போர்க்களப் பாடலொன்றினை
இரவின் பேரேட்டில்
இரக்கமற்று நிரப்புகிறேன்.

பகலினை
போர்க்களத்தில் சந்திப்பவர்களுக்கு
இவ்வரிகள் இயல்பானவை.

சமிக்ஞை நிறுத்தங்களில்
யாசித்த கரங்கள்
உதிரச் சகதியில் தெப்பங்களானதையும்,

கருணை மிகுந்த உன்மத்திருந்தவன்
அதே தேநீர் விடுதி முன்
சுவைக்குப் பித்தேறி
சிரமறுந்த உடலென
உணர்வறுந்து கிடந்ததையும்

மறைவாய் நின்றழைத்த
கொடியாள் கொங்கையொரு
யானை மத்தகமென
கண்களில் மதர்த்திருந்ததையும்

புரவியொக்கும் கால்களில்
இரும்புத் துண்டம் செருகிய
யானைக்கால் வியாதியன் காட்சிப்படுத்துகிறான்
தெருவோவியத்தில்

எதிர்பாராது குறுக்கிட்ட
வாகன ஓட்டியின் வசைச்சொல்
பேரோலப் பின்னணியில்
தவறவிட்ட அகிம்சை
தோற்றவன் மணிமுடியை ஞாபகிக்க
வஞ்சத்தில் தோலுரித்து நெய்த
அம்பறாத்தூணியில் உறங்கும்
புன்னகை தோய்ந்த அம்பில்
வீழ்ந்தவர்கள் நண்பர்களாகிறார்கள்
தப்பியவர்கள் எதிரிகளாகிறார்கள்

சுழன்றாடி வாள் சுழற்றி
மேன்மையுறு துரோகங்கள் வீசி
பொய்கள் பெரும்
பாஞ்ஜசன்யமாய் யோதியுறைய

நெடிய நிறைவின்மைகளோடு
களமாடி மீள்கையி லென்
காலச்சாரதியாகிறது இப்படியோர் கவிதை.

இனி -

நான் தயாராக வேண்டும்
நாளைய சமர்க்கு