அவள் தருகிறாள் இருமுனைகள் சீவப்பட்ட சிறு பென்சிலை
தொலைவில் அது பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது வாழ்க்கையைப் போல
அவன் வரைகிறான்
நான்கு அறைகளும் அநேக வாசல்களும் கொண்ட ஒரு
காலியான இருதயத்தை
தீர்ந்ததென வீசியும் மீண்டும் மீண்டும் பிதுக்கப்படும் பற்பசைக் குழாயை
பத்திரப்படுத்தும் ஒருவனுக்கு காலம்
கண்டயிடமெல்லாம் பொத்தான்களைத்
தைக்கும் ஒருத்தியை வழங்கும்போது
அண்ணாந்து விமானத்தை
விரட்டியோடும் சிறார்கள் குதூகலிக்கிறார்கள்
நல்லவேளை அது ஒரு மனிதனின்
முழுநிழலுக்கு இடம்போதாத சிறிய இதயம்

ஜொலிக்கும் நாணயங்கள்
சப்தமிடும் நாணயங்கள்
இரண்டு பக்கம் உடைய நாணயங்கள்
சிதறி விழுகின்றன கனமான நாணயங்கள்.
அவன் ஓடிப்போய்வாங்கினான் : ஒரு நூல்கண்டு,
ஒரு பென்சில், ஒரு மினுங்கும் வெள்ளி ப்ளேடு
நான் வெகுநேரம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
அது ஒரு காலணி அடிப்புறத்தின் ஓவியம்
அவன் காதில் சொன்னான்
இது என் ஐயாவின் ஐயாவினுடையது என்று
முட்கள் பொதிந்த பழைய ரப்பர் செருப்பைத் தவிர
வேறெதையும் அது குறிக்கவில்லை என்றும்

அவள் துள்ளிக் கூச்சலிடுகிறாள்;
ஊசியின் காதில் நூல் நுழைந்துவிட்டது போலும்
கிட்டப்பார்வையாளானான நான்
தினசரியின் ஒரு பக்கத்திலிருந்து அடுத்ததிற்குச் செல்வதற்காக
ஓடும் பேருந்தில் ஏறுகிறேன்
நதியில் இறங்குவதைப் போல
தீட்டுத்துணிகளை அடித்துச்செல்லும் நதியில் இறங்குவதைப் போல  

- சபரிநாதன்