அடர்ந்து செழித்து
வளர்ந்திருக்கும் கானகம்
என்றென்றும்
நிலத்தினை தொட்டுவிடாத
சூரிய ஒளி
பழங்களைத் தின்றுவிட்டு
எச்சங்களை இட்டது தவிர்த்து
வேறென்ன செய்துவிட்டன
புள்ளினங்கள்

மரணத்தின் சுவை

முன்பொரு முறை
தின்று சுவைத்த
விருப்பமான பண்டமொன்றில்
தித்திப்பின் சுவையாய்
நாவில் ஊறுகிறது
மரணத்தின் சுவை

குருதியிலேறும்
அரவின் விடமொத்த
உயிர்ப்பானது
மரணத்தின் சுவை

தளையுற்ற
இடர்மிகுந்த பிறப்பை விடவும்
விருப்பமூட்டுவதாயிருக்கிறது
மரணத்தின் சுவை.