ஒருபோதும் முடியாது என்னால்

ஒரு தனிமையை விரட்டியடிக்க
ஒரு பொம்மையோடு சயனிக்க

ஒரு மௌனத்தை தக்கவைக்க
நிசப்தம் துடைத்து கடக்கும்
ஒரு வார்த்தையை கொலை செய்

அந்தகார இருளிலும்
ஒளியை எழுதும்
பிரியத்தின் கதகதப்பை
விலக்கிப் போக

வட்டங்களுக்குள்ளிருந்து
விட்டம் வெறிக்க

யதார்த்தத்தின் வெம்மையைக் கடக்க
கனவின் நிழலில்
பதுங்குகையில்
வேலி தாண்டியபடி
வளரும் செடியில்
மழைக்குப் பிறகான
வெயிலென மலர்கிறது
வாழக்கிடைத்த ஒரு கணம்

- அதங்கோடு அனிஷ்குமார்