"எனக்கு நீ யார்'' என்றேன்.
"நண்பர்களின் காதலி;
காதலர்களின் யட்சி'' என்றவள்
என்னைப் பார்த்து
"சொல் இப்போது நீ யார்'' என்றாள்.
மௌனத்தை மட்டுமே விடையாய்
கொடுத்த என்னை
அவளின் தோளோடு உரசியபடியே..
பயணிக்க வைக்கிறது அந்த தொடர்வண்டி.
அந்த ஸ்பரிசத்தில் எட்டி பார்க்கிறது-
என்னுள் யட்சன்.
வழக்கமாய் இறங்கும் இடத்திற்கு முன்பாக
திடீரென இறங்கிக் கொண்டு அவள்
தோழியாகிறாள். 


உருமாற்றம்

போகத்தின் உச்சம் போல் கண்மூடி மகிழ்ந்திருந்தேன்
கவிதை முழுமையாய் வந்துவிட்ட திருப்தியில்.

தேவர்கள் அரக்கர்கள் மனிதர்கள் ஒன்றுகூடி
எம்மை உய்விக்கும் உபதேசம் இதிலுண்டா என்றனர்.
சிவனாய் உணர்ந்த கணப்பொழுதில்
‘த’-வென ஒற்றை சொல் உதிர்த்தேன்.

இயலாமைகளை கோட்பாடுகளாக்கும் அவர்கள்
தத்தமது பலவீனங்களை
உபதேசங்களாக மொழிபெயர்க்கிறார்கள்-
வன்முறைஅரக்கர்கள் ‘தயை’ என்றும்
பெறுவதிலேயே குறியாயிருக்கும்
மனிதர்கள் ‘தானம்’ என்றும்
தடுமாறும் தேவர்கள் ‘தன் புலனடக்கம்’ என்றும்.

கண்விழிக்கையில் அர்த்தங்களின் தபஸில்
தாள் வெறுமையாயிருந்தது.

எனது சாம்பலை தன் நெற்றி நிறைய
பூசிக்கொள்கிறான் சிவன்.


மாயமாதல்

அந்த அம்மாபொம்மை
அப்படியே கிடக்கிறது-
அப்பாவின் பரணில்.

அம்மாவின் பொம்மையாய்
அம்மாவே பொம்மையாய்
அம்மாபொம்மையாய்....

அப்பா இதை அறியும் போது
பரணும் பொம்மையும்
காணாமல் போயிருந்தது-
அப்பாவும் தான்.


சவ தரிசனம்

சவ ஊர்வலம் நகர்கிறது-
சாலையைக் கடக்கும் ரயில்பூச்சியாய்.
இறந்தவனின் இருப்பின் வன்மம்
எழுகிறது பல்வேறு ரூபங்களில்.
பறைமேளம் உசுப்பி உசுப்பி
கட்டமைத்திருந்த எல்லாவற்றையும்
கலைத்துப் போட...
செத்தவனிலிருந்து மீண்டும்
உயிர்தெழுந்து ஆடுகிறார்கள்.

- அமிர்தம் சூர்யா