே போர்க்கொடி தூக்கு! தென்றல் சிறகுகளில் தீப்பற்று! பல நூற்றாண்டுகளாய்ச் சுமந்த அடிமைத்தனத்தை மண்ணில் புதைக்க உன்னால் மட்டும்தான் முடியும். 

உன்னால் முடியாதது யாரால் முடியும்?

- கவிஞர் கவியன்பன்